Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

ஆண்களால் தினம், தினம் கொல்லப்படும் வித்தியாக்கள்!!!

அந்த பனங்காடுகளிற்குள் எழுந்த அவளின் கடைசி மூச்சுக்கள்; தொண்டைக்குள்ளே உறைந்து, புதைந்து போன மெளனமான அழுகைகள் எதுவும் அந்தப் பேய்களிற்கு கேட்கவில்லை. அவளின் ஆத்மா முடிவற்ற அந்த இருளில் கரையும் போது என்ன நினைத்திருப்பாள்?. யாரை நினைத்திருப்பாள்?. தாலாட்டிய தாயை, தாங்கி வளர்த்த தந்தையை தன்னை தேடி அவர்கள் தவிக்கப் போவதை; நீண்டு கொண்டு போகும் இரவுகளில் கண்ணீர் நிற்கா விழிகளுடன் தங்களின் செல்லமகள் பட்ட பாடுகளை எண்ணி பதறப்போவதை என்று எதை நினைத்திருப்பாள்?. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று ஏதும் அறியா அந்த சிறுகுழந்தை எண்ணிப் பார்க்க முதலே அந்த நாய்கள் அவளின் கடைசி மூச்சையும் அவளிடமிருந்து பறித்திருப்பார்கள்.

ஏன் எங்கேயும் எப்போதும் பெண் பலியாகிறாள்?. மன்னர்களின் நாடு பிடிக்கும் சண்டையில் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர். மதவெறிக்கலவரங்களில் முதலில் அவள் தான் தான் பலியாகிறாள். எழுபதுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியில் பங்கு கொண்டதால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள் கதிர்காமத்து பிரேமாவதி மன்னம்பெரி. ஒரு இரவு முழுவதும் இலங்கையின் காவல்நாய்கள் அவளைச் சித்திரவதை செய்தன. மாணிக்க கங்கையில் அன்று ஓடியது அவளின் இரத்தம் தான். அந்த நிலையிலும் தனது சக தோழர்களை, தன்னுயிரான புரட்சியை அவள் காட்டிக் கொடுக்கவில்லை. அந்தக் கோழைகள் அவளை கதிர்காமத்து வீதி முழுக்க நடத்திச் சென்றார்கள். அந்த பயங்கரமான இரவில் இருட்டை மட்டுமே அவள் அணிந்திருந்தாள். பின்பு அந்தக் கோழைகள் அவளை இயந்திரத் துப்பாக்கியினாலே சுட்டுக் கொன்றார்கள். பிரேமாவதி மன்னம்பெரியின் வாழ்வு இருபத்திரண்டு வயதில் அந்த இருட்டிலே முடிந்து போனது.

இலங்கையின் இனக்கலவரங்களில் பச்சைப் பனைமரங்கள் பற்றி எரிந்த போர்களில் பெண்களும் சேர்ந்து எரிந்தார்கள். கரும்பச்சை சீருடை அணிந்தவர்களால் சிதைக்கப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுதும் இருள் சூழ்ந்த புதைகுழிகளிற்குள் மூழ்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் சிறுமிகள், இளம்யுவதிகள், நடுத்தர வயது பெண்கள், உடல் தளர்ந்த முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. இறந்த பெண்போராளிகளின் உடல்களை கூட வெறி கொண்டு சிதைத்தார்கள்.

செம்மணியில் கிரிசாந்தி, திருகோணமலையில் கோணேஸ்வரி, வன்னியில் இசைப்பிரியா என்று வெளியில் தெரிந்த பெயர்களிற்கு பின்னே பெயர் அற்ற, முகம் அற்ற ஓராயிரம் பெண்கள் இலங்கை, இந்திய ஓநாய்களால் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். புத்தனின் தருமம், காந்தியின் அகிம்சை, தேசபக்தி என்ற முகமூடி போட்ட ஓநாய்கள் ஊளையிட்டு எம்பெண்கள் இரத்தம் குடித்தன.

இன்று போர் முடிந்து விட்டது என்று அவர்கள் பிரகடனம் செய்து வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். காரைநகரில் பதினொரு வயது பச்சைக்குழந்தை ஒன்று ஏழு கடற்படையினரால் கசக்கி எறியப்பட்டது. அந்தக் கயவர்கள் அவர்களின் கூட்டுக்களவாணிகளான இலங்கைக் காவல்படையினரால் விடுதலை செய்யப்பட்டார்கள். காரணம் சொல்கிறார்கள் "அவள் யாரையும் அடையாளம் காட்டவில்லையாம்". சீருடை போட்ட ஒவ்வொருவனும் ஒரே மாதிரியான ஓநாயாக இருக்கும் போது அதிலே ஒரு கூட்டத்தை அந்தக் குழந்தை எப்படி அடையாளம் காட்டுவாள்?.

