Tue12072021

Last updateSun, 19 Apr 2020 8am

"போராட்டம்" இதழ் 06 வெளிவந்து விட்டது

இடதுசாரியத்தின் வெற்றி எப்போது?

வாக்குறுதிகள், வாய்ச்சவாடல்கள் மற்றும் வன்முறைகள் கூடிய இன்னொரு தேர்தலும் முடிந்து விட்டது. வெற்றி பெற்றது யாராக இருந்தாலும் அது நவதாராளமய முதலாளித்துவத்தின் மக்கள் மத்தியில் மேலும் திணிப்பதற்காக அதிகார வர்க்கத்திற்கு இன்னொரு தேர்தல் வெற்றி கிடைத்திருக்கிறது. தங்களை ஏமாற்றுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை மக்களே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். தேர்தல் முடிந்தாலும், அது பற்றிய தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்பவர்களின் குரல்கள் கேட்டு இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் அலையொன்றை உருவாக்கி அரசாங்கத்திற்கு அதனை "பூமராங்" ஆக மாற்றுவோம்" என உளறிக் கொட்டியவர்கள் தேர்தல் முடிவுகளைப் பார்த்து வாய்மூடி மௌன விரதம் அனுஸ்டிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் மின்சார கட்டண உயர்விற்கு எதிராக பந்தமொன்றைக் கையிலேந்தி ஊர்வலம் சென்ற ஆண்களும், பெண்களும், எரிபொருள் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் இறங்கிய சிலாபம் மீனவர்களும் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் ராஜபக்ச சர்வாதிகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்காக வெற்றிலை சின்னத்திற்கு முன்னால் மீண்டும் ஒருமுறை புள்ளடியிட்டு அரசாங்கத்தின் மீது தமக்குள்ள நம்பிக்கையை காட்டியுள்ளனர். சரியான இடதுசாரிய இயக்கமொன்றின் உறவைப் பெற்றிராத சமூகத்தில் இப்படியான தன்மைகள் வெளிவருவதை புரிந்து கொள்ள முடியும்.

நவ தாராளமய முதலாளித்துவத்தின் மிலேச்சத்தனமானதும் கொடூரமானதுமான நடைத்தைகளையும், அதற்கு ஒப்பாக அதன் பலிக்கடாவாக ஆக்கப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனோ இச்சையான நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக பிரித்து, குறுகிய தனித்துவத்திற்கு தீங்கு விளைவிக்கும் நவ தாராளமய முதலாளித்துவத்தினது மனித உறவுகளின் தன்மையையும் இணைத்தே நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த மனித சமூகமும், அழிவுக்குள் மூழ்குவதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொள்வதற்கு சரியான தத்துவார்த்த வழிகாட்டுதலொன்று உண்மையான இடதுசாரிய இயக்கமொன்றுக்கு தேவைப்படுகிறது. அவ்வாறான சமூகமொன்றை இழுத்து வீசப்பட்டிருக்கும் இருண்ட தலைவிதியிலிருந்து மீட்டெடுக்கும் கடமையை நிறைவேற்றும் வழக்காற்றுக்கு இடதுசாரியம் நுழைய வேண்டியது, அந்த தத்துவங்களிலிருந்து வெளியேறும் ஒளிக்கீற்றுக்களின் உதவியைக் கொண்டேயாகும்.

செப்டம்பர் கடந்து சென்று விட்டது. அரசாங்கத்தின் வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றன. வடக்கில் அரசாங்கத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த நவ தாராளமய கொள்கைகள் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தோடு வட மாகாண முதலமைச்சரைக் கொண்டு தொடரப்படவிருக்கின்றன.

மூன்று மாகாணங்களுக்குமான தேர்தலின் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ராஜபக்ச அரசாங்கத்தில் புதிதாக 9 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத்திலேயே வரலாற்றுச் சாதனை படைத்த, மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட அரசாங்கமாக மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கிறது. இந்த களேபரங்களுக்கு மத்தியில் கல்வியை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டமொன்று அமுலுக்கு வந்துள்ளது.

அதுதான், தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான அனுமதி. அதற்கான சட்டமூலும் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கபபட்டு, அது சம்பந்தமாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுவிட்டது. "தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்" என்பதைப் போன்று அரசாங்கம் மக்கள் பணத்தைக் கொண்டு தான்தோன்றித்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ராஜபக்ச சர்வாதிகாரத்தின் அடாவடித்தனங்களை தட்டிக் கேட்கக் கூடிய, முதுகெலும்புள்ள சமுதாயமாக மக்கள் மாறு வேண்டும். அநீதியை தட்டிக் கேட்கக் கூடிய துணிவு மக்களுக்கு வரவேண்டும். அதற்காக உண்மையான இடதுசாரிய இயக்கத்தோடு அணி திரள வேண்டிய காலம் கனிந்துள்ளது என்பதை மக்கள் உணரும் பட்சத்தில், அது உண்மையான இடதுசாரிய இயக்கத்திற்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும்.