Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழர்களை கைது செய்து இனவெறி பிரச்சாரம் செய்யும், இலங்கை அரசு

தமிழ்நாட்டு பத்திரிகையாளர், தமிழ் பிரபாகரனை கைது செய்து இலங்கை அரசு சொல்லும் செய்தி என்ன?. "இன்னும் புலிகளும், புலிகளின் ஆதரவாளர்களும் ஓய்ந்து விடவில்லை. ஆனால் நாங்கள் உன்னிப்பாக வேட்டைநாய்கள் போல அவதானித்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்களிற்காக குரல் கொடுப்பவர்களை, தமிழ் மக்களின் இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களை வெளிக்கொண்டு வருபவர்களை, காணாமல் போனவர்களை தேடுபவர்களை வேட்டையாடாமல் விடமாட்டோம்". இந்தச் செய்தியை யாருக்குச் சொல்கிறார்கள்? கொல்லப்பட்டு, காயப்பட்டு இரத்தம் வடிய வடிய மரணத்துள் வாழும் இலங்கைத் தமிழர்களை பயப்படுத்த சொல்கிறார்களா? மொட்டைப் பனை மரங்களும், வரண்ட வயல் வெளிகளும் மட்டுமே மிச்சமாக பாலையாகிப் போன வாழ்வை சுமந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களை பயப்படுத்த சொல்கிறார்களா?

இல்லை, இலங்கைத்தீவின் சிங்கள மக்களை பயப்படுத்தச் சொல்கிறார்கள். பெளத்த, சிங்கள தாய்த்திருநாட்டுக்கு, சிங்களவர்களின் ஒரே ஒரு நாட்டுக்கு தமிழர்களாலும், முஸ்லீம்களாலும் என்றைக்குமே ஆபத்து என்று சொல்கிறார்கள். இலங்கைத்தீவின் சனத்தொகையில் அண்ணளவாக எழுபது சதவீதமான சிங்கள மக்களிற்கு சிறுபான்மை இனங்களால் ஆபத்து என்று பேரினவாதிகள் கதை சொல்கிறார்கள். மகாவம்ச புனைவுகளை மறுபடியும், மறுபடியும் நினைவுபடுத்தி இனவாத தீயை தூண்டி விடுகிறார்கள். இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் தமிழக கடற்தொழிலாளர்களின் மரணங்களிற்கு குரல் கொடுக்காமல் தமிழக அரசியல்வாதிகள் ஊழலிலும், பதவி மோகத்திலும் சட்டசபை என்னும் பன்றித்தொழுவத்தில் புரளுகிறார்கள். உண்மைநிலை இப்படி இருக்க இந்த தமிழ்நாட்டு அரசியல் பன்றிகள் இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுக்கும் என்று சிங்களப்பேரினவாதிகள் சிங்கள மக்களிற்கு பயமூட்டுகிறார்கள்.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி இலங்கை ஒரு பெளத்த நாடு. அதன் உத்தியோகபூர்வ மொழி சிங்கள மொழி. இன்று வரை இத்தீவின் பிரதமர்களும், ஜனாதிபதிகளும் பெளத்த சிங்களவர்கள். முப்படைகள், காவல்துறை என்பன தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமாக சிங்கள மக்களையே கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது சிறுபான்மையினரால் எப்படி ஆபத்து வரும். சிறுபான்மையினரால் பெரும்பான்மையினருக்கு ஆபத்து என்ற அலறல் புதியதல்ல. கிட்லரின் குரல் அது. குடியேறிகளான யூதர்களால் பெரும்பான்மை ஜெர்மானியருக்கு ஆபத்து என்ற நாசிகளின் பெரும்பொய் அது. பாகிஸ்தானில் சியா முஸ்லீம்களை கொல்லும் சுன்னி முஸ்லீம் அடிப்படைவாதக்குழுக்கள் சொல்லும் பொய் இது. இந்தியாவின் இறையாண்மைக்கு முஸ்லீம்களால் ஆபத்து என்னும் R.S.S, சிவசேனா போன்ற இந்துமத வெறியர்களின் குரல் இது.

