Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

விஞ்ஞானம் என்றால் என்ன?, எங்கிருந்து தோன்றுகிறது?: மார்க்சிய கல்வி -05

"மனித உழைப்பும், உழைப்பு சார்ந்த மனிதர்களின் கூட்டுவாழ்வும் தான் விஞ்ஞானத்தின் ஆதாரம். இன்று அப்படித்தான். உழைப்பிற்கான பொது உடமையின்றி தனிமைப்பட்டுப் போன விஞ்ஞானமும், ஆய்வுகூடத்தில் கண்டறியும் நுட்பக் கருவி சார்ந்த அறிவும் கூட, கூட்டு உழைப்பில் மட்டும் தான் மனிதனின் தேவைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த முடியும்."

உழைத்து வாழும் ஒவ்வொருமனிதனும் உழைப்பைச் செலுத்தும் போது, உழைப்புக்கு உள்ளாக்கும் பொருட்கள் பற்றிய அறிவைக் கொண்டிருக்கின்றான். இந்த அறிவு தான் விஞ்ஞானம். இந்த உழைப்புத் தான் விஞ்ஞானத்தின் மூலம். இரண்டையும் ஒன்றிலிருந்து வேறொன்றாகப் பிரிக்க முடியாது. உழைப்பும் அறிவும் இணைந்தது தான் விஞ்ஞானமாகவும், மனித வாழ்வுக்கான அடிப்படையாகவும் இருக்கின்றது.

'விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது" என்றார் கார்ல் மார்க்ஸ். இந்த அழியா ஒளியை மனிதர்கள் தமக்குள் கொண்டிருப்பதை அறியா வண்ணம், அறியாமைக்குள் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது இன்றைய தனிவுடைமைச் சமூக அமைப்பு. உழைத்து வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும், ஒரு விஞ்ஞானிதான். இதை அறியாது வைத்திருப்பதன் மூலம், அறியாமையைத் திணித்து தனிமனித அறிவை விஞ்ஞானமாக்குகின்ற தனிவுடமை அமைப்பு இது. சமூகத்திற்கு பொருள் பற்றி இருக்கும் பொது அறிவுக்கும், தனிமனிதனுக்கு பொருள் பற்றி இருக்கின்ற கூர்மையான வேறுபட்ட அறிவுக்கும் இடையிலான முரண்பாடும், வளர்ச்சியும் தான் புதிய அறிவாகின்றது.

இந்த முரண்பாட்டையும், அறிவையும் முன்னிறுத்துகின்ற தனிவுடமை, பொது அறிவை நிராகரித்து அதை அறியாமையாக மாற்றி விடுகின்றது. முரண்பாடும், வளர்ச்சியும் அது சார்ந்த அறிவும், எல்லா மனிதரிடையேயும் காணப்படுகின்றது. ஆனால் மூலதனத்தை விரிவாக்கும் சந்தையைச் சாராத போது, அறிவு மலடாக்கப்படுகின்றது. சந்தை சார்ந்ததையும், சந்தையை நோக்கியதையும் விஞ்ஞானமாக காட்டுகின்ற தனிவுடமை அமைப்பானது, அது அல்லாத அனைத்தையும் அறியாமையின் கூறாக்குகின்றது. சந்தை சார்ந்த அறிவை முன்னிறுத்தி அதை நுகர்வு வெறியாக்கி அதை மனிதனின் பொது அறிவாக்குகின்றது. நுகர்வும், நுகர்வு வெறியும் அறிவு சார்ந்த விஞ்ஞானமல்ல. இது அறியாமை. உழைப்பு சார்ந்த அறிவும், உழைப்பும் தான் விஞ்ஞானம். இது தான் அழியா ஒளி.

