Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் சைவ வேளாள மேலாதிக்க சாதிய சிந்தனை கட்டமைக்கும் இடதுசாரிய சந்தர்ப்பவாதம்!

சாதி பற்றிய ஆய்வுகள் - முடிவுகள், உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்புபட்டதாகவே இருக்க முடியும். இதற்கு வெளியில் சாதியத்தை புரிந்து கொண்டு விளக்க முற்படுவதானது, சமூகத்தில் நிலவும் மேலாதிக்க சிந்தனை வகைப்பட்டதே.

இந்த மேலாதிக்க சிந்தனையானது ஒடுக்குமுறை மீதான அனுதாப உணர்வு தொடங்கி ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு வகைப்பட்டதாகக் கூட இருக்க முடியும். இது சாதி பற்றிய சமூகத்தில் நிலவும் பொது புத்தி அறிவுக்கு அமைவான, அகவயமான முடிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.

இந்த வகையில் இடதுசாரியத்தின் பெயரில் "சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையும் வர்க்கப் போராட்டமும்" என்ற கட்டுரை ஒன்று "சோசலிசம் ரூடே"யில் வெளியாகியுள்ளது.(http://www.socialismtoday.org/184/caste.html)

தமிழ் இடதுசாரிய இன்று குறுந்தேசியத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பவாத அரசியல் போல், சாதிய சந்தர்ப்பவாதம் மூலமும் அரசியலை செய்ய முற்படுவதை இந்தக் கட்டுரை மூலம் காணமுடியும்.

இந்த வகையில் பொதுபுத்தியை அடிப்படையாகக் கொண்ட சைவ வேளாள யாழ் மையவாத மேலாதிக்கம் சார்ந்த தமிழ் இடதுசாரிய சிந்தனை முறை, இலங்கை மகக்ளின் வரலாற்றின் ஒரு பகுதியை வெள்ளார் - கரையார் முரண்பாடாகவும், கோவிகம - கரவா முரண்பாடாக காட்டிவிடுகின்றது. காலனிய காலம் தொடங்கி இன்றைய போராட்டங்கள் வரை இதற்குள் அடக்கிவிடுவதன் மூலம், அனைத்தையும் சமூக மேலாதிக்க யாழ் சைவ வேளாள சாதிய சிந்தனை மூலம் காட்டி விடுகின்றது.

மார்க்சியம் - இடதுசாரியத்தின் பெயரில் "ஒடுக்கப்பட்ட சாதிகளான சிங்கள கராவ சாதி மற்றும் தமிழ் கரையார் மீன் வியாபாரம் மற்றும் மது விற்பனை மூலம் தமது பொருளாதரத்தை மேம்படுத்தினர். இதன் மூலம் அவர்களால் சிங்கள கோவிகம மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக சவால் விட துணிவு தன்னம்பிக்கை பெற்றனர் "("Nonetheless, the relative economic improvement which took place among the oppressed Karava (Sinhala) and Karayar (Tamil) castes, due to their involvement in businesses such as fishing, the sale of alcohol, etc, created a certain confidence and enabled them to challenge the domination of the ‘upper’ Kovigama (Sinhala) or Vellalar (Tamil) castes")  என்கின்றனர்.

மேலும் அதே கட்டுரையில் லங்ககா சமசமாஜி கட்சியைத் தவிர அண்மைய போராட்டங்களை நடத்திய புலிகள், ஜே.வி.பி,.. என்று எல்லாம் கரையார், கராவ சாதி தலைமையால் ஆனாதாக கூறுகின்ற அதே நேரம், புலிகள் மற்றும் ஜே.வி.பி போராட்டங்களை சாதிய போராட்டங்களாகக் குறுக்கிக் காட்டப்படுகின்றது.("The Karava or Karayar castes were prominent in the leaderships of almost all the resistance groups to emerge in Sri Lanka – not just the LSSP, but also the JVP (People’s Liberation Front, founded in 1965), the LTTE (Liberation Tigers of Tamil Eelam, 1976) – and even a section of the SLFP (Sri Lanka Freedom Party, 1951")

கடந்த போராட்ட வரலாறுகளை அந்த இயக்கங்கத்துக்கு தலைமை தாங்கிய தலைவர்களின் சாதி ஊடாக காட்ட முற்பட்டு இருக்கின்றது. அந்த இயக்கத்தையும் அதைச் சுற்றிய போராட்டத்தையும் சாதி ஊடாக அணுகுகின்ற போக்கு, சமூக விஞ்ஞான ஆய்வாக இருக்க முடியாது. இடதுசாரியம் மற்றும் மார்க்சியத்தின் பெயரிலான இந்த தமிழ் சாதிய சிந்தனையானது, அடிப்படையில் யாழ் மையவாத சைவ வெள்ளாள மேலாதிக்கச் சிந்தனை முறையாகும்.

