Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இது..... அவன் சொன்ன கதை...... (சிறுகதை)

அவனுக்குப் பெயர் விவேகானந்தன். சில பேர் அவனை விவேக் எண்டு கூப்பிடுவார்கள். சில பேர் ஆனந்தன் எண்டு கூப்பிடுவினம், ஒரு சிலர்   விவேகானந்தன் எண்டு முழுப்பெயரையும் சொல்லிக் கூப்பிடுவார்கள். நாங்க படிக்கிற காலத்திலே எல்லா வாத்தியார்மாரும் உண்மையிலே இவன் ஒரு விவேகானந்தர் தான் என்று அவனைப் பாராட்டுவார்கள். அப்படி ஒரு கெட்டிக்காரன்.

பள்ளிக்கூடம் முடிஞ்சும் எங்களுடைய சினேகம் தொடர்து கொண்டு தான் இருந்தது. விசுவநாதன் தொடக்கம் இளையராஜா வரையான சகல பாட்டுக்கள் பற்றிக் கதைப்பதிலிருந்து ஊரிலே நாடகங்கள் போடுறது விழாக்கள் செய்வது, வாசிகசாலை நடத்துவது, விளையாட்டுப் போட்டிகள் செய்வது  எண்டு எல்லாத்துக்கும் நானும் அவனும் தான் முன்னின்று செய்வோம்.

என்ன சந்தோசமாய் திரிந்த எங்களை இந்த இயக்கக்காரர்கள் வந்து எல்லாத்தையும் குழப்பிப் போட்டாங்கள். எங்கடை வாசிகசாலையிலே கூட்டம் வைக்க வேண்டும், கட்டாயம் ஒழுங்கு செய்து தாங்கோ எண்டு அவங்கள் வந்து எங்களைக் கேட்ட போது நாங்கள் அதுக்கு மறுப்புத் தெரிவிக்க, ஆமிக்குப் பயப்பிட்டதை விட இந்த இயக்கக்காரருக்கப் பயந்தது தான் அதிகம். 

பிறகு பிரச்சினைகள் கூடகூடக் நான் வெளிநாடு என்று இங்கே வர அவனும் வெளிநாடென்று இந்தியா போட்டான். முதல் ஆரம்ப காலங்களில் எனக்கும் அவனுக்கும் தொடர்புகள் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து முளுமையாய் இல்லாமல் போய்விட்டது.

காலம் என்னமாதிரி கடந்ததோ தெரியாது கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து வருடங்கள் கழிந்து. ஏதோ பேச்சு வார்த்தைகளாம் எல்லாரும் ஊருக்குப் போய் வரலாம் எண்டு சொன்னதாலே மனிசி பிள்ளையோடு ஊருக்கப் போன போது அவன் இப்பவும் இந்தியாவிலே தான் இருக்கிறான் என அறிந்திருந்தேன்.

பிறகு அம்மா செத்ததுக்குப் ஊருக்குப் போனா போது அவன் வந்து விட்டான், ஆனா இப்ப ஏதோ தொழில் விசயமாய் தூரமாய் எங்கே போய் விட்டான் என்றும் அறிந்து கொண்டேன்.

பிறகு இப்ப அம்மாவின்ரை திவசத்துக்குப் போன போது தான் அவன் என்னட்டை வந்தான். எவ்வளவு காலம். திரும்பவும் இளையராஜாவிலிருந்த இன்றைய ரகுமான் வரையிலும் பழைய பாடல்கள் என்ன....? இப்போதைய புதிய பாடலகள் என்ன....? என்பது வரையிலும் கதைக்கப்பட்டு கடைசியிலே எங்களை விரட்டிய இயக்கக்காரர்கள் வரையிலும் கதைத்து இன்றைய நாட்டு நிலவரங்கள் வரையிலும் கதை வந்தது.

எப்படி எங்கடை நாடு.... என்று கேட்ட போது  ஒன்றுமே பேசாது மௌனமாய் இருந்தான். அவனது மௌனத்தில் ஆயிரம் அர்த்தங்கள..... என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது. 

மௌனம் கலைத்தவனாய்.. என்னத்தைச் சொல்ல... எதைச் சொல்ல... 

நீ இங்கே எமது எங்கடை பொடியள் ஓடித் திரியிற  மோட்டச்சயிக்கிளை வைச்சுக் கொண்டோ அல்லது நாளுக்கு நாள் புதிது புதிதாய் எழும்புகிற வீடுகளையும் கட்டிடங்களையும் வைச்சுக் கொண்டோ அல்லது இஞ்சை நடக்கிற திருவிழாக்களைப் பார்க்கவும் ஏதோ யுத்தம் நடந்த பூமி போலத் தெரியாது தான், ஆனால் இந்த யாழ் மண்ணைத் தாண்டி போகப் போகத் தான்..... அதையேன் சொல்லுவான்..... 

எத்தனை எத்தனையோ வித்தியாசமான மனிதர்களையும். எத்தனை வினோதங்களையும் கண்டுகொள்ளலாம்.

ஒரு நாள் இரவு வவுனியாவில் நின்ற போது.... சொல்ல முடியாமல் தலையில் கையை வைத்தபடி குனிந்தான். நானும் ஏன் என்ன என்று கேட்காமல் பேசாமே மௌனமாயிருந்தேன்.

