Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழக தமிழ் மொழி மாணவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள்

நடந்த யுத்தம், யுத்தத்துக்கு பிந்திய இன மேலாதிக்கம், யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் அவலங்களும் எம் அன்றாட வாழ்வுடன் இணைந்தாக காணப்படுகின்றது. இதற்கு தீர்வு என்ன? பதிலுக்கு இனவாதம் தீர்வைத் தருமா? மாணவர்களாகிய நீங்கள் தான் இதை சிந்தித்தாக வேண்டும்!

தமிழ் இனவாதிகள் கூறுவது போல், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இனவாத வன்முறை சிங்கள மொழி மாணவர்களே உங்கள் மேல் நடத்தியதாக வைத்துக் கொள்வோம். இது தான் உண்மை என்றாலும், எதிர் இனவாதம் தீர்வல்ல என்பதை உங்கள் சொந்த அனுபவம் புரிய வைத்திருக்கும்.

கடந்த காலத்தில் வடகிழக்கு தமிழ் மக்கள், தங்கள் சொந்த இனவாதம் மூலம் தன் இனத்தை அழிந்து இருக்கின்றனர் என்பதே வரலாறு. கடந்தகாலம் போல் உங்கள் தந்தைமாரின் இனவாத வழிமுறையை பின்பற்ற போக்கின்றீர்களா? அல்லது அதை நிராகரித்து புதிய வழிமுறையைக் கண்டு அடையப் போகின்றீர்களா? இதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை நோக்கி கேட்டாக வேண்டும்.

மூத்த தலைமுறையை விட இளைய தலைமுறை அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும், முன்னேறிய சமூகத்தை நோக்கி பயணிப்பதே மனித வரலாறு. தமிழராகிய (மாணவர்களாகிய) உங்களுக்கு இது விதிவிலக்கல்ல.

உங்கள மூத்த தலைமுறையின் இனவாதம் தீர்வை தரவில்லை, அழிவைத் தந்திருகின்றது. மூத்த தலைமுறை தொடர்ந்து அதே இனவாதத்தை முன்வைக்கின்றது. அதை பின்பற்ற வைப்பதன் மூலம், உங்களை தவறான வழியில் வழி நடத்த முற்படுகின்றது. இந்த வகையில் நடந்த சம்பவத்திற்காக மாணவராகி உங்களை குற்றம் சாட்ட முடியாது. உங்களை அரசியல் ரீதியாக வழி நடத்தியவர்களே குற்றவாளிகள்.

நடந்த சம்பவத்தை காரண காரியங்களைச் சொல்லி நியாயப்படுத்திக் கொண்டு இருப்பவர்களே உண்மைக் குற்றவாளிகள். இன, மத, சாதி கடந்து மாணவனாக அடையாளப்படுத்த முடியாதவனாக வைத்திருகின்றவர்கள் தான் குற்றவாளிகள். மாணவர்களாகிய நீங்கள் அல்ல. சுயமாக சிந்திக்க தெரிந்த மனிதன் என்ற வகையில் நடந்த தவறை நீங்கள் தான் சரிசெய்ய வேண்டும்.

இனரீதியான ஒடுக்கு முறைக்கு தீர்வு என்ன?

மூத்த தலைமுறையின் இனவாதம் தீர்வல்ல என்பது எமது கடந்த இனவாத வரலாறு மட்டுமல்ல, யாழ் பல்கலைக்கழத்தில் நடந்த இன வன்முறையின் பின்னான உங்கள் சொந்த அனுபவமும், உங்களுக்கு உணர்த்தி இருக்கும்.

தீர்வைக் காணும் வழிமுறை, உங்கள் அருகில் இருக்கின்றது என்பதே உண்மை. தீர்வைக் காணுவதற்கு ஜனநாயகம் மட்டுமே வழிமுறையாக இருக்கின்றது. இனவாதத்திற்கு வெளியில் மனிதர்களுக்கு இடையில் ஜனநாயகத்தை கையாள்வதன் மூலம் தீர்வு காண முடியும். மனிதர்களுக்கு வெளியில் தீர்வு என்பது இருப்பதில்லை.