புலிகளையும், ஜே.வி.பியையும்.. சாதி ஊடாக இட்டுக் காட்டிக் காட்டுவது, அந்த போராட்டங்களின் பின்னான சமூக பொருளாதார அடிப்படைகளையே மறுக்கின்ற சாதிய அரசியலாகும். சாராம்சத்தில் இது இடதுசாரியமல்ல, சாதிய மேலாதிக்கத்தை முன்னிறுத்தும் தலியத்துக்கு நேர் எதிரான வெள்ளாளத் தலித்திய அரசியலாகும்.

ஒரு அமைப்பின் சமூக பொருளாதார அரசியல் போராட்டத்தை விட்டுவிட்டு, அதன் தலைமையின் சாதியைக் கொண்டு அதை சாதியாக வரையறுப்பதானது, அடிப்படையில் யாழ் சைவ வேளாள சாதிய சிந்தனை முறையாகும். தென்னாசிய சாதிய சமூக அமைப்பில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும், சாதியில் பிறப்பதுடன் சாதி அடையாளத்தைக் கொண்டு இருக்கின்றான். அதைக் கொண்டு போராட்ட இயக்கங்களை சாதியாக வரையறுப்பது மார்க்சியமல்ல. ஒரு இயக்கம் சாதியை முன்வைத்து மற்றைய சாதிகளை தனக்கு எதிராக முன்னிறுத்தி இயங்காத வரை, அதை சாதிய இயக்கமாக வரையறுப்பது சொந்த சாதியச் சிந்தனை முறையாகும்.

இலங்கையில் பிறந்த ஒவ்வொருவரும் சாதியில் பிறந்து, சாதி அடையாளத்தைக் கொண்டுள்ளனர். இப்படி இருக்க போராடியவர்களின் சாதியைக் கொண்டு வரலாற்றை காண்பதும், காட்டுவதும் படுபிற்போக்கான சாதிய கண்ணோட்டமாகும். இதை இடதுசாரியத்தின் பெயரில் முன் வைப்பதானது அரசியல் விபச்சாரமாகும்.

புலிகள் இயக்கத்தையும், அதன் தலைமையையும் கரையார் இயக்கமாக காட்டுவதைக் காண்கின்றோம். புலிகள் இயக்கமும் அதன் தலைமையும் கரையார் சாதிய சமூகத்தை பிரநித்தித்துவம் செய்யவில்லை, மாறாக நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாதத்தை பிரதிநித்துவம் செய்தது. புலிகளை கரையார் இயக்கமாக வரையறுக்கும் அதே சிந்தனையை தான், புலிகள் இயக்கம் பிரதிநித்துவம் செய்தது.

ஜே.வி.பி கரவா சாதியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக நவதாரள சிங்கள பேரினவாத பௌத்த கொவிகம சிந்தனை முறைக்கு எதிரான, வர்க்க சிந்தனையையே முன்வைத்து அதை பிரதிநித்துவம் செய்தது.

இப்படி உண்மைகள் இருக்க, இதற்கு நேர்மாறாக பிறப்பைக் கொண்டு அதை சாதியமாக முன்வைக்கும் இடதுசாரியமானது அடிப்படையில் சைவ வேளாள யாழ் மையவாத சிந்தனை முறையாக இருக்கின்றது. இது மட்டும் தான், புலிகள், ஜே.வி.பி... போராட்டத்தை, அந்த இயக்கத்தின் தலைவர்களின் சாதி ஊடாக காட்ட முடியும். இடதுசாரியம், மார்க்சியத்தின் பெயரிலான இந்த சாதிய அரசியலை இன்று இனம் கண்டு தோற்கடிக்க, இதைபற்றி புரிதல் மேலும் அவசியமாகின்றது.

காலனிய கால கரையார் - காரவ சமூகம் மது - மீன் விற்பனை செய்தா?

