Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

டேவிற் ஐயாவும் - அஞ்சலிகளும்

டேவிற் ஐயாவை கொல்வதற்காக 1986 ஆம் ஆண்டு புளட் இயக்கம் கடத்திச் சென்றது. அன்று டேவிற் ஐயா தப்பியோடாது மரணித்து இருந்தால், அவர் குறித்த மதிப்பீடுகள் அன்றும் - இன்றும், என்னவாக இருந்து இருக்கும்.

1986 இல் டேவிற் ஐயாவை கொல்ல முனைந்தவர்கள், அதற்கு துணை நின்றவர்கள், அதற்கு எதிராகப் போராடாதவர்கள், இன்று அதை மூடிமறைத்து செய்யும் அஞ்சலிகள் குறித்து எமது மதிப்பீடுகள் என்ன?

1983 இல் வெலிக்கடை படுகொலையில் இருந்து தப்பித்த டேவிற் ஐயா, 1986 இல் புளட்டின் படுகொலையில் இருந்து தப்பி தலைமறைவாகினார். 1986 இல் அவர் கொல்லப்பட்டு இருந்தால், இன்று அஞ்சலி செலுத்துகின்ற எந்தனை பேர், அன்று தங்கள் அஞ்சலியை செலுத்தி இருப்பார்கள்?

டேவிற் ஐயா, இராஜசுந்தரம், சந்ததியார் என்று மூவரின் பெயர்களும் இன்றி காந்திய இயக்கம் பேசப்படுவதில்லை. இன்று காந்தியத்தை முன்னிறுத்தி அஞ்சலி செய்பவர்கள், அன்று சந்ததியாரின் கண்ணைத் தோண்டிக் கொன்ற போது, அதற்கு எதிராக குரல் கொடுக்காது இருந்தவர்கள், அவருக்கு அன்று அஞ்சலி செலுத்தாதவர்கள், அன்று டேவிற் ஐயா கொல்லப்பட்டு இருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

அன்று டேவிற் ஐயாவைக் கொல்ல முயன்றவர்கள், அவரின் மரணத்தின் பின் இன்று அஞ்சலி செலுத்துகின்றதென்பது போலித்தனமானது. இது உண்மையில் அன்றைய அந்த மனிதவிரோத நிகழ்வை, இன்றும் மூடிமறைக்கின்ற அநியாயத்தைக் காண முடிகின்றது. அன்று டேவிற் ஐயாவினதும், சந்ததியாரினதும், நண்பர்கள், தோழர்கள் வடகிழக்கு முதல் தமிழகம் வரை கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அன்று அதற்கு எதிராக குரல் கொடுத்து போராடாதவர்களும், யார் அதற்காக எதிராக தங்களை அடையாளப்படுத்தவில்லையோ, அவர்கள் அதற்கு உடந்தையாக இருந்ததுடன் மட்டுமின்றி, இன்று தங்கள் அஞ்சலிகளின் மூலம் அதை மூடிமறைக்கின்றனர்.

இதன் மூலம் டேவிற் ஐயாவின் மரணத்தை, இன்றைய தங்கள் சுயநல மக்கள் விரோத அரசியலுக்கும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் இனவாத அரசியல் மீட்சிக்கான பாதையாக, போலி அஞ்சலிகள் அரங்கேற்றப்படுகின்றது. காந்தியத்தின் இனவாதத்தை மறைக்கும் தூய விம்பத்தை உருவாக்கி, டேவிற் ஐயாவின் பக்கங்களை மூடிமறைத்து புலம்புவதைக் காணமுடிகின்றது.

டேவிற் ஐயா பற்றிய மதிப்பீடு

டேவிற் ஐயாவை மூன்று காரணங்களுக்காக, சமூகத்தில் முன்னிறுத்தி பார்க்க முடியும்;.

1. அவர் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியை (1972-1981) காந்திய செயற்பாடுகள் மூலம், சுய அர்ப்பணிப்பும் தியாக மனப்பான்மை கொண்டதுமான எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதாலும்

2. அர்ப்பணிப்பும், தோழமையும் கொண்ட அவரின் சிறை வாழ்க்கை (1981 -1983)

3. இரண்டாவது காலகட்டமான (1983 - 1986) வரையானது. புளட் இயக்கத்தில் இணைந்த அவரின் அரசியல் பயணத்தின் போது, புளட் இயக்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும், அதன் உட்படுகொலைகளுக்கு எதிராகவும் முன்னின்று குரல் கொடுத்தவர் என்பதாலும்

குறிப்பாக இந்த வரலாற்றுப் பாத்திரம் ஊடாகவே, டேவிற் ஐயாவை மதிக்க முடியும். அதாவது இதுதான் விடுதலை என்று நம்பி இயக்கங்களில் மரணித்த இளைஞர்கள், யுவதிகளின் சுயநலமற்ற தியாகத்தை எப்படி நாங்கள் மதிக்கின்றோமோ, அதேயொத்த மதிப்பீடு காந்திய இயக்கத்தில் இருந்தவர்களுக்கும் பொருந்தும்.

இதற்கு அப்பால் காந்தியம் முதல் இயக்கம் வரை, அது கொண்டிருந்த சிந்தனை மற்றும் அரசியலுக்கும், அதற்கு தலைமை தாங்கிய தலைமைத்துவத்துக்கும் இது பொருந்தாது. காந்திய சிந்தனை, அரசியல் குறித்து தனியாக ஆராய்வோம்.

இந்த வகையில் டேவிற் ஐயா செயற்பட்ட காந்திய இயக்கம், புளட் அமைப்பு, இவ் இரண்டு அமைப்பினதும் அரசியல், சமூக நோக்கின் ஊடாக டேவிற்றை போற்றுவதற்கு முடியாது. இவ்விரண்டும் ஒன்றில் இருந்த ஒன்று அரசியல் ரீதியாக வேறுபட்டதல்ல. இவ் இரண்டும் முற்போக்கான சமூக பாத்திரத்தை வகிக்கவில்லை.

டேவிற் ஐயாவின் தன்னலமற்ற உணர்வும், தோழமைப் பண்பும், தான் இருந்த இயக்கத்தின் மனித விரோத செயலையும் எதிர்த்து நின்ற நேர்மை என்பவற்றின் ஊடாக இந்த வரலாற்று பாத்திரம் மதிக்கப்பட வேண்டும் ஒழிய இதற்கு அப்பால் அல்ல.

"காந்திய" இயக்கம் குறித்த எமது பார்வை - சிந்தனை முறை குறித்தானது

1970களில் உருவான காந்திய இயக்கத்தின் நோக்கம் குறித்தான இன்றைய எமது கண்ணோட்டம் என்ன? காந்தியம் சமூகத்தில் பிரதிநிதித்துவம் செய்தது யாரை? சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் காந்தியத்துக்கு நிதி வழங்கிய நோக்கம் என்ன?

காந்தியம் குறித்தான அண்மைய மதிப்பீடுகள் மீதான இந்தக் கேள்விகள், காந்தியத்தின் செயற்பாட்டை சமூக சேவையாக எண்ணி, மக்களுக்கு ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்று கருதி, தாங்கள் என்ன செய்கின்றோம் என்று அறியாமலும், அப்பாவித்தனமாக செயற்பட்டவர்களின் உணர்வைக் குறித்தல்ல. இன்னும் பழைய இனப் பல்லவியின் பின்னால் நீடிக்கும் - சிந்தனை முறை குறித்தான கேள்வியாகும்.

டேவிற் ஐயாவின் மரணத்தை அடுத்து காந்தியம் குறித்தான கருத்துகள் - யாழ் மையவாத சிந்தனையாக வெளிவந்தது.

டேவிற் ஐயாவின் தன்னலமற்ற உணர்வும் - தோழமைப் பண்பும் - இயக்கத்தின் மனித விரோத செயலையும் எதிர்த்து நின்ற நேர்மை.. இதன் மீதான அஞ்சலிகள் மட்டுமே விதிவிலக்கானதும், நேர்மையானதும் கூட.

