Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நவ தாராளமய கொள்ளைக்கு பலியாகும் சமூகமும் சூழலும்

2011 நவம்பர் 16ம் திகதி கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் செயல் திட்டமொன்று வெளியிடப்பட்டது. 2000மாம் ஆண்டு இலக்கம் 49 நகர மற்றும் கிராம நிர்மாணம்( திருத்தம்) சட்டமூலத்தின் 3(1) உறுப்புரைக்கு ஏற்ப ஜனாதிபதியால் 2011 ஜனவரி 13ம் திகதி நியமிக்கப்பட்ட தேசிய இயற்பியல் நிர்மாண சபையின் மூலம் 2011 மற்றும் 2030க்கிடையிலான 20 வருடகாலத்துக்குமாக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் 'தேசிய இயற்பியல் வரைவு" (National Physical Plan) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வரைவு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கத்திற்கு ஏற்ப, இலங்கையின் பூகோள அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அதனை பஞ்ச மகா சக்திகளின் கேந்திரஸ்தானமாக்குவதேயாகும்.

2010 ஆண்டு வெளியிடப்பட்ட 'மஹிந்த சிந்தனை முன்னோக்கு" என்ற அறிக்கையில் முதன் முதலாக இந்த 'பஞ்ச மகா சக்தி" குறித்த கோட்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப இலங்கையில் ஆசியாவின் மத்திய நிலையமொன்றும், கடல்சார் மத்தியநிலையமொன்றும், வான்சார் நிலையமொன்றும், மின்வலு மத்திய நிலையமொன்றும், வர்த்தக மத்திய நிலையமொன்றும், கல்வி மத்திய நிலையமொன்றும் அமைக்கப்படவிருக்கின்றது. இதன் மூலமாக பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார துறைகளுக்குள் நவ தாராளமய மறுசீரமைப்பை மேற்கொண்டு, அதனை பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாக மாற்றுவதோடு, விவசாயம் மற்றும் கைத்தொழில்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவிடும். கல்வி, சுகாதார சேவை, போக்குவரத்து போன்றவை தனியார்மயப்படுத்தப்பட்டு அதன் சுமை குடிமக்கள் மீது சுமத்தப்படும்.

ஒட்டுமொத்த சமூகமும், ஒட்டுமொத்த கலாச்சாரமும் அதற்காக மீளமைக்கப்படும். மேற்படி நவ தாராளமய திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்தான் "தேசிய இயற்பியல் வரைவு" என்பது. முந்தைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் 'மீண்டும் எழுச்சி பெறும் இலங்கை" என்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததும் இந்த வரைவுதான். .

உத்தேச குடிப் பரம்பல்:

தேசிய இயற்பியல் வரைவின் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார பின்விளைவுகள் சம்பந்தமாக உரையாடுவது பாரதூரமான விடயமாகும். சூழல் மீதான அழுத்தம், சமூக மற்றும் கலாச்சார மட்டத்திலான அழுத்தம் குறித்து சுருக்கமான திறனாய்வொன்றை மேற்கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும், அதற்காக வேண்டி இந்த தேசிய இயற்பியல் வரைவில் உள்ள சில முக்கிய திட்டங்கள குறித்து கருத்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த வரைவின் பிரதான இலக்காக இருப்பது, நவ தாராளமயத்தின் முதலாவது கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதேயாகும்.

1. 2005 ஜுலை 4ம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட 36 நாடுகளோடு ஒப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப, இலங்கையில் அதிவேக பாதை தொகுதிகளை அமைத்து அவற்றை ஆசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்போடு 2016 ல் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தற்போது அமைக்கப்பட்டு வரும் கட்டுநாயக - காலி அதிவேக நெடுஞ்சாலைக்கு மேலதிகமாக மாத்தறை- ஹம்பாந்தோட்டை, கொழும்பு -கண்டி, மன்னார் - ஹம்பாந்தோட்டை, ஹம்பாந்தோட்டை - அம்பாறை ஆகிய பிரதேசங்களுக்கிடையிலும் அதிவேக நெடுஞ்சாலைகளும் அமைக்க உத்தேசிக்கபட்டுள்ளது. இந்த அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்படுவதோடு, இறுதியாக மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை செல்லக் கூடிய அதிவேக நெடுஞ்சாலை வழியாக ஆசியாவின் அதிவேக நெடுஞ்சாலையோடு இணைக்கப்படும்.

