Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நம்புங்கள் நாளை தோசைக்கு சட்னி கிடைக்கும்

நான் தமிழ் நாட்டு அரசியல்வியாதி பேசுகிறேன். கம்யுனிஸ்ட்டு, திராவிடம், காங்கிரசுத் தேசியம், சாதிக்கட்சி, மதக்கட்சி என்று நாங்கள் பல கட்சிகளாக பிரிந்து இருந்தாலும்; எங்கள் எல்லோருக்கும் மக்களை, நாட்டை, இயற்கையை எப்படி கொள்ளையடிப்பது என்ற  ஒரே கொள்கை தான் என்பதை கூடங்குளத்தில் குண்டு போட்டால் என்ன? கூழ் குடிக்க கூட வழி இல்லாமல் குழந்தைகள் பட்டினி கிடந்தால் என்ன? படங்கள் திரையரங்குகளிற்கு வர முதலே நடிகன்களிற்கு ரசிகர்மன்றம் அமைக்கும் தமிழ்நாட்டு ரசிக கண்மணிகளிற்கும், குண்டுமழை பொழிந்து, குருதி வெள்ளம் ஒடிய ஈழமண்ணிலே கூத்தாடிகளின் கோவணத்தை தேசியக்கொடியாக தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கும் விசிலடிச்சான் குஞ்சுகளிற்கும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு அரசியல்வாதி என்றவுடன் கள்ளச்சாராயம், கட்டைப்பஞ்சாயத்து, வெட்டரிவாள் ஞாபகத்திற்கு வரக்கூடும் என்றால் இலங்கைத்தமிழ் அரசியல்வாதிகள் என்றவுடன் ராஜபக்சாக்களின் காலைக்கழுவுவது, ஆதரவற்ற அநாதைகளான பெண்களின் வாழ்வை அழிப்பது என்பன நினைவுகளிலே நிழலாடும். இப்படி தொப்புள்கொடி உறவு அரசியலிலும் ஒரேமாதிரி இருக்கும் ஒப்பற்ற கொள்ளையர்கள் நாங்கள். கள் தோன்றி சாராயம் தோன்றா முன் கள்ளச்சாராயம் காய்ச்சின ஒப்பற்ற வீரப்பரம்பரையினர் நாங்கள்.

அதே நேரத்தில் தமிழ் தான் எங்கள் மூச்சு என்று எங்களது மூச்சை மற்றவனின் மூஞ்சிக்கு நேரே விட்டாலும் சாதிதான் எங்கள் உயிருக்கு நேர். சாதிகள், நால்வருணங்கள் என்பன உண்மை என்று விஞ்ஞான ரீதியாக நிறுவிய பிராமணர்களின் சாதிசார் கோட்பாடுகளை வைத்தே ஜசாக் நியூட்டன் சார்பியல் தத்துவத்தை கண்டு பிடித்தார். எனவே தான் தமிழ்த்தேசியம் பேசும் தமிழ் இடிதாங்கி மருத்துவர் ராமதாசு அய்யா கூட வன்னியசாதிப் பெண்கள் மற்றச்சாதி ஆண்களை குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை மணம் செய்யக்கூடாது என்று தடை விதித்து இருக்கிறார். பதினெட்டு வயது திருமண வயதாக இருப்பதால் தான் சிறுபிள்ளைத்தனமாக, அறிவில்லாமல் குறைந்த சாதிக்காரர்களை காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதனால் தான் திருமண வயது எல்லையை இருபத்தொரு வயதாக உயர்த்த வேண்டும் என்று சிலர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். திருமண வயதை அறுபது வயதாக மாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் அந்த வயதில் காதலும், கத்தரிக்காயும் எங்கிருந்து வரும். அப்ப தான் நாடுகடந்த தமிழீழம் மாதிரி சாதி கடந்த காதலும் வரும், ஆனா வராது.

காதலுக்கு, கலியாணத்திற்கு எல்லாம் வயதெல்லை வேண்டும், அறிவு வளர வேண்டும் என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அறிவு வர முதல், அறிவே இல்லாமல் அரசியல்வாதிகள் இருக்கிறார்களே என்று சில மண்டை கழண்டவங்கள் கேட்கிறார்கள்.  இவர்களிற்கு வரலாற்றில் இருந்து ஒரு ஏட்டை எடுத்து போடுகிறேன். டாக்டர் புரட்சித்தலைவர் மேதகு எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக  இருந்தபோது, அரச மருத்துவமனைகளிலே வேலை செய்த டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். அன்று சட்டசபைக்கு எம்.ஜி.ஆர் வரவில்லை. ஏன் என்று கேட்ட போது டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது ஒரு டாக்டராகிய நான் எப்படி வேலைக்கு வர முடியும் என்று உறுதியாக சொல்லி சட்டசபைக்கு வர மறுத்து விட்டார் புரட்சித்தலைவர்.  இப்படியான தலைவர்களின் வழி வந்த எங்களைப் பார்த்து அறிவில்லை என்று சொல்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்துக்கோவில்களை இடித்த புத்த மதத்தினரை திருஞானசம்பந்தர் வென்று மறுபடி பில்டிங் ஸ்ட்ரோங், அத்திவாரம் தான் வீக் என்ற நிலை வராமல் கட்டியதாக இந்து மக்கள் கட்சியின்  அர்ஜுன் சம்பத் பிரித்தானிய தமிழர் பேரவையின் கூட்டத்தில் பேசியிருக்கிறார். அதை நக்கலடிச்சு யார், யார் எல்லாம் வரலாறு கதைப்பது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இந்து பயங்கரவாதிகள் தான் புத்தவிகாரைகளை ஞானசம்பந்தன் காலத்தில் இடித்தார்கள் என்று சொல்பவர்கள் இலங்கை அரசின் உளவாளிகள் என்று அன்னை சோனியா ஆணையாக இனியொரு கணமும் தயங்காமல் சொல்லிக் கொள்கிறேன்.

இந்து மக்கள் கட்சி போன்ற மதவாத அமைப்புக்களை எல்லாம் ஒரு விடுதலை வேண்டி நிற்கும் அமைப்பு மாநாட்டிற்கு கூப்பிடுவதா என்று கேட்பவர்களிற்கு ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். தேசவிடுதலை இயக்கமே ஒரு இந்து மக்கள் இயக்கம், அதனால் தான் வெளிநாடுகளில் கோவில்களை கட்டி காவடி எடுக்கிறார்கள். அதனால் தான் பிரித்தானிய தமிழர் பேரவையின் மாநாடு வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று நேர்த்தி வைத்து வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் கோவிலில் ஆயிரம் தேங்காய் உடைத்திருக்கிறார்கள். நம்புங்கள் நாளை தமிழீழம் கிடைக்கிறதோ இல்லையோ தோசைக்கு சட்னி கட்டாயம் கிடைக்கும்.

-23/11/2012