Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

கொடும்பாவிகளும், செலக்டிவ் அம்னீசியாவும்!!!

செலக்டிவ் அம்னீசியா ஒருவகை மறதிநோய். தலையில் ஏற்படும் காயங்களினால் சில குறிப்பான ஞாபகங்கள் மட்டும் தொலைந்து போகும் நோய். தலையில் அடிபட்டவர்களிற்கு மிக அரிதாக உண்டாகும் பக்கவிளைவு இந்த செலக்டிவ் அம்னீசியா. இந்த மிக அரிதான குறிப்பிட்ட சில நினைவுகளை மறக்கும் வியாதி தமிழர்களிடையே பெருமளவில் காணப்படுவது மிக கவலைக்குரியதும் ஆய்வு செய்யப்பட வேண்டியதுமான ஒரு முக்கியமான விடயமாக இன்று நம் முன் உள்ளது.

மக்கள் செத்து மடிந்த போது ஒரு மெழுகுவர்த்தி கூட ஏத்தி வைக்க துணிவில்லாத கூட்டமைப்புகாரர்களும், சோனியாவின் கண்களில் ஈரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் அறிவாளிகளும் பதவிப்போட்டிகளால் தீ வைத்துக் கொண்டு கூச்சல் போடுகிற அளவிற்கு இவர்களில் சிலருக்கு இந்த வியாதி முத்தி விட்டது.

சுமத்திரன் என்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர்களிற்கு துரோகம் செய்து விட்டார் என்று அரசியல் விஞ்ஞானிகள் துரோகிப்பட்டம் கொடுத்திருக்கிறார்கள். நான் கணக்கிலே வீக் என்பனால் இது எத்தனையாவது துரோகிப்பட்டம் என்று சொல்ல முடியவில்லை. பட்டம் கொடுக்கிறவர்களாவது கணக்கு வைத்திருப்பார்கள் என்றைக்காவது ஒரு நாளைக்கு எடுத்து விடக் கூடும். சனங்களிடம் சேர்த்த காசுக்கு "தேச பக்தர்கள்" கணக்கு காட்டவில்லை என்பதற்காக துரோகிகள் கணக்கும் வெளிவராமலே போய்விடும் என்று யாரும் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. காசுக் கணக்கு கோடிகளில் இருக்கும் எண்ணி முடிக்கவே எத்தனையோ தலைமுறை வேண்டும். சம்பந்தருக்கும், சுமத்திரனிற்கும் கடைசியாக கொடுத்த துரோகிப்பட்டங்களையும் சேர்த்து துரோகிக் கணக்கு ஆயிரங்களில் தான் இருக்கும். வில்லேஜ் விஞ்ஞானிகள் வெகுவிரைவில் வெளி விடுவார்கள்.

சுமத்திரன், சம்பந்தர் போன்ற வலதுசாரி அரசியல்வாதிகள் எதோ இன்றைக்குத் தான் தமிழ்மக்களிற்கு துரோகம் செய்து விட்டார்களாம். தமிழ்க் காங்கிரஸ், தமிழ் அரசுக்கட்சி என்னும் இந்தக் கட்சிகளின் வரலாறு என்றைக்குமே துரோகத்தின் வரலாறு தான். மக்களின் பிரச்சனைகளை தூண்டி விட்டு தாங்கள் பதவி சுகம் அனுபவித்தவர்கள் என்பது தான் இவர்களின் அரசியல் வரலாறு. கொழும்பில் தமிழ், சிங்கள பெருந்தலைகள் குடியும், குடித்தனமுமாக வாழும் கறுவாக்காட்டில் வசித்த தமிழ்தலைமைகள் தேர்தல் காலங்களில் தமிழ்ப்பகுதிகளிற்கு வந்து சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாது என்று இனவாதம் பேசி வாக்குகள் பொறுக்குவார்கள். தேர்தல் முடிந்தவுடன் சேனநாயக்காக்கள், பண்டாரநாயக்காக்களுடன் சேர்ந்து கொஞ்சிக் குலாவுவார்கள்.

