Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்

சாதி அவசியமற்ற ஒன்றாக காட்டி, வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக கூறுவதே, நவீன பார்ப்பனீயம் - வெள்ளாளீயமாகும். அதாவது வெளிப்படையான சாதிய ஓடுக்குமுறைகளை மறுத்து, சாதிய திருமணங்களை நியாயப்படுத்துவது நடக்கின்றது. இலங்கையில் தீண்டாமை இயக்க போராட்டங்கள் கூட, இதைத் தான் முன்வைத்தது.

புலம்பெயர் குழந்தைகள் சாதியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் பெற்றோரின் சொத்துடமையை பெறவும், சாதிப் பெருமைகளை நிலைநாட்டுகின்ற பண்பாட்டு வழி வந்த ஆடம்பர நுகர்வு  திருமணங்களை அனுபவிக்கவும், திருமணத்தில் கிடைக்கும் பெருந்தொகையான மொய்யை பெறவும்.. பெற்றோரின் சாதிய அடிப்படையை மறுதலிக்காமல் குழந்தைகள் தேர்ந்தெடுக்கின்றனர். சாதியை அடிப்படையாகக் கொண்ட பெற்றோரின் தேர்வை மறுத்தால், குழந்தைகளுக்கு இவை கிடையாது. இதுதான் குழந்தைகளின் சாதியத் தேர்வுக்கான காரணம் என்று புலம்பெயர் குழந்தைகளின் சாதியம் சம்பந்தமான முன்னைய கட்டுரை ஒன்றில் கூறி இருந்தேன்.

சாதி இருப்பதை மறுக்க - சாதி எதார்த்தம் குறித்த கிறுக்குத்தனமாக வாதம்

யாழ்ப்பாணத்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பு முறைமையிலான அதே வடிவில் சாதியம் புலம்பெயர் தேசங்களில் இருக்கவும் - நீடிக்கவும் முடியாது. ஏனெனின் மேற்கில் வளரும் குழந்தைகளின் சமூக சூழல் வேறு, யாழ்ப்பாணத்தின் சூழல் வேறானது. இருந்த போதும் கூட சாதியம் திருமண உறவை தீர்மானிக்கின்றது.

சாதியம் என்பது இன்று இலங்கையில் உற்பத்தி உறவு வடிவில் இல்லை. புலம்பெயர் நாட்டில் வடக்கில் இருக்கின்ற அளவுக்கு, சாதிய புறச்சூழல்கள் இல்லை. இதனால் புலம்பெயர் நாட்டில் சாதி இல்லை என்பதாகிவிடுமா!? நூற்றுக்கு நூறு ஒவ்வொரு வீட்டிலும், வெள்ளாளிய சிந்தனையில் சாதியமும் - சாதிச் சடங்குகளும் தொடரத்தான் செய்கின்றன.

 

பிறப்பின் அடிப்படையில் சாதியை நிர்ணயம் செய்யும் சமூகத்தில் பிறந்து பெற்றோர்களின் மன அழுக்குகளை தாமும் தூக்கி முன்னிறுத்தும் மனிதக் கேட்டை – சாதியை நிர்ணயம் செய்யாத சமூகத்தில் பிறந்த குழந்தைகள் கூட கேடுகெட்ட மனிதவிரோத நடத்தைக்கு துணை போவது நடக்கின்றது. எதைப் படித்து, எதைக் கிழிச்சாலும், சாதிய நடத்தை கொண்டிருப்பது என்பது இழிவானது. மனிதனை மனிதன் ஒடுக்குகின்ற கேவலங்கள் இவை. பெற்றோரின் சொத்தை தாம் அடைவதற்காக சாதியத் திருமணங்களை நாடுவதே நடைமுறை.

எப்படி சாதியம் திருமணத்தில் சாத்தியமாக்கப்படுகின்றது என்பது தொடங்கி, சாதியமற்ற  சூழலில் வளர்ந்த குழந்தைகளால் சாதியம் மறுதளிக்கப்படுவதில்லை எனபதே உண்மை.

