Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

வல்லானின் குப்பைகள் வறியவனின் தோட்டத்தில்!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருந்தன. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோரும் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடைவீதிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. எந்தவகையிலாவது உழைத்த பணத்தைக் கொண்டு துணிமணிகள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதேநேரம் கொலன்னாவ பகுதியில் சம்பவமொன்று நடந்து கொண்டிருந்தது. கொலன்னாவையையும், அதனை அண்டிய பகுதிகளையும் நாறடித்துக் கொண்டிருந்த குப்பைமேட்டுக்கு போகும் வழியை மறித்து அப்பிரதேச மக்கள், அங்கே குப்பை கொட்டுவதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.

முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் நாற்றத்தை பொறுத்துக் கொண்டிருந்த மக்கள், பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார்கள். அவர்களது போராட்டம் நியாயமானதுதான். அவர்களது கோரிக்கையும் நியாயமானதுதான். தொடர்ந்தும் அவ்விடத்தில் குப்பை கொட்ட வேண்டாமென அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காகவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு நகர சபைகளினால் கொண்டுவரப்படும் சுமார் 800 தொன் குப்பை கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பைமேட்டில் கொட்டப்படுகிறது. கொலன்னாவ மக்கள் அதற்கு எதிராக 20 வருடகாலமாக குரலெழுப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். அதற்கு தீர்வு கிடைக்காத நிலையில்தான் கடந்த 6ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அதனைத் தொடர்ந்து சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ஏப்ரல் 9ம் திகதி சத்தியாக்கிரகம் நடைபெற்ற இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த 500 போலிசார் ஊர் மக்களை ஓட ஓட விரட்டியடித்தனர். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக பிரதேசமக்களால் கொழும்பு மாநகரசபைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தவிரவும் FC FR 218/2009 இலக்கத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், 2 ஏக்கர் வட்டத்திற்குள் மாத்திரம் குப்பை கொட்ட அனுமதி வழங்கி 2009 ஏப்ரல் மாதம் 27ம் திகதி உயர் நீதிமன்றம் கட்டளையொன்று பிறப்பிக்கிறது.

ஆனால், கொழும்பு மாநகரசபையும், கொலன்னாவ நகரசபையும் அந்த நீதிமன்றக் கட்டளையை மதிக்காமல் 17 ஏக்கர் நிலத்திலும் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றன. 2009 நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்தும்படியே மக்கள் கேட்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் மீதொட்டமுல்ல பகுதியைத் தவிர, பக்கத்திலுள்ள 5 கிராமங்களின் மக்கள் இதனால் பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தஹம்புர, பன்சலஹேன, குருனியாவத்த, அவிசாவலை பாதை 101 தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இதற்கு 8 மாதங்களுக்கு முன்னர் குப்பைமேட்டிற்கு அருகிலுள்ள 160 வீடுகளை வலுக்கட்டாயமாக உடைத்து அங்கிருந்த மக்களை வெளியேற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.

அன்று அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பட்ட துன்பங்கள் சொல்லுந்தரமன்று. அன்று வெளியேற்றப்பட்ட ஒரு பெண்மணி 'ஜனரல" என்ற பத்திரிகைக்கு அளித்த தகவலில் இவ்வாறு கூறியிருந்தார்.

'இதோ பாருங்கள் இங்கே கிராம உத்தியோகத்தர் இருக்கிறார். இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இருக்கிறது. இராணுவம் இருக்கிறது. பொலிஸ் இருக்கிறது. எங்களுக்கு நடக்கும் அநியாயம் இவரகள் யாருக்கும் தெரிவதில்லை. மக்களை குடியேற்றிவிட்டு உறுதிப்பத்திரம் தருவதாக கூறிக்கூறி வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள். வரியும் அறவிட்டார்கள். சரியாக இருந்தால் அவர்கள் குப்பைமேட்டை அகற்றியிருக்க வேண்டும் கொழும்பு மாநகரை அழகுபடுத்துவதாகக் கூறி பிச்சைக்காரர்களை படுகொலை செய்த அரசாங்கம் இது. இப்படியெல்லாம் செய்து வறுமையை ஒழிக்க முடியுமா? நகர அபிவிருத்தி அதிகாரத்தை அவர் கையிலெடுத்தது இதற்காகவா?" (ஜனரல- 2012.10.28)

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்றுவரை நிரந்தர வசிப்பிடமில்லாமல் இடத்துக்கிடம் தங்கி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். 6 மாதத்திற்குள் அவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக உறுதியளித்து, அதுவரை வீட்டுக்கூலி என்ற வகையில் 60,000 ரூபா கொடுக்கப்பட்டிருந்தது. என்றாலும் அதற்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க நகரசபையோ, வீடமைப்பு அதிகாரசபையோ, நகர்ப்புர அபிவிருத்தி அதிகாரசபையோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

குப்பைமேடு காரணமாக கழிவுகளோடு கிருமிகளும் பாடசாலை கட்டடத்திற்குள் வந்ததால். மீதொட்டமுல்ல ராஹ{ல வித்தியாலயம் மூடப்பட்டது. குப்பைகளின் துர்நாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் அடிக்கடி மயக்கமடைவதாகவும், நோய்வாய்ப்படுவதாகவும் மேற்படி பாடசாலையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர். மூடப்பட்ட ராஹ{ல வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் வேறு பாடசாலைகளில் அனுமதித்துள்ள போதிலும், அவர்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பைமேடு காரணமாக அந்தப் பாடசாலையிலும் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு மனரீதியில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் பல்வேறு நோய்த்தாக்கங்களிற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தொற்றுநோய்கள், சருமநோய், சுவாசநோய் போன்றவை அங்கு பரவலாகக் காணப்படுகின்றன. தஹம்புர என்ற பகுதியில் மாத்திரம் டெங்கு நோயினால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். சிலர் புற்றுநோயாலும் மடிந்திருப்பதாக பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காணப்படாத குழந்தைகள் மத்தியிலான புற்றுநோய் தாக்கமும் இங்கு காணப்படுகிறது. தவிரவும், விஷக்கிருமிகள் உடலுக்குள் நுழைந்தமையால் குடும்பஸ்தர்களும் மடிந்துள்ளனர். தாம் எதிர்கொண்டுள்ள இந்த அநியாயத்திற்கு தீர்வை பெற்றுத் தரும்படி கொலன்னாவ பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் கேட்கிறார்கள். ஆனால், புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாகவே அவர்களுக்கு அரசாங்கம் வழமையான பரிசைக் கொடுத்திருக்கிறது.

அதுதான் பொலிசாரின் மனிதாபிமானமற்ற தாக்குதல். அந்தத் தாக்குதலால் அரசாங்கம் வென்றது. மீதொட்டமுல்ல மக்களில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வெற்றிபெற்ற அரசாங்கம் மீதொட்டமுல்லையில் மீண்டும் குப்பை கொட்டத் துவங்கியுள்ளது. நன்றாக அடிவாங்கிய மீதொட்டமுல்ல மக்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். என்றாலும் சுற்றுவட்டாரத்தில் வீசும் நாற்றத்தோடு அவர்களது தொலைபேசிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கிடைத்தன. அதி மேதகு ஜனாதிபதியிடமிருந்து. அதில், 'உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்". என்றிருந்தது.