எழுபத்தேழின் தேர்தலிற்கு முன்பு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழ் ஈழமே தமிழ் மக்களிற்கான தீர்வு என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். வட மாகாணத்தின் மொத்த தொகுதிகளான பதின்நான்கு தொகுதிகள் உட்பட பதினெட்டு தொகுதிகளில் வெற்றி பெற்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக தெரிவு செய்யப்பட்டார்கள். அப்பாப்பிள்ளை அமிதலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். தேர்தல் முடிந்த சிலநாட்களில் இனவெறியன் ஜெயவர்த்தனாவின் அரச பயங்கரவாதம் தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. மீண்டும் ஒருமுறை தமிழ்மக்கள் சிங்கள பேரினவாதத்திற்கு பலியாகினார்கள். தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் கட்சிகளின் கூட்டான தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தமிழர்களிற்கு நாடு காண தீர்மானம் போட்ட கட்சியினர் தமிழ் மக்களின் மீதான அரசபயங்கவாதக் கொடுமைகளைக் கண்ட பின்பும் ஒரு மாநகரசபைக்கு இருக்கும் அதிகாரங்களைக் கூட கொண்டிராத மாவட்ட சபை என்னும் ஜெயவர்த்தனா போட்ட எலும்புத்துண்டை கவ்விக் கொண்டு வந்து தமிழ்மக்களிற்கு தீர்வு கிடைத்து விட்டதாக ஊளையிட்டார்கள்.

எண்பத்துமூன்று கலவரத்திற்கு பின்பு ஆயுதம் தாங்கிய போராட்ட வடிவம் இளைஞர்கள் தலைமையில் அரசியல் களத்தை முன்னெடுத்துச் செல்ல கூட்டணியினர் ஓரமாக விலகி நின்றார்கள். எண்பத்துமூன்று கலவரத்தைக் கண்டித்து கூட்டணியினரால் நல்லூர் சட்டநாதர் கோவிலடியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. உண்ணாவிரதம் "தமிழ்த் தேசிய வீரர்களால்" குழப்பப்பட்டது. துரோகிகள் ஒழிக என்று கோசம் எழுப்பப்பட்டது. தங்களிற்கு எதிரானவர்களை துரோகிகள் என்று திட்டித் தீர்த்த தந்தைமார்கள், தங்களையே துரோகிகள் என்று தந்தைக்கு துரோகி மந்திரம் உபதேசித்த வேலுப்பிள்ளைகளைக் கண்டு பம்மிப் பதுங்கினார்கள். தேசிய வீரர்களுடன் வந்த ஒரு "குழந்தைப்போராளி" கூட்டணித் தலைவர்களிற்கு "தாயினும் சாலப் பரிந்து" பலவந்தமாக சோறு ஊட்டி விட உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கூட்டணித் தலைவர்களின் நல்லநேரம், அது சயனைட் சந்தைக்கு வராத காலமாக இருந்தது.

தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organisation) தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோப்பாய் தொகுதியின் ஆலாலசுந்தரத்தையும், மானிப்பாய் தொகுதியின் தருமலிங்கத்தையும் கடத்திச் சென்று கொன்றது. இந்தியா சொல்லிவிட்டால் கண்ணைக்கூட இமைக்காமல் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் கட்டுப்பாடாக சேவகம் செய்யும் டெலோயிஸ்ட்டுக்கள் எதற்காக இந்தியாவின் கூட்டாளிகளான கூட்டணியினரை கொன்றார்கள் என்பது இன்றுவரை டெலோவின் கொள்கைகளைப் போலவே மர்மமாகவே இருக்கிறது.

இக்கொலைகளின் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்ப்பகுதிகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. கொழும்பிலும், தமிழ்க்கட்சிகளின் "தலைமைச் செயலகம்" இருக்கும் டெல்லியிலும் சங்கத்து ஆட்கள் "இன்னும் இந்த ஊர் நம்மளை நம்புதா இல்லையா" என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார்கள். 13.07.1989 அன்று அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் தமிழ்த் தேசிய வீரர்களால் கொல்லப்பட்டனர். மற்றொரு தலைவரான சிவசிதம்பரம் காயங்களுடன் உயிர் தப்பினார். நாங்கள் தான் சுட்டோம் என்றோ, எதற்காகச் சுட்டோம் என்றோ தமிழ்த் தேசிய வீரர்கள் எதுவும் சொல்லாமல் மெளனம் சாதித்தார்கள். ஒருவேளை நல்லூரில் வைத்து சோறு ஊட்டிய கைகளாலேயே கொல்ல வேண்டி வந்துவிட்ட சோகத்தில் பேசாமல் இருந்தார்களோ தெரியவில்லை.