இன்றைய வரலாற்றை மட்டும்மல்ல, கடந்த காலனிய காலத்தையும் சாதியூடாக காட்டுவது நடந்தேறுகின்றது. "சிங்கள கராவ சாதி மற்றும் தமிழ் கரையார் மீன் வியாபாரம் மற்றும் மது விற்பனை மூலம் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தினர். இதன் மூலம் அவர்களால் சிங்கள கோவிகம மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக சவால் விட துணிவு தன்னம்பிக்கை பெற்றனர்." என்று கூறுவது, சாதியைப் பற்றிய, சாதிய கண்ணோட்டம் சார்ந்த ஒரு வரலாற்று திரிபாகும்.

குறிப்பாக பிரிட்டிசாரின் காலனிய காலத்தில் கரவாச் சாதியைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மது விற்பனையில் ஈடுபட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, கரவா சாதியே அதில் ஈடுபட்டதாக கூறுவது மோசடித்தனமானமாகும். இதற்குள் தமிழ்க் கரையாரும் ஈடுபட்டதாக கூறுவது அரசியல் பித்தலாட்டடமாகும்.

இதே போல் மீன் வியபாரம் செய்தாக கூறுவது, யாழ் மேலாதிக்கம் சார்ந்த பொது புத்தி சாதி அரசியலாகும். அன்று மீன் பிடி ஒரு வியாபாரமாக இருக்கவில்லை. தேவை சார்ந்த சுய உழைப்பாக இருந்தது. அக்காலத்தில் வியாபாரம் பண்டமாற்றமாக இருந்த காலம். மீனை எடுத்துச் சென்று விற்கும் வியாபாரமாக இருந்ததில்லை. குளிரூட்டி மூலம் மீனை பாதுகாக்கும் வியாபாரத்துக்குரிய தொழில் நுட்ப முறை இருக்கவில்லை. அத்துடன் மீனை தூர இடத்துக்கு வேகமாக எடுத்துச்செல்லும் போக்குவரத்து வசதி இருக்கவில்லை. மீனை கருவாடாக போட்டு பதப்படுத்தும் முறை இருந்த போதும் அது மட்டுப்படுத்தப்பட்டே இருந்தது. அதாவது மீன்பிடியை பெருமளவில் செய்யுமளவுக்கு, தொழில் நுட்பத்துடன் கூடிய மீன் பிடியாகவும் இருக்கவில்லை. கடல் மீன் பிடி என்பது சிறு தொழில் தான். மீன்பிடி கரை அண்டிய பிரதேசத்துக்கு உட்பட்டதாகவும், பிற பிரதேசத்தில் நன்னீர் மீன்பிடியுமே காணப்பட்டது. நன்னீர் மீன்பிடியை கரையார் சாதி செய்யவில்லை. பெரும்பாலும் விவாசாயிகளும், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட கூலி விவாசயிகளும் தங்கள் தேவைக்காக மீனைப் பிடித்தனர்.

கடல் சார்ந்து பதப்படுத்தப்பட்ட சிறிய அளவிலான கருவாடு கூட, பெரும்பாலும் முஸ்லிம் வியாபாரிகளால் பண்டமற்றாக எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு கரையார் மீன் வியாபரம் செய்ததாக கூறுவதற்கு அடிப்படைகள் எதுவும் கிடையாது.

இப்படி இருக்க கரையாரை வியாபாரிகளாக சிந்திப்பதானது, குறுகிய யாழ் மேலாதிக்க பொதுப்புத்தி அனுகுமுறையாகும். இப்படி சிந்திப்பதானது, தனது சொந்த தனிவுடமை சிந்தனை முறை சார்ந்தது. இதுதான் புலி - ஜே.வி.பி தலைவர்களின் சாதி ஊடாக அனுகி, அந்த இயக்கத்தை சாதியாக காட்டுவதற்கும் தயங்கவில்லை. கரவாச் சாதியைச் சேர்ந்த ஒரு சிலர் பிரிட்டிஸ் காலனியத்தில் மது வியாபாரத்தில் ஈடுபட்டதைக் கொண்டு, அதை சாதியுடாக அணுகுவது வெள்ளாள சாதிய காழ்ப்புக் கொண்ட சிந்தனை முறையின் வெளிபாடகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் மூலம் கரவா - கரையார் சாதிகள் கோவிகம - வெள்ளாருக்கு எதிராக சாவல் விட்டதாக கூறுவதாகும். மது - மீன் வியாபார பொருளாதாரம் மூலம் கோவிகம - வெள்ளாள சாதிக்கு எதிராக அணிதிரண்டதாக கூறுவதானது வெள்ளாள சிந்தைனை சார்ந்த கற்பனை. இதற்கு எந்தவொரு வரலாற்று ஆவணத்தைக் கூட காட்ட முடியாது. அப்படி ஒரு சாதிய முரண்பாடே இருந்தது கிடையாது.

