Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”

1977 வரை இலங்கையில் அரசியலில், அரச நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்றன. ஆனால் பெரும்பாலும் அவற்றை விசாரித்துத் தண்டிக்கும் வல்லமையுள்ள ஒரு நீதி நிர்வாகம் செயற்பட்டுக் கொண்டிருந்தது. 1977ல் புதிய தாராளவாதப் பொருளாதாரத் திட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஊழல்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. அவற்றை பரவலாக்கப்படுத்துவதற்காக நீதித்துறையை அரசியல் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல் நீதித்துறை தனது சுயாதீனத்தை இழந்தது.  “நீதி”  நிதிக்கும்,  அநீதிக்கும், அராஜகத்திற்கும் சேவகம் செய்யத் தொடங்கியது.

இன்று நாட்டில் ஊழல் ‘நீக்கமற எங்கும் நிறைந்து’ காணப்படுகிறது. கிராம மட்டத்திலிருந்து தலைநகர் வரை ஊழல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரச நிர்வாக நடைமுறைகளையும் சுற்றி ஒரு நிழல் நிர்வாகம் இயங்குகிறது. இந்த நிழல் நிர்வாகம் ஊழல்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் இந்த நிழல் நிர்வாகத்தை பணம்(லஞ்சம்) கொடுத்துத் திருப்திப்படுத்தாமல் அதனைக் கடந்து சென்று பொது மக்களுக்கான அரச நிர்வாகத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இதற்கு எதிராக ஒரு சாதாரண குடிமகன் ஒருவனால் எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு சூழ்நிலையும் சுற்றாடலுமே இன்று இலங்கையில் காணப்படுகிறது.

 

2015ல் பல விதமான அச்சுறுத்தல்கள் மத்தியிலும் எமது உயிரைப் பணயம் வைத்து “ஊழல்களை ஒழிப்போம்” – “ஊழல் புரிந்தோரைத் தண்டிப்போம்” என உறுதிமொழி வழங்கிய ஊழல்வாதிகளுக்கே இன-மத-பால்-பிராந்திய-சாதி வேறுபாடுகளைக் கடந்து குடிமக்களாகிய நாம் வாக்களித்து அவர்களை பதவியில் அமர்த்தினோம். அதனால் ஊழல் ஊதிப் பெருகி வளர்கிறது. ஊழல்கள் செய்தோர் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும்,  ஊடகங்களில் தேசிய வீரர்களாகவும் - மக்கள் திலகங்களாகவும் வலம் வருகின்றனர். மக்களுக்கு சேவையாற்ற வேண்டி அரச சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் இந்த நிழல் நிர்வாகம் ஊடாகவே பொது மக்களுக்கான சேவைகளை வழங்குகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்ய வருவோர் கூட இந்த ஊழல் விவகாரம் குறித்து விசனப்படுகின்றனர். நாட்டுக்கு வருகை தரும் சர்வதேசப் பிரதிநிதிகள் நாட்டில் வதியும் ராஜதந்திரிகள் இலங்கையின் ஊழல் விவகாரம் பற்றி சுட்டிக் காட்டுகின்றனர். ஊழல்களை ஏற்றுக் கொள்ளாமல் வாழமுடியாது என்ற நிலையில் குடிமக்கள் அதனை கண்டும் காணாதது போல் இருக்கின்றனர்.

அதேவேளை அரசியல் அரசாங்க மட்டத்தில்,  ஊழல் செய்தவர்கள் மத்தியில் ஒருவர் மற்றவர் மேல் குற்றம் சுமத்தி அறிக்கைகள் - பேட்டிகள் ஊடாக மோதிக் கொண்டிருக்கின்றனர். ஊழல் சம்பந்தமான விசாரணைக்கு உட்பட்டவர்கள் கூட தினமும் வீரவசனம் பேசுகின்றனர். அரசாங்கத்தில் அதி உயர் பதவி வகிப்பவர்கள் ஊழல்களை மூடி மறைத்து சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கின்றனர்.

இந்நிலையில் ஊழல்களை உத்தியோகபூர்வமாக ஊக்கப்படுத்தும் ஒரு அரசாங்கம் ஆட்சிபுரியும் இலங்கையில் மூலதனம் போட்டு நாட்டு வளங்களைக் கொள்ளையடிக்க சர்வதேச நாடுகளும் நிதி நிறுவனங்களும் ‘நான் முந்தி நீ முந்தி’ என போட்டி போட்டு செயற்படுகின்றன. இதற்கான காரணம் புதிய தாராளவாதப் பொருளாதாரம் ஊழல்களை அனுமதிக்கும் அரசாங்கம் ஆட்சி செய்யும் நாடுகளிலேயே தனது லாபங்களை எதுவித கட்டுப்பாடுமின்றி பெற்றுக் கொள்ள முடியும் என்பதேயாகும்.