இதைக் கடந்து காந்தியத்தை முன்மாதிரியாக முன்னிறுத்தி நிற்கும் போது, அதன் கடந்த காலம் குறித்தான விவாதத்தை அவசியமாக்குகின்றது.

காந்தியத்தின் நோக்கம் எந்த வகையில் முற்போக்கானது? 1973களில் காந்தியம் ஆரம்பிக்கப்பட்ட போது - தனக்கேயுரிய ஒரு சமூக நோக்கு கொண்ட சமுதாய செயற்பாட்டை முன்னிறுத்தியது.

அக்காலத்தில் இயக்கங்கள் எப்படித் தோன்றியதோ, அதில் செயற்பட்டவர்கள் தன்னலமற்ற சுய அர்ப்பணிப்புடன் எப்படி செயற்பட முனைந்தனரோ, அதேபோல் தான் காந்தியமும் இயங்க முற்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் தோன்றிய அமைப்புகளும், அதன் சிந்தனை முறைகளும், யாழ் மேலாதிக்க சைவ வேளாள சாதியம் மற்றும் தமிழ் இனவாதத்தைத் தாண்டி முற்போக்காக இருக்கவில்லை. அடிப்படையில் காந்தியம் முதல் இயக்கங்கள் வரை, தமிழ் இனவாதச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாக தன்னை முன்னிறுத்தியதுடன், அதையே நடைமுறைப்படுத்தின. நிலப்பிரபுத்துவத்தின் அனைத்து சமூகக்கேடுகளையும் பாதுகாத்தபடி இயங்கியன.

இன்று அஞ்சலி உரைகளும், கட்டுரைகளும் கூட அந்த இனவாதத்தையே போற்றி, அதை மீள முன்னெடுக்கும் அறைகூவலாக விடப்படுவதே நடந்து வருகின்றது.

மானிடத்தை முன்னிறுத்தாது; "இனம்", "தமிழ்", “சாதிய” அடையாளங்களை முன்னிறுத்தி அணுகுகின்ற சமூகப் பார்வை, யாழ் மையவாதமாக (முதலாளித்துவத்துக்கு முரணான நிலப்பிரபுத்துவ வெள்ளாள சாதியவாதமனது - இது இனவாதமாக - பிரதேசவாதமாக) இயங்குகின்றது. இந்த சிந்தனை முதல் வாழ்வியல் முறை வரை, அரசியல் தொடங்கி இலக்கியம் வரை இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த வகையில் தமிழ் இனவாதம் ஊடாக சுய அடையாளத்தை முன்னிறுத்தி அணுகுகின்ற சிந்தனைகள், நடத்தைகள் அனைத்தும், சாராம்சத்தில் யாழ் மேலாதிக்க சைவ வேளாள சாதிய சிந்தனை முறைதான். இந்த முறை மூலம் தான் சமூகம் சிந்திக்கின்றது, வாழ்கின்றது. இந்த சமூக ஓட்டத்திலேயே காந்தியம் உருவானதும் - அதே அடிப்படையில் அதனைப் போற்றுவதும் நடக்கின்றது.

ஒடுக்கும் பேரினவாதத்தை பிற்போக்கானதாகவும், அதற்கு எதிராக தமிழ் குறுந்தேசிய இனவாதத்தை முற்போக்காகவும் முன்னிறுத்திய சமூக அரசியல் தளத்தில், யாழ் சைவ வேளாள சாதிய மேலாதிக்க சிந்தனையும் நடைமுறையுமே அனைத்தையும் தீர்மானித்தது.