இவை யுத்தத்தின் மரணப்பிடிக்குள் சிக்குண்டு உலகத்தின் பார்வைக்கு வராமல், பதிவுகள், சாட்சியங்கள் எதுவுமின்றி அப்பெண்களினதும், அவர்களினது குடும்பத்தினரினதும் மனங்களில் மட்டும் காலகாலத்திற்கும் தேங்கிப் போய் நிற்கும் கொடுமைகள் என்றால் போர் நடக்காத மற்றப்பிரதேசங்கள், இன ஒடுக்குமுறைக்கு உட்படாத பெண்களிற்கும் இதே மாதிரி கொடுமைகள் தான் நடக்கின்றன. ஒவ்வொரு தொண்ணூறு நிமிடத்திற்கும் ஒரு இலங்கைப் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். ஒவ்வொரு வருடமும் பாலியல் வன்முறைகள் கூடிக்கொண்டே செல்கின்றன. 2008 இல் 1582 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 1157 பேர் பதினாறு வயது கூட தாண்டாத சிறுமிகள். 2012 இல் 1653 பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 1405 பேர் சிறுமிகள்.

சிறுவயது பெண்கள் பெரும்பாலும் அவர்களிற்கு தெரிந்தவர்களாலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். குடும்பத்தவர்கள், உறவினர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், மதகுருக்கள் என்று பலதரப்பினராலும் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கட்டற்ற ஊடக வளர்ச்சி காரணமாக வீட்டிற்குள்ளேயே வந்து விழும் அழிவுக் கலாச்சாரத்தின் கழிவுகள், அதிகரித்து வரும் மதுபாவனை, வறுமை காரணமாக மனைவிகள் வெளிநாட்டிற்கு வேலைக்கு போக தனித்து விடப்படும் கணவர்கள், பாலியல் கல்வியை பள்ளிகளில் கற்பித்தால் உலகமே அழிந்து விடும் என்று ஊளையிடும் கலாச்சாரக்காவலர்கள் என்பன இக்குற்றங்களிற்கு பெரும்பாலான காரணிகளாக அமைகின்றன.

கோணேஸ்வரியை கொலை செய்த இலங்கை அரசின் ஜனாதிபதி மகிந்தாவை மாலை போட்டு வரவேற்றவர்கள் இன்று வித்தியாவிற்காக போராடுகிறார்களாம். இசைப்பிரியாவை கொலை செய்த இலங்கை இராணுவத்தின் தளபதி பொன்சேகாவுடன் கூட்டு வைத்தவர்கள் இன்று வித்தியாவிற்காக போராடுகிறார்களாம். மகிந்த ராஜபக்சவுடனும், சரத் பொன்சேகாவுடனும் இணை சேர்ந்திருந்த இன்றைய ஜனாதிபதி மைத்திரி சிரிசேனாவை ஆதரித்தவர்கள் இன்று வித்தியாவிற்காக போராடுகிறார்களாம். மக்கள் திரண்டு போராடும் போது அதை திசை திருப்புவதும், அதில் அரசியல் லாபம் அடைய நினைப்பதும் தான் இந்த சந்தர்ப்பவாத கயவர்களின் அரசியல்.

இசைப்பிரியாவின் ஆடையற்ற தோற்றத்தை, எம் சகோதரியின் அவலத்தை, படுகொலை செய்யப்பட்ட நம் பெண்ணின் உடலை பகிரங்கமாக்கியது மனிதநாகரிகத்திற்கு ஒவ்வாத செயல். இசைப்பிரியாவின் குடும்பத்தவர்கள் இக்காட்சிகளை காணும் போது எப்படி துடிப்பார்கள்?. உடையற்ற அவளின் உடலை காணும் போது எப்படி கலங்குவார்கள். தங்களது லாபங்களிற்காக எம் பெண்களின் உடல்களை காட்சிப்படுத்துவதை கண்டிப்போம் என்று இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட போது எழுதியிருந்தோம். பத்திரிகைகளில், ஒளி ஊடகங்களில், சமுக வலைத் தளங்களில் இன்று அதையே மறுபடியும் செய்கிறார்கள். காமுகர்களால் எம் சகோதரி வித்தியா ஒரு முறை கொல்லப்பட்டாள். இந்தக் கயவர்களால் ஒவ்வொரு முறையும் கொல்லப்படுகிறாள்.

