Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

இங்கு கம்புச்சண்டை கற்றுத் தரப்படும் - யாழ் பல்கலைக்கழகம்

இலங்கை அரசுகளின் வன்முறை தமிழ்மக்களின் வாழ்வை மரணத்தில் வாழ வைத்திருக்கிறது. இலங்கை அரசுகளின் வன்முறை தமிழ் மக்களைக் கொன்றது; சிறையிட்டது; அகதிகளாக அலைய விட்டது; பொருளாதாரத்தை, தொழில்களை, விவசாயத்தை மண்ணிற்குள் புதைத்தது; பல குழந்தைகளிற்கு கல்வி என்பது காணாப் பொருளாகியது. இந்த வன்முறை சூழ்ந்த வாழ்வில் இருந்து வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புதிதாக வந்த மாணவர்களை அடித்து வன்முறை செய்கிறார்கள்.

இலங்கை இராணுவம் நமது பெண்களை பாலியல்வன்முறை செய்து கொன்றது. அவர்களிடம் இருந்து உயிர் தப்பிய பெண்கள் நினைவிலும், கனவிலும் உடைந்து போய் வாழ்கிறார்கள். இந்த அவல வாழ்வில் உழலும் நமது பெண்கள் வாழும் தமிழ்ச்சமுதாயத்தில் இருந்து வந்த மெத்தப் பெரிய படிப்புகள் படிக்கும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் சக தமிழ் மாணவிகளை தமது ஆணாதிக்க அழுக்கு வாய்கள் திறந்து அவமதிக்கிறார்கள். பெண்கள் என்றால் ஆண்களது பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ளும் கருவிகள் என்ற மண்டை கழண்ட சிந்தனையில் இந்த ஆணாதிக்கப் பன்றிகள் அவர்களிற்கு தொல்லை கொடுக்கிறார்கள். தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே, நாவினால் சுட்ட வடு என்றான் அய்யன் வள்ளுவன். அய்யனின் வரிகள் இந்த மண்டை கழண்டவர்களிற்கு என்றுமே மனதில் ஏறுவதில்லை.

தமிழ் மக்களின் மீது இலங்கை அரசு தாக்குதல் தொடுத்த போது தமிழ்ச்சமுதாயத்தின் எல்லாப் பிரிவினரும் எழுந்து வந்து போராடியது போல யாழ் பல்கலைக்கழகமாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். இலங்கை அரசிற்கு எதிரான அயுதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் என்று பல்கலைக்கழக சூழலிலும்; மக்கள் மத்தியிலும் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். "மண் சுமந்த மேனியர்" போன்ற கலைவடிவங்களை காவிச் சென்றார்கள். இன்று எம்மக்களை மகிந்த ராஜபக்சவின் கொலைவெறி அரசு இனப்படுகொலை செய்த போது கூட தமது சக தமிழ் மாணவர்களை கம்பினால் அடித்துக் காயப்படுத்தும் வீராதிவீரர்கள் வாயே திறக்கவில்லை; எதிர்த்து ஒரு வரி கூட எழுதவில்லை.

இலங்கையில் கல்வி அடிப்படை உரிமையாக இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி என்று இருக்கிறது. ஆனால் இலங்கை நாட்டையும், மக்களையும் முதலாளிகளிற்கும், அந்நிய நாட்டு பெருநிறுவனங்களிற்கும் விற்றுக் கொண்டிருக்கும் இலங்கை அரசுகள் கல்வியையும் விற்று கொள்ளை அடிக்க முயலுகின்றன. தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகங்கள் என்பன மூலம் கல்வியை ஏழைகளிற்கு எட்டாக்கனியாக வைக்க முயலுகிறார்கள். தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள். ஆனால் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தம்மையும், தமக்கு பின் வரப்போகும் மாணவர்களையும் பாதிக்கப் போகும் கல்வி விற்பனைக்கு எதிராக கூட போராடுவதில்லை.

