Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது?

பெண்களைப் பாதுகாக்க ஆயுதங்களை (கத்தி, வாள், துப்பாக்கி..) வைத்திருப்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? அதற்காக வன்முறையில் ஈடுபடும் உரிமையை, இஸ்லாம் ஆண்களுக்கு வழங்குகின்றதா?. இதைத்தான் ஒரு இஸ்லாமிய அமைச்சர் கூறுகின்றார். மற்றொரு அமைச்சரோ, இஸ்லாத்தில் வன்முறையே இல்லை என்கின்றார்.

இஸ்லாத்தில் வன்முறை இல்லையென்று, ஒரு "முஸ்லிம்" அமைச்சர் கூறுகின்றார் எனின், இஸ்லாத்தின் வன்முறையை பாதுகாக்க முனைகின்றார் என்பதுதான் பொருள்;. "முஸ்லிம்" அமைச்சர்களாக தம்மை கூறிக்கொண்டு, இஸ்லாம் பற்றி கதைப்பதென்பது தங்கள் சொந்த மத அடிப்படைவாத முகமூடியை மறைக்க முடியாதபடி இருக்கும் நிலை. முதலில் நீங்கள் இனத்தின் பிரதிநிதியா அல்லது மதத்தின் பிரதிநிதியா என்பதை கூறுங்கள். நீங்கள் மதத்தின் பிரதிநிதியென்றால், முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்றீர்கள்; என்பதுதான் பொருள்.

மசூதியில் கத்திகளும் வாள்களும் இருப்பது பெண்களைப் பாதுகாக்கவே என்று, ஒரு "முஸ்லிம்" அமைச்சர் கூறுகின்றார். இப்படிக் கூறுவதன் மூலம் மத அடிப்படைவாதத்தின் பிரதிநிதிகளாக, தம்மைத்தாம் பிரகடனப்படுத்திக் கொள்வதே தொடருகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பின் எதுவெல்லாம் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றதோ, அப்படி இஸ்லாம் கூறவில்லை என்று கூறி, சமூகத்தை தொடர்ந்து தவறாக வழிநடத்த முனைகின்றனர்.

முதலில் முஸ்லிம் என்று அடையாளம் கொண்ட இஸ்லாமிய அமைச்சர்கள் கூறவேண்டும், எவை எல்லாம் இஸ்லாமில்லை என்பதை.

இஸ்லாத்தின் பெயரில் நீங்கள் அமைச்சராக இருப்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா!? கோடி கோடியாக அமைச்சுப் பதவியை பாவித்து செல்வத்தைக் குவித்த உங்கள் நடத்தையை இஸ்லாம் அனுமதிக்கின்றதா!? பொதுச் சொத்தை தனிச் சொத்தாக்க இஸ்லாம் அனுமதிக்கின்றதா? நாட்டை இஸ்லாமியத்தின் பெயரில் நவதாராளவாதமாக்கி விற்க அனுமதிக்கின்றதா? காட்டுமிராண்டித்தனமான நிலப்பிரபுத்துவ மன்னர் ஆட்சியைக் கொண்ட சவூதி அரபியா போன்று, காத்தான்குடியை மத வக்கிரங்களுக்கு உட்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? சரியாச் சட்டத்தை கொண்டு மக்களையும், குறிப்பாக பெண்களையும் ஒடுக்குவதை அனுமதிக்கின்றதா? இப்படி இவைகளை இஸ்லாம் அனுமதிக்கின்றது என்றால், இஸ்லாம் வன்முறையையும் - பயங்கரவாதத்தையும் அனுமதிக்கின்றது என்பது தான் உண்மை. அல்லாவின் பெயரால் எல்லா மனிதக் கேடுகளையும் செய்வதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.

