Thu01272022

Last updateSun, 19 Apr 2020 8am

எழுந்து வாரும் எம் சகோதர, சகோதரியரே!!!!

அறுவைதாசன் வீட்டிற்குள்ளே நுழைய மகன் ஓடி வந்து "அப்பா நரி தோட்டத்திலே படுத்திருக்கு, வந்து பாருங்கோ" என்றான். நல்ல வெய்யில் காலத்தில் யாழினி தோட்டத்தில் படுத்திருந்து வெய்யிலை அனுபவிப்பதுண்டு அதைத் தான் மகன் சொல்கிறான் என்று நினைத்த அறுவைக்கு முகம் முழுக்க சிரிப்பு மலர்ந்தது.

"தான் யாழினியை நரி என்று மனதிற்குள் நினைக்க மகன் தாயை நரி என்று வெளிப்படையாகவே சொல்லுறானே என்று சந்தோசப்பட்டுக் கொண்டான். பிறகு சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு "அம்மாவை நரி என்று ஒருக்காலும் சொல்லக் கூடாது" என்று கண்டிப்பது போல நடித்துக் கொண்டு தோட்டத்துக் கதவை திறக்க நரி ஒன்று பக்கத்து வீட்டிற்குள் பாய்ந்தோடியது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கிராமப்புறங்களில் இருந்து லண்டனிற்கு இரை தேடி வந்து பல்கிப் பெருகிய நரிகளில் ஒன்று தான் அறுவையின் சோம்பலால் ஒழுங்கில்லாமல் காடு மாதிரி இருந்த தோட்டத்தில் படுத்திருந்திருக்கிறது. "நீர் நரி, உம்முடைய பரம்பரையே நரிப்பரம்பரை, இந்த லட்சணத்தில் நீர் என்னை நரி எண்டு சின்னப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிறீரோ" என்று யாழினி கத்தின கத்தலில் பக்கத்து வீட்டு அப்புவே பயந்து போய் அறுவையை பரிதாபமாக பார்த்தார்.

யாழினி கிழித்த கிழியில் நொந்து நூலாக நிற்கும் போது வாசல் மணி அடித்தது. உள்ளே வந்த அய்யாமுத்து குதிரை கனைப்பது போன்ற குரலில் "அண்ணே நீ பத்தாம் வகுப்பு பெயில், ஆனா அவங்கள் தாங்க அஞ்சாம் வகுப்பு பாஸ் என்கிறாங்கள். பாஸ் பெரிசா? பெயில் பெரிசா? பாஸ் தானே பெரிசு என்று சொல்லி விட்டு கந்தையா அண்ணையின் பழைய மோட்டார்சைக்கிள் விட்டு விட்டு ஸ்ரார்ட் ஆவது போல் விட்டு விட்டு இளித்தான். சோகக்காட்சிகளில் நடிக்கத் தெரியாமல் வாத்தி கைகளால் முகத்தை இறுகப் பொத்தி மறைப்பதையும், சிவாஜி ஒரு படத்தில் மிருதங்கம் வாசிக்கும் காட்சியில் உணர்ச்சியாக நடிக்கிறாராம் என்று காட்டுவதற்கு வாயை ஆவென்று மிருதங்கமே உள்ளே போகும் அளவிற்கு திறந்து காட்டியதை எல்லாம் நடிப்பு என்று பார்த்து மண்டையிடி தாங்காமல் அறுவை தவித்ததுண்டு. அய்யாமுத்து நகைச்சுவை நடிகனைப் போல் கனைத்த போது அறுவைக்கு அந்த மண்டையிடி மறுபடி வந்தது.

"சொல்லுறதை ஒழுங்காக சொல்லடா, மாடு சூப்பின மாங்கொட்டை தலையா" என்று முறைத்தான் அறுவை. அதாவது நீ மகிந்த ராஜபக்சவும், மைத்திரியும் ஒரே மாதிரியான மக்கள் விரோதிகள்; நேற்று வரைக்கும் ஒன்றாக ஒரே அரசில் இருந்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள்; மகிந்த ஜனாதிபதியாகவும், மைத்திரி பாதுகாப்பு மந்திரியுமாக இருந்து தமிழ்மக்களை கொன்று குவித்தவர்கள்; இலங்கையை வெளிநாட்டு பெருமுதலாளிகளிற்கு ஒன்றாகச் சேர்ந்து விற்றவர்கள், இனியும் விற்கப் போகிறவர்கள் ஆகவே இரண்டு பேருமே ஒரேமாதிரியான மொள்ளைமாரிகள் தான் என்கிறாய். ஆனா அவங்க மகிந்த ராஜபக்ச தான் முதல் எதிரி, அதிகாரத்திலே இருந்து கொண்டு அராஜகம் பண்ணுகிறான் அதனாலே முதலிலே மகிந்தாவை துரத்துவோம் என்று தெளிவாக, விளக்கமாக புரியும்படி சொல்கிறார்கள். அப்ப நீ பெயில், அவங்க பாஸ் சரி தானே உனக்கு தெளிவு வந்திச்சா, புரிஞ்சுதா, விளங்கிச்சா என்று நீட்டி முழக்கி கேட்டான் அய்யாமுத்து