நாம் சமூக விஞ்ஞானம் என்றால், சமூகத்துக்கும் விஞ்ஞானத்துக்குமான மனித உறவும் முரணும் கொண்ட மனித வாழ்வு சார்ந்த கூறு என்பதைப் பார்த்தோம். இந்த வகையில் விஞ்ஞானம் என்றால் என்ன என்று பார்ப்போம். மனித உழைப்பைக் கொண்டு தனக்கு தேவையான பயன்பாட்டு பொருளாக இயற்கையை மாற்றி அமைக்கும் பொருள் பற்றிய அறிவே விஞ்ஞானம். இதனால் தான்மார்க்ஸ் 'உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம்" என்றார். மனித உழைப்புக்கு வெளியில், இயற்கை மட்டும் தான் உண்டு. இயற்கையை புரிந்து கொள்ளாத வரை, அவன் குரங்கு தான்.

மனித உழைப்புக்கு வெளியில் எந்த மனிதக் கூறும் கிடையாது. அது மிருகத் தன்மையாகும். அனைத்தும் மனித உழைப்பு சார்ந்தது. மனித உழைப்பை பொருள் மீது செலுத்தும் போது, மனிதனுக்குள்ள அறிவு தான் விஞ்ஞானம். உழைப்புக்கு வெளியில் விஞ்ஞானம் என்பது கற்பிதமானது. அதாவது உழைப்புக்கு வெளியில் அறிவு இருக்கவும் முடியாது, இயங்கவும் முடியாது.

உழைப்பில் இருந்து தன்னை பிரித்து தனித்து இயங்கும் அறிவு சார்ந்த விஞ்ஞானம், உண்மையில் உழைப்பைச் சுரண்டுகின்ற அறிவு சார்ந்த தனிவுடைமைச் சுரண்டலாகும். இது உழைக்கின்ற அனைத்து மனிதனும், உழைப்பு சார்ந்து விஞ்ஞானியாக இருக்கின்றான் என்ற உண்மையை மறுக்கின்றது. மனித உழைப்புக்கும், அது சார்ந்த வாழ்வுக்கும் வெளியில் அறிவு சார்ந்த விஞ்ஞானம் கிடையாது. இருப்பதாக நம்புவதும், கூறுவதும், மனிதன் மீதான அறிவு சார்ந்த சுரண்டலாகும். இது தனிவுடமை சார்ந்த கூறு. மனித சமுதாயத்தை மையப்படுத்தாத, சாராத எதுவும் உண்மையல்ல.

கார்ல் மார்க்ஸ் கூறியது போல், எதற்கும் 'மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை" மனிதனுக்கு மேல் எந்தப் பொருளுக்கும், எந்த அறிவுக்கும் எந்த பெறுமதியும் கிடையாது. அதற்கு கௌரவமும் கிடையாது. மனிதனை மனிதன் சுரண்டும் இன்றைய தனிவுடமை உலகில் எதிர்மறையாக இவை காட்டப்பட்டு சிந்திக்கப்படுவதே அறிவாகவும், விஞ்ஞானமாகவும் திணிக்கப்படுகின்றது. இது மனிதனை மனிதனாக மதிக்காது, அவனை கௌரவமற்றவனாக்கி தனிவுடமைக்கு அடிமையாக்குகின்றது. இதில் இருந்துதான் பண்பாடுகள் உருவாகின்றது. இந்த பண்பாடு மனிதனை அடிமையாக்குகின்றது. இதனால் தான் மார்க்ஸ் 'தலை வணங்குவதையும் கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன்" என்றார்.

மனிதனை மனிதனாக பரஸ்பரம் கெளரவிக்காத தனிவுடமை அமைப்பு தான், தன்னை தலை வணங்குமாறும் தன்னிடம் கெஞ்சுமாறும் கோருகின்றது. மனிதன் சமூகமாக கூடி உழைத்து வாழ்வதற்குப் பதில், உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் அடிமைத்தனத்தை மனிதன் மீது திணிக்கின்றது. மனிதன் உழைப்பில் இருந்து அன்னியமாகி, உழைப்புக்கும், தன் உழைப்பு சார்ந்த பொருளுக்கும் அடிமையாகின்றான். அதாவது தன் உழைப்புக்கும், தன் உழைப்பிலான பொருளுக்கும் எஜமானாக இருக்க வேண்டிய மனிதன், அதற்கு அடிமையாகின்றான். அடிமைத்தனத்தையே நுகர்வின் வரைமுறையற்ற வெறித்தனத்துக்குள் நுகர்ந்து வாழ்வதே மனித சுதந்திரமாகக் காட்டி அதை மனித அறிவாக்குகின்றனர்.