குறிப்பாக அக்காலத்தில் மது ஓழிப்பு இயக்கங்கள் தோன்றிய போது கூட, அவை கரவா - கரையார் சாதிய எதிர்ப்பு இயக்கமாக இருந்தது கிடையாது. காலனிவாதிகளை எதிர்க்கின்ற அதே நேரம், கிறஸ்துவ எதிர்ப்புக் கொண்ட சைவ - பௌத்த மதங்களை பாதுகாக்கின்ற இயக்கமாகவே இருந்தது.

மது பாவனையால் அனைத்து சாதிகளையும் பாதித்தது என்பதும், மது எதிர்ப்பு இயக்கம் அனைத்து தரப்பு சார்ந்தாகவுமே வெளிப்பட்டது. பிரித்தாளும் காலனித்துவ பிரதிநித்துவ முறைக்கு நேர் மாறாக, அனைத்து பிரதேசங்களிலும் மது எதிர்ப்பு இயக்கச் செயற்பாடுகள் காணப்பட்டது.

இது இப்படி இருக்க கோவிகம மற்றும் வெள்ளாளர்களின் ஆதிக்கத்திக்கு சாவல் விடுமளவுக்கு, கரவா - கரையார் அரசியல் பொருளாதார கூறுகள் முரண்பாடாக இருந்ததா எனின், இல்லை. பிரிட்டிஸ் காலனியவாதிகள் பிரித்தாளும் பிரதிநிதித்துவத்தை கொண்டு இலங்கையை ஆண்ட போதும், அதை சாதி அடிப்படையில் வழங்கவில்லை. வரலாற்று வழியிலான ஆட்சி வடிவங்கள் சார்ந்தாகவோ, பிரதேச ரீதியானதாகவும், மொழி சார்ந்தாகவும் இருந்ததே ஓழிய, சாதி சார்ந்த பிரதிநித்துவத்தை கொண்டதல்ல. இருந்த சமூகம் மேலாதிக்கம் சார்ந்து தான், சாதியை அது பிரதிநிதித்தும் செய்ததே ஓழிய, சாதிய முரண்பாட்டின் அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அல்ல.

காலனிய ஆட்சி அதிகாரத்தில் சேவை செய்யும் உயர் வகுப்பு சார்ந்த பிழைப்புவாதம், அதிகாரத்தை கோரவில்லை. இயல்பான சாதி மேலாதிக்கத்தை, தத்தம் உற்பத்தி பிரிவுக்குள் கொண்டு இருந்தது.

இக்காலகட்டத்தில் உற்பத்தி உறவுகள், கரையார் - வெள்ளார் இடையிலோ, கரவா - கோசிகமா இடையில் இருந்ததில்லை. குறிப்பாக இப் பிரதேசங்களுக்கு தொழில் சார்ந்த எல்லைக் கோடு இருந்தது. ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரு வேறுபட்ட உற்பத்தியும், அதற்குள் முரண்பட்டதும் இணங்கியதுமான பல உற்பத்தி முறைகளும் காணப்பட்டன. இவ் இரண்டு பிரிவுக்கு இடையில் முரண்பாட்டுக்கும் - ஆதிக்கத்துக்குமான போராட்டத்துக்கான எந்த உற்பத்தி சார்ந்த சாதிய சமூக கூறுகளும் இருக்கவில்லை.

அதாவது உற்பத்தி - உற்பத்தி உறவுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கவில்லை. மாறாக தனியாக தனித்துவமாக இருந்தது. தனக்குள் சாதி படிநிலை கொண்டதாக இருந்த அதே நேரம், கோவிகம மற்றும் வெள்ளார்களில் இருந்த அளவுக்கு கரவா - கரையார் மத்தியில் இருக்கவில்லை.

இங்கு இரண்டு வேறுபட்ட உற்பத்தி முறைகளும், அதற்குள் ஏற்றத்தாழ்வான சாதிய கூறுகள், ஒன்றுக்கு ஒன்று நிகரான உயர் வர்க்கத்தைத் தனக்குள் தோற்றுவித்த அதே நேரம், முரண்பட்டதில்லை.

