Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எதிர்த்து ஒரு வார்த்தை பேசுமா எதிர்க்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு?

முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த தோழர் குமார் குணரத்தினம் இலங்கை அரசினால் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரது குடியியல் உரிமைகள், அரசியல் உரிமைகள் சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளின் கூட்டான இலங்கையின் மக்கள் விரோத அரசினால் மறுக்கப்பட்டு அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக் கோரியும் அவருக்கும், அவரைப் போன்று அரசியற் காரணங்களிற்காக நாட்டை விட்டு வெளியேறி மறுபடியும் நாடு திரும்பும் எவருக்கும் ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போராடுகிறது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறும், இலங்கை அரசின் ஜனநாயக மறுப்பிற்கு எதிராகக் குரல் கொடுக்குமாறும் முன்னிலை சோசலிசக் கட்சி இலங்கையின் சகல கட்சிகளிற்கும், முற்போக்கு ஜனநாயக சக்திகளிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறது.

நவ சமசமாசக் கட்சி, ஐக்கியசோசலிசக் கட்சி, பல தொழிற்சங்கங்கள் என்று முற்போக்கு ஜனநாயக சக்திகள் இப்போராட்டங்களிற்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளனர். விக்கிரமபாகு கருணாரத்தின, சிறிதுங்க ஜெயசூரியா போன்ற தோழர்கள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரசியல், ஜனநாயக உரிமைகள் வேண்டி முன்னிலை சோசலிசக் கட்சியினால் தொடர்ந்து நூறு நாட்களிற்கு மேலாக நடத்தப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்ட களத்திற்கு வந்து தாமும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

முன்னிலை சோசலிசக் கட்சியினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நேரடியாக இப்போராட்டம் குறித்து அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு வரி எழுதவில்லை. இது குமார் குணரத்தினம் என்ற தனி மனிதனிற்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. இலங்கையின் கொலைகார அரசுகளை எதிர்த்து போராடியதற்காக அக்கொலைகாரர்களால் துரத்தப்பட்டு இலங்கையில் வாழ முடியாமல் வெளிநாடுகளிற்கு சென்றவர்கள் மீண்டும் எம் தாய்நாடு திரும்பி மக்களின் போராட்டங்களில் இணைந்து கொள்வதற்கான உரிமையைக் கோரி நடத்தப்படும் போராட்டம்.

சிங்கள இனவெறி இலங்கை அரசுகளால் தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்து போராடியதற்காக சித்திரவதை செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு, தெருக்களில் வைத்து தடியடி வாங்கி தாங்க முடியாமல் உயிர்த்தஞ்சம் தேடி வெளிநாடுகளிற்கு சென்ற எத்தனையோ தமிழ்ப்போராளிகளில் தம் நிலத்திற்கு திரும்பி வந்து தம் அரசியலை தொடர்வதற்காக தொடரப்படுகின்ற போராட்டம். இப்போராட்டங்களில் எதிர்கட்சி என்ற முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தானாகவே கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அழைப்பு விடுத்தும் கேளாதது போல் பின்பொறியால் சிரித்து விட்டு செல்கிறார்கள்.

ஆனால் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுடன் அய்யா சம்பந்தன் கை குலுக்கி மகிழ அண்ணன் மாவை சேனாதிராசா "மகிந்தா, நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன், அதிலே ஆனந்தக் கண்ணீரை தான் நான் எப்பவும் பாக்கணும்" என்று பாசமலராய் பார்த்து மகிழ முடிகிறது. இலங்கைத் தொழிலாளர்களின் முதலாவது எதிரியான ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்காவுடன் சேர்ந்து உழைப்பாளிகளின் தினமான மே முதலாம் நாளை வெட்கமில்லாமல் கொண்டாட முடிகிறது. அந்த நிகழ்வில் இலவச இணைப்பாக இலங்கை அரசின் இனவாத சிங்கக் கொடியை ரணிலுடன் இணைந்து பிடித்து "தாயின் மணிக்கொடியை பாரீர்" என்று தமிழ்மக்களிற்கு யாழ்ப்பாண மண்ணிலேயே வைத்து காட்ட முடிகிறது.

