Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தேசிய பிரச்சினைக்கு - தேசிய அரசால் தீர்வாம்!

கூட்டமைப்பின் (பராளுமன்ற எதிர்கட்சிகளினதும் - அதன் தலைவரினதும்) ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு தேசிய அரசிடம் கோருகின்றார். அதேநாள் நாட்டின் பிரதமர் ரணில் முழுப் பாராளுமன்றமும் இன்று ஒரு அரசாங்கமாக மாறி வருவதால், நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்க்க ஒத்துழைக்குமாறு கோருகின்றார்.

ஆக யாரோ ஆட்டுவிக்க, ஆடுகின்ற பொம்மை ஆட்டம் பாராளுமன்ற மேடையிலேயே அரங்கேறுகின்றது. கை தட்டுக்களும் - ஆட்டம் பற்றியும், தர்க்கங்கள் - விவாதங்களுக்கு இடையில் மக்கள் கட்டியிருந்த கோமணங்களைக் கூட உருவுவது தெரியாது சொக்கித்துப் போய் நிற்கின்றனர்.

இலங்கை நவதாராள காலனியாக மாறி இருக்கும் சூழலில் - அதன் எஜமானர்கள் திட்டங்களே அரங்குக்கு வருகின்றது. இந்தத் திட்டங்களை முன்னெடுக்கும் பராளுமன்ற பொம்மைகளின் திறமை பற்றியும் - ராஜதந்திரம் பற்றியும் "அறிவுத்தனமான" முட்டாள்தனங்களை முன்வைத்து அரசியல் பச்சோந்திகளாக மாறிவிடுகின்றனர்.

தன்னை மனிதனாக முதன்மைப்படுத்தி சிந்திக்காத இனவாத சிந்தனை முறையில் இருந்து இதன் பாதகம் - சாதகம் குறித்த ஆரூடங்களும் - மகிழ்ச்சிகளும் - அவநம்பிக்கைகளுக்கும் அளவு கிடையாது. இதுவே அனைவரினதும் அரசியலாகிவிடுகின்ற சமூக அவலம்.

இன்று முழுப் பாராளுமன்றமுமே அரசாக மாறி இருக்கின்ற நிலையில் - நாட்டின் அனைத்துப் பிரச்சனையும் தீர்க்கப்பட்டு விடும் என்று நம்புவதும் - எதிர்பார்ப்பதுமானது அப்பாவித்தனமானது. இல்லை தீர்க்கப்பட்டு விடும் என்று கூறுவது, மோசடித்தனமாகும்.

அதாவது இது வரை காலமும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இருந்ததாலேயே நாட்டில் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்றும் - பிரச்சனைகள் உருவானதாக நம்புகின்ற - கருதுகின்ற பகுத்தறிவற்ற சிந்தனை முறையாகும். சர்வாதிகாரம் மூலம் நாட்டின் பிரச்சனை தீர்க்க முடியுமென்ற புலியிசவாதம் கூட. புலிகள் "தமிழீழத்தைப்" பெற கையாண்ட அதே "தமிழ் தேசிய" சர்வாதிகாரம் - தேசிய அரசு என்ற சர்வாதிகாரம். மக்கள் நலன் சார்ந்து ஒன்றாக சிந்தித்து உருவான மக்கள் அரசு அல்ல, நவதாராளவாத சுரண்டல் அரசு. அதாவது மக்களையும் - தேசத்தையும் அன்னியனுக்காக சுரண்டும் அரசு.

இதன் பின்னுள்ள உண்மைகள் என்ன? நவதாராளமய காலனியாக்கமே, நாட்டின் தேசிய தன்மையையும் - சமூக ஒருமைப்பாட்டையும் அழித்து அதனிடத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது. சுரண்டல் முறை தான், சமூகங்களையும் - வர்க்கங்ளையும் ஒடுக்குகின்ற கருவியாக இருக்கின்றது. இது தான் தேசத்தின் அனைத்து பிரச்சனைகளினதும் - முரண்பாடுகளினதும் தோற்றுவாய்.

சுரண்டல் முறை - தனிச்சொத்துடமை அமைப்பு இருக்கும் வரை, எந்தப் பிரச்சனையும் முரணற்ற ஜனநாயக முறையில் தீர்க்கப்படமாட்டாது - தீர்க்க முடியாது. சுரண்டல் தேவைக்கு ஏற்ப முரணான ஜனநாயகத் தீர்வுகளும் - ஒடுக்குமுறையுமே நடைமுறையில் இருக்கும். இதை மீறி எதுவும் நடக்காது.

சுமந்திரன் - ரணில் கூறுவதும் இதைத்தான் - கோருவதும் இதைத்தான். மக்களை ஏமாற்றி சுரண்டவும் - அடக்கவும், நவதாராளவாத ஆளும் வர்க்கத்துடன் கூட்டமைத்துள்ள ஆட்சியாளர்கள், இன்று ஒன்றாக களமிறங்கி இருப்பதையே அண்மைய பாராளுமன்ற கூத்துகளும் - சதிகளும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது.

இனத்தினதும் - இனவாததின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் - அதை தங்களே கூடித் தீர்க்கப் போவதாக கூறுவது வேடிகையான நகைச்சுவை. இன்று உலகில் அமைதியையும் - சமாதனத்தையும் பாதுக்காகவும் அதைக் கொண்டு வரவுமே ஆயுதங்களை குவித்து - ஆக்கிரமிப்புகளையும் நடத்துவதாக கூறுகின்ற அமெரிக்கவின் உலக மேலாதிக்க "ஜனநாயக" கூற்றுக்கு ஒப்பானதே, சுமந்திரன் - ரணில் தேசிய பிரச்சனைக்கு தீர்வு தொடர்பாக முன்வைக்கின்ற கூற்றுக்கள்.

பாராளுமன்றம் சுரண்டும் வர்க்கதின் சாக்கடை என்பது - உலகில் வாழும் மக்களுக்கு முரணற்ற ஜனநாயகத்தை வழங்கியது கிடையாது என்பதுமே, உலகறிந்த பொது உண்மையாகும்.