Thu01272022

Last updateSun, 19 Apr 2020 8am

காற்றிடம் என்னைக் கொடுத்து போகச் சொல்!!!

"இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை.

என்னைத் தூக்கிலிட்ட அடுத்த கணமே என் இதயம், சிறுநீரகம்,க ண்,எலும்புகள் என மாற்று அறுவை சிகிச்சைக்கு எதெல்லாம் பயன்படுமோ அவை அனைத்தையும் என் உடலில் இருந்து உடனடியாக எடுத்து தேவைப்படுபவருக்கு பரிசாக தந்து விட வேண்டும் என்று கெஞ்சிக் கேள். என் உடல் உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு என் பெயர் தெரிய வேண்டாம், எனக்காக அவர்கள் பூங்கொத்து வாங்கி வைக்க வேண்டாம், எனக்காக பிரார்தனை கூட செய்ய வேண்டாம். எனக்காக ஒரு கல்லறை அமைக்கபட்டு அதில் நீ வந்து அழுது புலம்ப வேண்டாம். எனக்காக நீ கருப்பு உடை அணிய வேண்டாம். என்னுடைய சிரமமான நாட்களை மறக்க முயற்சி செய். காற்றிடம் என்னைக் கொடுத்து எடுத்துப் போகச் சொல்".

ரெகானா ஜபாரி என்ற ஈரானியப் பெண்ணின் இறுதி வரிகள் இவை. தன் கழுத்தை மரணக்கயிறு இறுக்கப் போகிறது என்னும் கடைசித் தருணத்திலும் தன் தாயிற்கு ஆறுதலையும்,தன் உடல் உறுப்புகளை சக மனிதர்களிற்கு பயன்படுத்த கொடுக்கச் சொல்லும் கருணையையும் வெளிப்படுத்தும் வரிகள். ரெகானா ஜபாரியை ஈரானின் இஸ்லாமிய அரசு கொலை செய்தது. அவள் செய்த குற்றம் என்ன?. அவள் தனது உடலை, தன்மானத்தை, கண்ணியத்தை காக்க போராடியது தான் இஸ்லாமிய சட்ட விதிகளின் மரண தண்டனைக்குரிய குற்றமானது. தன்னை பாலியல் வன்முறை செய்ய முயன்றவனை தண்டித்தது தான் அவள் செய்த குற்றம்.

"அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் என் மீது பாலியல் வன்முறை செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்".

ஆம், ரெகானா இந்த மதவாதிகளின் அநீதியான சட்டங்களை பெண்களிற்கும், ஏழைகளிற்கும் எதிரான மதவெறி அரசுகளை மிகச் சரியாக, துல்லியமாக தோலுரித்து காட்டியிருக்கிறாள். அவள் அந்த காமவெறி பிடித்தவனால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தால் அவளது உடலைப் போல அந்த சம்பவமும் ஒரு மூலையிலே வீசப்பட்டிருக்கும். ஏழ்மையின் காரணமாக ஒட்டி உலர்ந்த வயிறுகளிற்கு ஒரு வேளை உணவு தேடி தங்களது குடும்பங்களையும், குழந்தைகளையும் விட்டு விட்டு தீ போல அனல் கக்கும் அரேபிய பாலைவனங்களிற்கு வேலைக்கு வரும் அபலைப்பெண்களின் மீது வன்முறை செய்யும் அரேபிய பணக்காரர்கள் என்றைக்குமே மதவாத சட்டங்களின் முன்பு தண்டிக்கப்படுவதில்லை. அது போல இந்த முன்னாள் புலனாய்வு அதிகாரியான காமவெறியனின் குற்றமும் என்றைக்குமே அதிகார வர்க்கத்தினால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருக்கும்.

"அன்புள்ள அம்மா, இப்போது நீ கேட்பவையை முன்னிட்டு அழாதே. காவல்துறை அலுவலகத்தில் முதல் நாள் விசாரணையின் போது விசாரணை அதிகாரி ஒருவர் கைகளில் நகங்கள் வைத்திருந்ததற்காக என்னை அடித்தார். இந்த காலத்தில் அழகு வரவேற்கப்படுவதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, ஆசைகளின் அழகு, அழகான கையெழுத்து, கண்களின், குறிக்கோளின் அழகு, குரலின் அழகு என எதுவும் இந்த காலத்தில் விரும்பப்படுவதில்லை".

