Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அணுக் கதிரைவிட அரசியலில் கழிவுகளே மிக ஆபத்தானவை..!?

பசுமையான வெளிகளும்

பச்சையான மரங்களும்

கரிய அமிலக் காற்றை

அதிகமாக அருந்த மறுக்கின்றன.

சுத்தமான பிராண வாயுவை

எப்போதும் அருந்துகின்ற உயிரினங்கள்

மூச்செடுக்க முடியாமல் தவிக்கின்றன.

 

நிலையிதனை முன்னின்று உருவாக்கிய

ஆக்க - அபகரிப்புத் திறன் கொண்ட நாடுகள்

மூச்சின்றி முட்டிழுக்கும் இலங்கையைப் பார்த்து

நீ..! பஞ்சப்பட்ட நோய்த் தீவு என்கின்றன.

 

அத்துடன் நிலை இதனை மாற்றும்

நவீன மாற்று மருந்துகள்

தங்களிடம் மலிவாக உள்ளதெனவும்

இலங்கையை அறைகூவி அழைக்கின்றன..,

 

இந்தக் கபடநாடக அரசியற் பிம்பங்கள்

தங்களின் நீதி - நிதிக் கட்டமைப்புகளால் 

இலங்கையின் மனித அவலங்களை

நகைச் சுவையாக்கி நையாண்டி செய்து 

தங்களின் அரசியற் கழிவுகளை

எங்களின் முட்டுத் தீர்க்கும் மருந்தென

எமக்குள் திணிப்பதில் வெற்றியும் காண்கின்றன.

 

எங்களின் பழங்கால நவீனம் என்ற 

இந்து தமிழ்க் குறுந் தேசியமும்

பௌத்த சிங்களப் பெருந் தேசியமும்

ஆக்க - அபகரிப்பு நாடுகளும் இணைந்து

இலங்கையை போரியலால் விலங்கிட்டு

மனிதரைக் கொலை வெறியாடும் விலங்காக்கி

அனைவரது சுக வாழ்வையும் 

அதன் மீதான அற்பசொற்பக் கனவுகளையும்

சடுதியான சாவுகளாக்கி

இலங்கை சுயமற்று அழுது வடிக்கின்றது.

 

இதில்..!?

 

மக்களுக்கான சமூக அரசியலை நிறுவி

அதனைச் சமூக அடித்தளத்தில் முன்னிறுத்தாத

குறுந் தேசிய ஆயுதப் போராளியரின்

குறுங் காலச் சண்டித்தனங்கள்

சுய அழிவு அரசியலுக்குள் மூழ்கியதும்..

 

அதனாலும்..,

அதற்கு முன்பாகவும்..,

இப்போதும்..,

சுயமாகத் தமைக் காக்கப் போராடும் 

சுய அரசியற் திராணியற்ற சமூகமாகி..,

 

இலங்கை அரச - உலகப் பாசிசங்கள் 

இணைந்த கரங்களின் போர்வைக்குள்    

எமது மக்களைத்  தன் பாடைக்குள்

மூடிப்பிணமாக்கும் மாபெரும் ஓலங்கள்

குரல்வளையிலேயே நசுங்கிக் கிழிகின்றது.

இதுதான் அரச இயல்பாகி அடம்பிடிக்கின்றது.

 

இந்த அரசியலில் கழிவுகளே

அணுக் கதிரைவிட மிகவும் ஆபத்தானவை.

 

இந்த அரசியலே இனங்களைப் பிரிக்கின்றது

இந்த அரசியலே இனங்களாய்ப் பிரிகின்றது

இந்த அரசியலே நாட்டைக் கூறுபோடுகின்றது

இந்த அரசியலே பிரதேசங்களாய்ப் பிரிக்கின்றது

 

இந்த அரசியலே சாதியத்திற்குட் கிடக்கின்றது

இந்த அரசியலே போராளிகளை உருவாக்குகின்றது

இந்த அரசியலே போராளிகளைத் தொலைக்கின்றது

இந்த அரசியலே எதிரியிடம் அடிபணிய வைக்கின்றது

இந்த அரசியலே அன்னியரிடம் மண்டியிட வைக்கின்றது

இந்த அரசியலே தமிழ்க் குறுந் தேசிய அரசியலாக உள்ளது

 

இந்த அரசியலே சிறிலங்காத் தனித் தேசியமாக உள்ளது

இந்த அரசியலே மக்களை வதைத்துக் கொல்கின்றது

இந்த அரசியலே மாற்றுக் கொலைக் களம் ஆகின்றது..,

 

ஆகவேதான் நாம் மக்கள் முன் எழுந்து நிற்கின்றோம்

ஆகவேதான் நாம் மக்களுடன் மக்களாகிப் போராடுகின்றோம்

ஆகவேதான் நாம் மக்களின் அரசியல் ஆகின்றோம்.

ஆகவேதான் நாம் மாக்களை மனிதராகி வருமாறு சொல்கின்றோம்

ஆகவேதான் நாம் மக்களுக்கான சம உரிமையை முன்னெடுக்கின்றோம்

 

ஆகவே இயற்கையான எங்களையும்

இயற்கையான அத்தனைகளையும்

 

ஏதென்று புரியாத வெறுப்பான சூட்சிகளுக்குள்

என்னென்றே தெரியாத கொடுமையான வாழ்வுக்குள்

இயற்கையின்  பசுமைக்குக் கெடுதியான இரசாயனங்களை

இயற்கையாக மாற்றும்சம உரிமை அரசியலை

இலங்கையில் - எங்கும்  முன்னிறுத்துவோம்.

 

-   மாணிக்கம்.

11.12.2012