Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

1971, மகத்தான தோல்வி சமூகத்திற்கு விட்டுச் சென்ற கற்பிதங்கள்

1971 ஏப்ரல்மாதம் 4ம் திகதி. பிற்பகல் 2.00 மணியிலிருந்து இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒரு அறிவித்தல அடிக்கடி வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறியது. இந்நாட்டு மக்கள் என்றுமே எதிர்பார்த்திராத செய்தி அது. என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. "நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பொலிஸ் நிலையங்களை தாக்கி அந்த பிரதேசங்களில் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக போரடி வருகிறது. அவர்களை முறியடிக்க அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்ய தயாரக உள்ளதாக" அந்த செய்தி மேலும் கூறியது.

மறுநாள் ஊரடங்குச் சட்டம் ஓரளவு தளர்த்தப்பட்டது. மக்கள் மத்தியில் பரவலான ஒரு பேச்சு அடிபட்டது. இது என்ன ஆயுதப் போராட்டம்? ஆயுதமேந்திப் போராடும் அந்த இளைஞர்கள் யார்? அவர்கள் எதற்காக ஆயுதமேந்த வேண்டும்? என்ற பேச்சுக்கள் நாடு பூராவும் அடிபட்டன. ஆம்! யார் அவர்கள்? எதற்காக போராடுகிறார்கள்? அதுதான் கேள்வி.!

இலங்கை வரலாற்றில் என்றுமே காணாத எழுச்சி. முதலாளித்துவத்திற்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக, சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக நடந்த அந்த தீரமிக்க இளைஞர்களின் எழுச்சி அன்றைய முதலாளித்துவ அரசாங்கத்தை ஆட்டங்காண வைத்ததோடு மாத்திரமல்ல, முதலாளித்துவத்தின் முந்தானையில் தொங்கிக் கொண்டிருந்த இடதுசாரி வேடதாரிகளையும் கிலி கொள்ளச் செய்தது. தமது வர்க்கத்தின் இருப்பிற்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்த, அன்றைய எதிரிக் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்குள் நுழையக் காத்திருந்த திருவாளர் ஜே. ஆர். ஜயவர்தன, "இது சேகவேராக்களின் வேலை. இவர்களை பூண்டோடு ஒழித்துக் கட்ட அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்" என்று கூறினார்.

ஆகவே 71 ஏபரல் கிளர்ச்சி என்பது இலங்கை அரசியலில் தவிர்த்துச் செல்ல முடியாத ஒன்றாக இருக்கின்றது. 1971 ஏப்ரலில் ஆரம்பான அந்தப் போராட்டம் முதலாளித்துவ அரசாங்கத்தினால் சில மாதங்களிலேயே மிகக் கொடூரமான முறையில் அடக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். யுவதிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறைப்படுத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

இலங்கை வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் கிளர்ச்சிகள் தலை தூக்கியிருந்தாலும் அந்த கிளர்ச்சிகள் யாவும் ஒரு ஆட்சியாளனை தூக்கி வீசிவிட்டு இன்னொரு ஆட்சியாளனை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக "அரண்மனைகளின்" சதிகளாகவே இருந்தன. 71 புரட்சி அதற்கு முற்றிலும் மாற்றமான ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்பட்ட முதல் மக்கள் புரட்சியாகும். உலக கம்யூனிஸ இயக்கத்திற்கு 1871 பாரிஸ் கம்யூனினால் பெற்றுக் கொடுத்த அனுபவங்களுக்கு கொஞசமும் குறைவில்லாத படிப்பினைகளை 1971 புரட்சி இலங்கையின் இடதுசாரி இயக்கத்திற்கு பெற்றுக் கொடுத்தது. 1971 ஏப்ரல் போராட்டம் வரலாற்றிற்கு பல் படிப்பினைளை பெற்றுத்தந்த மாபெரும் தோல்வியாகும்.

1905ல் இந்த பயிற்சி கிடைக்காமிருந்தால் 1917 அக்டோபர் புரட்சி ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க முடியாது. 1905 மாபெரும் தோல்வி குறித்து லெனின் இவ்வாறு கூறினார், "புரட்சிவாத கட்சிகளுக்கும், புரட்சிவாத கட்சிக்கும் சரியான மற்றும் மிகவும் பயனுள்ள பாடத்தை, வரலாற்றில் இயங்கியல் முறை குறித்த பாடத்தை, அரசியல் போராட்டத்தை புரிந்து கொள்வதற்கும் போராடும் கலையையும், விஞ்ஞானம் குறித்த பாடத்தையும் இந்த மாபெரும் தோல்வியே கற்பித்தது". லெனின் திரட்டிய நூல் பகுதி 6- பக்கம் 137-138

ஆகவே 71 வீரர்களின் அந்த போராட்டத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது போராட்டம் முதலாளித்துவக் கொள்ளைக்கார பொருளாதாரத்தின் சரிவை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டமாக இருக்கவில்லை. சரிந்து வரும் முதலாளித்துவ சமூக முறைக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர்கள் போராடவில்லை. ஒரு கொள்ளைக்காரனுக்கு பதிலாக இன்னொரு கொள்ளைக்காரனை ஆட்சிக்கட்டில் ஏற்றும் இணக்க அரசியலுக்காக அவர்கள் போராடவில்லை.

மாறாக, முதலாளித்துவத்தின் அனைத்து சாதனங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் சமவுடமை சமுதாயமொன்றை அமைத்திட வேண்டும் என்ற தூய நோக்கத்திற்காகவே அவர்கள் போராடினார்கள். அதற்கான திடசங்கற்பம் அவர்களிடமிருந்தது.

