Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மித்திரனில் இருந்து யாழ்ப்பாண இணையத்தளம் வரையான ஊடகப்பொறுக்கிகள்

தேசத்தின் முதன்மையான தமிழ்ப்பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வரும் வீரகேசரி நாளிதழின் வாலான மித்திரன் தொடங்கி யாழ்ப்பாணத்தின் "பண்பாட்டை" காப்பாற்ற அவதாரம் எடுத்திருப்பதாக ஊளையிடும் இந்தப் பொறுக்கி இணையத்தளங்கள் நியூஜப்னா (New Jaffna) வரையான வரலாறு ஊடக வரலாறு அல்ல. இலங்கையின் மஞ்சள் பத்திரிகைகளின் வரலாறு. பெண்களை இழிவு செய்து பத்திரிகை விற்று பணம் சம்பாதிக்கும் வியாபாரிகளின் வரலாறு. உள்ளாடைகளை தேடி அலையும் ஊனம் பிடித்த ஆபாசப் பொறுக்கிகளின் வரலாறு.

மேற்படி வருத்தம் அல்லது கோளாறு உலக அளவில் புதிதானது அல்ல. இந்த நோய், மேற்கு நாடுகளில் அமெரிக்காவில், வலதுசாரியம் சார்ந்த கிறீஸ்தவ கொன்சர்வேட்டிசம், ஜேர்மன் அடிப்படைவாதம், அமெரிக்க கிறீஸ்தவ அடிப்படைவாதம், கத்தோலிக்க பிற்போக்குவாதம் என்ற பெயர்களால் அழைக்கப்படுவதைக் கவனித்து இருப்பீர்கள். மேற்கூறிய இந்த பழமைவாத சக்திகள் அந்தந்த நாடுகளின் சமூகத் தன்மைகேற்ப, அவரவர் சமூகத்தில், அரசியலில் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இக்கும்பல்களை உள்ளார்ந்து கவனித்தால் இவர்கள், எல்லாவகையான அடிப்படை மனித உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும், நியாயமான சந்தோசங்களுக்கும் எதிரானவர்களாக இருப்பதை அவதானிக்கலாம்.

உதாரணமாக, மேற்குநாடுகளில் பெண்கள் சார்ந்த அனைத்து உரிமைகளையும் மறுப்பவர்களாகவும், பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பவர்களாகவும் இவர்கள் இருப்பதைக் காணலாம். கருக்கலைப்பு, ஆடை அணிகலன் எதிர்ப்பு, சமப்பாலுறவு எதிர்ப்பு, பெண்களுக்கு அரசியல் மற்றும் தொழில்சார் நிறுவனங்களில் அதிகார மறுப்பு என இவர்களில் எதிர்ப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம் என மணலை மைந்தன் முகப்புத்தகத்தில் தூயவாதிகள் என்று சொல்லிக்கொண்டு பிற்போக்கு பழமைவாதம் பேசுபவர்களைக் குறிப்பிடுவது இந்த ஊடகப்பொறுக்கிகளிற்கும் அப்படியே பொருந்துகிறது.

மிகச் சிறு வயதிலேயே சாதிவெறியர்களாலும், காவல்துறையினராலும் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பூலான்தேவி என்ற வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏழைப்பெண்ணின் கதை மித்திரனில் தொடராக வந்தது. பூலான்தேவி மல்லா எனப்படும் படகோட்டிகளான கடற்தொழிலாளர் சமுகத்தை சேர்ந்தவர். சிறு வயதில் மணம் செய்து வைக்கப்பட்டவர். அவரது கணவரால் உடலாலும், உள்ளத்தாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர். அவரது ஊரின் ஒடுக்கும் சாதியான தாக்குர் எனப்படும் சாதிவெறியர்களின் பாலியல், சாதிக் கொடுமைகளில் இருந்து தப்புவதற்காக ஊரை விட்டு ஓடிய போது சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரர்களிடம் சிக்கி அவர்களாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்தப் பரிதாபத்திற்குரிய பெண்ணின் கதை மித்திரனில் வந்தது என்றதும் பூலான் தேவியின் வறுமை, பாலியல் வன்கொடுமையினல் சிதைந்து போன வாழ்க்கை என்பவற்றை எழுதினார்கள் என்று எண்ணி விடாதீர்கள். அவர்கள் பூலான் தேவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை வருணித்து எழுதினார்கள். கொள்ளைக்காரர்களிடம் சிக்கிய போது அவரிடம் பரிவு காட்டிய ஒருவனிடம் அவரிற்கு வந்த காதலை காமசூத்திரமாக எழுதினார்கள்.