மனிதன் தனக்காக தான் உழைத்து வாழவில்லை. உயிர் வாழும் நிர்ப்பந்தம் காரணமாக, பிறருக்காக உழைப்பதன் மூலம் வாழ்கின்றான். மார்க்ஸ் கூறியது போல் 'ஒருவன் தனக்காக தன்னுடைய வாழ்க்கைக்காக உழைக்கும்போது தான் அசலான மனிதனாகிறான்" இதுவல்லாத மனிதன் போலிதான். தனிவுடைமையை அடிப்படையாக கொண்டு பிறருக்காக உழைக்கும் இன்றைய உலகில், மனிதன் மனிதனாக அதாவது அசலாக வாழவில்லை. போலியாக வாழ்கின்றான். பிறருக்காக உழைக்கின்ற போது, பிறர் சார்ந்து தான் தனக்கான வாழ்வை அமைக்கின்றான். இதனால் உழைப்பில் போலித்தனமும், செயற்கையான மனிதத்தன்மையும் மனித உறவாகின்றது. மனிதனின் தனக்காக தான் உழைத்து வாழும் பொது இயல்புக்கு முரணான, போலியான வாழ்க்கையையும் சமூகக் கட்டமைப்புக்களையும் கொண்டது தான் இன்றைய தனிவுடமைச் சமூக அமைப்பு முறையாகும்.

மனித இயல்பு இதற்கு நேர்மாறானது. மனிதன் தனக்காக தான் உழைத்து வாழும் அறிவைக் கொண்டு இருந்தான். அந்த உழைப்பை செலுத்தும் பொருட்கள் தனிவுடமையானதால், உழைப்பை மட்டும் கொண்ட மக்கள் சமூகமாகவும், தனிவுடமையைக் கொண்ட சிறிய சுரண்டல் அமைப்பாகவும் பிளவுபட்டுள்ளது. தனிவுடமையைக் கொண்டு உழைப்பில் இருந்து மனித அறிவைப் பிரித்ததன் மூலம், விஞ்ஞானம் தனிவுடமையானது. தனிவுடமையற்ற மனிதன், தன் உழைப்பை மட்டும் விற்கும் நிலைக்கு தாழ்த்தப்பட்டான்.

மனிதனின் உழைப்பு தான் விஞ்ஞானத்தின் ஆதாரம். தனிவுடமை அமைப்பில் உழைப்பும் விஞ்ஞானமும் பிரிந்து சுரண்டல் வடிவமாகி விடுகின்றது. இதற்கு நேர்மாறானதே மனித தோற்றம். எப்போது மனிதன் இயற்கையைச் சார்ந்து வாழாமல் உழைப்புச் சார்ந்து வாழத் தொடங்கினானோ, அப்போதே பொருள் பற்றிய அறிவும், மனிதனுடன் வளரத்தொடங்கியது.

தன் வாழ்வின் தேவையையொட்டி பொருளை இயற்கையில் தெரிந்து கொண்டிருந்த மனிதன், உழைப்பு மூலம் தனது தேவைக்கு அதை பயன்படுத்தத் தொடங்கிய அறிவு தான் விஞ்ஞானம். அன்று தடியை பயன்படுத்தியது முதல் இன்று தொடுதிரையை தொட்டு இயங்க வைக்கும் எந்த செயற்பாடாகவும் இருக்கட்டும், அவை அனைத்தும் மனித வாழ்வுக்கு அடிப்படையானவை. அறிவு வளர்ச்சி மனித வரலாற்றில் இருந்து விலகியதில்லை, அவை தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாதவை. மனிதன் இன்றைய அறிவு நிலையை வந்தடைய பல ஆயிரம் வருட அறிவு மட்டுமின்றி, அதன் தொடர்ச்சியும் இன்றி சாத்தியமற்றதாகும்.