அதிநகர்ப்புற வலயம் உள்ளடங்கிய நிலம் உத்தேச மக்கள் தொகையில், மேல் மாகாண நகர வலயம் கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும், களுத்துறை வரையும், 35 இலட்சம். தெற்கு நகர வலயம் காலியிலிருந்து மாத்தறை வரையும், மற்றும் அம்பாந்தோட்டை, தனமல்வில அண்டிய பிரசேங்கள் வரை 10 இலட்சம். மற்றும் கிழக்கு நகர வலயம் அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு வரை 10 இலட்சமுமாக மற்றும் வடமத்திய நகர வலயம் திருகோணமலை,பொலன்னறுவை அனுராதபுரம், மற்றும் தம்புள்ள வரை 40 லட்சம். யாழ்ப்பானம் நகர வலயம் மன்னார் மற்றும், கிளிநொச்சியிலிருந்து பருத்தித்துறை வரை 10 இலட்சம் தேசிய இயற்பியல் வரைவின் கீழ் அதி நகர்ப்புற சனத்தொகையாக வலயமாக கணிப்பிடப்பட்டுள்ளது

2. கட்டுநாயகா விமான நிலையம் விரிவாக்கப்படுவதோடு, தற்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மத்தள விமான நிலையத்தைத் தவிர ஹிங்குரக்கொடவில் சர்வதேச விமான நிலையமொன்றும், கண்டி, நூரளை மற்றும் தம்புள்ளயில் புதிய விமான நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. பலாலி, திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாறை, வவுனியா, அனுராதபுரம், காலி, ரத்மலான ஆகிய விமான நிலையங்கள் புணரமைக்கப்படும். இதற்கேற்ப, 2030
ஆகும்போது இலங்கையில் 19 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

3. இலங்கையில் 5 அதி நகர்புற வலயங்களை குறிப்பிட்டு, வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்காக அவை திறந்து விடப்படடும். இந்தப் பிரதேசங்களில் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் குடியேற்றப்பட்டு அங்கு மக்கள் கலந்து வாழ்வதில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

கொழும்பு நகரில் வாழும் குறைந்த வருமானமுடைய மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நடுத்தர வர்க்கத்தினரின் விகிதாரத்தை அதிகரிப்பதன் ஊடாக அங்கு வர்க்கக் கலவை மாற்றப்படும்.
மேற் குறித்த அதிநகர்புற பிரதேசங்கள் இவ்வாறு அமையும்.

4. சிலாபத்திலிருந்து வடக்கு மற்றும் தெற்கிற்கு அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசங்களும், பிபிலை, நில்கல போன்ற சூழல் பாதுகாப்பு வலயங்களும், சிறப்பு உல்லாசப் பிரயாண வலயங்களாக பெயரிடப்படும். இவை கடற்கரையை அண்டிய உல்லாச பயணத்திற்கான நிலம், தொல்லியல் உல்லாச பிரயாண நிலம் மற்றும் சூழல் சார்ந்த உல்லாச பயண
நிலம் என வகைப்படுத்தப்படும். இந்தப் பிரதேசங்களில் ஹோட்டல்கள் அமைத்தல் மற்றும் சிறப்பு உல்லாச பயண வசதிகளுக்காக தற்போதைய சட்டங்களில மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

5. மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நீர் மின் உலை, அனல் மின் உலை மற்றும் அணு மின் உலைகள் அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

6. லாகுகல, யால, உடவலவை தேசிய வனப் பூங்கா ஊடாக மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை Fiber Optics தகவல் தொடர்பு வலையமைப்பொன்று நிறுவப்படும்.

