Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையகத்தில் பொருளாதார ஒடுக்குமுறையும் அரசியல் பாதையும்

இலங்கை உற்பத்தியை மையமாகக் கொண்ட பெருளாதாரத்தைக் கொண்ட நாடல்ல. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் முறையே 11.1%, 30.4% வீத பங்கைக் கொண்டிருக்கும் அதேநேரம் சேவைத் துறையோ 58.5% பங்கைக் கொண்டிருக்கின்றது. இது சேவைத்துறை இலங்கையின் பொருளாதாரத்தின் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதோடு, உற்பத்தியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது. விவசாய உற்பத்தியில் ஏற்றுமதி பயிர்களான தேயிலையும் இறப்பரும் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 2 வீத பங்களிப்பினை வழங்குகின்றன. இதில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பங்கு, இன்று சிறு தோட்டங்கள் பெருகிவருகின்ற போதும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். சிறு தோட்டங்கள் வளர்ச்சியை காரணம் காட்டி பெருந்தோட்டங்களின் உற்பத்தி குறைந்துள்ளது என்ற வாதங்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. உண்மையில் பெருந்தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்தே வந்துள்ளது. பெருந்தோட்ட உற்பத்தியை அளவை சிறுருந்தோட்ட உற்பத்தி அளவுடன் ஒப்பிட்டு அதனை அடிப்படையாக கொண்டு பெருந்தோட்டங்களில் உற்பத்தி குறைந்துள்ளது என்பது பிழையான அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் வாதமாகும்.

பெருந்தோட்டங்களில் உற்பத்தி குறைந்து விட்டது என கூறும் சில மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத உள்நோக்கம் கொண்டு அக்கருத்தைக் கூறுபவர்களையும் விஞ்சி நிற்கின்றார்கள். உடல் உழைப்பை மையமாகக் கொண்டு உற்பத்தி இடம்பெறும் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைவாக மதிப்பிடுவது பொது விதியாக உள்ளது. எனினும் இத் தொழிலாளர்களின் உடல் உழைப்பினால் பெறப்படும் உற்பத்திக்கான பெறுமதி மிகவும் அதிகமாகும். பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் விசேட வகை தேயிலை 1 கிலோ கடந்த வருடம் 16 ஆயிரம் ரூபா விலைக்கு இலங்கையில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. எனவே உடல் உழைப்பை வழங்கும் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கூடிய சந்தை பெறுமதியும் வழங்கப்படுவது இன்றைய சந்தை பொருளாதாரத்தின் விதியாகியுள்ளது. இதனூடாக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உயர் சுரண்டலுக்கு ஆழாகும் நிலை காணப்படுகிறது.

இலங்கை சேவை துறையில் தங்கியுள்ள பொருளாதார முறையைக் கொண்ட நாடு என்ற வகையில் அதன் பொருளாதாரத்தை பராமரிக்க உற்பத்தித் துறையில் ஈடுபடும் தொழிலாளர்களை மிகையாக சுரண்டவேண்டிய தேவை காணப்படுகிறது. இத்தேவைக்கு அதிகம் பலியானவர்களும் இன்றும் பலியாகிவருபவர்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களே. சிலர் மலையகத்தில் இடம்பெறும் சுரண்டலை அதி சுரண்டல் (super exploitation) என வரையறுப்பதற்கு இந்நிலையே காரணம் எனலாம். இன்று முறைசாரா துறைகளில் அதிகளவில் பணிபுரியும் மலையக இளைஞர்களில் பலர் இதனிலும் கொடிய சுரண்டலுக்கு உட்பட்டு வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.