அரைப்போத்தல் சோடா மாதிரி இருந்து கொண்டு இப்பிடி இம்சை பண்ணுகிறானே என்று கறுவிய படி வீணாப் போனவனே எல்லாம் ஒண்டு தானே அதை ஏண்டா மூண்டு விதமாக கேக்கிறாய். "ஜெயவர்த்தனா எழுபத்தேழிலும், எண்பத்து மூன்றிலும் தமிழ்மக்களைக் கொல்ல தலைமை தாங்கியவன், திறந்த பொருளாதாரக் கொள்கை என்று வெளிநாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாக இலங்கையை மாற்றியவன் பிறகு வந்த பிரேமதாசாவின் காலத்தில் தான் தெற்கின் நதிகளில் ஆண்களும், பெண்களுமாக மூச்சடங்கிப் போனார்கள். "இவங்கள் எல்லாம் அய்க்கிய தேசியக் கட்சியின் அமெரிக்க அடிவருடிகள் நான் சமாதான தேவதை" என்று சொல்லிக் கொண்டு வந்த சந்திரிகா எந்த விதத்தில் வித்தியாசமானவர். பிரேமதாசா காலத்தில் கொல்லப்பட்ட, காணாமல் போன மக்களிற்காக ஜெனீவா வரை சென்று போராடிய மகிந்தவின் கொலையரசினால் தான் ஆயிரம் ஆயிரம் தமிழ்த்தாய்மார்கள் தாம் பெற்ற பிள்ளைகளை தேடி மனம் பேதலித்து கண்ணீர் மல்கிய விழிகளுடன் காத்திருக்கின்றனர்.

மகிந்தாவை துரத்தி விட்டால் வரப்போகும் மைத்திரி அன்புடனும், பட்சத்துடனும் நடந்து கொள்ளுவார் இல்லாவிட்டாலும் பரவாயில்லை மகிந்தாவை துரத்துவதே போதும் எண்டு மனோ கணேசன் சொல்லலாம், ஆனா நான் அப்பிடிச் சொல்ல எனக்கு என்ன மண்டையா கழண்டு போச்சு என்று அறுவை நடுங்கும் குரலால் சவால் விட்டான். ஜெயவர்த்தனா 77 இல் பதவிக்கு வந்த போது எழுபத்தொரு வயதான முதியவர். பிரேமதாச சாதி ஒடுக்குமுறைகளைச் சந்தித்த ஒரு சலவைத் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர். சந்திரிகா ஒரு பெண், கணவனை அரசியல் வன்முறைக்கு பலி கொடுத்த ஒரு கைம்பெண். ஆனால் இவர்கள் எல்லோரும் பதவிக்கு வந்த போது ஒரே மாதிரியான மக்கள் விரோதிகளாக இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையில் ஒன்றில் மக்கள் விரோதிகள் பதவிக்கு வருவார்கள், அல்லது பதவிக்கு வந்த பிறகு மக்கள் விரோதிகளாக மாறுவார்கள்.

மைத்திரி மகிந்தாவை விட்டு வெளியே வந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி மகிந்தாவுடன் சேர்ந்திருக்கிறார். மரத்திற்கு மரம் பாயும் மந்திகள் போல் கட்சி விட்டு கட்சி பாயும் இவர்களிடம் என்ன வித்தியாசம் இருக்கிறது. இவர்களின் கட்சிகளிற்கு இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது. எத்தனை லட்சங்கள் கொடுப்பார்கள் என்பது தான் வித்தியாசம். அதனால் தான் நாங்கள் சொல்கிறோம் மகிந்தாவை துரத்துவோம் என்பதுடன் மக்களின் பிரச்சனைகள் முடியப் போவதில்லை. மக்கள் விரோதிகளை தோற்கடிக்க வேண்டுமாயின், முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமைத்துவம் கட்டியமைக்கப்பட வேண்டும். எழுந்து வாரும் எம் சகோதர, சகோதரியரே!. அப்போது மக்கள் வீதிக்கு இறங்கி சர்வாதிகாரிகளை துரத்துவார்கள்.

சர்வாதிகாரி மஹிந்தவை தோற்கடிப்போம் - இன்னொரு சர்வாதிகாரிக்கு இடமளியோம்!

பொய்யான அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம்! மக்கள் அரசியலமைப்பு நிர்ணய சபையைக் கூட்டு!

நவதாராளமய முதலாளித்துவத்தை தோற்கடிப்போம்!

தேசிய ஒடுக்குமுறைக்கும் இனவாதங்களுக்கும் எதிராக போராடுவோம்!