Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

அ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்

ஜெயலலிதா என்னும் ஊழலில் ஊறிப் போன பார்ப்பன வெறி பிடித்த சர்வாதிகாரி இறந்து போனது ஒரு இலை உதிர்வது போன்றது தான். எடுத்துச் சொல்வதிற்கு எதுவேமே இல்லாத ஒரு மக்கள் விரோதியின் மரணம் இறகை விட இலேசானது. ஆனால் இறந்து போனவர்களைப் பற்றி புறம் பேசுவது தமிழ்ப் பண்பாடு அல்ல என்றும், அலையடிக்கும் அரசியல் கடலில் எதிர் நீச்சல் போட்ட புதுமைப் பெண் என்றும், துணிச்சலான முடிவுகளை எடுத்தவர் என்றும் ஈழத்தின் காவல் மதில் என்றும் கைப்பிள்ளைகள் கதறுவதைப் பார்க்கும் போது ரொம்பவே சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கிறது.

இறந்து போனதால் ஜெயலலிதாவும், அவரது அ.தி.மு.க என்னும் கள்ளச் சாராய, கட்டைப் பஞ்சாயத்து, ரெளடிக் கூட்டமும் செய்த ஊழல்கள் இல்லை என்று ஆகி விடுமா? தமிழ்நாட்டின் காட்டையும், கடலையும், கனிம வளங்களையும் உருத் தெரியாமல் உடைத்து விற்ற கொள்ளைகள் இல்லை என்று ஆகி விடுமா? ஆனந்த விகடன் போன்ற முதலாளித்துவ பத்திரிகைகளே அமைச்சர்கள் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் எவ்வளவு கமிசன் அடிக்கிறார்கள் என்றும் அந்த கமிசனில் இருந்து ஊழல் தாய்க்கு எவ்வளவு கப்பம் கட்டுகிறார்கள் என்றும் பட்டியல் போடுகிறார்களே அந்த பட்டியல்கள் இறந்து போனதும் இல்லை என்று ஆகி விட்டதா?

இன்றைய இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் கூட தமிழ் நாட்டில் எத்தனையோ ஆயிரம் ஏழைக் குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டிய வயதில் வறுமை தாங்க முடியாமல் வேலைக்குச் செல்கிறார்கள். செங்கல் சூளைகளிலும், தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும், வீட்டு வேலைகளிலும் வாழ்வைத் தொலைக்கிறார்கள். இந்தக் குழந்தைகளின் நாட்டை விற்று, இந்தக் குழந்தைகளின் அரசாம் தமிழ்நாட்டு அரசின் பொதுப்பணத்தை கொள்ளையடித்து ஊழல் செய்தவள் அம்மாவாம்; சொல்பவர்களை எதைக் கொண்டு சாத்துவது!

எந்த அம்மா என்றாலும் தன் பிள்ளைகளைக் குடிக்கச் சொல்வாளா? தன்னுடையதும், தன் மன்னார்குடி மாபியாக் கூட்டத்தினதும் சாராயத்தை விற்பதற்காக தமிழ்ப் பெண்களின் வாழ்வை அழித்த "ஊத்திக் கொடுத்த உத்தமி" இறந்து போனதும் எதுவும் பேசக் கூடாதாம். குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், முற்போக்கு அமைப்புக்கள் என்று எத்தனையோ ஆயிரம் பேர் "தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை அழிக்காதே" என்று தொடர்ந்து போராடிய போது சாராயப் பணத்திற்காக அவர்களை அடித்து நொறுக்கிய சாராய வியாபாரியை "அம்மா" என்று சொல்லி அம்மா என்ற வார்த்தையையே கேவலப்படுத்துகிறார்கள்.

ஆண்களின் உலகமான இந்திய அரசியலில் எதிர்நீச்சல் போட்ட வீராங்கனையாம் அய்யோ, அய்யோ. ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் எந்த விதமான திறமைகள் கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவர் அரசியலிற்கு என்ன திறமையை காட்டி வந்தார்? அரசியலிற்கு வருவதற்கு அவர் செய்த தியாகங்கள் என்ன? அரசியலிற்கு வருவதற்கு முன் அவர் செய்த பொதுத் தொண்டுகள் என்ன? அரசியலிற்கு வருவதற்கு, அ.தி.மு.கவில் பதவிக்கு வருவதற்கு ஒரேயொரு காரணம் தான். பாசிசக் கோமாளி எம்.ஜி.ஆரின் காதலியாக ஜெயலலிதா இருந்தார் என்ற ஒரேயொரு காரணம் தவிர வேறொன்றும் இல்லை. இது தான் அவர் அரசியலில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய கதை. 

ஏழை மக்களின் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து கோடி, கோடியாக பதுக்கிய ஊழல்காரியை அரசியலில் புரட்சி செய்தவர் என்று வெட்கமில்லாமல் சொல்லுகிறீர்களே அப்படி என்றால் சிட்டகாங்கின் கல்பனாவில் இருந்து அண்மையில் மக்களிற்காக கேரள அரசுக் காவல் நாய்களின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சி ஏந்தி மரணித்துப் போன தோழர் அஜிதா போன்ற புரட்சியின் புதல்வியரை என்னவென்று சொல்லுவீர்? மரணம் அது நிச்சயம் என்று தெரிந்தும் மண்டியிடாது இலங்கை அரசின் கொலை இராணுவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தனரே நம் ஆயிரம், ஆயிரம் சகோதரிகள் அவர்களின் வீரத்தை என்னவென்று சொல்லுவீர்?

