Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கின் போர்!!, என்னது மறுபடியும் போரா?

வடக்கின் போர் என்றதும் மறுபடியும் போரா என்று பயந்து விடாதீர்கள் மக்களே, இது யாழ் மத்திய கல்லூரிக்கும், பரி யோவான் கல்லூரிக்கும் இடையில் நடக்கும் கிரிக்கட் போட்டி. போரினால் சிதைந்து போன எம்மக்களின் வாழ்விற்கு விளையாட்டு, இசை, நுண்கலைகள் என்பன ஆறுதல் அளிக்கின்றன. உற்சாகத்தை ஊட்டுகின்றன. எம்மக்களின் வாழ்வை சீரழிக்க வெள்ளமாகப் பாயும் மது, போதை மருந்துகள் என்பவற்றில் மாணவர்கள் தடம் புரளாமல் இருக்க இவை மனத்திடத்தை அளிக்கின்றன. ஆகவே பந்துகள் உருளட்டும், பாட்டுகள் முழங்கட்டும். இவை போன்ற நிகழ்வுகள் இன்னும் பல்கிப் பெருகட்டும்.

யாழ் மத்திய கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவிற்காகவும், இந்த கிரிக்கட் போட்டிக்காகவும் நூற்றுக்கணக்கான பழைய மாணவர்கள் புலம்பெயர்நாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் சென்றிருக்கிறார்கள். படித்த கல்லூரிகளும், விளையாடிய விளையாட்டுக்களும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்று அவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். பிறந்த ஊர். படித்த பாடசாலைகள் என்பவற்றை நினைவில் வைத்து அங்கு செல்வதும்; அவற்றிற்காக ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் என்பவற்றை அமைத்து கூடி மகிழ்வதும் நன்றே. தானும் தன் குடும்பமும் என்று பெரும்பாலானவர்கள் வாழும் போது தம்மளவில் ஒன்று கூடி இவர்கள் செயற்படுவது பாராட்டத்தக்கது.

ஆனால் பெற்ற தாயுடன், பிறந்த ஊருடன், படித்த பாடசாலையுடன் நம் வாழ்க்கை நின்று விடுகிறதா? பச்சை மரங்கள் பற்றி எரிந்த பாழும் போர் நம் மண்ணை எரித்து சென்றதே உம் பார்வையில் படவில்லையா? நம் மக்கள் கண்ணீர்க் கணவாயில் நின்று கதறி அழுகிறார்களே உம் காதில் விழவில்லையா? நம் மண் இராணுவ முகாம்களாக, முதலாளிகளின் வேட்டைக்காடுகளாக மாற்றப்பட்டிருக்கிறதே உம் கண்ணில் படவில்லையா?

இலங்கையில் கல்வி அனைவருக்கும் இலவசம் என்பது அடிப்படை உரிமையாக இருக்கிறது. தமிழ், சிங்கள மொழிகளில் தாய்மொழிக்கல்வியில் பல்கலைக்கழகங்கள் வரை படிக்கக் கூடியதாக இருக்கிறது. இக்காரணங்களினால் இலங்கையில் கல்வியறிவு நூறு வீதமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விற்கும் நவதாராளவாத பொருளாதார கொள்கையின் எஜமானர்களும், அவர் தம் உள்ளூர் ஏஜெண்டுகளான இலங்கையின் ஆட்சியாளர்களும் மக்களின் அடிப்படை உரிமையான இலவசக்கல்வியையும் களவாடத் தீர்மானித்திருக்கிறார்கள். ஏழைமக்களின் கைகளில் இருக்கும் எழுத்தாணியை எடுத்து எறிய முனைகிறார்கள்.

இலங்கை அரசின் அநியாயம் இப்படி என்றால் நாம் எல்லோரும் இலவசமாகப் படித்த பாடசாலைகளில் இன்று அனுமதி பெறுவதற்கே ஆயிரக்கணக்கில் அதிபர்கள் பணம் வாங்குகிறார்கள். யாழ்ப்பாணத்து பாடசாலைகளில் தான் இந்த அநியாயம் மிக அதிகமாக நடக்கிறது. சிங்கள இனவெறி அரசுகள் தமிழ்மக்களை ஒடுக்குகிறதென்றால் நம் தமிழ்பாடசாலைகளே நம்தமிழ் குழந்தைகளின் கல்வியை பணவெறி கொண்டு ஒடுக்குவதை என்னவென்று சொல்ல? படித்த பாடசாலைகளை பார்ப்பதிற்கு பல்லாயிரம் பணம் செலவழித்துக் கொண்டு வரும் பழைய மாணவர்களிற்கு இந்த பகற்கொள்ளைகள் பார்வையில் படவில்லையா? கல்லூரிகளிற்கு கட்டிடம் கட்ட பணம் கொடுப்பதுடன் நம் கடமை முடிந்து விடுகிறதா?