71 போராட்டத்தின் சிறப்புத் தன்மை என்னவென்றால், அரச அதிகாரம் பற்றிய பிரச்சினையை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டமைதான். போராட்டத்தின் இலக்கு அரசாங்கத்தை தாக்கி அரச அதிகாரத்தை தமது வர்க்கத்திடம் பெற்றுக் கொள்வதுதான். என்றாலும் அரசாங்கத்தை தாக்கியது, பொலிஸ் நிலையங்களை தாக்கியது வரை அந்தப் போராட்டம் குறுகியது குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் கூட, அரச அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையை முதலாவது பிரச்சினையாக எடுத்துக் கொண்ட அந்த பரம்பரை குறித்து ஆழமான வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். மறுபுறம் அவர்கள் புரட்சி என்பதை சமூக கட்டமைப்புகளை, நிர்வாக இயந்திரம் மற்றும் அரச நிறுவனங்களை மாற்றியமைப்பதை மாத்திரமல்ல, சமூக மதிப்பீட்டுத் தொகுதிகள், சமூக உறவுகள், சிந்தனை, மனோபாவம் போன்றவற்றிலிருந்து மக்களை மீட்டெடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். மூட்டை சுமந்தாவது கட்சி நிதியை வலுப்படுத்தல், முழுநேர புரட்சிவாதியின் எடுத்துக்காட்டு, போராட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் போன்ற அனைத்தையும் எமக்கு கற்றுத் தருவது வித்தியாசமான புரட்சிகர வழக்காறுகள் விடயத்தில் அவர்களுக்கிருந்த பிணைப்புதான். அது எதிர்கால புரட்சிகர செயற்பாடுகளிடம் கையளிக்கும் முழுமையான சொத்தாக இல்லாவிட்டாலும், அது பெருமதிப்பு வாய்ந்த சொத்துதான் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

71 போரட்டத்தை முதலாளித்துவ அரசாங்கத்தின் அடக்குமுறைக்குள் மாத்திரம் உள்ளடக்கிவிட முடியாது. இலங்கையில சேஷலிஸத்தை கட்டியெழுப்புவது குறித்த எதிர்பார்ப்பு அதில் காணப்பட்டது. என்ன விலை கொடுத்தாவது முதலாளித்துவத்தை மூட்டை கட்டி அனுப்பிவிட்டு திருநாட்டில் சமவுடமை சமுதாயத்தை நிலைநாட்டியே தீருவது என்ற திடசங்கற்பம் அங்கே காணப்பட்டது. நாடு எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமான முதலாளித்துவ சுரண்டலை கூண்டோடு ஒழித்துக் கட்டிவிட்டு பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்குள் ஆட்சியை கொண்டு வந்து இந்தாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சமநீதி, சமஉரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நெஞ்சுறுதி அங்கே இருந்தது.

இலவசக் கல்வியின் மூலம் படித்த கிராமப்புற இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அந்தப் புரட்சி, இளைஞர்கள் எதிர்கொண்ட வேலையில்லா திண்டாட்டத்தையும், ஒடுக்ப்பட்ட பாட்டாளி வர்க்க மக்களின் தலைவிதியையும் மாற்றுவதற்கான ஒரே வழி புரட்சி ஒன்றுதான் என்ற நிலையிலேயே நடந்தது. என்றாலும் புரட்சியின் நோக்கம், அதன் இலக்கு என்பவற்றை பற்றி மக்கள் அறிவுறுத்தப்படாத நிலையில் அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் கூட, நெஞ்சுறுதி கொண்ட அந்த 71 வீரர்களின் போராட்டம், முதலாளித்துவ 71ன் அரசாங்கத்தினதும் அதன் எதிரிக் கட்சியான முதலாளித்துவ எதிர்க்கட்சியினதும், சோஷலிஸ வேடதாரிகளினதும் ஒத்துழைப்போடு இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டாலும் அதனை இலேசாகக் கருதிவிட முடியாது. அது இலங்கை மக்கள் மத்தியில் புதிய கருத்தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்களுடைய சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வர காரணமாக இருந்தது. எதிர்கால சமுதாயத்திற்கு புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. அந்த போராட்டத்திற்குப் பின்னர்தான் சோஷலிஸம் என்றால் என்ன என்பதை மக்கள் சிந்திக்கத் துவங்கினார்கள். முதலாளித்துவ கொள்ளையையும், அதன் கொடூரமான சுரண்டலையும், உழைப்பின் வலிமையையும், அடக்குமுறையின் வடிவங்களையும், உரிமைகளையும் உணரத் தொடங்கினார்கள்.

ஆகவே 71 புரட்சி என்பது அரசாங்கத்தின் இரும்புக் கரங்களால் அடக்கப்பட்ட தோல்வி என குறைத்து மதிப்பிடப்படாமல், மக்களை சிந்திக்கத் தூண்டிய, மக்களுக்கு புதிய அனுபவங்களைத் தந்தது மாத்திரமல்லாமல் புதிய படிப்பினைகளை பெற்றுத் தந்த மகத்தான தோல்வி என்றே மதிக்க வேண்டியுள்ளது.

ஏப்ரல் புரட்சி சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் அரசியல் மதிப்பீடகளை செய்யும்போது, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வர்க்க சக்திகளினதும், அந்த வர்க்க சக்திகளினது அரசியில் பக்குவம் குறித்தும் ஆராயமல் செல்ல முடியாது. ஏனென்றால் எந்தவொரு சமூக அரசியல் போராட்டமும, அதில் ஈடுபடும் வர்க்க சக்திகளின் தன்மையின் மீது தீர்மானிக்கப்படுதனால் தான்.