Thu01272022

Last updateSun, 19 Apr 2020 8am

அகதிகளின் குருதி குடிக்கும் தமிழ் நாட்டு பொலிஸ்நாய்கள்

போலி கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைக்கு என்று பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மோகன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கு வைத்து அக்காவல்நிலைய ஆய்வாளர் என்னும் மிருகத்தால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை இனவெறி அரசுகளின் கொலைக்கரங்களிற்கு அஞ்சி அகதியாக தமிழ்நாடு சென்ற ஒரு தமிழனை தமிழ்நாட்டில் வைத்து கொலை செய்திருக்கிறார்கள். மோகனைக் கொலை செய்த அந்த மிருகத்தைக் காப்பாற்ற தமிழ்நாட்டு காவல்துறை தமது வழக்கமான ஈனத்தனங்களை முயற்சி செய்தது. மோகனில் உடலை பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முயன்றது. நீதி விசாரணைக்கு நீதிபதியை அழைக்காமல் இருக்க முயன்றது. ஈழ மக்களின் தோழர்கள் போராடிய பின்பே உடற்பரிசோதனை நடந்தது.

தமிழ்நாட்டு பொலிஸ்நாய்களின் எஜமானர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, அமைச்சர் பெருமக்கள் என்று தொடங்கி உள்ளூர் நகரசபை உறுப்பினர் வரையான உச்சி வரை ஊழலில் மூழ்கியிருக்கும் அரசியல்வியாதிகள், மக்கள் விரோதிகள். மேல்மட்ட காவல்துறை எதிர்க்கட்சிகளை உடைப்பது, உளவு பார்ப்பது, ஊழல் பணத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது என்று தம் காவல் கடமைகளை செய்யும். அரசியல்வாதிகளிற்கு கால் கழுவி விடுவதில் இருந்து அவர் தம் பெண்டாட்டிகளிற்கு காய்கறி வாங்கி வருவது வரை போன்ற வேலைகளை கீழ்மட்ட காவல்துறை கடமை உணர்ச்சியோடு செய்யும். மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடிப்பவர்களிற்கு தமது தொந்தி பருத்த உடல் வருத்தி கும்பிடு போடும் இவர்கள் அதிகாரத்தில் உள்ள அயோக்கியர்களின் காலை நக்கி காவல் காப்பார்கள். அரசியல்வாதிகளை, அதிகாரத்தில் உள்ளவர்களை, முதலாளிகளை எதிர்ப்போரை; அவர் தம் கொடுமைகளை ஏன் என்று கேட்போரை; அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வார்கள்.

இதுகளின் தலைமையில் இருப்பது தேவாரம், மோகன்தாஸ் போன்ற கொலைகாரர்கள். தருமபுரியில் நிலப்பிரபுகளின் கொடுங்கோன்மைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த புரட்சியாளர்களைக் கொன்று தனது எஜமான விசுவாசத்தை காட்டியது இந்தக் கும்பல். நாட்டில் இருந்த கள்ளர்களிற்கு வாலை ஆட்டிக் காட்டி விட்டு காட்டில் இருந்த வீரப்பனை பிடிக்க புறப்பட்ட தேவாரம் கும்பல் ஏழைமக்களைக் கொள்ளை அடித்தது; பெண்களை பாலியல் வன்முறை செய்தது; அச்சம் என்பது அறியாத ஆதிக்குடி மக்களை ஆயுதத்தைக் காட்டி அடித்துக் கொலை செய்தது. ராஜிவ் காந்தியினது, எம்.ஜி.ஆரினதும் கூட்டுச்சதியில் பங்கெடுத்து தமிழ்நாட்டில் இருந்த ஈழப்போராளிகளை கைது செய்தான்; ஆயுதங்களைப் பறித்தான் மோகனதாஸ். இப்படி ஈழப்போராளிகளை ஒடுக்கியதை "எம்.ஜி.ஆர்; மனிதனும், தொன்மையும் (M.G.R; The man and the myth) என்ற தனது ஆங்கிலப் புத்தகத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தான். எம்.ஜி.ஆரின் வலதுகரமான இந்தக் "கடமை வீரனிற்கும்", அமெரிக்க உளவுத்துறைக்கும் இருந்த தொடர்புகள் பின்பு பத்திரிகைகளில் வெளிவந்தன. எப்படிக் காட்டிக் கொடுத்தாலும் தாங்கும் நமது ஈழவிடுதலை இயக்கங்கள் அதற்குப் பிறகும் எம்.ஜி.ஆர் ஈழ மக்களின் காவல்தெய்வம் என்று கதை சொன்னார்கள்.

கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரெளடிகள் இந்த நாய்களின் கூட்டாளிகள். கனிமவளக் கொள்ளையன் வைகுண்டராஜன்; நூற்றுக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்து விட்டு ஜெயலலிதாவின் ஊழலிலும், அராஜகத்திலும் பங்கு வாங்கி பணக்காரர்களான மன்னார்குடி மாபியா நடராஜன் கும்பல் போன்ற அயோக்கியர்கள் போடும் எச்சில் எலும்புகளிற்காக நிலத்தையும், நீரையும், கடலையும் அழிக்க துணை போவார்கள். கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் ஊற்றும் சாரயத்திற்காக அவன் கைகாட்டுபவரின் கழுத்தை உடைப்பார்கள். கொலைகாரர்கள் வளர்க்கும் வளர்ப்புப்பிராணிகள் இரத்தவெறி பிடித்துத் தான் அலையும். ரெளடிகளிடம் பணத்திற்காக பல்லைக் காட்டும் இந்த அடிமைகள் அப்பாவிகளை, நல்ல மனிதர்களை, நியாயத்திற்காக போராடுபவர்களைக் கண்டால் கொலைவெறி கொள்ளும்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தம் குடும்பத்துடன், குழந்தைகளுடன் சம்பள உயர்வு கேட்டு மனு கொடுக்க திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போது இந்த காவல்துறை கயவர்களால் தாக்கப்பட்டனர். முதலாளிகளின் கொடுமைகளிற்கு, சுரண்டல்களிற்கு நீதி கேட்டு வந்த ஏழை மனிதர்களை கற்களாலும், தடிகளாலும் தாக்கியது காக்கிச்சட்டை போட்ட கயவர் கூட்டம். தாக்குதலிற்கு தப்பி தண்பொருணை தாமிரபரணியில் விழுந்தவர்களை விடாது அடித்தது வீணர்களின் கூட்டம். இரண்டு வயதுக் குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட பதினேழு பேரை கொலை செய்தது கொடியவர்களின் கூட்டம். வெண் நுரை வெள்ளம் மெல்லிய மனிதரின் குருதி குடித்து சிவந்து போனது. வாய்க்கு வாய் தமிழ், தமிழர் என்று பேசும் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் இத்தமிழ்த் தொழிலாளிகள் கொலை செய்யப்பட்டனர். "தமிழினத் தலைவர்" கொலைகாரர்களிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

குடி, குடியைக் கெடுக்கும் என்று சொல்லி விட்டு சாரயத்தை விற்று தமிழ்க்குடிகளை அழிக்கும் தமிழ்நாட்டு அரசிற்கு எதிராக மாணவர்களும், ம.க.இ.க தோழர்களும் போராடும் போது இந்த வளர்ப்புப்பிராணிகள் "சாரயத்திற்கு எதிராக எப்படிப் போராடலாம்" என்று கோபத்தோடு வாலை ஆட்டுகின்றன. குடியினால் குடும்பங்கள் அழிகின்றன என்று சேர்ந்து குரல் கொடுத்த பெண்களையும், மாணவர்களையும், தோழர்களையும் கைது செய்கிறது சாராய முதலாளிகளின் கூலிப்படை. சசிகலா என்ற பினாமியை வைத்து ஜெயலலிதா காய்ச்சும் கள்ளச்சாரயத்திற்காக தமிழ்ப்பெண்களின் வாழ்வை அழிக்கிறார்கள்.

பணம், இலாபம் என்பவற்றிற்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு தமிழ்நாட்டு மக்களையே சுரண்டும் இந்த தலைமைகள் இலங்கைத் தமிழ் அகதிகளை கைதிகளைப் போல் சிறப்புமுகாம்களில் அடைத்து வைத்திருக்கின்றது. இந்த முகாம்களின் கொடுமை தாங்காமல் சமீபத்தில் ஒரு தம்பதியினர் தற்கொலை செய்ய முயன்றனர். தொண்டை கிழிய ஈழத்தமிழர் பற்றி முழங்கும் எவரும் அகதிகளை குற்றவாளிகளைப் போல அடைத்து வைத்திருப்பது பற்றி வாயே திறப்பதில்லை. கோடி, கோடியாக கொள்ளை அடித்த ஜெயலலிதாவிற்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போது "நாடு கடந்த தமிழீழப் பிரதமர்" மனம் நொந்து ஜெயலலிதாவின் அருமைகளையும், பெருமைகளையும் அறிக்கையில் அடுக்கி விட்டார். இன்று இந்த அகதி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். "பிரதமர்" ஏனென்றும் கேட்கவில்லை.

சிரிய அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள்; ஆனால் சவுதி அரேபியா போன்ற பணக்கார முஸ்லீம் நாடுகள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தமிழ் அகதி மோகனை தமிழ் பொலிஸ்காரன் அடித்துக் கொல்கிறான். இனம், மொழி, மதம் என்பன எந்த விதத்திலும் ஏழைகளிற்கும், ஒடுக்கப்பட்டவர்களிற்கும் உதவுவதில்லை; அவை மனிதர்களைப் பிரிப்பவர்களிற்கே உதவுகின்றன என்பதை இந்த மனிதனின் மரணம் மறுபடி எடுத்துச் சொல்கிறது.