இந்த இன, மத, மொழி வெறிக்கூச்சல்களின் பின் ஒளிந்திருப்பது என்ன. ஏழைமக்களை, உழைக்கும் மக்களை எமாற்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது, அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்வது என்பது தான் என்றைக்கும், எங்கேயும் உண்மையாக இருக்கிறது. அன்னியப் படையெடுப்பாளர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று அய்ம்பத்தைந்து ஆண்டுகளாகின்றன. ஆட்சிக்கு வந்தவர்களும், அவர் தம் பெண்டு பிள்ளைகளும், அடிப்பொடிகளும் பணத்திலே புரளுகிறார்கள். மக்களிற்கு சேவை செய்ய வந்தோம் என்று சொல்லும் இந்த நாய்கள் நட்சத்திர உணவு விடுதிகளில் உண்ணும் போது மக்கள் பசியுடன் உறங்குகிறார்கள். சிறுவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குப்போகிறார்கள். ஏழைச்சிறுமிகள் உல்லாசப்பிரயாணிகளிற்கு இரையாகிறார்கள்.

மகிந்த ராஜபக்சவிற்கும், அவர் தம்பியருக்கும், அவரது பெரும் சுற்றத்திற்கும் பணம் எங்கிருந்து வருகிறது என்று ஒற்றை மறுமொழியை இவர்களால் சொல்ல முடியுமா?. அப்பலோ ஆஸ்பத்திரி தொடங்கி ஆயிரக்கணக்கான சொத்துக்கள் எப்படி இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களின் கைகளிற்கு வந்தது என்று மக்கள் முன் இவர்களால் சொல்ல முடியுமா?. ஒரு நாளும் சொல்ல முடியாது. நாட்டை விற்று, இயற்கையை விற்று, மனிதர்களின் உழைப்பை மலிவு விலைக்கு விற்று கொள்ளையடித்த பணம் இது என்று எப்படி சொல்ல முடியும். அரச அதிகாரத்தை வைத்து மிரட்டி பறித்த சொத்து இது என்று சொல்ல பைத்தியமா பிடித்திருக்கிறது அவர்களிற்கு.

ஏன் வறுமை? ஏன் வேலை இல்லை? ஏன் பசியும் பட்டினியும் என்று கேட்கும் ஏழைச்சிங்கள மக்களிற்கு அவர்கள் சொல்கிறார்கள். "தமிழர்கள் தங்கள் வீதத்தை விட கூடுதலாக வேலைகளில் இருக்கிறார்கள். தமிழ் வர்த்தகர்கள் சிங்கள மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். தமிழர்கள் நாட்டை பிரிக்க சதி செய்கிறார்கள்". நேற்று வரை எதிரிகளாக காட்ட புலிகள் இருந்தார்கள். புலிகளை அழித்து விட்டோம் என்று மார்தட்டிய பிறகு என்ன சொல்லலாம். பிடிபட்ட புலி உறுப்பினர்களை வைத்து இன்னும் இயக்கம் அழியவில்லை என்னும் அறிக்கை நாடகங்களை நடத்துகிறார்கள், அதி உயர்பாதுகாப்பு பிரதேசங்கள் என்று மக்களின் வீடுகளை பறித்து பெரும்பிரதேசங்களில் இராணுவ முகாம்களை கடும் பாதுகாப்புடன் வைத்திருக்கிறார்கள். அப்பிடி இருக்கும் போது தமிழ் பிரபாகரன் எப்படி முகாம்களிற்கு அருகில் நெருங்க முடியும். ஆனாலும் என்ன, இராணுவ முகாம்களை தமிழ்நாட்டு பத்திரிகையாளர் படம் எடுத்தார் என்று சிங்கள மக்களை பயப்படுத்த கிடைத்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்குகிறார்கள்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று தனித்தனியே போராடும்போது இனவாதத்தை வைத்து போராட்டங்களை தோற்கடிக்கிறார்கள். ராஜபக்சாக்கள், தொண்டமான், டக்ளஸ், கருணா, கக்கீம், ரிசாட் பதியுதீன் என்று மக்கள் விரோதிகள் ஒன்று சேர்ந்து ஒடுக்கும் போது எதிர்வினையாக ஒடுக்கப்படும் இலங்கையின் எல்லா இனமக்களும் ஒன்று சேர்வதன் மூலமே இவர்களைத் தோற்கடிக்க முடியும்.