மனித உழைப்பும், உழைப்பு சார்ந்த மனிதர்களின் கூட்டுவாழ்வும் தான் விஞ்ஞானத்தின் ஆதாரம். இன்று அப்படித்தான். உழைப்பிற்கான பொது உடமையின்றி தனிமைப்பட்டுப் போன விஞ்ஞானமும், ஆய்வுகூடத்தில் கண்டறியும் நுட்பக் கருவி சார்ந்த அறிவும் கூட, கூட்டு உழைப்பில் மட்டும் தான் மனிதனின் தேவைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த முடியும். தனிவுடமையாகி தனிமைப்பட்டு போன அறிவு கூட, மனிதனின் கூட்டு உழைப்பின்றி பயன்படுத்த முடியாது. ஆக தனிவுடமை அமைப்பில் கூட, உழைப்புக்கு வெளியில் எதுவும் கிடையாது.

தனிவுடமை அறிவு ஆயிரம் ஆயிரம் வருட மனித அறிவுக்கு வெளியில் இருந்து உருவாவதில்லை. மனிதன் உழைப்பை நிராகரித்தால், இயற்கையை மட்டும் சார்ந்து வாழும் மிருக நிலையைக் குறிக்கும். ஆக உழையாது வாழ்தல் என்பது, பண்பு ரீதியாக மிருகத்தனமாகும். மற்றவன் உழைப்பைச்சுரண்டி வாழ்வது உழைப்பல்ல, பண்புரீதியாக அது காட்டுமிராண்டித்தனமானது. உழைப்பும், கூட்டுவாழ்வும் தான் மனிதனுக்குரிய பண்புக் கூறாகும். மனித அறமாகும்.

மனிதன் இயற்கை சார்ந்து வாழ்ந்த காலத்தில், அவன் மனிதக் குரங்குக்கு முந்தைய குரங்காக இருந்தான். அதாவது குரங்கு நிலையில் குரங்கு மனிதனும், குரங்கு மனிதனில் இருந்து மனிதனுமாக பரிணமிக்க காரணமாக இருந்தது, பொருளை தனது வாழ்வுக்கு ஏற்ப பயன்படுத்திய உழைப்புத்தான். இயற்கையில் வாழ்வதற்கான போராட்டம், இயற்கையான பொருட்கள் மேலான மனித உழைப்பாக பரிணமிக்கின்றது. இயற்கையைக் கடந்து, இயற்கையைப் பயன்படுத்தி தன் தேவையைப் பூர்த்தி செய்த போதான உழைப்பும், அது சார்ந்த அறிவும் தான் விஞ்ஞானமானது.

தனிவுடமை அமைப்பில் கூட கூட்டு உழைப்புதான் மனித வாழ்வின் ஆதாரமாக இருக்கின்றது. இயற்கையில் வாழ்ந்த போதும், இயற்கை மீதான உழைப்புச் சார்ந்து வாழ்ந்த போதும், மனிதனின் கூட்டு உழைப்பு மனித வாழ்வுக்கு ஆதாரமாக இருந்தது. மனித அறிவும் கூட, கூட்டாக இருந்தது.

பாடவும், ஆடவும், உழைக்கவும், பொருளைக் கண்டறியவும். தன்னை தற்காக்கவும் மனிதனின் கூட்டு உழைப்பும் வாழ்வும் அவசியமானதாக இருந்தது. இயற்கையை சார்ந்து வாழ்வும், இயற்கையை ச் சார்ந்து உழைப்பு ஏற்படுத்திய பிளவு, அறிவு சார்ந்த பிளவாகியது. வாழ்விடம், சூழல், உழை ப்பின் வேறுபாடுகள் அறிவு சார்ந்த பிளவாகியது.

