Thu01272022

Last updateSun, 19 Apr 2020 8am

நட்ட கல்லை சுற்றி வரும் மூடர்கள்!!!

இந்த தமிழினத்திற்காக தம்மை இழந்த போராளிகளின் தாய், தந்தையர்கள், கணவன், மனைவி, குழந்தைகள் வீழ்ந்து போன வாழ்வின் துயருறும் கனவுகளில் திடுக்குற்று எழுகிறார்கள். மூச்சு விட முடியா வறுமையில் வாழும் அவர்களை முடிவற்று நசுக்குகிறது பேரினவாதம். உயிர் தப்பிய போராளிகளால் வறுமைக்கு தப்ப முடியவில்லை. ஆழ்ந்தடங்கி அச்சத்துடன் வாழ்கின்ற போதிலும் அவ்வப்போது அவர்களை இராணுவத்திடம் காட்டிக் கொடுக்கிறார்கள். நாட்டை விற்கும் மகிந்த ராஜபக்சவின் பொருளாதாரக்கொள்ளைகள் மக்களைப் பட்டினி போடுகின்றன.

போரின் கொடிய நினைவுகள் கருமேகங்களாய் மக்களின் மனதுகளில் படிந்து போய் உள்ளன. தற்கொலை செய்பவர்களின் விகிதாசாரத்தில் உலக அளவில் நான்காவது இடத்தில் இலங்கை இருக்கிறது. இலங்கையின் தமிழ்பிரதேசங்களிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். வறுமையின் கொடுமை தாளாமல் தன் குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த தமிழ்த்தாய் ஒருவரின் மரணம் கேட்டு எழுந்த அழுகைகள் நெஞ்சக்கூட்டில் இன்னும் முனகி கொண்டிருக்கின்றன.

இங்கு அய்ரோப்பாவில் ஒரு அயோக்கியக் கூட்டம் ஆன்மீகம், பக்தி, கோயில் என்று கதை சொல்லி காசு சேர்க்கிறது. தமிழ்மக்களும், தமிழ்மக்களிற்காக போராடியவர்களும் பசியிலும், பட்டினியிலும் வாடும் போது இந்த அயோக்கியக்கூட்டம் தெருவிலே உணவை வீசுகிறது. கடந்தவாரம் பாரிஸ் பிள்ளையார் கோயில் தேரின் போது ஆயிரக்கணக்கான தேங்காய்கள் தெருவிலே உடைக்கப்பட்டன. தேங்காய் உடைத்த மறுகணம் அதை பாரிஸ் மாநகராட்சியின் துப்பரவுப்பணியாளர்கள் குப்பை வண்டிக்குள் எடுத்துப் போட்டார்கள். மாநகராட்சிக்கு கட்டணமாக முப்பதினாயிரம் ஈரோக்கள் வழங்கப்பட்டதாம். தேங்காயை தெருப்புழுதியில் உடைத்து அதை குப்பை வண்டிக்குள் போட பல்லாயிரக்கணக்கில் செலவழிக்கிறார்கள் இந்த மண்டை கழண்ட பரதேசிகள்.

தமிழுக்கு தொண்டு செய்கிறோம், தமிழ்ப்பண்பாட்டை பரப்புகிறோம், தமிழனை நல்வழிப்படுத்த கோயில் கட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டு இந்தக் கூட்டம் தமிழையும், தமிழ்ப்பண்பாட்டையும் அழிக்கிறது. தமிழனை மூடநம்பிக்கைகளில் அமிழ்ந்து போக வைக்கிறது. கோயில்கள், சங்கங்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்று எங்கும் இந்த முட்டாள்களின் கூட்டம் வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச்சினிமா கோமாளிகளை கூப்பிட்டு உளற வைப்பது தான் இதுகளின் கலைச்சேவை. தமிழரை சூத்திரர், தாசி மக்கள் என்று சொல்லும் மக்கள்விரோத பார்ப்பனியத்தை தமிழ்மக்களின் சமயம் என்று சொல்வது தான் இதுகளின் சமயத்தொண்டு.