இதன் பின் இருக்கின்ற சமூகப் பொருளாதார வர்க்கக் காரணத்தை மறுத்து, வர்க்கரீதியல்லாத வேறு காரணமாக காட்டும் தர்க்கங்கள் மூலம் புலம்பெயர் சாதிய நடத்தையை நியாயப்படுத்த முனைவதை காண முடிகின்றது. திருமணத்தில் வைத்து சாதி திணிக்கப்படும் இன்றைய எதார்த்தத்தையும், அதற்கான சாதியச் சூழலையும் மறுதளிப்பது அபத்தமாகும்.

சாதீயம் தமிழ் குழந்தைகளின் "வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதக்.." கூறாக இருப்பதால், அதை நாடுவதாக திரிப்பது அறிவியல் அபத்தமாகும். இதற்கு ஏற்றாற் போல் சாதியம் குறித்த, அபத்தமே, சாதியை வாழ்க்கை முறையாக காட்டுவது.

இதை நாசுக்காகவும் - நுட்பமாகவும் (கீழ்வரும் முகப் புத்தகப் பதிவு மறுக்கிறது)

https://www.facebook.com/villa.anandaram/posts/2028384017184594?comment_id=2041245042565158&notif_id=1530198125995174&notif_t=comment_mention

மறுத்து, "இளம் தலைமுறை தமிழர்கள் தம் பழைய கலாச்சாரத்தின் பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணம் மற்றைய இனத்தவரால் தம்மீது திணிக்கப்படும் இனப் பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திராணியற்றத் தன்மை பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகள் காரணங்களாக அமைகின்றன" என்று கூறி, சாதியத் திருமணங்கள் நியாயப்படுத்தப்படுகின்றது. இது சொத்துடமை வர்க்கம் தன் சொத்தை, சாதிக்குள் நிலைநிறுத்த முன்வைக்கும் தர்க்க வாதமாகும்.

இதன் மூலம் குழந்தைகள் சாதியைத் தேர்ந்தெடுக்கும் வர்க்கக் காரணத்தை மறுப்பதும் -  அதேநேரம் "இனவாதத்துக்கு" எதிரான எதிர் போராட்டமாக சாதியத் தேர்வைக் காட்டுவதுமே நவீன பார்ப்பனீயம் - வெள்ளாளீயமாகும்.

"தங்கள் வேரை, அந்த வேர் உளுத்து போனதாயினும் தேடி போகும் செயல் இது. அதேவேளை பெற்ரோரால் சொல்லி வளர்க்கப்படும் தங்கள் போலி இன, மத உயர்வு பற்றிய மாயைகளும் அதற்கு உரமூட்டுகின்றது. இந்த தலைமுறை தமிழனின் சாதீய, மத கேவலங்களுக்குள் வாழாதவர்கள்." என்று கூறி இறுதியில் "தமிழனின் சாதீய, மத கேவலங்களுக்குள் வாழாதவர்கள்" என்று தர்க்கத்தை முன்வைக்க முடிகின்றது. சாதிக்குள் வாழாதவர்கள் சாதியை தேர்ந்தெடுப்பது சொத்துடமைக்காகவல்ல – மாறாக இனவாதத்துக்கு எதிராகத்தான் என்று கூற முடிகின்றது.

பொருளாதார காரணங்களுக்காக சாதிய திருமணங்களை தேர்ந்தெடுப்பதை மறுத்தபடி,

"சட்டபூர்வமாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, அதிகாரம் சம்பந்தமாக எந்த ஆதாயமும் அற்ற சாதியத்தை கடைப்பிடிப்பதால் அந்த சாதி உயர்வோ தாழ்வோ அதை கடைப்பிடிப்பவருக்கு தான் நஸ்டம். நஸ்டப்பட்டு நாசமாக போகட்டுமே"

என்று இங்கு இவ்வாறு கூறுபவரால் திரிக்க முடிகின்றது. இங்கு பொருளாதார நோக்கில் சாதித் திருமணங்கள், பெற்றோரின் சொத்துடமையையும், மொய்யையும், ஆடம்பர திருமணங்களையும்.. பரிசாகத் தருகின்றது. இங்கு தனியுடமைக் கண்ணோட்டத்தில் சாதி நஸ்டத்தை கொடுப்பதில்லை, நஸ்டப்பட்டு நாசமாக போவதில்லை. இது தான் சாதித் திருமணங்களின் சாரம்.