7. நிலக் கடலை, பாம் ஒயில், பழம், மரக்கறி மற்றும் வர்த்தக மர வகைகள் பயிரிடுவதற்காக அனுராதபுரம் மற்றும் மொணராகல மாவட்டங்களிலும், வட மாகாணத்தின் மொத்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலமும் ' சிறப்பு விவசாய வலயம்" என பெயரிடப்படும்.

ஆசியாவின் உத்தேச அதிவேக நெடுஞ்சாலை மற்றும் புகையிரத பாதை

8. தற்போதைய மாவத்தகம, பொல்கஹவெல, மீரிகம, கட்டுநாயக, பியகம, ஹொரண, சீத்தாவக, கொக்கல, மிரிஜ்ஜவெல, வதுபிட்டிவல, மல்வத்தை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களை ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களாக விரிவாக்கப்படுவதோடு, முல்லைத்தீவு, மாங்குளம், மன்னார், கப்பல்துறை, தம்புள்ளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகியன பிரதேசங்களில் புதிய ஏற்றுமதி தயாரிப்பு வலயங்கள் நிறுவப்படும்.

இந்த வரைவில் அடங்கியுள்ள புதிய அதி வேக நெடுஞ்சாலைகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு நிலங்கள் ஊடாகவே அமைக்கப்படுகின்றன. உதாரணமாக, உலக உரிமையாக பெயரிடப்பட்டுள்ளதும், மிகத் தொண்மையான காடாக அறியப்பட்டுள்ளதுமான சிங்கராஜ வனம் இரண்டு முறை இரண்டாக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கேபில்கள் அமைக்கும் நடவடிக்கைகள் காரணமாக இரண்டாகப் பிரிக்கப்படும். முழு காட்டின் பரப்பளவில் 39வீதமாகும். அதே போன்று அதி நாகரிக பிரதேசங்கள் அமைத்தல், சிறப்பு உல்லாசப் பிரயாண வலயங்களை அமைத்தல் போன்றவற்றின் ஊடாக பாரிய காடழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. பிபிலை நில் கல பகுதி இயற்கை சூழல் பாதுகாப்பு உல்லாசப் பயண வலயமாக பெயரிடப்பட்டு, அங்கு ஹோட்டல்கள் அமைப்பதற்கு அனுமதியளித்திருக்கின்றமை பாரதூரமான சூழல் அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள், தொலைதொடர்பு கேபில் அமைத்தல், மற்றும் உல்லாசப் பயணத்துக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் போன்றவற்றின் காரணமாக அழிவுகள் ஏற்படக்கூடியதும், சூழல் ரீதியில் முக்கியத்துவமிக்க இடங்களாகவும் உள்ள உடவளவை தேசிய வனப்பூங்கா, வெடஹிர மலை, லுனுகம்வெஹெர, பாந்துநாகல, வீரவில, நிமலவ,புன்தல, உஸ்ஸசன்கொட, கதிர்காமம், கட்டகமுவ, ருஹ{னு யால, சாகம, புத்தங்கள, உல்பஸ்ஸ, எகொடயாய, மஹகனதராவ, அனுராதபுரம், மிஹிந்தலை, ரிடிகல, கஹகல்ல, பல்லெகலை, சீகிரிய, மின்னேரிய, கிரிதலே, எலஹெர, பகமூன, கவுடுல்ல, சோமாவதிய ஹெவல் ஹெடவர்க், சுண்டிக்குளம், வில்பத்து, யோதவௌ, செங்கலடி, மதடு காப்பு பகுதி, முதுராஜவலை, கலமெட்டிய, பெரியகச்சி, பிபில, நில்கல, ஆகிய பகுதிகள் இருக்கின்றன.

இவற்றில் சில இயற்கை வனப் பாதுகாப்புகளாக இருப்பதோடு, மேலும் சில இயற்கை சரணாலயங்களாகும். 1983 ஆகும்போது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 27 வீதமாக காணப்பட்ட காடுகள் 2011 ஆகும்போது 18.8 வீதமாக குறைந்து காணப்பட்டது. இயற்பியல் வரைவு செயற்படும் பட்சத்தில், 2030 ஆகும்போது, இலங்கையின் வனப் பிரதேசம் 13.0 வீதமாக குறைந்து விடும். தொண்மையான காடுகளை அழிப்பதில் உலகின் 4வது இடத்தில் இருக்கும் இலங்கை, இந்த வரைவிற்கு ஏற்ப, இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு முன்னேறக் கூடும்.

காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக நிலத்திற்கு அடியிலான நீர் குறைந்து வருவதோடு, இலங்கையிலிருக்கும் 103 நதிகளில் பெரும்பாலானவை நீர் வற்றிய ஆறுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தற்போதைய திட்டங்களுக்கு ஏற்ப, நீர்பற்றாக் குறையை உருவாக்கி நீரை விற்பனைப் பொருளாக ஆக்குவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் தண்ணீர் உரிமை பறிக்கப்படக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது. உலகிலேயே உயிரியல் பன்முகத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேருகிறது, இலங்கைக்கு மாத்திரம் இயற்கையாகவே உரித்தான சிறப்பு தாவர வகைகள் 89ம், விஷேட விலங்கினங்கள் 330ம் உள்ளன.

இலங்கையில் மாத்திரம் 125 விஷேட ஊர்வனங்கள் காணப்படுவதோடு, சிறப்பு கலப்பினங்கள் 96வீதமுமாகும். சூழல் அழிப்போடு, இந்த மதிப்புவாய்ந்த உயிரினங்களும் அழிந்து விடும்.

காடுகள் அழிக்கப்படுவதனால் உருவாகும் அடுத்த பிரச்சினை என்னவென்றால், யானை மற்றும் மனிதர்களுக்கிடையிலான மோதல். யானைகளின் எண்ணிக்கை குறையக் கூடிய நிலை உருவாகக் கூடும். 2008ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட '"தேசிய யானைகைள் முகாமைத்துவ கொள்கை" மூலம் காடுகள் அழிக்கப்படுவதால், இடம் பெயரும் யானைகள் 50 வர்க்க கிலோ மீட்டர் விஸ்தீரணமுள்ள சிறிய காடுகளுக்கு அடைக்கப்பட்டு விடும். அதன் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியே வரும் யானைகள் "வெறிபிடித்த யானைகள்" என அடையாளப்படுத்தப்பட்டு, தனியாருக்கு கொடுப்பதற்காக சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இயற்பியல் வரைவு நடைமுறை படுத்தப்படும் கையோடு இந்த நிலை மேலும் மோசமடையும்.

மறுபுறம், அரசாங்கம் தனது வரைவின் மூலம் விவசாயிகளுக்கு காணி வழங்கப் போவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கே காணி வழங்கப்படும். நாட்டின் பல பிரதேசங்கள் "வர்த்தக விவசாய வலயங்களாக" பெயரிடப்பட்டுள்ளதோடு, அவற்றில் மரக்கறி, பழ வகைகள், நிலக்கடலை, பாம் ஒயில், மற்றும் வர்த்தகத்திற்கான மரங்கள் நடல், போன்றவற்றிற்காக பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். வட மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. "வர்த்தக விவசாய வலயம்" அமைக்கப்படுவதன் மூலம், விவசாய தொழிற்றுறை அழிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் விவசாயிகள் நிறுவனங்களில் அடிமைகளாக வேலை செய்ய நேரிடும், இவ்வாறு நிறுவனங்களுக்கு
நிலம் வழங்குவதனால் மேலும் பல பாதிப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்த நிறுவனங்கள் இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்படுவதனால், மனித உயிர்களைப் பற்றியோ, சூழல் அழிவைப்பற்றியோ கவலைப்படாமல், விவசாய இரசாயனத்தை அதிகளவில் பயன்படுத்தும். அதன் காரணமாக நிலத்திற்கடியிலான நீர், மண், மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படும். தற்போது "டோல்" மற்றும் "சீ.ஐ.சீ" நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 65,000 ஏக்கர் நிலத்தில் நடந்திருக்கும் அழிவுகளைப் பார்க்கும்போது இதனை அறிந்து கொள்ள முடியும். தற்போது பாரிய பிரச்சினையாக காணப்படும் சிறுநீரக செயலிழப்பு நோய் போன்றவை மேலும் அதிகரிக்கக் கூடும். வர்த்தக விவசாய வலயங்கள் மூலம், பாரிய சூழல் அழிவுகளும், சமூக ரீதியிலான சீரழிவுகளும் ஏற்பட்டு நிறுவனங்களின் இலாபம் மேலும், மேலும் உயர்ந்து செல்லும். மறு பக்கத்தில் இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் நீளம் 11,697 கிலோ மீட்டர்களாகும். அவற்றை அமைப்பதற்காக 280.7 மில்லியன் கன மீட்டர் மண் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு பெருமளவில் மலைகள் வெட்டப்படவிருப்பதோடு, அந்த மண் நெடுஞ்சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும். இதனால், மண்ணின் சமநிலை சிதைவதோடு, பூகோள மாற்றத்தினால் வடிகால் முறைகளில் கூட மாற்றம் ஏற்படும். இது வறட்சி, வெள்ளம், மண்சரிவு போன்ற இடர்களுக்குகாரணமாக இருக்கும்.