அன்று தொடக்கம் இன்று வரை சமயங்கள் அதிகாரவர்க்கங்களின் மக்கள் விரோதிகளின் ஆயுதமாகவே இருக்கின்றன. தமிழ்மக்களின் இயற்கை வழிபாடுகளை அழித்துக் கொண்டு பார்ப்பனிய இந்துமதம் வந்தது. முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பால் இஸ்லாம் வந்தது. அய்ரோப்பியர்களிற்கு அடிமைப்பட்ட போது கிறீஸ்துவத்தின் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து பிரிவுகள் வந்தன. இப்படித் தான் எல்லா நாட்டிலும் சமயங்கள் வந்தன. இவர்கள் எல்லோரும் மக்களைக் கொன்றார்கள். நாடுகளைக் கொள்ளை அடித்தார்கள். எடுத்ததெற்கெல்லாம் வரி போட்டு ஏழைமக்களை கசக்கி பிழிந்தார்கள். மக்களை மனிதர்களாக மதிக்காத இவர்கள் மக்களின் மீது கருணை கொண்டு தங்களது சமயங்களை அவர்களிற்கு பரப்பினார்களாம். வாள்முனையிலே ஆட்சி செய்த இவர்கள் மக்களது வாழ்வை மேம்படுத்த அன்புடன் ஆன்மீகத்தை அளித்தார்களாம்.

ஆனை, குதிரை, ஆள், அம்பு என்று படை வைத்திருந்த இவர்கள் "அன்பே சிவம்", "ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு", "அகிம்சை தான் பெளத்தத்தின் அளப்பரிய தத்துவம்", "இஸ்லாம் சமாதானத்திற்கான மதம்" என்று மக்களை அமைதியாக இருக்கச் சொன்னார்கள். அதாவது இவர்களது அக்கிரமங்களை, அநியாயங்களைக் கண்டு மக்கள் கோபம் கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான் இந்த மூளைச்சலவை. மக்களை மயக்கி தமது கொள்ளைகளை தடையின்றி தொடர்வதற்கு தான் மதம் என்ற அபின் அவர்களிற்கு தேவைப்பட்டது. மன்னனும் கடவுளும் ஒரே ஆளின் டபுள் அக்டிங் தான் என்று மதகுருமார்கள் தமிழ்படத்து கண்றாவி கதைகள் போல தத்துவ விளக்கம் அளித்தார்கள்.

மேற்குநாடுகளில் அறிவுவளர்ச்சி, பகுத்தறிவு என்பவற்றின் காரணமாக கிறீஸ்தவ தேவாலயங்கள் ஆளில்லாமல் மூடப்படுகின்றன. மதநம்பிக்கை உடையவர்களும் சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று எதையும் பெருப்பாலும் பின்பற்றுவதில்லை. திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளிற்கு தான் எப்போதாவது தேவாலயங்களிற்கு போகிறார்கள். பின்தங்கிய நிலப்பிரபுத்துவ சிந்தனைகளுடன் வரும் மூன்றாமுலக நாடுகளை சேர்ந்தவர்களின் மூடநம்பிக்கைகளை வியாபாரிகள் பயன்படுத்திக் கொண்டு கோயில்களை, தேவாலயங்களை, மசூதிகளை, விகாரைகளை திறக்கிறார்கள்.

இந்துக்களின் புண்ணிய பூமிகளான இந்தியா, இலங்கையிலே இருந்தும்; இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய சாரியா சட்டம் இருக்கும் முஸ்லீம் நாடுகளில் இருந்தும்; புத்தரினால் ஆசீர்வதிக்கப்பட்ட சிறீலங்காவில் இருந்தும்; அன்னை வேளாங்கன்னி, மடுமாதா, அந்தோனியார் என்று அற்புதங்கள் பல புரியும் இந்த தெய்வங்கள் தங்களை தங்களது சொந்த நாட்டில் ஏன் வாழவிடவில்லை என்று ஒருகணம் யோசிக்க வேண்டும். சொந்த மண்னில் வாழ வைக்க வக்கில்லாத தெய்வங்களா வெளிநாட்டிற்கு வந்து அருள்மழை பெய்ய போகின்றன என்பதை யோசித்தால் கட்டிடம் காலியாக இருக்கும் இடங்களில் எல்லாம் தெய்வீகக்கடை திறக்கும் கயவர்கள் காணாமல் போவார்கள்.

 

-விஜயகுமாரன்

6/9/2014