Thu01272022

Last updateSun, 19 Apr 2020 8am

காதிலே பூ, அல்லது லைக்கா முதலாளி கைது

பொருளாதார அடியாட்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்தக் கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களிற்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலகவங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அய்க்கிய நாட்டு நிறுவனம் மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி "உதவி" அமைப்புகளில் குவிந்திருக்கும் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டிகளிற்கு, இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டைப்பைகளிற்கு கொண்டு சேர்ப்பது தான் இவர்களின் வேலை. மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம் மிரட்டிப் பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகள்.

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்னும் தனது புத்தகத்தில் ஜான் பெர்க்கின்ஸ் என்னும் முன்னாள் பொருளாதார அடியாள் பன்னாட்டு நிறுவனங்களின் மோசடிகளை மேற்கண்ட வசனங்களுடன் தொடங்குகிறார். தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வது என்று சொல்லிக் கொண்டு மக்களின் போராட்டங்களை திசை திருப்புவார்கள். மத நிறுவனங்களை, மத போதகர்களை அனுப்பி ஏழ்மை, வறுமை, பசி ,பட்டினி என்பன இறைவனால் விதிக்கப்பட்டவை, பிறவிப்பயன்கள் மாற்ற முடியாதவை என்றும் இந்த உலக துன்பங்கள் மரணம் வரை தான் அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள். பின்பு சொர்க்கவாசல் திறந்து இன்பமழை பெய்யும் என்று ஆறுதல் சொல்வார்கள். (லைக்கா விமான சேவையின் மலிவுவிலை பயணச்சீட்டுகளில் அடிக்கடி அவர்கள் சொர்க்கத்திற்கு போய் வந்த அனுபவமாக இருக்கக்கூடும்).

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று சொல்லிக் கொண்டு பணத்திற்காக எதையும் செய்பவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்குவார்கள். "இதயம் பேசுகிறது" மணியன், "துக்ளக்" சோ போன்றவர்கள் அமெரிக்காவிற்கு போய் வந்து பக்கம், பக்கமாக அமெரிக்காவின் பெருமைகளை எழுதித் தள்ளினார்கள். அமெரிக்க ஜனநாயகம், பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை பற்றி புராணம் பாடினார்கள். "போர்ட் பவுண்டேசன்", "ரொக்பெல்லர் பவுண்டேசன்" போன்ற வாகனத்தயாரிப்பாளர்கள், எரிபொருள் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சுற்றுச்சூழலை காப்பது பற்றியும், மக்களின் வாழ்வை மேம்படுத்துவது பற்றியும் பலர் கதை அளந்தார்கள்.

195000 இலிருந்து 430000 வரையான வியட்நாமிய மக்கள் பிரெஞ்சு, அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்டனர். ஆனால் சில்வஸ்டர் ஸ்ரலோன் நடித்த ரம்போ படங்களில் அமெரிக்க இராணுவமும், ரம்போவும் வியட்நாமிய மக்களை "கம்யுனிச பயங்கரவாதிகளிடமிருந்து" உயிரைக் கொடுத்து காப்பாற்றினார்கள். அமெரிக்காவும், கொலிவூட்டும் இவ்வளவு பெரிய பொய்களை சொல்லும் போது நாங்கள் மட்டும் என்ன குறைந்தவர்களா என்று லைக்காவின் அல்லக்கைகளும் களத்தில் இறங்கி ஒரே ஒரு சின்னப் பொய்யை சொன்னார்கள். லைக்கா முதலாளி மாலை தீவிலிருந்து லண்டன் விமான நிலையத்தை நோக்கிப் பயணம் செய்த போது விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரித்து நின்றது. விமானத்தினுள் நுளைந்த இலங்கை அரச உளவுப்படை சுபாஸ்கரனையும் உதவியாளரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக காற்றுவாக்கிலே ஒரு செய்தி கசிந்து வந்தது.

டேவிட் கமரோன் இலங்கை பொதுநலவாயநாடுகளின் மாநாட்டிற்கு போன போது யாழ்ப்பாணம் போய் மகிந்தாவின் வயிற்றில் புலி(ளி)யை கரைத்ததாக தமிழ்த்தேசிய வியாபாரிகள் தமிழ்மக்களிற்கு நற்செய்தியை வாரி வழங்கிய போது, டேவிட் கமரோனுடன் நூறுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் இலங்கை சென்று மகிந்தாவுடன் கோடிக்கணக்கில் வியாபார ஒப்பந்தங்களை செய்து கொண்டார்கள். இந்த நிறுவனங்களில் ஒன்று லைக்கா. லைக்கா, டேவிட் கமரோனின் கொன்சேவர்ட்டிவ் கட்சிக்கு நிதி வழங்குகிறது. 343,442 பவுண்ட்ஸ்களை லைக்கா இது வரை கொன்சேவர்ட்டிவ் கட்சிக்கு கொடுத்திருக்கிறது.

Commonwealth Business Forum என்ற இலங்கையில் நடந்த பொதுநலவாயநாடுகளின் வர்த்தக மன்றத்திற்கு எயார்டெல், இலங்கை வங்கி, இலங்கை தேயிலைச் சபை என்பன பிரதான அனுசரணையாளர்களாக,விளம்பரதாளர்களாக இருக்கும் போது "லைக்கா மொபைல்" Gold Sponsor விசேட அந்தஸ்த்துடன் இருக்கிறது. www.cbcglobal.org/media/news/commonwealth-business-forum-2013-communique என்ற பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விபரங்களை பார்வையிடலாம்.

உலகப்பெருந்தலைகளுடனும், இலங்கை அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் லைக்கா முதலாளியை இலங்கை அரசின் உளவுப்படை அப்பாவித் தமிழ்மக்களை கைது செய்வது போல கைது செய்தது என்று கதை சொல்கிறார்கள். ஜெயலலிதாவை உள்ளே போட்டதனால் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சரான பன்னீர்ச்செல்வம் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா உள்ளே இருப்பதை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுததை உண்மை என்று நம்புகிற கைப்பிள்ளைகள் கூட இதை நம்ப மாட்டார்கள்.

புலிகள் மீதான போரை வெற்றி கண்டு விட்டோம், பயங்கரவாதிகளை அழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொண்ட மகிந்த அரசு இன்று திடீரென வடபகுதிக்கு வெளிநாட்டவர் செல்ல பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. ஊவா மாகாணத் தேர்தலில் ஆளும்கட்சியின் வாக்கு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு சிங்கள மக்களிற்கு பயங்கரவாதப்படம் மீண்டும் காட்டப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாகவும் லைக்காவின் இலங்கை அரச தொடர்புகளிற்கு வெள்ளை அடித்து புனிதப்படுத்துவதற்காகவும் இலங்கை அரசு, லைக்கா, தமிழ்த்தேசிய வியாபாரிகள் சேர்ந்து ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் அல்ல இரண்டு காதிற்குமே இலவசமாக பூ வைத்து விடுகிறோம் என்கிறார்கள். ஆனால் லைக்கா கத்தி, அரிவாள் என்று தமிழ்ப்பட தொடர்புகளைக் கொண்டிருப்பதனால் கைது நாடகமும் தமிழ்ப்படக்கதை மாதிரியே லூசுத்தனமாக எழுதப்பட்டு விட்டது. அடுத்தமுறை கொஞ்சமாவது நம்பக் கூடிய மாதிரி கதை எழுத முயற்சி செய்யவும்.