புலம்பெயர் நாட்டில் சாதிய திருமணங்கள் மூலம் மனிதர்களை இழிவுபடுத்தி ஒடுக்கும் சாதிய பண்பாட்டை, தமிழ் குழந்தைகள் தேர்ந்தெடுப்பதற்கான சமூகப் பொருளாதார வர்க்க காரணத்தை மறுப்பது அபத்தமானது. இதை தட்டிக்கழித்து விட்டுச் செல்வதையோ, இதை திரித்து நியாயப்படுத்தி விடுவதையோ அங்கீகரிக்க முடியாது.

"திறமை - அதிக சம்பளம் - பெண் சுதந்திரம்" சொத்துடமையிலான சாதியத் தேர்வை மறுக்கின்றதாம்!?

"தமிழர்கள் ஏன், எப்படி புலம்பெயர் நாட்டிலும் சாதி பாகுபாட்டை தொடர்ந்த்தும் தக்கவைக்கிறார்கள்? மேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர் லிங்கில் கூறியுள்ளது போல "ஆணாதிக்கமோ, சொத்துடமையோ, ஆடம்பர நுகர்வோ" மட்டும் காரணங்கள் அல்ல. புதிய தலை முறை குழந்தைகளில் பெண்கள் இல்லையா? சுதந்திரம் உள்ள வெளிநாட்டில் பெண்பிள்ளகள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? பெற்றோரின் சொத்தின் மீது ஆர்வம் என்றால் இளம் தலை முறை பிள்ளைகள் குடியேறிய தலை முறை தமிழரிலும் அதிகம் சம்பாதிக்கும் திறமை உள்ளவர்களாக இருகிறார்கள் என்பதுதான் உண்மை."

என்று கூறுவது, எந்த வகையில் சாதிக்கு எதிரான சிந்தனைக்கு பொருந்தும்.

அதிகம் சம்பாதிப்பவர்கள் வர்க்கம் கடந்தவர்களா!?

இதன் மூலம் சொல்ல வருவது என்ன? "அதிகம் சம்பாதிப்பவர்கள்" சொத்துக்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் சீதனம் கேட்பதில்லை. ஊழலில் ஈடுபடுவதில்லை. பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பதில்லை. பெற்றோரின் சொத்துக்காக சாதி பார்த்து திருமணம் செய்வதில்லை. இது தான் பார்ப்பனீய - வெள்ளாளீய சிந்தனை முறையும் - தர்க்கமுமாகும்.

"கௌரவுமான" சொத்துடைய குடும்பத்தில் பிறந்தவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதில்லை என்று கூறி, இந்திய பார்ப்பனிய நீதிமன்றங்களில் வழங்கும் தீர்ப்புக்கு நிகரான வாதம் இது. ஓடுக்கும் சாதிய ஆண்கள் மனைவி குழந்தைகளுடன் வாழ்வதால், பாலியல் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பில்லை என்ற கூறுகின்ற அதே உள்ளடக்கம்.

"அதிகம் சம்பாதிப்பதானது" சொத்தடிப்படையில் சாதிய திருமணத்துக்கு முரணானது என்ற வாதம் நகைப்புக்குரியது. வர்க்க அடிப்படையிலான திருமணங்களும் - சாதி அடிப்படையிலான திருமணங்களும், சாதிய சமூகத்தில், ஒரு நாணயத்தின் இருபக்கமாகவே இயங்குகின்றது.

திறமை மனிதவுரிமையின் அடையாளமா!?

இளம் தலைமுறை "திறமை உள்ளவர்களாக" இருப்பதால், அவர்கள் எப்படி "ஆணாதிக்கத்துக்கோ, சொத்துடமைக்கோ, ஆடம்பர நுகர்வுக்கு" ஆசைப்படுவார்கள்? என்று தர்க்கிக்கப்படுகிறது. என்ன சமூக அறிவு!