மீன் துள்ளி விளையாடும் பண்ணைக்கடலின் கரையில் இன்பம், செல்வம் என்ற இரு வீரத்தமிழ் மகன்களின் உடலை வீசி எறிந்து அவசரகாலச் சட்டத்தை ஆரம்பித்து வைத்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப் படுகொலையை முள்ளிவாய்க்காலில் நடத்தி எம் தமிழ் மக்களின் மூச்சடங்க வைத்தான் சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்சா. இந்த இரு கொலைகாரர்களின் கட்சிகளுடனும் கூட்டு வைத்துக் கொண்டு, கூடிக் குலாவிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படி எதிர்க்கட்சியாக இருக்க முடியும்? இலங்கை மக்களை ஒடுக்கும் இந்த அரசின் அயோக்கியத்தனங்களை எப்படி எதிர்த்து ஒரு வார்த்தை என்றாலும் பேச முடியும்?

"எப்போது சர்வாதிகாரம் யதார்த்தமாக இருக்கிறதோ அப்போது புரட்சி நமது உரிமையாக இருக்கிறது" என்றான் விக்டர் கியுகோ. "லிஸ்பனிற்கு செல்லும் இரவுப் புகையிரதம்" என்னும் நாவலில் வரும் போர்த்துக்கேசியப் புரட்சியாளன் அமடியு டி பிராடோ அதையே "எப்போது சர்வாதிகாரம் உண்மையாக இருக்கிறதோ அப்போது புரட்சி நமது கடமையாக இருக்கிறது" என்றான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ "சர்வாதிகாரம் உண்மையாக, யதார்த்தமாக இருக்கும் போது; நம் மக்களை ஒடுக்கும் போது அதனுடன் கூட்டுச் சேர வேண்டும்" என்கிறது. ஆகவே அது என்றைக்கும் எதிர்த்து பேசப்போவதில்லை. எதிர்க் கட்சியாக இருந்து அரசை எதிர்க்கப் போவதுமில்லை. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றின் அரசியல் ஒரே அரசியல். அது, வலதுசாரி மக்கள் விரோத அரசியல்.

வலதுசாரியம் என்னும் முதலாளித்துவக் கொடுமை தேசப்பற்று பேசிக் கொண்டு வெளிநாட்டு முதலாளிகளிற்கு தேசத்தையும், மக்களின் உழைப்பையும் விற்கும். தேசியம் பேசிக் கொண்டு தேசமக்களை கொன்றவர்களுடன் கூட்டுச் சேரும். தன் இருப்பிற்காக, தன் தேவைக்காக ஏழை மக்களை இனம், மொழி, மதம் பேசி பிரித்து சண்டையிட வைக்கும். இலங்கையில் இன்று வரை நடப்பதும் இது தான். சிங்களவர்களின் கட்சி, தமிழர்களின் உரிமைகளிற்கான கட்சி என்று சொல்லி மக்களைப் பிரிக்கும் இவர்கள் தங்களிற்குள் ஒற்றுமையாக இருந்து மக்களைக் கொள்ளையடிப்பது தான் காலங்காலமான வரலாறு.

இக்கயவர்களிற்கு எதிராக கும்மிருட்டில் ஒளி சிந்தும் சிவப்பு நட்சத்திரத்தை ஏற்றி வைப்போம். "நொறுக்கித் தரைமட்டமாக்கப்பட்டதான, எரித்து நீறாக்கப்பட்டதான அழித்தொழிப்பின் பின், இடதுசாரிய அரசியல் மேல் ஊக்கம் சரிந்து கொண்டிருந்த காலப்பகுதியில் மீண்டும் சிவப்பு கொடியை இந்நாட்டில் உயர வைக்க வேண்டும் என்ற நோக்கோடு நானும் வேறு சிலரும் இடதுசாரி அரசியல் இயக்கத்தினை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானத்தை எடுத்துக் கொண்டோம்" என்று கூறும் தோழர் குமார் குணரத்தினம் போன்ற தோழர்களுடன் சேர்ந்து இலங்கை மக்கள் சரிநிகர் சமானமாக வாழ; வறுமை, சுரண்டல் இல்லா சமதரும சமுதாயம் அமைக்க சிவப்புக் கொடியை எம் வானில் பறக்க வைப்போம்.