பெண்கள் தங்களை அழகு படுத்துவது தண்டனைகுரிய குற்றம். அவள் தன்னை மூடி மறைத்துக் கொள்ள வேண்டும். நடக்கும் போது தடக்கி விழாமல் இருக்க உடையில் கண்களிற்கு நேரே இரண்டு துவாரங்கள் இருந்தால் போதும். அவள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது. இரானிற்கும் இத்தாலிக்கும் இடையில் நடந்த ஒரு ஆண்கள் கரப்பந்தாட்டப்போட்டியை பார்க்கச் சென்ற கவாமி என்ற பெண் மதச்சட்டங்களை மீறியதற்காக ஈரானில் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. வில்லியம் மோர்கன் என்ற கிறிஸ்தவ வாலிபர் இளைஞர் சங்கத்தின் (Y.M.C.A) உடல் கல்வி இயக்குநரால் 1895 இல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கரப்பந்தாட்டத்தை முஸ்லீம் ஆண்கள் விளையாட மதச்சட்டங்கள் இடமளிக்கின்றன. ஆனால் அந்த விளையாட்டுக்களை பெண்கள் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம்.

சல்மான் ருஸ்டி "சாத்தானின் வேதங்கள்" எழுதிய போது ஈரானிய அரசு அவர் இஸ்லாமையும், குரானையும் அவமதித்து விட்டார் என்று சொல்லி அவரின் தலைக்கு விலை பேசியது. பிரித்தானியாவின் ரொச்டேல் (Rochdale) என்ற நகரத்தில் பாகிஸ்தானியர்களும், ஆப்கானிஸ்தானியர்களும் சேர்ந்த கும்பல் ஒன்று பதினெட்டு வயதிற்கு குறைந்த ஏழை ஆங்கில சிறுமிகளிற்கு சிறுபரிசுகளை கொடுத்து மதுபோதையில் அந்த பள்ளிச் சிறுமிகளை மூழ்கடித்த பின்பு கெடுத்து வந்திருக்கிறது. அந்த கும்பலில் உள்ளவர்கள் எல்லோருமே முஸ்லீம்கள். ஒருவர் பள்ளிவாசலில் இஸ்லாமிய மதக் கல்வி ஆசிரியராக வேலை செய்கிறார். இவர்கள் சிறுமிகளை கெடுத்ததினால் இஸ்லாமின் புனிதம் கெடவில்லை. அதனால் ஈரானிய அரசு இவர்களிற்கு "பத்வா" விதிக்கவில்லை. ஆனால் ஒருவர் ஒரு மத நூலை விமர்சித்தால் அது மரண தண்டனைக்குரிய குற்றம்.

பெண்கள் சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் தலைநிமிர்ந்து நிற்பதை சமயவாதிகளால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சமயவாதிகளைப் பொறுத்தவரை அவள் ஆணின் அடிமை. ஆண்கள் பாலியல் இன்பம் பெறுவதற்கு வைத்திருக்கும் ஒரு கருவி. கோழி முட்டைகளை இயந்திரத்தில் வைத்து குஞ்சுகளாக்குவது போல ஆணின் விந்துகளை கருப்பையில் வைத்திருந்து குழந்தைகளாக்கும் ஒரு இயந்திரம். பெண் ஒரு மாயப்பிசாசம். அவள் அப்பாவிகளான ஆண்களை மயக்கி கெட்ட சிந்தனைகளை மனதில் விதைத்து விடுவாள். அதனால் இந்த பச்சிளம் பாலகர்களான ஆண்களால் முழு மனதுடன் வணங்க முடிவதில்லை. இவ்வாறு மண்டை கழன்ற சிந்தனைகளை கொண்டிருக்கும் மதவெறியர்களை பெண்கள் அடித்துத் துரத்தும் வரை ரெகானா போன்ற பெண்கள் கொலை செய்யப்படுவதை தவிர்க்க முடியாது. முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து பெண்கள் அமைப்பாக போராடும் போது மட்டுமே இந்த பைத்தியக்காரக் கும்பல்களை விரட்டி அடிக்க முடியும். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ முடியும்.