இலங்கையின் மக்கள் பரம்பல் முறையை மாற்றியமைப்பதே இயற்பியல் வரைவின் நோக்கமாக இருக்கின்றது. அதன்படி மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களை நகர் புறங்களில் குடியேற்றி விட்டு, எஞ்சிய நிலங்கள் விடுவிக்கப்படும். இவ்வாறு நிலம் விடுவிக்கப்படுவது உல்லாசப் பயணத்துறைக்கு அல்லது பல்தேசிய நிறுவனங்களுக்கு நிலம் வழங்குவதற்காகவேயாகும். இதில் கேலிக்குறிய விடயம் என்னவென்றால், முன்வைக்கப்பட்டிருக்கும் விளக்கங்களும், வாதங்களும் தான். மக்களை தமது இருப்பிடங்களிலிருந்து அகற்றிவிட்டு, இந்த திட்டத்திற்கு ஏற்ப மீள் குடியேற்றம் செய்வதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு விடயம் என்னவென்றால், "அனுமதியற்ற குடியிருப்பாளர்கள்" என்பதுதான்.

இவ்வாறு "அனுமதியற்ற" லேபலை ஒட்டி லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் நகரங்களிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதிலுள்ள பாரதூரமான விடயம் என்னவென்றால் கொழும்பு நகரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்விருப்பதோடு. கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும். ஒடுக்கப்பட்ட மக்களை நகரங்களிலிருந் விரட்டிவிட்டு, நவ நகரங்களில் மத்தியதர வர்க்கத்தினரை குடியெற்றி வேறுபட்ட மக்கள் கலந்து வாழும் இடங்களாக மாற்றுவதேயாகும்.

விஷேடமாக கொழும்பு போன்ற நகரங்கள் '"ஏழைகள் இல்லாத " நகரங்களாக மாற்றுவதோடு, ஏழ்மையை ஒழித்துக் கட்டுவதற்குப் பதிலாக ஏழைகள் நகரங்களிலிருந்து விரட்டப்படுவார்கள். இதற்காக முன்வைக்கப்பட்டிருக்கு மற்றைய வாதம், "இடர் முகாமைத்துவமாகும்" இந்த நகைப்பிற்கிடமான வாதத்திற்கேற்ப, கடற்கரையை அண்டிய நிலப்பகுதி சுனாமி ஆபத்து ஏற்படக்கூடிய பிரதேசமாகும். மலைப் பிரதேசங்கள் மண்சரிவு அபாயம் இருப்பதனால் மக்கள் வசிப்பதற்கு உகந்த இடங்களல்ல. அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவர். உல்லாசப் பிரயாண வலயங்கள் அமைப்பதற்காக கடற்கரையை அண்டிய நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதற்கு இதனை ஒப்பிடலாம். இவ்வாறாக பல்வேறு நகைப்பிற்கிடமான காரணங்களை முன்வைத்து மக்கள் தற்போது வாழ்ந்து வரும் பிரதேசங்களிலிருந்து அவர்களை வெளியேற்றுவதன் ஊடாகவும் அதி நகர்புற பிரதேசங்களை அமைப்பதன் ஊடாகவும் சமூகத்தில் எப்படியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கவனித்துப்
பார்க்க வேண்டும்.