பிரிட்டிசார் காலனிய காலத்தில் நிலம் சார்ந்த உற்பத்தியை தொன்னாசியாவுக்கு எடுத்துச் சென்ற போக்கு, அதாவது உற்பத்தி மற்றும் பரிமாற்றத்திலான இரு வேறு செயற்பாடு உயர் வர்க்கத்தை உருவாக்கியது. இங்கு அதை வாங்கி விற்பதற்காக எடுத்துச் சென்றதில் முன்றாவது தரப்பாக முஸ்லிங்களும், இந்தியரும், இரு பெரும் சாதி பிரிவுகளில் தோன்றிய வியாபரிகளும் அடங்கும். இங்கு தோன்றிய உயர் வர்க்கம் சாதியை பிரநிதித்தும் செய்யவில்லை. மாறாக வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்ததுடன், இந்த பண்ட பரிமாற்றத்தில் முரண்பாட்டுக்கு பதில் இணக்கமான செயற்பாடே இரு சாதிய அடிப்படையிலும் காணப்பட்டது.

எந்தக் கட்டத்திலும் இரு உற்பத்தி சார்ந்த சாதியம், உற்பத்தி உறவுகள் மூலம் ஒடுக்குமுறைக்கோ ஆதிகத்துக்கோ உட்படவில்லை. மாறாக உற்பத்தி மற்றும் விநியோகம் இணைப்பையே உருவாக்கியது. தனித்தனியான வேறுபட்ட உற்பத்தி பரிமாறிக் கொள்வதில் தொடங்கி அதை சந்தைப்படுத்துவது வரை ஒரு இணக்கமான சூழலைக் காணமுடியும். இதை ஓட்டிய தொழில்களும், உற்பத்தியும் சந்தையும் வளர்ந்த அதேநேரம், இது தேசியத் தன்மைக்கான கூறுகளுக்கான சமூக அடிப்படைகளை உருவாக்கியது.

இங்கு தமிழ் கரையாரின் தொழிலை மது வியாபரமாக கூறுவதற்கு எந்த சமூக அடிப்படையும் கிடையாது. சிங்கள கரவா சாதியின் ஒரு சிலர் மதுவை விற்பனை செய்த முதலாளிகளை, முதலாளியாக அல்லாமல் கரையாராகக் காட்டுவது, சாதிய மூலம் சிந்திக்கின்ற சாதிய சிந்தனைமுறையாகும்.

கரவா - கரையார் சாதிகள் மீன்பிடியை மட்டும் செய்து வியாபரமாக்கியதாக கூறுவதானது, பொது புத்தி சாதி அரசியல். குறித்த காலத்திலும், காலத்துக்கு காலம் கடல் கடந்த வர்த்தகமும், அதற்காக கப்பல் கட்டுமானமும், முத்துக் குழிப்பு, மீன்படி... என்று பல்துறை சார்ந்த தொழில்களையும் அது சார்ந்த சாதியப் பிரிவுகளையும் காண முடியும்.

கரையோரங்களில் காலனிய வருகையுடனான கிறஸ்துவ மதங்களில் பரவலும் அதைத் தொடர்ந்து உருவான கல்வியும், அரசு சார்ந்த உத்தியோகத்தர்களை உருவாக்கியது. அதே காலத்தில் கரையோரங்கள் அல்லாத பகுதிகளிலும் சமந்தரமாக இதை போக்கு காணப்பட்டது. இங்கு முரண்பாடுகள் மத ரீதியான கல்வி ஊடாக வெளிபட்டதே ஒழிய, சாதி ரீதியாக அல்ல. குறிப்பாக சாதி மேலாதிக்கம் சமூகம் சார்ந்தாகவே இருந்தது.

முடிவாக

கரவா - கரையார் சாதிகள் கோவிகம - வெள்ளாருக்கு எதிராக இருந்ததாக கூறுவதும், புலிகளை கரையார் இயக்கமாகவும், ஜே.வி.பியை கரவா இயக்கமாக கூறுவது வடித்தெடுத்த சாதி கண்ணோட்டமாகும். இது நவதாரள யாழ் மையவாத சைவ வெள்ளாள மேலாதிக்கச் சிந்தனை முறையாகும்.