"திறமை" என்பது வர்க்கம், சாதி, பால் கடந்த மனித வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோலாக காட்டுகின்றமை, கட்டமைக்கின்றமை பித்தலாட்டமாகும். கேவலமாக பிறரை ஏமாற்றி ஒடுக்கி வாழும் இழிவு கெட்டு வாழும் முதலாளித்துவ "திறமையை" இது நியாயப்படுத்துவதாகும். இந்த முதலாளித்துவ திறமை தான், பெற்றோரின் சொத்துக்காக சாதியை தேர்ந்தெடுக்கும் அடிப்படைகளில் ஓன்றாக இருக்கின்றது.  "திறமை" என்பது பணம் சம்பாதிப்பதை அடிப்படையாக கொண்ட வரையறையாக இருக்கும் இன்றைய உலகில், சாதித் திருமணம் பணத்தை தருமென்றால் அதை தேர்ந்தெடுப்பது தான் "திறமையே" ஒழிய அதை மறுப்பதல்ல.

முதலாளித்துவ பெண் விடுதலை சாதி விடுதலையின் அடையாளமா!?

"குழந்தைகளில் பெண்கள் இல்லையா? சுதந்திரம் உள்ள வெளிநாட்டில் பெண்பிள்ளைகள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்?" முதலாளித்துவ பெண் "சுதந்திரம்" சாதிக்கு எதிரானது என்று கூறுவது குதர்க்க வாதம்.

"சுதந்திரம்" குறித்த திரிபு. முதலாளித்துவ சுதந்திரம் ஓட்டுமொத்த மக்களுக்கு எதிரான, சுரண்டும் வர்க்கத்தின் சுதந்திரம்.

பெண் "சுதந்திரம்", பெண் ஆணைப்போல் நுகர்வதற்கு ஏற்ற சந்தைச் சுதந்திரத்தையே வழங்கி இருக்கின்றது. முதலாளித்துவம் மானிட விடுதலைக்கான பெண் சுதந்திரத்தை வழங்கியதில்லை, வழங்கப்போவதுமில்லை. முதலாளித்துவ சொத்துடமையை அடிப்படையாகக் கொண்ட பெண்ணின் சுதந்திரம், பெற்றோரின் சொத்துடமையை அடைவதற்காக, சாதியைத் தேர்ந்தெடுப்பதை தாண்டியதல்ல. சொத்துடமையைத் தான் தேர்ந்தெடுக்கும்.

சாதிக்கு எதிரானது -  இனவாதத்துக்கு எதிராக சோரம் போகுமா!?

"இளம் தலைமுறை தமிழர்கள் தம் பழைய கலாச்சாரத்தின் பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணம் மற்றய இனத்தவரால் தம்மீது திணிக்கப்படும் இன பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திரணியற்றதன்மை பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகள் காரணங்களாக அமைகின்றன" என்று போலிக் கதை சொல்லி, பொருளாதார ரீதியான சாதியத் தேர்வை மறுக்க முனைகின்றனர். இதன் மூலம் பொருளாதார ரீதியான தேர்வல்ல சாதியம், மாறாக இனவாத ஓடுக்குமுறைக்கு எதிரான தேர்வே சாதியம் என்று நியாயப்படுத்த முடிகின்றது.

அதே நேரம் "சுதந்திரப் பெண் - அதிகம் சம்பாதிக்கும் தலைமுறை – திறமை" என்பன பொருளாதார ரீதியான சாதியை எதிர்க்கும் தகுதியாக முன்னிறுத்திக் காட்டுவதும், "தம்மீது திணிக்கப்படும் இன பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திரணியற்றதன்மை" கொண்டது என்று கூற முனைவது, முரண்பாடானதும் - சுத்துமாத்துமாகும்.

மேலும் "சுதந்திரப் பெண் - அதிகம் சம்பாதிக்கும் தலைமுறை – திறமை" பொருளாதார ரீதியான சாதியை எதிர்க்க தகுதியாக முன்னிறுத்தும் போது,  "பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகளை" எதிர்க்க தகுதியற்றதாக கூறுகின்ற போது, தகுதிகள்  சொத்துக்காக சாதியை விபச்சாரத்தை செய்யுமளவுக்கு இழிவானதே.

 

சாதியம் என்பது என்ன?

சாதீயம் குறித்து

"சாதீயம் இந்திய உபகண்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம். இங்கு வாழ் கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்களும் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டவர்களே. இந்து மதத்தில் அது நியாயப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் வித்தியாசம்."