நீங்கள் இதற்கெல்லாம் துணை நிற்கவில்லையா? நீங்கள் எல்லாம் அமைச்சரான பின் கோடிகோடியாக பணத்தை குவித்து வைத்திருக்கின்றீர்களே, எங்கிருந்து உங்களுக்கு பணம் வந்தது? இஸ்லாத்தின் பெயரில் இது எப்படிச் சாத்தியமானது? பயங்கரவாதச் செயல் போன்று, திடீர் செல்வங்கள் குவிந்தது எப்படி? அமைச்சர்கள், அவர்களின் குடும்பங்களின் பெயரிலும் செல்வம் குவிந்து கிடக்கின்றது. இது எப்படி சாத்தியம்? ஒரு சாதாரண மனிதனால் முடியுமா? இஸ்லாத்தின் பெயரில் மக்களின் உழைப்பை எல்லாம் சூறையாடி வாழும் நீங்கள் தான், இஸ்லாம் பற்றியும் கதைக்கின்றீர்கள். குண்டு வைத்தவனும் இஸ்லாத்தின் பெயரில் தான் செய்தான். எல்லாம் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

நீங்கள் இஸ்லாத்தின் பெயரில் கோரும், முன்வைக்கும் சரியாச் சட்டமே வன்முறையை தான் முன்வைக்கின்றது. இதை மறுப்பவர்கள் மீதே வன்முறை. இதை இறைச் சட்டம் என்கின்றீர்கள். இதுவே இஸ்லாமிய பயங்கரவாத வன்முறையின் ஊற்று மூலம். சரியாச் சட்டம், ஜனநாயகத்தையே மறுதளிக்கின்றது. நாட்டின் சிவில் சட்ட அமைப்பு முறையையே மறுதளிக்கின்;றது. இதன் மூலம் சொந்த மதச் சட்டத்தைக் கொண்டு, மக்களை ஒடுக்க முனைகின்றது. அதுவே வன்முறைதான். இந்த வன்முறை பயங்கரவாதக் கூறைக் கொண்டது.

மசூதியில் கத்திகளும் வாள்களும்.. (துப்பாக்கிகள்) இருப்பது பெண்களை பாதுகாக்கவே என்கின்றீர்களே, யாரிடம் இருந்து? அப்படி யார் தான் பெண்களை ஒடுக்குகின்றனர். பெண்களை ஒடுக்கி வைத்திருக்கும் இஸ்லாமிய ஆணாதிக்கமும், அதன் பிரதிநிதிகளான ஆண்களாகிய நீங்கள் தான், முஸ்லிம் பெண்களை ஒடுக்குகின்றீர்கள். பெண் சுதந்திரம் என்பதே, இஸ்லாத்துக்கு விரோதமானது. இதைத்தான் இஸ்லாத்தின் பெயரில் முன்வைக்கின்றனர்.

பெண் தன்னளவில் தன்னைப் பாதுகாக்கும் அளவுக்கு, ஆணைப் போன்ற உயிர். ஆண் தனது உடமையை பாதுகாப்பது போன்று பெண்ணை முன்னிறுத்திக் கூறுவது, பெண்ணை அடிமையாகக் கருதும் ஆணாதிக்க சிந்தனை முறைதான். பெண் பாதுகாப்புக்கு நாட்டில் பொதுச் சிவில் சட்டம் இருக்கின்றது, அந்த சிவில் சட்டத்தை பாதுகாக்கும் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர், சட்டத்துக்கு புறம்பாக தங்கள் "உடமையாக" கருதும் பெண்களை பாதுகாக்கவே, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தோம் என்பது தங்கள் சொந்த மதப் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவது தான்.

பெண்களை தங்கள் உடமை போன்று கருதும் ஆணும், மதமும், ஆண் சிந்தனைமுறையும், பெண்ணுக்கு எதிரான வன்முறையைக் கொண்டது. இதன் மூலம் பெண்களை தங்கள் அடிமையாகவும், தங்களை பெண்ணின் காவலராகவும் முன்னிறுத்தி நியாயப்படுத்தும் ஆணாதிக்க வன்முறை என்பது, பெண் மீதான பயங்கரவாதத்தின் ஒரு கூறுதான்.

பெண்கள் மேலான ஆணின் அதிகாரத்தையும், அதை பாதுகாக்க கத்தி - வாள் வைத்திருப்பதும், அதையும் மசூதியில் கொண்டு இருப்பதன் பொருள், இஸ்லாம் வன்முறையிலான வாழ்க்கை முறையை தன்னுள் கொண்டுள்ளது என்பது தான்.