தமிழ்நாட்டின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளான சரண்யா, பிரியங்கா, மோனிசாவை இந்த தனியார்மயக்கொள்ளை தான் தற்கொலை செய்ய தள்ளியது. ஏற்கனவே இனவாதமும், வறுமையும் கொல்லும் எம்மக்களை இந்தக் கல்விக்கொள்ளையர்கள் ஏறி மிதிப்பதை ஏன் மெளனமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? பாடசாலை மாணவர்களை விடுமுறை நாட்களில் தம் வீட்டிற்கு கூப்பிட்டு படிப்பித்த ஆசிரியர்களை கொண்டிருந்த நம் சமுதாயத்தில் இந்த வியாபாரிகள் கல்வியை விலை பேசுகிறார்களே; விளையாட்டுப்போட்டிகளில் விசில் அடிப்பது போல் இதையும் விசில் அடித்து பாராட்டி பரிசளிக்கப் போகிறீர்களா?

எழுபத்தெட்டாம் ஆண்டின் கார்த்திகை மாதத்தில் சூறாவளி மட்டக்களப்பு மண்ணையும், மக்களையும் விசிறி அடித்துச் சென்றது. தமிழ் இளைஞர் பேரவை, மாணவர் இளைஞர் பொதுமன்றம் (GUYS), சமுகசேவை அமைப்புக்கள், சனசமுக நிலையங்கள், மற்றும் எந்த அமைப்பிலும் இல்லாத பொதுமனிதர்கள் என்று பலரும் மட்டக்களப்பிற்கு சென்று புனரமைப்பு பணிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். அப்படிச் சென்றவர்களிடம் பணம் இருக்கவில்லை; பக்கத்துணைக்கு வெளிநாடுகளில் எவரும் இருக்கவில்லை. ஆனால் நெஞ்சிலே அன்பு இருந்தது; சமுக அக்கறை இருந்தது. காற்றடித்த பூமியை கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவு இருந்தது.

ஆனால் இன்று முழு இலங்கையையுமே மூழ்கடித்த சுனாமி வந்தது, எம்மில் எத்தனை பேர் போய் எம்மக்கள் துயர் துடைத்தோம்? முழு உலகமே மூச்சடங்கி அதிர்ந்து போய்ப் பார்த்த இனப்படுகொலையில் எம்மக்கள் மண்ணிற்குள் புதைந்தார்கள். நாம் கண்ணீர் விட்டோம், கதறி அழுதோம், வெளிநாடுகளில் ஊர்வலம் போனோம். நம் கடமை முடிந்து விட்டதா? மரணித்த மனிதர்களிற்கும், மரணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மக்களின் விழுகின்ற வாழ்க்கைக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்?

"வடக்கின் போர்" என்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்கும், கோவில் திருவிழாவிற்கும் போகும் நாம் வறுமைக்கு எதிரான மக்களின் போரை; இனவெறிக்கு எதிரான மக்களின் போரை; முதலாளித்துவத்திற்கு எதிரான போரை ஏன் கண்டு கொள்ளாமல் விடுகிறோம். எம் தாய்நாட்டையும், அதன் மக்களையும் வறுமையும், இனவெறியும், முதலாளித்துவக் கொள்ளையர்களும் அரித்துச் சென்ற பின்பு வெளிநாடுகளில் ஊர்ச்சங்கங்கள் வைத்திருப்பது போல எம்மக்களிற்கும், எம்தாய் நாட்டிற்கும் நினைவுச்சின்னங்கள் வைத்து ஞாபகம் கொள்ளப் போகிறோமா?

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

என்று தாயுமானவன் பாடினான். நாம் எல்லோரும் இன்புற்றிருக்க போராடுவோம்.