என்று கூறுவதன் மூலம், சாதியம் என்னவென்பது மிக நாசுக்காக மறுதளிக்கப்படுவதும், மறுபக்கம் அதை வாழ்க்கை முறையாக காட்டி நியாயப்படுத்துவதையும் இங்கு காண முடியும்.

சாதியத்துக்கும் - வர்க்க அமைப்பு முறைமைக்குள்ள உறவை மறுதளித்து, அது இயங்கும் மேல்கட்டுமானத்தையே சாதியாக சித்தரிக்க முற்படுகின்றனர். இதே அளவுகோலைக் கொண்டு, புலம்பெயர் குழந்தைகளின் சாதியத் திருமணங்களை தவறு அற்ற, அப்பழுக்கற்ற  "ஒழுக்க" திருமணமாக்கிவிட  முனைகின்றனர்.

இந்துமதமே சாதியம் என்றும், பார்ப்பனர் (வெள்ளாளர்) என்ற சாதியே சாதியத்தை தோற்றுவித்தது என்றும், இன்று பொதுப்புத்தியில் இருக்கின்ற சமூக மேல்கட்டுமானத்தின் "அறிவியல்" அடிப்படைகளைக் கொண்டு புரிந்து கொள்கின்ற அல்லது திரிக்கின்ற பின்னணியில், சாதியத்தின் வர்க்க அடிப்படையை மறுதளிப்பது நடக்கின்றது.

இதில் இருந்து "சாதீயம் இந்திய உபகண்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம்" என்பதாக காட்டுவது, சித்தரிப்பது நடக்கின்றது.

மனித உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த வர்க்கம், தன் வர்க்க இருப்பைத் தக்கவைக்க பிறப்பிலான உரிமையாக்க முனைந்த பல படிநிலை வளர்ச்சியே சாதீயம்.

பரம்பரை பரம்பரையாக தொடர்ந்த உழைப்பை - நான்கு வகையாகப் பிரித்து வர்ணமாக்கி -  வர்ணத்தை வர்க்கமாக்கும் வண்ணம் பிறப்பிலான உரிமையாக்கிய போது, ஏற்பட்ட பிளவும் -  அதேநேரம் பிறப்பிலான வர்ண அமைப்பில் ஏற்பட்ட வர்க்கப் பிளவும் - முரண்பாடுகளும், புதிய உழைப்புகளும் சாதிக்கு வித்திட்டது. ஒவ்வொரு தொழிலையும் பிறப்பின் உரிமையாக்கிய போது, நான்கு வர்ண முறை அழிந்து சாதியாகியது. இதன் மூலம் செல்வத்தை தரவல்ல துறை, தக்கவைக்கும் வர்க்க அமைப்பு முறையாக சாதி மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டது.

வர்க்கத்தை பரம்பரை வழி உரிமையாக நிலைநிறுத்த எடுத்த முயற்சி, அதை நியாயப்படுத்த பார்ப்பனிய மதமே, சமூகத்தின் பார்ப்பனிய சிந்தனையாக - அதுவே இந்துமதமாகி - இந்துத்துவமாக பரிணமித்தது.

இப்படி வர்ண அமைப்பு சாதியாகத் திரிந்தது. சாதி இந்துத்துவமாகத் திரிந்தது. வர்க்க அமைப்பு முறைமை பரம்பரை கூறைக் கொண்டதாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது. ஆனால் வர்க்க அமைப்பு முறைமை என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படாது, சொத்துடமையே தீர்மானிக்கின்றது என்பதால், வர்க்கமும் - சாதியும் வேறுவேறாக பிரியவும் - திரியவும் காரணமாகியது.

அதேநேரம் பிறப்;பிலான சாதியத்துக்கு வர்க்க சலுகை வழங்கும் வண்ணம், வர்க்க அமைப்பு திரிபடைந்தது. அதாவது சொத்துடமை பெறுவதை தடுக்கும் வண்ணம், சொத்துடமை கொண்டு இருக்கும் உரிமையை, குறித்த சாதிகளின் தனி உரிமையாக்கியது. இது தான் சாதியம்.

முடிவாக

சாதியை உருவாக்கிய சொத்துடமைதான், புலம்பெயர் நாட்டிலும் அதே சொத்துவுடமையே சாதிய திருமணங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றது.