தமிழ்ப்பண்பாடு அழிகிறது, தமிழரின் மானம் போகிறது என்று சொல்லிக் கொண்டு தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி இந்த இணையத்தளங்கள் கதைகள் எழுதுகின்றன. இப்போது புகைப்படத்தை போட்டு ஒரு பெண்ணின் வாழ்வை அழிக்கிறார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இந்தப் பரிசுத்தமானவர்களைப் பொறுத்தவரை தமிழ்ப்பண்பாடு பெண்களால் தான் அழிக்கப்படுகிறது. பெண்களால் தான் தமிழரின் மானம் போகிறது. எந்தவொரு தார்மீக உணர்வோ, ஊடக தர்மமோ அற்ற இந்த மஞ்சள் பத்திரிகை பொறுக்கிகள் தமிழரின் வாழ்வைப் பற்றிக் கவலைப்படுகிறார்களாம்.

"இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு ஜனாதிபதியா" என்று மைத்திரி சிறிசேனா யாழ்ப்பாணம் போய் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தது குறித்து புல்லரிச்சுப் போய் புராணம் பாடும் இந்த புல்லுருவிக் கூட்டம் தான், தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படுகுதாம். தமிழ் மக்களைக் கொன்ற, தமிழரின் வாழ்வை அழித்த, தமிழ்மக்களை சிறை வைத்திருக்கும் இலங்கை அரசை போற்றிப் பாடும் இந்தப் பொறுக்கிகளிற்கு தமிழரின் வாழ்வைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

எல்லாவற்றையும் வியாபாரமாக, எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் வலதுசாரிகளின், முதலாளித்துவவாதிகளின் ஊடகங்கள் இப்படித்தான் இருக்கும். குமுதம், ஆனந்தவிகடன் போன்று இந்திய நாட்டுப்பற்று, இந்து மதப்பெருமை பேசிக் கொண்டு பெண்களின் படங்களை போட்டு பணம் பார்க்கும். தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டு, ஈழதேசம் பற்றிப் பேசிக் கொண்டு கிசுகிசு.கொம் நடத்தி சினிமா பெண்களின் ஆடை குறைந்த படங்களை (hot photos) என்ற தலைப்பில் தந்து காசு சேர்க்கும்.

"வித்தியா என்ற புதுமலர் கசங்கிய போது"…. என்ற தலைப்பில் "பூசைக்கு போகும் முன்னே வித்தியா என்ற புதுமலர் சில காமுகர்களின் காம இச்சை ஆசைக்கு பலியாகி, புங்கை மண்ணில் கசக்கி வீசப்பட்ட பொழுது" என்று தமிழ்த் தேசியத்திற்காக அவதாரம் எடுத்த (JVP News) என்னும் இணையத்தளம் வித்தியா கொலை குறித்து 25.12.15 வெளியிட்ட செய்தி இது. புதுமலர், பூசைக்கு போகும் முன்னே என்று அருவருப்பான பாலியல் அர்த்தம் தரும் சொற்களை வைத்து பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலையை வியாபாரம் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் அவலத்தை எழுதும் போது இவ்வளவு வக்கிரமாக எழுதுபவர்கள் தம்மை தமிழ்த்தேசியத்தின் குரல் என்று சொல்வதைப் போல் கேவலம் எதுவுமில்லை.

பெண்களை இப்படி பொதுவெளியில் கேவலப்படுத்துவதற்கான அடிப்படையை எவை கொடுக்கின்றன? கணவனை இழந்த பெண்கள் மொட்டை அடிக்க வேண்டும்; வெள்ளைச்சேலை உடுக்க வேண்டும்; சதி என்று சொல்லி சிதையில் எரிக்க வேண்டும் என்ற இந்து மதம் கொடுக்கிறது. கர்ப்பகாலத்தில் பெண் இறக்கும் நிலை வந்தாலும் கருச்சிதைவு செய்யக்கூடாது; பெண் மதகுருவாகவே வர முடியாது என்ற கிறிஸ்தவ மதம் கொடுக்கிறது. கண்ணைத் தவிர வேறே ஒன்றும் வெளியே தெரிய உடை உடுத்தக்கூடாது; பள்ளிவாசலில் ஆணிற்கு பக்கத்திலும் வரக்கூடாது என்ற இஸ்லாமிய மதம் கொடுக்கிறது. இந்த பெண்ண்டிமைத்தனங்களை வளர்க்கும் மதங்களை விடுத்து பெண்ணும், ஆணும் சரிநிகர்சமானம் என்னும் புதிய பண்பாட்டை கட்டி எழுப்ப முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களும், ஆண்களும் சேர்ந்து உழைத்திடுவோம். பொருளாதாரம், பண்பாடு, குடும்பம் எங்கும் சமத்துவம் பேணும் பொதுவுடமைத் தத்துவத்தின் புரட்சிக்கொடியை தூக்கிப் பிடிப்போம்.