Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

ஏழைக்கு மரணதண்டனை, காமுகனிற்கு அரசபதவி, இது தான் மதச்சட்டம்

ரிசானா என்ற ஏழை இஸ்லாமிய மதச்சட்டங்களின் படி கொலை செய்யப்பட்டாள். தமிழைத் தவிர வேறுமொழி தெரியாத அவளிற்கு மொழிபெயர்ப்பாளர் சவுதி அரசினால் கொடுக்கப்படவில்லை. அவளிற்காக வாதாட வழக்கறிஞர் வைக்கப்படவில்லை. பதினேழு வயது சிறுமி அவள் என்று கதறியதையும் அவர்கள் தங்கள் காதில் விழுத்தவில்லை. அவளின் மரணத்தை அவளின் பெற்றோருக்கு சொல்லவேண்டும் என்ற சிறு தார்மீகம் கூட அந்த மதவெறி பிடித்த கும்பலிற்கு இருக்கவில்லை. அவளின் தாய், தந்தையர் ஊடகங்களில் பார்த்துத் தான் தங்கள் சின்னமகள் தங்களை விட்டு போய்விட்டாள் என்பதை அறிந்து கொண்டனர். அவளின் உடலையாவது தங்களிடம் கொடுத்து விடுங்கள் என்ற அந்த ஏழைகளின் கண்ணீர் பாலைவனத்து பாவிகளின் பாறைமனத்தை சிறிது கூடக் கரைக்கவில்லை.

ரிசானாவிற்கு மரணதண்டனை வழங்கிய; அந்தச் சின்னப்பெண்ணின் மேல் கருணை காட்ட முடியாது என்று மமதை காட்டிய; மதச் சட்டத்தில் இருந்து மயிரளவும் விலக மாட்டேன் என்ற சவுதியின் ஆட்சியாளன் பாட் (king Fahd) ஜனன் கார்ப் (Janan Harb) என்ற பாலஸ்தீனத்து கிறீஸ்துவப் பெண்ணை 1968 ஆண்டு இரகசியமாக மணந்து கொண்டார். எத்தனையோ பெண்களை மனைவிகளாக்கிக் கொண்ட சவுதி ஆட்சியாளன் ஜனன் கார்ப்புடனான தன் தொடர்பை கடைசி வரை இரகசியமாகவே வைத்துக் கொண்டார். Guardian, Telegraph, 03.11.15) ஏனென்றால் கிறிஸ்தவப் பெண்ணை மணந்து விட்டு முஸ்லீம் மதச்சட்டத்திற்காக வாதாடும் வக்கீல் வண்டு முருகன் என்று சொல்ல முடியாது என்பதைச் தனியே சொல்லத் தேவையில்லை.

இந்த சவுதி அரசனின் மகனான மஜீட் பின் அப்துல்லா என்பவன் தனது அமெரிக்க வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களைத் தாக்கியது; போதை மருந்துகள் உபயோகித்தது; பாலியல் தொழிலாளிகளை கேளிக்கைகளிற்கு பயன்படுத்தியது போன்ற குற்றங்களிற்காக அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். பாலியல் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் அந்தப் பெண்கள் அவனை தடுத்த போது "நான் ஒரு இளவரசன், நான் விரும்பியதை நான் செய்வேன். நீங்கள் எந்த மதிப்பும் இல்லாதவர்கள்" என்று தனது பணக்காரத்திமிரைக் காட்டினான். (London Metro, 27.10.15)

இவர்கள் தான் மதச்சட்டங்களை கையில் வைத்திருக்கும் நீதிபதிகள். பெண்களை அடிமைகளாக, எந்த விதமான மதிப்பும் அற்றவர்களாக நடத்தும் இவர்கள் தான் மதச்சட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் என்றால் அங்கு நீதிக்கு இடமேது?, பணமிருப்பவன், அதிகாரத்தில் இருப்பவன் எதையும் செய்யலாம் என்று கொழுப்பேறிப் போயிருக்கும் இவர்கள், சக மனிதரை மனிதராக மதிக்காத இவர்களிற்கும் நீதிக்கும் கடுகளவும் தொடர்பில்லை

கார்ல் அன்ட்றீ (Karl Andree) என்ற சவுதி அரேபியாவில் வசிக்கும் பிரித்தானிய குடிமகன் சவுதியில் வைத்து சாராயம் காய்ச்சியதற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு முன்னூற்று ஐம்பது சவுக்கடிகள் என்ற தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. பிரித்தானிய அர்சு தலையிட்டதின் பின்பு அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். (www.bbc.co.uk, 11.11.15)

ரிசானா என்ற இலங்கையின் ஏழைச்சிறுமியை; தான் அந்தக் குழந்தையைக் கொல்லவில்லை என்று கடைசி வரை மறுத்தவளை மதச்சட்டத்தால் மன்னிக்க முடியாது என்று கொலை செய்த இவர்கள் தான் சாராயம் காய்ச்சியவரை; அதை ஒப்புக் கொண்டவரை விடுவித்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர் ஐரோப்பிய வெள்ளை மனிதர். பலம் பொருந்திய பணக்கார நாட்டைச் சேர்ந்தவர். பணக்காரரை மதச்சட்டங்கள் எதுவும் செய்யாது. அதனால் தான் இன்று வரை எந்த ஐரோப்பியருக்கோ, அமெரிக்கருக்கோ சவுதி அரேபியாவில் மரணதண்டனை வழங்கப்பட்டதில்லை.

ரிசானா என்ற ஏழை முஸ்லீமை விடுவிக்க முஸ்லீம் மதச்சட்டத்தில் இடமில்லை. ஆனால் பணக்காரர்களை அந்தச் சட்டங்கள் மன்னித்து விடுதலை செய்யும். இவை தான் மதங்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள், பணம் வைத்திருப்பவர்கள் கடவுளின் பெயரால் மக்களை சுரண்டுவதற்கு, ஏமாற்றுவதற்காகத் தான் மதங்கள் இருக்கின்றன. அவை ஏழைகளின் தலையை கொய்யும், பணக்காரர்களிற்கு சேவகம் செய்யும். காமுகர்களிற்கு அரசபதவி கொடுக்கும். ஏழைகளின் பக்கம் என்றுமே நிற்காத மதங்கள் உழைக்கும் மக்களிற்கு தேவையில்லை. சுரண்டும் மதத்தை ஏழை, உழைக்கும் மக்கள் தூக்கி எறியும் நாளில் இந்த அயோக்கியர்களும் தூக்கி எறியப்படுவார்கள்.