Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரிஸ் தாக்குதலும் அதன் பின்னணியும்

பாரிஸில் கடந்த இரவு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலானது காரணகாரியமற்ற  எதனுடனும் தொடபற்ற, அடிப்படைவாதத்தின் தன்னெழுச்சி சுயவடிமல்ல. மாறாக ஒரு நாணயத்தின் இருபக்கங்களேயான மத அடிப்படைவாதத்தினதும் ஏகாதிபத்தியவாதத்தினதும் பொது விளைவாகும். இவ் இரண்டும் பயங்கரவாதத்தைச் சார்ந்து இயங்குகின்றன. அதாவது தனிச்சொத்துரிமையை அடிப்படையாக் கொண்ட தத்தம் பொருளாதாரக் கொள்கையினை முன்னெடுக்கும் அதன் அரசியல் நடைமுறை வடிவம் தான் பயங்கரவாதமாகும். 

ஏகாதிபத்தியங்கள் உலகெங்கும் நடத்துகின்ற வான்வெளி தரைவழி தாக்குதலில் எப்படி வகைதொகையின்றி பொது மக்கள் கொல்லப்படுகின்னரோ, அதே போன்றே பாரிசில் மத அடிப்படைவாதிகள் பொது மக்களைக் கொன்று குவித்து இருக்கின்றனர்.

ஏன் தாக்குதல்கள் பாரிசில் நடத்தப்படுகின்றது? பிரான்ஸ் ஏகாதிபத்தியம் வேறு நாடுகளில் நடத்துகின்ற தாக்குதலின் எதிர்வினை தான் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம். இங்கு இரு தரப்பாலும் வகை தொகையின்றி பொது மக்கள் தான் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இதனால் ஏகாதிபத்திய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை, மாறாக அடக்குமுறை இயந்திரம் பலப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. அதேநேரம் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் ஏகாதிபத்திய கொள்கைகள் மாற்றமடைவதில்லை.     
 
இந்த ஏகாதிபத்திய கொள்கையின் விளைவாக, பாரிசில் அரங்கேறிய பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இன்று பலியாகி இருக்கின்றனர். பிரான்சை பழிவாங்கும் வண்ணம் கண்மூடித்தனமாக பொது மக்களை கொன்று குவிப்பதையே தங்கள் விடுதலையாக பிரகடனம் செய்கின்ற எல்லாவிதமான அடிப்படைவாதங்களும் மக்களை நேசிப்பது கிடையாது. இந்த உண்மை தான், கடந்தகாலத்தில் இலங்கையிலும் நடந்தேறியது. மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிரியாக முன்னிறுத்தி, பொது மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதத்தை தங்கள் விடுதலை அரசியலாக முன்னிறுத்துகின்றனர். இது தன் சொந்த மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து பயங்கரவாத வழிகளில் அடக்கி, ஒடுக்குவதன் மூலம் தான் அடிப்படைவாதம் தன்னை முன்னிறுத்த முனைகிறது.

இங்கு பயங்கரவாதம் என்பது அடிப்படைவாதத்தின் தன்னெழுச்சியான செயல் அல்ல. மாறாக அரசு மற்றும் ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் விளைவுதான், அடிப்படைவாத பயங்கரவாதத்தை தோற்றுவிக்கின்றது. பாரிஸ்சில் நடந்த பயங்கரவாதம் என்பது அரபு உலகில் ஏகாதிபத்தியங்கள் கையாளும் கொள்கையும், ஏகாதிபத்திய நாடுகளில் வாழ்கின்ற பிற இன மக்களை ஒடுக்குவதின் பொது விளைவுமாகும்.

ஏகாதிபத்திய பொருளாதார தேவைக்காக இஸ்ரேல் என்ற நாட்டை பலாத்காரமாக உருவாக்கியதும், இஸ்ரேலை அண்டிய பிரதேசங்கள் மேலான இஸ்ரேலின் பிராந்திய மேலாதிக்க கொள்கையை வழிகாட்டுவதாகட்டும், இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளானதும், அரபுநாடுகளின் ஆட்சிகளை கவிழ்க்க கூலிக் குழுக்களை கொண்டு நடத்தும் உள்நாட்டு யுத்தங்களாகட்டும், இவை தான் பிரான்ஸ் மீதான பயங்கரவாதத்தின் ஊற்று மூலம். ஏகாதிபத்தியங்கள் தங்கள் முரண்பட்ட மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக உருவாக்கின்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுங்கள், ஏகாதிபத்தியங்கள் தங்கள் தேவைகள் முடிந்தவுடன் அதை அழிக்க முனைகின்ற அரசியல் பின்னனியில் அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பயங்கரவாதமாக மாறுகின்றது. பிரான்சின் இந்த ஏகாதிபத்திய கொள்கையே பாரிஸ் மீதான பயங்கரவாதத் தாக்குதலாகும்.  

தங்களுக்கு தேவையற்றுப் போகும் பயங்கரவாதத்தை ஒழிக்க ஏகாதிபத்தியங்கள் நடத்துகின்ற தாக்குதலானது, அங்கு வாழும் பொது மக்களை வகை தொகையின்றி கொன்று குவிக்கின்றது. இது பயங்கரவாதத்தை மேலும் வளர்த்தெடுக்க உதவுவதுடன், ஏகாதிபத்தியம் தன் தாக்குதலை நியாயப்படுத்த சொந்த நாட்டில் அந்த பிரிவு மக்களை எதிரியாக முன்னிறுத்துகின்ற அதன் கொள்கையானது பயங்கரவாதத்தை ஏகாதிபத்திய நாடுகளுக்குள் விதைத்து விடுகின்றது.

பொது மக்களை பலியிடுவதன் மூலமமான ஏகாதிபத்தியக் கொள்கையானது, அதைக் காட்டி மக்கள் மேல் சட்டங்களையும், அடக்குமுறைகளையும் அதிகரிப்பதும் ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கையை மக்கள் மேல் வெற்றிகரமாக திணித்து விடுவதையே பயங்கரவாதங்கள் மூலம் செய்து முடிக்கின்றது.               

ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக போராடுவதன் மூலம் தான் அடிப்படைவாத பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும். அதாவது ஏகாதிபத்திய கொள்கைக்கு எதிராக போராடுவதன் மூலமே அடிப்படைவாத பயங்கரவாதத்தின் பின் மக்கள் செல்வதை தடுக்க முடியும். இதை நாங்கள் செய்யாத வரை பயங்கரவாதத்தை தோற்றுவிப்பவர்களுக்கு உடந்தையாகவும் இந்த மனித விரோத குற்றங்களுக்கு துணையாக இருக்கின்றோம் என்பதே இதன் பின் மறைந்துள்ள பொதுவுண்மையாகும்.