பல சகாப்தங்களாக அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரப் போட்டியில் மக்களை மறந்து - நாட்டின் தன்னிறைவுப் பொருளாதாரத் திட்டங்களைத் தவிர்த்து உலக வங்கி,  சர்வதேச நாணய நிதியம்,  வல்லரசுகள்,  வளர்முக நாடுகளிடம் நாட்டை அடகுவைத்து கடன்களை வாங்கி குவித்ததைக் காரணம் காட்டி ஏகாதிபத்தியம் இன்று பல வகையான அழுத்தங்களை கொடுக்கின்றது.

இந்த அழுத்தங்கள் மனித உரிமைகள் - யுத்தக் குற்றங்கள் என்பவை ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றன. இக் குற்றச்சாட்டுக்கள் இலங்கைக் குடிமக்கள் நலன் சார்ந்து முன்வைக்கப்படும் ஒரு விவகாரம் அல்ல. இது இலங்கை ஆட்சியாளர்களை தங்கள் திட்டங்களுக்கு ஏற்ப வளைய வைக்கும் ஒரு பொறிமுறையே.

அதனால் இலங்கையின் அரசியல்வாதிகள் குடிமக்கள் மீதான தங்களது ஆட்சி அதிகாரங்களைத் தொடர்ந்து தக்க வைக்க ஊழல்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அதற்கு சமாந்திரமாக புதிய தாராளவாதத் திட்டங்களை மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விளம்பர நுகர்வுக் கலாச்சாரத்தை புகுத்தியுள்ளனர். இன்று நாட்டில் நாளாந்தப் பிச்சை எடுப்பவர் கூட தனது கையில் கைத்தொலைபேசி வைத்திருப்பது இந்தக் கலாச்சார ஊடுருவலுக்குச் சிறந்த உதாரணமாகும்.

இலங்கையின் இன்றைய இளைய தலைமுறை சரி,  இவர்களின் மூத்தவர்கள் சரி யாவரும் வெளிநாடும் - வெளிநாட்டு அம்சங்களும் சிறந்தவை என்றும் வெளிநாட்டார் சொல்வது - செய்வது எல்லாம் நல்லவை,  நம்பிக்கையானவை என்றும் நம்புகிறார்கள்.  நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். அந்தளவுக்கு ஊடகங்கள் பிரச்சார சாதனங்கள் - விளம்பரங்கள் - அறிக்கைகள் - பேச்சுக்கள் ஊடாக குடிமக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குடிமக்கள் நாம் நாளாந்தம் நமது உரிமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதனை உணராத பாமரர்களாக இருக்கின்றோம். முன்னாள் ஊழல் அரசியல்வாதிகளை தெரிவு செய்தனுப்பியதன் மூலம் குடிமக்கள் நாம் ஊழலை சனநாயக மயப்படுத்தியுள்ளோம்.

பாராளுமன்றம்-மாகாண சபை-மாநகர சபை-பிரதேச சபை யாவற்றிற்கும் ஊழலில் ஊறியவர்களை,  அதில் கைதேர்ந்தவர்களையே பெரும்பான்மை பலத்துடன் தெரிவு செய்துள்ளோம். சபை உறுப்பினர்களுக்கு சம்பளமும் - கொடுப்பனவுகளும் தவறாமல் கிடைக்கிறது. மக்களுக்கான திட்டங்களுக்கென நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை மக்களைச் சென்றடையவில்லை. மக்களும் அதனை தட்டிக் கேட்க முடியாதபடி மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய தாராளவாதப் பொருளாதாரம் இலங்கைக்கு மட்டும் வரவில்லை. இன்று உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் அது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்தியபடி உள்ளது. பர்மா(மியன்மார்) நாட்டில் இடம் பெறும் இனச் சுத்திகரிப்பு இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

சர்வாதிகாரத்தை அகற்றி சனநாயகம் என்று கூறி சிறை மீண்ட செம்மலான ஆங் சான் சூ கீ( Aung San Suu Kyi)யை அதிகாரத்திற்கு கொண்டு வந்த  புதிய தாராளவாதப் பொருளாதாரம் அந்நாட்டில் தனது திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த பல சகாப்தங்களாக அங்கே இடம் பெற்று வந்த இன அழிப்பை ஏகாதிபத்தியங்கள் இது வரை கண்டு கொள்ளாமலேயே இருந்தன. இன்று வெறும் கண்துடைப்புக்கு ஜ.நா.கூடி அது பற்றி ஆராய்கிறது. இந்த கூட்டம் அழிவை நிறுத்துவதற்குப் பதிலாக அகதிகளை முகாம்களில் அடைப்பதற்காகவே கூட்டப்படுகிறது.

எனவே இன்றே நாமனைவரும் இலங்கையின் குடிமக்களாக இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க வேறுபாடுகளைக் கடந்த விழிப்புணர்ச்சி பெற்று சிந்தித்துச் செயற்படாவிடின் “புதிய தாரளவாதப் பொருளாதாரத் திட்டங்கள்” இலங்கையிலும் மறுபடி ஒரு இன மோதலை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு.