Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா!!

அண்ணே, உங்களை ஒருமையில் "பொங்கியெழு மாவை சேனாதிராசா" என்று கூப்பிட்டு விட்டேன் என்று நினைக்க வேண்டாம். எங்கள் ஊரில் கந்தையா அப்பு என்று ஒரு முடி வெட்டும் தொழிலாளி இருந்தார். நல்ல அன்பான மனுசன், எங்களிற்கு என்னவோ விதம், விதமான ஸ்ரைல் என்று சொல்லி முடி வெட்டுவார். ஆனால் கடைசியில் பார்த்தால் எல்லோருடைய தலையும் சட்டியை கவிட்டு விட்டது போலவே இருக்கும். அவர் மருத்துவமும் பார்ப்பார். என்னவோ எல்லாம் சொல்லி மருந்து கொடுப்பார். ஆனால் அதுவும் அவரது முடிவெட்டும் கலை மாதிரித்தான். வருத்தம் கொஞ்சமும் மாறாது.

யாழ்ப்பாணத்து பிரபலமான வைத்தியர்களைப் பற்றி பேச்சு வந்தால் கந்தையா அப்பு திருவாசகம் மாதிரி ஒரு வாசகம் சொல்லுவார் "அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்", அவ்வளவு தான் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் பேயறைஞ்சது மாதிரி பேச்சு, மூச்சில்லாமல் அதிர்ந்து போய் விடுவார்கள். ஈழத்தமிழர்களின் உலகத் தலைவரான உங்கடை வீரவசனங்களை கேக்கும் போது பொறி பறக்கும் வசனங்களை பேசுவதிலும், எழுதுவதிலும் உங்களை மாதிரியே கெட்டிக்காரரான உலகத்தமிழர்களின் தலைவரான கருணாநிதியின் ஞாபகம் தவிர்க்க முடியாமல் வந்து தொலைக்கிறது.

அது மட்டுமில்லை, நீங்கள் இலங்கையின் ஏழை மக்களைப் பற்றியே எந்த நேரமும் யோசித்துக் கொண்டிருப்பது போலவே அவரும் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, கனிமொழி என்று தமிழ்நாட்டின் ஏழை மக்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார். அவரின் "மனோகரா" படத்தில் சிவாஜி கணேசனை ஒரு பெரிய கருங்கல் தூணில் சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள். அதுவரை அவரை அடக்கி வைத்திருந்த அவரது தாயான கண்ணாம்பா "பொறுத்தது போதும், பொங்கியெழு மனோகரா" என்று சொன்னதும் சிவாஜி அந்தப் பெரிய கருங்கல் தூணை உடைத்துக் கொண்டு, இரும்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு எதிரிகளை துவம்சம் பண்ணுவார்.

அண்ணே, இந்தக் கொஞ்ச நாளில் மட்டும் நீங்கள் கொழுத்திப் போட்ட வாணங்கள் கொஞ்சமில்லை. நஞ்சமில்லை.

1. "இராணுவத்தை முழுமையாக வெளியேற்றி மக்களை உரிய முறையில் மீள்குடியேற்றுக!!. (22.03.15).

2. "தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பலத்தைக் கொண்டு மூன்று தொடக்கம் ஆறுமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்க எதிர்வரும் தேர்தல் வழி சமைக்கும் என் சர்வதேச சமுகம் நம்புகிறது". (வலம்புரி, 10.07.15). (அண்ணே, நீங்கள் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா அண்ணே, சர்வதேச சமுகம் நம்புகிறதைக் கூட நீங்கள் கண்டுபிடிச்சு வைச்சிருக்கிறீங்களே)

3. "தமிழர்களின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுவோம்". (சுடரொளி, 21.07.15)

4. "மகிந்த அரசைப் போல மைத்திரி அரசும் சிறுபான்மை மக்களை புறம் தள்ளி செயற்பட முடியாது. புறம் தள்ளினால் இந்த அரசிற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுப்போம். (யாழ் தினக்குரல், 24.06.15)

5. "காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் வெடிக்கும் போராட்டம்". (உதயன், 16.12.15). (செய்திகளிற்கு நன்றி, தோழர் பாலனின் முகப்புத்தகக் குறிப்புகள்)

அண்ணே, அரண்மனைத் தூணில் சிவாஜியை கட்டிப் போட்டது போல இலங்கைப் பாராளுமன்ற தூணில் உங்களை கட்டிப் போட்டிருக்க, கண்ணாம்பாவில் இடத்தில் அய்யா சம்பந்தன் நின்று கொண்டு "பொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா" என்றதும் நீங்கள் மேலே இருக்கும் முழக்கங்களை கஸ்டப்பட்டு ஞாபகம் வைச்சு பொறி பறக்க உறுமிக் கொண்டு எதிரிகளை பந்தாடுவதை நினைச்சுப் பார்க்கவே புல்லரிக்குதண்ணே!. ஆனா ஒரே ஒரு இடத்திலே மட்டும் இடிக்குது அண்ணே. "மனோகராவில் சிவாஜிக்கு வசந்தசேனை என்று ஒரு வில்லி இருந்தா, ஆனா நீங்கள் யாரை எதிர்த்து வசனம் பேசுவீங்கள்? எவனிற்கு எதிராக போராடுவீர்கள்?

17.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் முடிந்த போரில் எம் தமிழ் மக்களை படுகொலை செய்த இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை ஆறுமாதத்தில் 26.01.2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. தமிழ்மக்களை படுகொலை செய்த இராணுவத்தளபதியே உங்களது எதிரி இல்லை.

டேவிட் கமரோன் யாழ்ப்பாணம் வந்த போது உங்களது கூட்டமைப்புக்காரர்கள் யாழ்ப்பாண நூலகத்தில் பயபக்தியோடு கைகட்டிக் கொண்டு சந்தித்தீர்கள். அந்த யாழ்ப்பாண நூலகத்தை ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக்கட்சி தான் எரித்தது. எழுபத்தேழில், எண்பத்து மூன்றில் என்று தமிழ்மக்களிற்கு எதிரான இனக்கலவரங்களை ஐக்கிய தேசியக்கட்சி அரசுகள் தான் திட்டமிட்டு நடத்தின. இனக்கலவரங்களில் தமிழ் மக்களைக் கொன்ற ஐக்கிய தேசியக்கட்சியையும், அதன் இன்றைய தலைவரான ரணில் விக்கிரமசிங்காவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது. அப்ப அவர்களும் உங்களது எதிரிகள் இல்லை.

இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சாவின் அரசில் கடைசி வரை மந்திரியாக இருந்த மைத்திரி சிறிசேனாவும் அவரது சுதந்திரக்கட்சியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது. "சிங்களம் மட்டும்" என்ற இனவாத சட்டம் தொடங்கி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை தமிழ்மக்களை ஒடுக்கிய சுதந்திரக் கட்சியும் உங்களது எதிரிகள் இல்லை.

அண்ணே, இதிலே இருந்து ஒன்றை நான் கண்டுபிடிச்சேன். அதாவது தமிழ் மக்களிற்கு இலங்கை இராணுவம் எதிரி; ஐக்கிய தேசியக் கட்சி எதிரி; சுதந்திரக் கட்சி எதிரி. இவர்கள் உங்கள் கூட்டாளிகள். தமிழ்மக்களின் எதிரிகளின் கூட்டாளிகள் தமிழ்மக்களிற்கு எதிரிகளாக மட்டுமே இருக்க முடியும். அப்ப நீங்கள் தமிழ் மக்களின் எதிரிகள். உங்களது அரசியல் தமிழ் மக்களிற்கு எதிரானது என்பது எப்பவோ தெரிந்த விடயம் தான், இனி இந்த "பொறுத்தது போதும்" மாதிரியான வசனங்களை நேரடியாகவே உங்களது நிரந்தர எதிரிகளான தமிழ்மக்களைப் பார்த்து பேசுங்கள். உங்களது நண்பர்களான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் எதிராகப் பேசி உங்களது நடிப்புத் திறமையை வீணாக்க வேண்டாம்.