19.10.2001 அன்று வரை துரோகிகளாக இருந்தவர்களை 20.10.2001 அன்று புனிதர்களாக்கி தேசபக்தர்களாக்கி விட்டதாக தமிழ்த் தேசிய வீரர்கள் மர்மநாவலின் திடுக்கிடும் திருப்பத்தை மிஞ்சிய ஒரு அதிர்ச்சியை தமிழ்மக்களிற்கு அள்ளி வழங்கினார்கள். செப்டம்பர் பதினொன்று தாக்குதலின் பின்பு உலகப்பயங்கரவாதி ஜோர்ஜ் புஷ் "நீங்கள் அமெரிக்காவுடன் இருக்க வேண்டும், இல்லையென்றால் அல்கைடா ஆதரவாளர்களாக கருதப்படுவீர்கள்" என்று உளறினார். அதைப் போல, தமிழ்ப்பயங்கரவாதிகள் "நாங்கள் போராட்டம் என்ற பெயரில் செய்யும் கொலைகளையும், மக்களை அணி திரட்டாமல் செய்யும் அரசியல் விளையாட்டுக்களையும் கேள்வி கேட்காமல் எங்களுடன் சேர்ந்தால் போராளி, இல்லயென்றால் துரோகி" என்று தமது வாழ்வை, தமது வாழ்வை விட நேசித்த தமது உறவுகளை விட்டு விட்டு தமிழ்மக்களிற்காக போராட வந்த ஆயிரக்கணக்கான போராளிகளை கொன்று குவித்தார்கள்.

நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் போராட வந்தவர்களை கொன்று குவித்தவர்கள், நாட்டை விட்டு துரத்தியவர்கள் பழைய பெருச்சாளிகளை, தமிழ்மக்களை வைத்து பிழைப்பு நடத்துவதையே தொழிலாக கொண்டவர்களை, இந்திய ராணுவத்துடன் சேர்ந்து அட்டகாசம் செய்த சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை மறுபடியும் கூட்டிக் கொண்டு வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று, தானைத் தலைவர்கள் என்று தமிழ்மக்களிற்கு படம் காட்டினார்கள். அப்படியென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் மட்டும் தான் துரோகிகளா? அவர்களை சுட்டுக் கொன்றதும் மிச்சமிருந்த கூட்டணியினர் போராளிகளாகி விட்டார்களா?. மார்கழி 2001 இல் நடந்த பொதுத்தேர்தலில் மற்ற கூட்டமைப்பினர் ஒரு மாதப் போராளிகளாகி விட்ட நம்பிக்கையில் தமிழ்ப்பகுதிகளிற்கு வந்து உயிர்பிழைத்திருந்த போதிலும், வீட்டிற்கு பேச என்று வந்து தேனீர் குடித்துக் கொண்டே சுட்டுத் தள்ளிய மாவீரர்களின் நேர்மையையும், வீரத்தையும் நேரிலே கண்ட சிவசிதம்பரம் இறக்கும் வரை தமிழ்ப்பகுதிகளிற்கு வரவில்லை. கொழும்பில் இருந்து கொண்டு தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சூட்டுக்காயத்துடன் உயிர் தப்பிய சிவசிதம்பரத்தை எந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்?. பாதி மனிதன், பாதி மிருகம் சேர்ந்த கலவை போல பாதி துரோகி, பாதி போராளி சேர்ந்த கலவையா?.

முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிய மனிதர்களின் மேல் ஏறி மிதித்துக் கொண்டு கொன்றவர்களில் ஒருவனான சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரித்தார்கள். கடைசிவரை மகிந்த ராஜபக்சாவுடன் இருந்த மைத்திரிபால் சிரிசேனாவை கடந்த தேர்தலில் ஆதரித்தார்கள். அமைதிப்படை என்ற பெயரில் வந்து நேரில் கொன்ற, மகிந்த ராஜபக்ச அரசுடன் சேர்ந்து தமிழ்மக்களைக் கொன்ற இந்திய வல்லரசு தமிழ்மக்களிற்கு தீர்வு பெற்றுத் தரும் என்று பச்சைப்பொய் சொல்கிறார்கள். இது எதுவும் தமிழ்மக்களிற்கு செய்யும் துரோகங்களாக தேசபக்தர்களிற்கு தெரியவில்லை. திடீரென விழித்தெழுந்து கொடும்பாவி எரிக்கிறார்கள். இந்த பிற்போக்கு தலைமைகள் என்றைக்குமே இப்படித்தான் இருப்பார்கள், மக்களை அணி திரட்டி போராடும் முற்போக்கு அரசியலே உண்மையான தீர்வுகளைப் பெற்றுத்தரும் என்ற அடிப்படை அரசியல் தெரியாதவரை இந்த மனோவியாதிகள் மாறப்போவதில்லை