இதன் மூலம் இலங்கை மக்களினதும், மதங்களினதும் வியாபித்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, வர்க்கங்களின் வியாபித்தல் முறையில் மாற்றம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பது தெரிகிறது. அது ஒரு விதத்தில், வலுக்கட்டாயமாக கலப்பதற்கான திட்டமாகவும், மறுபக்கத்தில், அனைத்து வசதிகளையும் கொண்ட மத்திய தர வர்க்கத்தினர் வசிக்கும் பிரதேசங்கள் மற்றும் எவ்வித வசதிகளும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களாகவும் குடியிருப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டமும் இதில் அடங்கியுள்ளது. இலங்கையில் நவ தாராளமய முதலாளிய மறுசீரமைப்பிற்குத் தேவையான சமூக பின்புலத்தை உருவாக்குவதோடு, அதனால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை.

இதன் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் கோட்பாட்டு ரீதியிலான அழுத்தத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் நாளொன்றிற்கு ஆகக் குறைந்தது இரண்டு விமானப் பயணங்களையாவது மேற்கொள்ள முடியாதுள்ள மத்தள சர்வதேச விமான நிலையமும், எப்போதாவது ஒரு முறை வரும் அரசாங்கத்தின் கப்பலைத் தவிர, இரண்டு வருடங்களாக பாழடைந்து காணப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகமும் பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த திட்டங்களாகும்.

ஆனால், அவை "ஆசியாவின் ஆச்சரியம்" குறித்து சைகை காட்டி சமூகத்திற்கு கண்ணோட்ட ரீதியிலான பாரிய அழுத்தத்தைக் கொடுத்தது. இது நவ தாராளமயத்தின் முதலாம் கட்டத்தில் துரித மகாவலி திட்டம் உள்ளிட்ட மின்வலு திட்டங்கள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றின் ஊடாக ஏற்படுத்திய கண்ணோட்ட வற்புறுத்தலோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆகக் குறைந்தது மக்களின் வாழ்க்கை தரத்தை ஒரு அங்குலத்திலாவது உயர்த்த முடியாத இலங்கை போன்ற பின்தங்கிய முதலாளித்துவத்திற்கு, இவ்வாறான மாயாஜாலங்கள் மூலம் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த மாயாஜாலத்தின் ஊடாக தமது வர்க்க ஆதிக்கத்தையும் அரச அதிகாரத்தையும் நிலைபெறச் செய்ய முடியுமாயிருந்தால், சமூகம் என்ற வகையிலும், சூழல் ரீதியிலும் எப்படியான அழிவுகள் ஏற்பட்டாலும் ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை.

அரசாங்கத்தின் 20 வருட திட்டத்தினால் ஏற்படக்கூடிய அழிவுகள் குறித்து இவ்வாறான சிறிய ஆக்கத்தின் மூலம் விளக்கமளிப்பது முடியாத காரியம். சில துறைகள் விடயத்தில் மாத்திரம் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. எப்படியிருந்தாலும், இந்த அனைத்திலிருந்தும் ஒரு விடயம் மாத்திரம் தெட்டத் தெளிவாகிறது. நவ தாராளமயத்தின் இரண்டாம் கட்டம் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. சில அரசியல் ஆய்வாளர்கள் "நவ தாராளமய மிலேச்சத்தனம்" என குறிப்பிட்ட செயற்பாட்டை நேரடியாக அனுபவிக்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இப்போது இடதுசாரி இயக்கத்தின் முன்னிருக்கும் சவாலாக இருப்பது, ஆசியாவின் போலி ஆச்சரிய கனவில் மூழ்கடித்திருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் சவாலேயாகும். அரசாங்கத்தின் போலி ஏகாதிபத்திய எதிர்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் ஏகாதிபத்திய மூலதனத்தின் தேவைகளை இணங்காட்டுவது மற்றும் அந்த அறிவை சமூகமயப்படுத்துவதும் இன்னொரு சவாலாகும்.