வடகிழக்கு சூழல் ஜனநாயகத் தன்மை பெறாது, இனவாதத் தன்மை கொண்டதாக நீடிக்கின்றது. நாங்கள் இனவாதத்தை கொண்டு இருக்கும் வரை, ஜனநாயகவாதியாக இருக்க முடியாது என்பதே உண்மை.

இன்று 1. ஒடுக்குமுறை சார்ந்த இனவாதம் 2.ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த இனவாதம், இரண்டும் ஜனநாயகத்தை மறுக்கின்றது. சுய சிந்தனை சார்ந்த ஜனநாயகம் என்பது, இனம் மதம் சாதி கடந்த மாணவனாக விடையத்தை அணுகவைக்கும். ஜனநயாக தன்மையற்ற இனவாத வாழ்க்கை முறைதான், வன்முறையாக மாறியது. இது தீர்வல்ல.

இங்கு இனவொடுக்குமுறைக்கு எதிராக, மொழி ரீதியாக அல்லது இன ரீதியாக அணிதிரள்வது ஜனநாயகமாக இருப்பதில்லை. அது தீர்வை தருவதில்லை. மொழி கடந்து இனவொடுக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியாக அணிதிரள்வதன் மூலமே, தீர்வு காண்பற்காக முனைய வேண்டும். இதை யாரும் செய்யவில்லை.

சிங்கள மற்றும் தமிழ் மொழி பேசும் மாணவர்கள், இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து விட்டால், இனவொடுக்குமுறையை தடுப்பதுடன் மட்டுமல்ல, அவர்கள் கூடி எந்த தீர்வையும் வந்தடைய முடியும்.

நீங்கள் ஒன்றிணைந்து இனவாதத் தலைமைகள் அனைத்தையும் தூக்கி எறிய முடியும். நீங்கள் ஒன்றாக கல்வி கற்கின்றீர்கள். அதனால் ஒன்றாக இணைய தடை கிடையாது. இது சாத்தியமில்லை என்று கூறுகின்றவர்கள், உங்களை பிரித்து வைத்து குளிர்காய விருபுகின்றவர்கள் தான்.

வெளியில் இருந்து இப்படிக் கூறுகின்றவர்கள், நேர்மையாக தீர்வை காண என்றும் வழிகாட்டியது கிடையாது. கடந்த யுத்த காலத்தில் அழிவு வரை வழிநடத்தியவர்கள் தான், இன்று பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை ஆதாரிப்பவர்களாக இருக்கின்றனர்.

கடந்தகாலம் முதல் இன்று வரை இனவாதம் பேசுகின்ற இரண்டு மொழித் தலைவர்களும் தமக்குள் கூடி பேசிக் கொள்கின்றவர்கள், தீர்வைக் கண்டதில்லை. ஆனால் இரு மொழி மக்களையும் மாணவர்களையும் தமக்குள் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கும் வண்ணம் வைத்திருக்கின்றனர். ஏன்?. இது குறித்து நீங்கள் இன்றாவது சிந்திக் வேண்டிய காலம் இது. நீங்கள் ஒன்றுபட்டு தீர்வைக் காண வேண்டிய காலம் இது.

இனவொடுக்குமுறைக்கு தீர்வு காண உள்ள வழிமுறை பாஸ்பரம் உரையாடுவதும், ஒன்றுபட்டு போராடுவதும் தான். ஒடுக்குமுறையை ஒடுக்கும் இனம் உணரும், அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் வண்ணம் ஒன்றாக அணிதிரட்வது தான், மாணவர்களின் சமூக கடமையாக இருக்க முடியும்.

காலம் கனிந்திருகின்றது. அனுபவம் முகத்தில் அறைந்து இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவ அமைப்புக்கான எமது வேண்டுகோள் என்பது, அனைத்து மொழி மாணவர்களின் ஜனநாயக உரிமைக்காக இணைந்து போராடுவதை நடைமுறையில் உறுதி செய்யுங்கள். அதேபோல் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் அனைத்து மாணவர்களையும் பிரதிநித்துவபடுத்தும் வண்ணம், முன்னேறிய புதிய நிலைக்கு வந்தடைய வேண்டும். இதன் மூலம் இனவாத அரசையும், இனவாத அரசியல் போக்கை முடியடித்து, புதியதொரு இனவாத மற்ற மனித வாழ்க்கையை உருவாக்க முடியும்.