Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

அழாதே அம்மா, உன் கண்ணீர் ஒரு நாள் அவர்களின் அதிகாரங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும்

எம் தாய்மார் தம் புதல்வரை, புதல்வியரை தேடி தம் ஆவி சோர தரையிலே புரண்டு அழுகிறார்கள். தம் குழந்தைகள் தவழ்ந்து விளையாடிய மண்ணிலே தம் உயிர் போகட்டும் என்பது போல் தளர்ந்து விழுகிறார்கள். காணாமல் போன தம் கண்மணிகளை மறுபடி ஒரு முறையேனும் காண மாட்டோமா என்று கதறி அழுகிறார்கள். சிறகு விரித்து, வண்ணத்துப்பூச்சியாய் வலம் வர வேண்டிய நம் குழந்தைகள் தம் தாயை, தந்தையைத் தேடி தம் சின்னக்குரல்கள் சிதைய அழுகிறார்கள்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையின் இனவாத அரசினால் எம்மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையின் இனவாத அரசினால் எம்மக்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையின் இனவாத அரசினால் எம்மக்கள் காணாமல் போக வைக்கப்பட்டார்கள். ஆனால் இலங்கை அரசு சொல்கிறது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையாம். குண்டுகளை வெடிக்கச் செய்து மனிதரை கொலை செய்ய உதவிய குற்றவாளிகளைத் தான் அவர்கள் கைது செய்து வைத்திருக்கிறார்களாம்.

மகிந்த ராஜபக்சா, கோத்தபாய ராஜபக்ச போன்ற இனப்படுகொலையாளிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். தமிழ் மக்களை கொலை செய்த இராணுவ அதிகாரிகள் பதவிகளில் இருக்கிறார்கள். இது தான் நல்லாட்சியாம். இந்த படுகொலையாளிகளைக் காப்பாற்றும் மைத்திரி சிறிசேனாவையும், ரணில் விக்கிரமசிங்காவையும் தான் தமிழ்மக்களின் பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது.

இனி இது பொறுப்பதில்லை என்று மக்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யச் சொல்லி போராட்டங்களை முன்னெடுப்பதை பார்த்து விட்டு தமது அரசியல் பிழைப்புக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வவுனியாவில் ஒரு முறை கூடிக் கூவியது. ஏன் இந்த பித்தலாட்டம்?. நொந்து போயிருக்கும் எம் மக்களை ஏன் இப்படி ஏறி மிதிக்கிறீர்கள்? எல்லாவற்றையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து விடுவோம் என்று பசப்பு வார்த்தைகள் சொல்லித் தானே எம் மக்களை மைத்திரிக்கும், ரணிலுக்கும் வாக்குப் போடச் சொன்னீர்கள். நீங்கள் ஆதரிக்கச் சொன்ன ஆசாமிகள் ஆட்சிக்கு வந்து ஆண்டு ஒன்று ஆகிறதே? ஆண்டுக்கணக்காக சிறையில் வாடும் அப்பாவிகளை உங்களது பங்காளிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசிடம் பேசி விடுவிக்கக் கூட உங்களால் முடியவில்லை. வேறு என்ன தான் இந்த அரசிடம் பேசுகிறீர்கள்?

இந்த சவங்களின் மீது சிம்மாசனம் ஏறிய

அந்த துரோகிகளிற்கு

தண்டனை அளியுங்கள்

மறப்பவர்களிற்கும்

இந்தக் கொடுமைகளை

மன்னிக்கச் சொல்லுபவர்களிற்கும்

தண்டனை கொடுங்கள்

என்று மக்கள் கவிஞன் பாப்லோ நெருடோ மக்களின் துயர் பொறுக்க முடியாமல் தன் ஆத்மா முழுவதும் ஆவேசம் பொங்கப் பாடினான். எம் மக்களின் கண்ணீரும் ஒரு நாள் இந்த கொலையாளிகளின், துரோகிகளின் அதிகாரங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும்.

ஏழைமக்களை ஒடுக்குவதில், ஏமாற்றுவதில் என்றுமே அதிகார வர்க்கங்கள் சேர்ந்து நிற்கின்றன. அவர்களின் கொள்ளைகளை, ஏமாற்றுக்களை எதிர்த்துப் போராட வேண்டுமாயின் உழைக்கும் ஏழைமக்கள் தமக்கிடையே இனம், மொழி, மதம் என்பவற்றின் பெயரால் திணிக்கப்படும் பிரிவினைகளை எதிர்த்துப் போராட வேண்டும். அதனால் தான் "தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்களவர்களை, சிங்களவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழர்களை உருவாக்குவதும், முஸ்லீம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்களவர்களையும் தமிழர்களையும் உருவாக்கி அவர்கள் ஒன்றிணைந்து ஒருவர் மற்றவரின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு சமுதாயத்தை நிறுவுவதுமே எமது போராட்டத்தின் ஒரேயொரு நோக்கமாகும்" என்ற அடிப்படையில் முன்னிலை சோசலிசக் கட்சி போராடுகிறது.

"அரசியல் கைதிகளை விடுதலை செய்" என்று அது நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு ஊதியம் என்பவற்றை முதலாளிகளிடம் அடகு வைக்கும் இலங்கையின் மக்கள் விரோத அரசிற்கு எதிராக கட்சி தொடர்ந்து போராடுகிறது. இந்தப் போராட்டங்களை மேலும் வலுவாக்க; இனத்தால், மொழியால், மதத்தால் ஒடுக்கப்படும் மக்களிற்காக ஓங்கிக் குரல் கொடுக்க; அன்னிய முதலாளிகளாலும் அவர் தம் சுதேச அடிமைகளாலும் சுரண்டப்படும் ஏழைமக்களிற்காக போராட முன்னிலை சோசலிசக் கட்சிக்கு முற்போக்கு, இடதுசாரி சக்திகள் முன் கை எடுத்து வரவேண்டும்.