பேரினவாத ஒடுக்குமுறைக்கு பதிலீடாக அதேயொத்த மற்றொரு சிந்தனையை முற்போக்காக முன்னிறுத்திய தளத்தில் இதுதான் விடுதலை என்று நம்பி சுய அர்ப்பணிப்புடன் தியாகங்களுடன் பலர் இதன் பின் இயங்கினர் என்பதே எம்மைச் சூழ்ந்த வரலாறு. இதில் இருந்து வளர்ந்தது தான் காந்தியம். இந்த வகையில் டேவிற் ஐயா விதிவிலக்கல்ல. நோக்கம் குறித்து சுய கேள்வி இன்றி, சமூகம் குறித்த பார்வை இன்றி இயங்கியதே வரலாறு.

காந்தியம் தொடங்கி பின் அதற்கு சர்வதேச நிதி வழங்கியவர்களின் நோக்கத்தைக் கூட கேள்விக்குள்ளாக்காத தலைவர்களும், இன்று வரை அதை ஆராயாது அதன் பின் கும்மியடிப்பதை தொடர்ந்து காண முடிகின்றது.

1980 களில் இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி வழங்கி ஆயுதமும் பணமும் வழங்கியது போன்றது தான், காந்தியத்துக்கு சர்வதேச நிதி வழங்கப்பட்ட பின்னணி என்பது தான் உண்மை.

இந்திய பயிற்சியின் நோக்கம் வெளிப்படையாக தமிழீழத்தை வெல்லுவதற்கு ஆதரவாக என்று காட்டிக் கொண்ட போதும், உண்மையில் சுயமான மக்கள் போராட்டம் வளரவிடமால் தடுத்து அழிப்பது தான் அதன்பின் இருந்த மைய நோக்கமாகும். இந்த வகையில் மக்கள் விரோத போராட்டத்தை நடத்தி அதை அழித்து வெற்றி பெற்றது.

இதேபோன்று தான் காந்தியம் மக்களைச் சார்ந்து சுய பொருளாதாரத்தைக் கட்டுவதன் மூலம், சமூக இயக்கமாக உருவாவதைத் தடுத்து, அன்னிய சக்திகளில் தங்கி இருப்பதன் மூலம், சுயத்தை இழக்க வைக்க நிதி வழங்கப்பட்டது. மக்கள் சார்ந்து இயங்கும் சுயமும், அதற்கான வளர்ச்சியும் அழிக்கப்பட்டது. பணம் கொடுத்தவனுக்கு ஏற்ற வகையில் வீங்கி, கைக்கூலி அமைப்பாக மாறி, போட்டி இன குடியேற்றத்தை நடத்தும் இனவாத உறுப்பாக காந்தியம் இயங்கியது.

இதற்கேற்ற வகையில் சர்வோதயம் (அன்னிய நாடுகளின் பணத்தில் இயங்கிய தன்னார்வ அமைப்பு) வழங்கிய பொருட்கள் தொடங்கி நோர்வே தன்னார்வ அமைப்பான நோவிப் வரை பணம் வழங்கியது. தன்னார்வ அமைப்பு கொண்டு இருக்கக்கூடிய மக்கள் விரோத ஏகாதிபத்திய சார்பு நோக்குக்கு ஏற்ப - அதன் தேவைகளுடன் தான் பணம் வழங்குகின்றது. இதற்கேற்ப காந்தியம் தனது வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு, பணம் கொடுத்தவனின் நோக்குக்கு மக்களை பலியிட்டது. போட்டி இனவாதம் மூலம் சமூகம் குதறப்பட்டது. நிதியாதாரத்துக்கு சொந்த மக்களை நோக்கி காந்தியம் திரும்பும் செயற்பாடுகள் பற்றி சிலர் அக்கறை எடுத்துக்கொண்ட போதும் அவை திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்டன.

இதே போன்று தான் 1990 களில் இயக்கங்களின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக, மக்கள் சார்ந்த அரசியலுடன் வெளிவந்தவர்களின் அரசியல் செயற்பாட்டை முடக்க, மேர்ச் என்ற தன்னார்வ நிறுவனம் "சரிநிகர்" என்ற பத்திரிகையை தொடங்கி நடத்த நிதி வழங்கியது. உண்மையில் இதன் மூலம் மக்கள் சார்ந்து சுயமாக சிந்திக்க முனைந்தவர்களின், மக்கள் சார்ந்து இயங்கும் சுயத்தை அழித்து, அரசியல் ரீதியாக மக்கள் சார்ந்த அரசியலையும் செயற்பாட்டையும் இல்லாது ஓழித்தது.