கொடுங்கோலன் ஜெயவர்த்தனா 1981 இல் வெள்ளை அறிக்கை என்று கொண்டு வந்து ஏழைமக்களின் கல்வியில் கை வைக்க முயன்ற போது இதே யாழ்ப்பாணத்தில் தான் பாடசாலை மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்து வெள்ளை அறிக்கைக்கு எதிராகப் போராடினார்கள். ஜெயவர்த்தனாவின் அரசு கொலை செய்வதில் மகிந்த ராஜபக்சவின் அரசிற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. எழுபத்தேழில் பதவிக்கு வந்த உடனேயே இனக்கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கி தமிழ் மக்களைக் கொன்ற கொலைகாரன் அவன். ஆயினும் மாணாவர்கள் தீரத்துடன் திரண்டு எழுந்து போராடினார்கள்.

மக்களின் பிரச்சனைகளைப் பேசினால் இலங்கை அரசு கொலை செய்யும், கொடுமை செய்யும், சிறையில் அடைக்கும் என்பதனால் இவர்கள் வாய் மூடி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் வாடிப் போயிருக்கும் நமது மக்களிற்கு ஊன்றுவதற்கு ஒரு உதவிக்கரமாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. யாழ்ப்பாணத்து பிரபல பாடசாலைகளில் கல்வி என்பது காசிருப்பவர்களிற்கு மட்டுமே என்றாகி விட்டது. வன்னியிலும், கிழக்கிலும் போர் தின்ற வாழ்க்கை நமது குழந்தைகளை வீதியிலே வீசி விட்டிருக்கிறது. மலையகத்தில் மலை சரிந்து வழியை மறிப்பது போல வறுமை ஏழைகுழந்தைகளின் வாழ்வை மறித்து இருட்டில் இழுத்து விழுத்துகிறது. இந்தக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி என்னும் விளக்கை ஏற்றி வைக்க இவர்களால் நிச்சயமாக முடியும்.

ஈழ விடுதலைப் போராளியாக, மக்களை நேசிப்பவனாக இருந்த விமலேஸ்வரன் ஜனநாயகத்திற்காக, சுதந்திரத்திற்காக குரல் கொடுத்ததினால் அவன் சார்ந்த இயக்கத்தினாலும், தமிழ்மக்களின் மீது ஆயுதத்தினால் அதிகாரம் செலுத்தியவர்களாலும் அச்சுறுத்தப்பட்டு தலைமறைவாக வாழ்ந்த நாட்களில் கூட ஏழைக் குழந்தைகளிற்கு தான் கற்ற கல்வியை அள்ளிக் கொடுத்தான். தமிழ்ப் பயங்கரவாதிகளால் அந்த தோழன் கொலை செய்யப்பட்ட நாள்வரை அவனது கல்வி ஏழைக்குழந்தைகளிற்காகவே இருந்தது. இன்று கம்புச்சண்டை நடக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் அவனும் மாணவனாக இருந்தான்.

மேற்கு நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழகம் போக முதல் ஒரு வருட இடைவெளி எடுத்துக் கொண்டு தமது நாட்டு மக்களிற்கு அல்லது வெளிநாடுகளிற்கோ சென்று சமுகசேவை செய்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தில் தான் தாம் படிக்கிறோம் என்பதை உளப்பூர்வமாக உணர்ந்து கொண்டதனால் தான் தம்மால் முடிந்ததை அவர்கள் மக்களிற்கு திருப்பிச் செய்கிறார்கள். ஆனால் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளில் ஊறிய நமது தமிழ்ச்சமுதாயத்து பல்கலைக்கழக மாணவர்களிற்கு பட்டப்படிப்பு என்பது அதிக பணம் தரக்கூடிய வேலைகளை பெறுவதற்கும், கொழுத்த சீதனத்துடன் மணம் செய்து கொள்வதற்குமான படிப்பு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அதனால் தான் இவர்களில் இருந்து மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அதிகாரிகள் உருவாகிறார்களே தவிர மக்களை நேசிக்கும் மனிதர்கள் உருவாகுவது இல்லை.