இரும்பு மனிதர்கள், சற்றும் தயங்காது துணிச்சலாக முடிவெடுப்பவர்கள் என்று வலதுசாரி அரசியல்வாதிகளும், முதலாளித்துவ ஊடகங்களும் வல்லபாய் பட்டேல், மார்க்கிரட் தட்ச்சர், ஜெயலலிதா போன்றவர்களை சொல்லுவார்கள். இவர்களின் துணிச்சல் என்பது அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களை ஒடுக்குவதும், ஜனநாயக உரிமைகளை குழி தோண்டிப் புதைப்பதும் தான். தனக்கு எதிரானவர்களை கஞ்சா வைத்திருந்தார், வெடிகுண்டு வைத்திருந்தார் என்று பொய் வழக்கு போடுவதும்; காவல்துறை நாய்களை வைத்துக் கொண்டு போராடுபவர்களை கடித்துக் குதறுவதையும் தான் ஜெயலலிதாவின் துணிச்சல் என்கிறார்கள். காவேரி ஆற்றுப் பிரச்சனையில் கன்னட அரசை எதிர்த்தும், முல்லைப் பெரியாற்று பிரச்சனையில் கேரள அரசை எதிர்த்தும் ஜெயலலிதா காட்டிய துணிச்சல் என்ன? தமிழகத்து நானூறுக்கும் மேற்பட்ட கடல் தொழிலாளர்களை இலங்கை அரசின் கடற்படை சுட்டுக் கொன்ற போது பம்மிப் பதுங்கி இருந்தததும் துணிச்சலில் அடங்குமா? 

அயோத்தி தாசர், ஈ.வே.ராமசாமி, சிங்காரவேலனார், ஜீவானந்தம் போன்ற ஆயிரம், ஆயிரம் பகுத்தறிவு, பொதுவுடமை போராளிகள் தமிழ் மண்ணில் வீறார்ந்து போராடி வீழ்த்திய பார்ப்பனியத்தையும், மூட நம்பிக்கைகளையும் மீளவும் கொண்டு வந்த பிற்போக்கு சதியை புரட்சித்தலை என்று சொல்லி புரட்சி என்ற உன்னத இலட்சியத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள். தம் பெண்டாட்டிகளின் குங்குமப் பொட்டை விடப் பெரிய பொட்டுகளும், பட்டைகளும் போட்டுக் கொண்டு ஜெயலலிதாவின் காலில் விழும் அடிமைகளின் கூட்டத்தை திராவிடக் கட்சி என்னும் கொடுமையை என்னவென்று சொல்வது?.

தாங்கள் உலகின் அதிக பட்ச முட்டாள்கள் அல்லது மக்களை அதி முட்டாள்கள் என்று நினைப்பவர்கள் ஈழப் பிழைப்புவாதிகள் என்பதை மறுபடியும் நிருபிக்கிறார்கள். அண்ணன் சிறிதரன் "அம்மா ஈழத்தின் காவல் மதில், பனையோலை கொண்டு கட்டிய பாதுகாப்பு வேலி என்கிறார். அய்யா நெடுமாறன் "செத்தாலும் அம்மா தான் ஈழத்தாய் என்கிறார். மகிந்த ராஜபக்ச எம்மக்களைக் கொன்று கொண்டு இருந்த போது "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சந்தோசப்பட்டது இந்தப் பேய் தான் என்பதை எவ்வளவு சுலபமாக கடந்து போகிறார்கள் இந்தப் பிழைப்புவாதிகள்.

"என்ன இருந்தாலும் அவர் தமிழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அவரின் மரணத்திற்குப் பிறகு அவரை விமர்சிப்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பது போல் ஆகி விடும் என்று சில ஜனநாயகக் கைப்பிள்ளைகள் மெதுவாக அனுங்குகிறார்கள். கிட்லர், முசோலினி, அப்பன் புஷ், மகன் புஷ், மார்கிரட் தட்ச்சர், ரொனி பிளேயர், ஜெயவர்த்தனா, பிரேமதாசா, மகிந்த ராஜபக்சா, மைத்திரி, ரணில், நரேந்திர மோடி கடைசியாக டொனால்ட் ட்ரம்ப் வரை எல்லா அயோக்கியர்களும், கொலைகாரர்களும் மக்களை எமாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். ஜெயலலிதாவை விமர்சிக்கக் கூடாது என்றால் இந்த மயிர்களையும் ஒருத்தரும் விமர்சிக்கக் கூடாது என்கிறார்களா?

மரணத்திற்கு பின் விமர்சிப்பது தமிழ்ப் பண்பாடு அல்ல என்று அலறும் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களே, அப்படி என்றால் எம்மக்களை துடிக்கத் துடிக்கக் கொன்றானே மகிந்த ராஜபக்ச அவன் மண்டையைப் போட்டாலும் நாம் மெளனமாகத் தான் இருக்க வேண்டுமா? மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களைக் கொலை செய்தான், ஜெயலலிதா தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் கொள்ளை அடித்தார். வேறொன்றும் வித்தியாசமில்லை.