இங்கு இந்திய உதவிகள் பயிற்சிகள் முதல் சர்வோதயம், மேர்ச் மற்றும் நோர்வேயின் நிதி அனைத்தும் தெளிவாக, மக்கள் சார்ந்த இயக்கமாக வளர்வதை தடுப்பதை நோக்காகக் கொண்டு அதில் அவை வெற்றி பெற்றன என்பதே எமது வரலாறு. காந்தியம் முதல் இயக்கம் வரை இதற்கு பலியானது.

சுய அர்ப்பணிப்பும், தியாகமும்; வர்க்கம் - சாதியத்தை ஓழித்து விடாது

அடிப்படையில் காந்தியம் முதல் இயக்கங்கள் வரை கொண்டிருந்த யாழ் மேலாதிக்க வேளாள சாதிய சிந்தனை முறைதான், அனைத்தையும் காட்டிக் கொடுத்து அழித்தது. "யார் குற்றினாலும் அரிசி கிடைதால் சரி" என்ற சுயநலப்போக்குக் கொண்ட தனிவுடமையை அடிப்படையாகக் கொண்ட சாதிய நிலப்பிரபுத்துவ இனவாத சிந்தனை முறை, மக்களைச் சார்ந்து செயற்பட மறுக்கின்ற மக்கள் விரோத சிந்தனை முறையாக "தமிழ்" "இன" அடையாளத்துக்குள் காணப்படுகின்றது.

இந்த சிந்தனை முறையானது காந்தியத்தின் ஊடாக

1. "எல்லைகளைக்" காப்பாற்ற சொந்த (சாதி) மக்கள் தயாரற்றவொரு நிலையில் - மலையக மக்களைக் கொண்டு வந்து குடியேற்றியது. இங்கு மலையக மக்கள் பற்றிய அக்கறை போலியானது. இதற்கு மாறாக அந்த மக்கள் பற்றிய உண்மையான அக்கறை என்பது அவர்களின் சொந்த வாழ்விடத்தில் (மலையகத்தில்) சுயத்தை கட்டி எழுப்புவதில் தான் இருந்தது, என்பதே உண்மை.

2. யாழ் குடா நாட்டில் விவசாயக் கூலிகளாக தாழ்த்தப்பட்ட சாதிகள் இருந்தது போல், வன்னியில் மலையக மக்கள் கூலிகளாகவே குடியேற்றப்பட்டனர். 1960களில் தொடங்கி வன்னிய குடியேற்றமும், 1970 களில் இலங்கை பொருளாதாரக் கொள்கை சார்ந்து வன்னி விவசாயிகளின் வளர்ச்சியும், வன்னிக்கான கூலிகளைக் கோரியது. இதைத்தான் காந்தியம் "தேசியம் - தேசிய எல்லை" மூலம் பூர்த்தி செய்தது. வன்னிக்குள் தாழ்ந்த சாதியாக மலையக மக்கள் குடியேற்றப்பட்டனர். தமிழ் சமுதாயத்தில் நிலவிய சாதியம், கூலி போன்றவற்றை ஒழிக்காது, அதை பாதுகாக்கும் சிந்தனையையும் நடைமுறையையும் கொள்கையாக கொண்ட காந்தியம், அதை தான் வன்னியில் மீள உருவாக்கியது. இதுதான் இன்றைய வன்னிய வாழ்க்கை முறையாக தொடருகின்றது.

"முன்னுதாரணமிக்க" காந்திய வரலாறு கூட சாதியமும், இனவாதமும் தான். காந்தியம் ஊடாக அஞ்சலி செய்கின்ற அரசியல் பின்புலமும், இதுதான்.