உழைப்புச்சார்ந்த அறிவு கூர்மையாகின்ற போது, அதுவே நுட்பமாகி மனிதனுக்கு அன்னியமாகியது. சமூகத்தில் இருந்தும் அறிவு தனிப்பிரிவாகின்றது. உழைப்பு பலவகையாக, தொடர்ந்து பிளவுற்றது. பொருள் பற்றி பகுப்பாய்வு நுட்பமாகிய போது, அறிவு மனிதர்களுக்கு எதிரான தனிப்பிரிவாகியது. பொருளை தனிவுடமையாக்கி உழை ப்பை பொருளில் இருந்து பிரித்த போது, பொருள் மீதான அறிவும் அன்னியமானது. படிப்படியாக உழைப்பு சார்ந்தும், உழைப்பு சாராத அறிவாகவும் பிளவுறுகின்றது. அதேநேரம் உழைப்பின் தனி வகை, பொருள் அல்லாத உழைப்பாக பிரிந்தது. உதாரணமாக கலைஞர்கள் (ஆடல், பாடல், நடனம்) தொடங்கி விஞ்ஞானிகள் வரையாக உழைப்பு சாராத ஒன்றாக வேறுபடத் தொடங்கியது.

பிரிவுகளும், பிளவுகளும் தனித்துறை சார்ந்த அறிவாக மக்களில் இருந்து பிரிகின்ற போது, மக்களில் இருந்து அறிவு அந்நியப்பட்டுவிடுகின்றது. பொருள் தனிவுடமையாகி அறிவு அன்னியமாக, பொருள் பற்றி அறிவு மேலும் நுட்பமாகி ஆய்வுகூட அறிவாக, அறிவு மனிதனில் இருந்து விலகி தனிமைப்பட்டு தனிவுடமையாகின்றது. அறிவை தங்கள் சுய அறிவாக, தங்கள் தனி உரிமையாக, உடமையாக மாற்றி விடுகின்றனர். மக்கள் பொருளை பயன்படுத்தும் போது, அப்பொருள் பற்றிய அறிவில் இருந்து அந்நியமாகி விடுகின்றனர். விளைவு பொருளுக்கு மனிதனை அடிமையாக்கி விடுகின்றது. இன்று தான் பயன்படுத்தும் பொருள் பற்றிய அறிவின்றிய மனித வாழ்வு, பொருளுக்கு அடிமையாக்கி விடுகின்றது. பொருள் பற்றிய அறிவை விடுத்து, பொருளைப் பூசிக்கின்ற அந்நியமாதல் அறிவாக மாறுகின்றது. மனிதர்களுக்கு இடையேயான கூட்டு வாழ்வு சார்ந்த உணர்வுகள் உறவுகளில் இருந்து தனிமைப்பட்ட ஒன்றாக, பொருளுக்கு கீழ்ப்பட்ட மனித உணர்வாக உறவாக மாறிவிடுகின்றது.

விஞ்ஞானம் தனிமனித கண்டுபிடிப்பாக, அவனின் உரிமையாக, மூலதனத்தின் சொத்தாக தனிவுடமை அமைப்பில் இருக்கின்றது. உதாரணமாக மஞ்சள், வேம்பு.. என மரங்கள் தொடங்கி மனிதனின் உடல் சார்ந்த மரபு கூறுகள் வரை மனிதனுக்கு சொந்தமில்லை. மனிதனின் பாரம்பரிய அறிவியல் உண்மைகள் அனைத்தையும் மனிதனில் இருந்து பிரி த்து எடுத்து, அவை அனைத்தும் மூலதனத் தின் உரிமையாக்கப்படுகின்றது. நுகர்வுக்குரிய மனித மிருகமாகவும், அதற்காக உழைக்குமாறும் மனிதன் மந்தையாக்கப்படுகின்றான்.

-தொடரும்

மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02

வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம்-03

மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04