தனது தோழர்களிற்காக, சரிநிகர் சமானமாக வாழ எழுந்த புரட்சிக்காக தன் உயிரைக் கொடுத்த கதிர்காமத்து பிரேமாவதி மன்னம்பெரியை; அவள் கதிர்காமத்தின் அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டவள் என்பதனால் "கதிர்காமத்து அழகி கொலை" என்று செய்தி வெளியிட்ட பத்திரிகைகளின் பரம்பரைகள் தான் இன்றைய ஊடகங்கள். பெண்களை அழகை வைத்து, உடலை வைத்து மட்டும் மதிப்பிடும் சதை வியாபாரிகள் தான் இந்த ஊடகங்கள்.

தமிழ்ச் சமுதாயத்திற்காக தமது சொந்த வாழ்வை துறந்து தீ பற்றி எரியும் யுத்த களங்களிற்கு சென்ற எமது பெண் போராளிகள் இன்று தமிழ்ச் சமுதாயத்தால் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். காலனைக் காலால் உதைத்த அவர்கள் இன்று தமது சொந்த சகோதர, சகோதரியரான இந்த தமிழ் சமுதாயத்தின் ஒதுக்குதல் கண்டு உடைந்து போயிருக்கிறார்கள். எவரின் அவல வாழ்வு கண்டு கனன்று எழுந்து போராடச் சென்றனரோ அவரே தம்மை சுமையாக, அவமானமாக நினைப்பது கண்டு தமது உயிரைத் துறந்த அவலம் ஆணாதிக்க தமிழ்ச் சமுதாயத்தின் அண்மைய வரலாறு.

எமது அரசியல்வாதிகள் ஆணாதிக்கவாதிகள். எமது ஊடகங்கள் ஆணாதிக்க ஊடகங்கள். எமது சமுதாயம் ஆணாதிக்க சமுதாயம். எமது பண்பாடு ஆணாதிக்கப் பண்பாடு. எமது மதங்கள் ஆணாதிக்க மதங்கள். வேலைத்தளங்களில் அவர்கள் பரிகசிக்கப்படுகிறார்கள். பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள். வீடுகளிலே அவள் ஊதியம் இல்லாத தொழிலாளி. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தகுடி தனக்கு முன் உறுப்பு ஒன்று இருப்பதால் அவள் பொன்னும், பொருளும் கொண்டு வந்தால் தான் மணம் செய்து கொள்ளுவேன் என்று இந்த இருபத்தொராவது நூற்றாண்டிலும் சொல்கிறது. கோவிலில், கிறிஸ்தவ தேவாலயங்களில் அவள் சமமானவள் இல்லை, அவள் மதகுருவாக முடியாது. இஸ்லாமியர்களின் பள்ளிவாசலில் அவள் பக்கத்திலே நின்று தொழக் கூட முடியாது. அவள் அவர்களின் மனதை திசை திருப்பி விடுவாளாம். ஆம் ஆண்டவன்; ஆண்கள், பெண்கள் அனைவரையும் படைத்தவன் என்று கதைகளில் கூறப்படுபவர்கள் கூட ஆண்களிற்கு மட்டும் தான்.

பாலியல் வன்முறைகளிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. காவல்துறையும், நீதி மன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. பாலியல் வன்முறை, களவு, கொலை, ஊழல், லஞ்சம், அதிகார துஸ்பிரயோகம் என்று உடல் முழுக்க சேறு பூசிக்கொண்டிருக்கும் இலங்கையின் அதிகாரவர்க்கம், குற்றங்களின் பிறப்பிடம் எப்படி நடவடிக்கை எடுக்கும். பெண்களை போகப்பொருளாக, நுகர்வுப் பண்டமாக மட்டும் சித்தரிக்கும் வணிகக் கலாச்சாரம், முதலாளித்துவ பொருளாதாரம் இருக்கும் வரை அவள் விடுதலையாக முடியாது. பெண்ணை அடிமையாக நினைக்கும், நடத்தும் சமுதாயம் மாறாதவரை எப்படி நீதி கிடைக்கும்?.

ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக பெண்கள் அணி திரள வேண்டும். பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் என்று மடமை பேசும் மதங்களிற்கு எதிராக அணி திரள வேண்டும். வன்முறைகளிற்கு எதிராக அமைப்பாக அணி திரள வேண்டும். சமுதாயத்தின் விடிவிற்காக போரிடும் முற்போக்கு அணிகளுடன் இணைந்து போராட வேண்டும். ஆணும், பெண்ணும் இணைந்தது தான் அகிலம் என்று அகங்கள் மலர வர வேண்டும் ஒரு புரட்சி. வெறுப்பு, அடிமைத்தனம் உடைத்து அன்பு எனும் விடுதலையின் பாடல் ஒலிக்க வர வேண்டும் ஒரு புரட்சி.