Thu01272022

Last updateSun, 19 Apr 2020 8am

வாழ்வை மறுதலிக்க முடியாதென்ற உண்மை உணர்ந்து எழுந்து வருவார்கள்!!

இலங்கைத் தமிழரிடம் அரசியல் ஆய்வாளர்கள் என்றொரு அறிஞர் கூட்டம் உருவாகி வந்துள்ளது. அது பத்திரிகைகளில், இணையங்களில், தொலைக்காட்சிகளில் வாழ்கிறது. தாம் அறிவு மிக்கவர்கள் என்ற பெருமிதம் கொண்டவர்கள் இவர்கள். அந்த அறிவின் துணை கொண்டு ஆராய்ச்சிகள் பல செய்து அரிய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்களின் அரசியல் அறிவையும், பண்பாட்டின் உயர்வையும் பார்த்து மற்றவர்கள் மண்டை கிறுகிறுத்து போவார்கள்.

அந்த அறிவாளிகள் இன்று ஒரு மயிர் பிளக்கும் விவாதம் ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள். லைக்கா என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தமிழீழத் துரோகியா இல்லையா, அது தயாரிக்கும் படம் தமிழீழ விடுதலைக்கு வலுச் சேர்க்குமா இல்லையா என்று ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். லைக்கா, லிபரா தமிழ்மக்களிற்காக அன்றைக்கும் இருந்ததில்லை. என்றைக்கும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் வியாபாரிகள். வியாபாரிகளிற்கு, வியாபார நிறுவனங்களிற்கு மக்களைப் பற்றிய அக்கறைகள், மனிதாபிமானங்கள் என்றைக்குமே இருக்காது. அவர்களது ஒரே சிந்தனை பணம் சேர்ப்பது மட்டுமே. அன்றைக்கு புலிகள் இருந்த போது புலம்பெயர் தமிழ்மக்களிடம் வியாபாரம் செய்வதற்காக புலி ஆதரவு வேடம் போட்டார்கள். இன்றைக்கு இலங்கையில் வியாபாரம் செய்வதற்காக மகிந்தாவுடன் ஒப்பந்தங்கள் போடுகிறார்கள்.

நமது அரசியல் ஆய்வு அறிஞர்கள் இப்படி பல விடயங்களை "ஜஸ்ட் மிஸ்" பண்ணியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு நாளைக்கு விட்டதை பிடித்து விடுவார்களாம். எண்பத்துமூன்று இனக்கலவரத்தின் பின் இந்தியா தமிழ் இயக்கங்களிற்கு ஆயுதப்பயிற்சி வழங்கியபோது இந்தியா என்ற வல்லரசு தரும் ஆயுதப்பயிற்சியின் பின்னுள்ள நோக்கங்களையும், ஆபத்துக்களையும் பற்றிக் கேள்விகள் எழுந்தன. இந்தியா என்ற மக்கள் விரோத பெரும் வல்லரசை அவர்கள் பயன்படுத்தி தமிழீழம் எடுப்பார்களாம், பின்பு நைசாக மாறி விடுவார்களாம் என்று மறுமொழி வந்தது. இப்படி இந்தியாவின் வலையில் விழுந்து தமிழ்மக்களின் அழிவுக்கு அன்றைக்கு அத்திவாரம் போட்டார்கள்.

இலங்கைத்தமிழ் மக்களின் பிரச்சனையில் இந்தியா தலையிட்டது தனது முதலாளிகளின் சந்தைவாய்ப்புகளிற்காக மட்டுமே. மகேந்திரா, டாடா போன்ற முதலாளிகளிற்காக தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். வெலிவேரியாவில் இந்திய நிறுவனத்திற்காக "சிங்கள பெளத்த" அரசினால் ஏழைச்சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். சம்பூரில் இந்திய நிறுவனத்திற்காக அந்த ஊரை விட்டே தமிழ்மக்கள் துரத்தப்பட்டனர். வன்னியில் இந்திய விவசாய பண்ணைகளிற்காக தமிழ்மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

இலங்கையையும், பெளத்தத்தையும் காப்பாற்ற அவதாரம் எடுத்த மகிந்த ராஜபக்சா அவுஸ்திரேலிய முதலாளிக்கு சூதாட்ட விடுதி கட்ட அனுமதி கொடுக்கிறார். தமது உறவுகளை இழந்த தமிழ்மக்கள் அவர்களை தேட ஆதரவு கேட்டு கூட்டம் போட்டால் அவர்களை தேசத்துரோகிகள் என்று காடைத்தனம் செய்யும் போதுபலசேனா பிக்குகள் அவுஸ்திரேலிய முதலாளியின் சூதாட்ட விடுதிக்கு எதிராக ஒருபோதும் வாயே திறப்பதில்லை. சீன நிறுவனங்களிற்கு இலங்கையின் நிலங்கள் கொடுக்கப்படுவது தேசத்துரோகமாகத் தெரிவதில்லை. கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களிற்கு தாரை வார்ப்பது ஏழைமக்களிற்கு செய்யும் அநீதியாக தெரியவில்லை.

தனது முதலாளிகளிற்காக இலங்கைத் தமிழ்மக்களைக் கொன்ற இந்தியா அன்னிய நாட்டு முதலாளிகளிற்காக தனது மக்களைக் கொல்கிறது. சூழலையும் மக்களையும் கொல்லும் அணுவுலை வேண்டாம் என்று போராடும் இடிந்தகரை மக்களை அது கொல்கிறது. ஒரிஸ்ஸாவிலும் மத்தியப்பிரதேசத்திலும் காடுகளை, மலைகளை, கனிமவளங்களை கொள்ளையடிக்க விடமாட்டோம் என்று போராடும் பழங்குடி மக்களை கொல்கிறது. மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்காக விவசாயநிலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்து போராடும் விவசாயிகளை அது கொல்கிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ், அவரது துணை ஜனாதிபதி டிக் செனி போன்றோர் எண்ணெய் நிறுவனங்களின் இயக்குனர்களாக இருந்த காலங்களில் ஈராக்கின் மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்பது தற்செயலான நிகழ்வு என்று ஒரு சிறுகுழந்தை கூட சொல்லாது. இலட்சக்கணக்கான ஈராக் மக்களும், ஆயிரக்கணக்கான அமெரிக்க, ஜரோப்பிய இராணுவத்தினரும் எண்ணெய்க்காக கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து தான் தமிழ்மக்களிற்கு நியாயம் கிடைக்கப் போகிறதாம் அரசியல் ஞானிகள் ஆருடம் சொல்கிறார்கள். மகிந்தாவுடன் பல மில்லியன்களிற்கு ஒப்பந்தம் போட்ட டேவிட் கமரோனை அடிபணிந்து வணங்குகிறார்கள்.

முதலாளிகளும், அரசியல்வாதிகளும் போராட்டங்களை காட்டிக் கொடுப்பவர்களாகவே என்றைக்கும் இருக்கிறார்கள். மக்கள் ஒன்றிணைந்து போராடிய போராட்டங்களே வெற்றி பெற்றன. மூச்சு விடமுடியா அடக்குமுறையின் கீழ் உள்ள இலங்கை மக்களும் ஒருநாள் விலங்குகளை உடைத்தெறிவர். அச்சத்தில் ஆழ்ந்தடங்கிப் போனவர்கள் வாழ்வை மறுதலிக்க முடியாதென்ற உண்மை உணர்ந்து எழுந்து வருவார்கள்.