ஏதோ சொல்ல வேண்டும் என்று முனைகிறான் ஆனால் அவனால் முடியாமல் இருந்தது.  

நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் தலையை நிமிர்த்தியவனாய்.... இல்லை மச்சான்.... நினைக்க நினைக்க..... என்று தலையை ஆட்டினான்.

ஓரு பெட்டை.... ஒரு பெண்பிளைப் பிள்ளை, ஒரு  இருபதோ இருபத்திரண்டோ வயதிருக்கலாம்... நான் நின்ற கடையுக்குள் உள்ளே போவுதும் உடனே வெளியே வருவதும், பின்னர் அங்கே வந்து போகும் பெடியங்களுடன் வலியக் கதைக்கப் போவுது திரும்பி உள்ளே போவுது.... எனக்குப் பார்க்கப் பார்க்க பெரிய ஆத்திரமாயும் கோபமாயும் இருந்தது. கண்டறியாத உலகம் இந்த நேரத்திலே  அதுவும் இந்த இடத்திலே ஒரு இளம் பெண்ணுக்கு.... ஆ.... அப்படி என்ன வேண்டிக்கிடக்கு என்ற படி நினைச்சு நினைச்சுக் கோவப்பட்டேன். ஒரு கொஞ்சப் பெடியள் வந்தாங்கள். அந்தப் பிள்ளையோடு மாறி மாறிக் கதைத்தாங்கள் பிறகு அந்தப்பிள்ளையை கூட்டிக் கொண்டு போனாங்கள்... அதுவும் பின்னாலே போனது.

நானும் பஸ் வரவில்லையே என்று காத்துக் கொண்டிருந்தேன். 

கொஞ்ச நேரத்தின் பின் அந்தப் பிள்ளை மிகவும் வேகமாகவும் அவசரத்தோடும் கடையில வந்து உள்ளட்டாள். அவசர அவசரமாக இரண்டு தோசைகள் வாங்கினாள்.... காணாததைக் கண்டது போல் எத்தனையோ நாட்களின் பின் இன்று தான் சாப்பிடுவது போல்... அவுக் அவுக்கென்று சாப்பிட்டது, அந்தப் பிள்ளை.... சாப்பிட்டு முடித்தவுடன்.... இன்னும் சில தோசைகளைக் கட்டிக் கொண்டு அந்த இடம் தெரியாமல் இருட்டோடு இருட்டாய் கலந்து போச்சுது.

அந்தப் பிள்ளை சாப்பிட்ட விதமும், அது பட்ட அவசரமும், அது பட்ட அவஸ்தையையும்.... என்னால் மறக்க முடியாமலிருக்கு..

அந்த நிகழ்வு என் இதயத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

தொடர்ந்து கதைக்க முடியாமல் அவன் தள தளத்தான்... மச்சான்.... போரிலே எல்லாவற்றையும் பறி கொடுத்த ஒரு குழந்தையா.... இவள். அல்லது நாட்டுக்காய்..... தன் மண்ணின்.....  விடிவுக்காய் போராடி.... இன்று யாருமற்ற அனாதையாய் சமூகத்தினால் ஒதுக்கப்பட்டு வாழும் ஒரு பெண் போராளியோ........தெரியாது... 

இந்தப்போர் எல்லாத்தையும் பிடிச்சுத் திண்டு போட்டு விட்ட மிச்சங்கள் தான் இது மச்சான். இது ஒரு சிறு உதாரணம் தான் ஆனால் உது போல இன்னும் எத்தனை எத்தனையோ... பிள்ளைகள் எங்கடை நாட்டிலே.

அந்தப் பிள்ளை பற்றிய நான் தப்பாய் எண்ணியதையும் அன்று என்னால் ஒன்றுமே செய்யாமல் போனதையிட்டு ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து இன்றும் எனக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறேன். இதை விட வேறு என்னிடம்  சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. 

இதைக் கேட்ட நாளிலிருந்து நானும் என் மனதுக்குள்ளே வைத்து வைத்துப் புதைந்து கொண்டிருந்தேன். இதை எழுதி முடித்த பின்னர் ஏதோ சிறு ஆறுதல் போல இருக்கு, இருந்தாலும் அன்று ஒரு நாள் ஆபிரிக்க நாடொன்றில் வறுமையின் கொடுமையால் இறக்க இருந்த குழந்தையொன்றை கழுகொன்று தூக்க காத்திருந்ததை தத்துருவமாக படம் பிடித்திருந்த கெவின்காடர் என்ற புகைப்பிடிப்பாளனுக்கு சிறந்த படத்துக்கான பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப்பட்டது. பின்னர் யாரோ ஒருவர் கேட்டாராம் அந்தக் குழந்தையின் நிலை என்ன என்று கேட்ட போது அவனால் பதில் சொல்ல முடியாமல் போனது, பின்னர் தான் ஏன் அந்தக் குழந்தையைக் காப்பாற்றவில்லை என்று மனம்வருந்தி  நினைத்து நினைத்து வேதனைப்பட்டு என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அதே போல் விவேகானந்தனோ நானோ இதுவரை இன்னும் தற்கொலை செய்யவில்லை. இதுகளுக்கெல்லாம் காரணமாயிருந்தவர்கள் இன்று உல்லாச சுகபோகங்களில்....