உற்பத்தியே பொருளாதாரத்தின் அடிநாதமான அம்சமாக இருக்கின்ற நிலையில், குறிப்பாக உடல் உழைப்பை வெளிப்படுத்தி நேரடியான உற்பத்தி நடவடிக்கை செய்யும் தொழிலாளர்கள், குறித்த உற்பத்தியில் தாம் பங்குபற்றுவதன் காரணமாகவே உரிமை இழந்து வாழ்கின்றோம் என்று சிந்திக்கும் நிலை காணப்படுகிறது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் தம் சந்ததி இந்த உற்பத்தி முறைத் தவிர்த்து வேறு எந்த உற்பத்திச் செயற்பாட்டிற்கு சென்றால் ஒருவித விடுதலையை பெற்றதாக நோக்குவதன் பின்னணி இதுவே. ஊடல் உழைப்பு மேற்கொள்ளும் அனைத்து மக்களினதும் எண்ணப்போக்கும் இதை ஒத்ததாகவே உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை மட்டுமன்றி உடல் உழைப்பில் வழங்கும் எல்லாத் தொழிலாளர்களையும் அதி சுரண்டலுக்கு உட்படுத்தும் பணியை மேற்கொள்ள சந்தைக்கு அரசு வழிவிட்டுள்ளது. மறுபுறம் அரசு தனது நேரடியான, மறைமுகமான வரிகள் மூலம் தனது வருமானத்தை அதிகரித்து தனது சேவைப் பொருளாதாரத்திற்கு தேவையான வருமானத்தைப் பெற்றுக்கொள்கிறது. இலங்கையில் மறைமுக வரிவிதிப்பே அரசாங்கத்தின் முக்கிய வருவாய் மூலமாக இருக்கின்ற நிலையில் அது குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை மேலும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலைக்கு இட்டுச் செல்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்படுகின்ற இந்த பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்க செயற்பாடுகளினூடாகவே மலையக மக்களின் அரசியல் வரலாறு வெளிப்பட ஆரம்பித்தது. மலையக மக்களின் பொருளாதார போராட்டங்கள் இடதுசாரிகளாலும் முற்போக்கு ஜனநாயகவாதிகளாலும் அரசியல் வடிவம் கொடுக்கப்பட்டன. எனினும் இன்று அது பின்னடைவை சந்தித்துள்ளது. இன்று மலையகத்தில் அரசியல் என்து பொருளாதார ஒடுக்குமுறையை ஓரம் கட்டியிருப்பதைக் காணலாம். வெறுமனே கூட்டு ஒப்பந்த காலத்தில் சம்பள அதிகரிப்பைப் பற்றி பேசுவது மட்டுமே மலையக மக்களின் பொருளாதார ரீதியான ஒடுக்கு முறையை கட்சிகள் எதிர்க்கின்றன என்று ஆகாது. பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர்ச்சியான அரசியல் போராட்டமே தேவை, எனினும் மலையகத்தை தளமாக கொண்டு இயங்கும் கட்சிகளிடம் இதனை காண முடிவதில்லை.

மலையகத்தில் நிலவிவரும் அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் ஆதரமாக இருப்பது அவர்கள் மீதான பொருளாதார ஒடுக்குமுறையே. அதுவே அம்மக்களின் சமூக, கலாசார பின்னடைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் முதன்மை காரணியாகியுள்ளது. இந்த ஒடுக்குமுறை வெறுமனே சம்பளப் பிரச்சினையில் மட்டுமல்லாது அடிப்படை தேவைகளாக உள்ள காணி, வீடு ஆகிய உரிமைகளை மறுப்பது என்பதுவரை இது நீட்சி பெற்றுள்ளது.

18ம் நூற்றாண்டில் இருந்து இலங்கையில் முக்கிய உற்பத்தி பிரதேசமான மலையக மக்கள் வாழும் பிரதேசங்கள், எல்லா அம்சங்களிலும் பின்னடைவுக்கு உட்பட்டிருப்பதில் இருந்து இவர்களின் உழைப்பை பெற்று உற்பத்தியை பெறுவது மட்டுமே நோக்கம் என்பது வெளிப்படுகிது. உற்பத்திக்கு உடல் உழைப்பை வழங்கும் தொழிலாளர்கள், அவர்களின் குடியிருப்புகள் மற்றும் பிரதேசங்கள் முன்னேற தேவையில்லை என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இன்றும் நிலவுகிறது. உற்பத்தியை தொடர்ந்து செய்வதற்கு உடற்சக்தியைப் பெறக்கூடிய உணவை பெறவழி செய்தால் போதும் என்று ஆங்கிலேயர் கருதினர். அதற்கு உணவு மானியங்களையும் வழங்கினர். இன்று பொருளாதார நெருக்கடிக்குள் உடற்சக்தியைப் பெறுவதற்கான உணவை பெறவே மலையக மக்கள் போராடுகின்றனர்.

எனவே இந்த பின்னணியில் மலையக மக்களின் அரசியல் என்பது அவர்களின் பொருளாதார ஒடுக்குமுறையை தகர்ப்பதற்கான அடிப்படையாக கொண்டதாகவே இருக்கமுடியும் இருக்கவும் வேண்டும். பொருளாதார ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதாகவே அதற்கு சார்பாகவே இருக்கும் எந்த அரசியல் வடிவமும் மலையக மக்களுக்கு எதிரானதே.

-மலையகத்தில் இருந்து - விஜயகுமார்