Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நாம் என்ற வாழ்வில், நான் என்ற மாற்றம்

நன்னீரின் பொசிவு நிலத்திலே இருந்தால் அறுகம் புல்லினங்கள் வேர்பரப்பி பசுமையுடன் படர்ந்து வளர்வது போலவும், மிகச் சிறிய விதையில் முளைத்து, கிளைகளும் விழுதுகளுடன் சாலப் பரந்து நிற்கும் ஆலமரத்திற்கு ஒப்பாகவும், மனித இனங்களின் வாழ்வும் வரலாறுகளும் உலகெங்கும் உள்ளன.

இதில் மிக நீண்டதோர் பூர்வீகத்தைக் கொண்ட வரலாறு தனித்து தமிழ் இனத்திற்கே உள்ளது என்பதான கருத்துகளும் - எடுகோள்களும் - ஆதாரங்களும் - வாதாட்டங்களும் என, வாய்ப் பேச்சாகவும் - ஊடகங்கள் மூலமாகவும் - அரசியற் பரப்புரையாலும் இலங்கை, இந்தியா என நடைபெற்ற விடயம், இலங்கை தமிழரை உலகெங்கும் சிதறடித்து உலகின் பட்டிதொட்டி எங்கும் இடம் பிடித்துள்ளனர்.

இது, ஆழக்கடலின் அடியில் உருவாகும் மிகச் சிறு அளற்சி உருமாறி ஆழிப் பேரலையாக அத்தனை ஊத்தைகளையும் கலக்கி எடுத்து வந்து கரை நிலத்தில் சுமத்தி பாரிய அழிவை ஏற்படுத்துவது போல, இதற்குள் சில பழமைவாத மனிதரின் நுண்ணியமான பிடிவாதச் சிந்தனைகள் அவ்வவ்விட மக்கள் மத்தியில் சிறு சுழற்சியாகி பல்கிப் பெருகி முழுத் தமிழினத்தின் மீதும் மட்டுமல்லாது, உலகின் ஏனைய இனங்கள் மீதும் எதிர்ப்புணர்வு கொள்ளும் பல்லாயிரம் குற்ற வடுக்களைச் சுமத்துகின்றது.

இந் நிலைப்பாடுகள், தூய்மையான - கலப்படமற்ற - தொன்மையான - வேத வரலாறு என்ற மாற்ற விரும்பாத அல்லது மாற்ற முடியாத தமிழரின் கருத்தியல் பண்புக்குள் தமிழினத்தை 'தமிழீழத் தமிழர்" என நிறுத்தி வைத்துள்ளனர். இதனை ஒவ்வொருவரும் ஏற்றுத்தான் வாழவேண்டும் என, 'மிக நுண்ணிய"மான கருத்துகள் மூலம் தமிழர்களில் அதிகமானோருக்குள் திணித்து, நம்பவும் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இக்கால அறிவியல் - பொருளாதார கலாச்சார மாற்றத்தின் விளைவுகளிலும் கூட கடந்த காலத்தில் மனிதர் பட்டழுந்திய விழுப்புண்ணின் வடுக்களை மாற்றி அமைக்க இவர்கள் மறுக்கின்றனர்.

இப்படியான மறுப்புகள் ஒருபக்கமாக இருக்கட்டும், எனப் பார்த்தால்..! இவை சார்ந்தோர்கள் புதுப்புதுச் சமூகக் காயங்களை தொடர்ந்தும் உருவாக்கி, இழமையுடன் உருவாகின்ற புதிய சமூகத்தின் மத்தியிலும் மீண்டும் மீண்டும் புதிய காயங்களையும் அதன் வடுக்களையும் பதியவைக்கின்றனர். இதனூடு 'உலக அரங்கில் அனுதாபம்' எனத் தேடும் 'அனுதாப முயற்சி'யை 'அரசியல் நகர்வு' என்கின்றனர்.

இதற்கான பின்புலத்தில், புலம்பெயர் யாழ் - மேட்டுமைப் பழமைவாதிகள் 'மிக நுண்ணிய"மாக தமது பழமைக் கருத்தியலை பரவவிட்டுள்ளனர். அத்துடன் யாழ் - மேட்டுக் குடிகளின் நேரடி வாரிசுகள் (சிறிலங்கா அரச - நாடாளுமன்ற வெளிக் கதவு உறவுகளின் விழுதுகள்) இதற்கான வழிகாட்டுதலை 'மிக நுண்ணிய"மாகவே நடாத்திச் செல்கின்றனர்.

அத்துடன் இதே சமதளத்தில் தமிழருக்குள் ஆழப் புரையோடிக் கிடக்கும் சேறு சகதியான சாதியப் புண்ணை.., 'மிக நுண்ணிய"மாக நோண்டி அயர் பிய்த்துச் சூசீழ்' கறக்கின்றனர்.

இதற்காக இவர்கள் தமிழினத்திற்குள் சாதி - மத - இனவாதத்தை முன்னிறுத்தி 'சமூக ஒவ்வாமை' 'புரிந்துணர்வுத் தடை' என.., ஓர் சுயமான சுதந்திரத்திற்கு உரிய ஒத்துமொத்த தமிழினத்தையும் 'வாளாவெட்டி' என்ற எல்லைக் கோட்டில் 'குத்தென' நிறுத்தி வைத்துள்ளனர்.

இப்படியாக இவர்களின் 'மிக நுண்ணிய"மான மன நிலையையே, இவர்கள் தமிழினத்தின் தொன்மை என்கின்றனர். இதனால் தமிழினத்தில் புரையோடிய விழுப் புண்களும் அதன் வடுக்களும் படுகின்ற, படுத்துகின்ற வேதனைகளை - தொல்லைகளை முழுத் தமிழினமுமே 'மிக நுண்ணிய"மாகப் பட்டழுந்துகின்றனர். இதனை இவர்கள் சாதியச் சமூகக் கிராமியக் கலாச்சாரக் கட்டுமானங்களுக்கு ஊடாக தமிழினத்தின் தொன்மையை 'மிக நுண்ணிய"மாகவே வாழவைக்கின்றனர்.

இப்படியான புரையோடிய புண் நோண்டித்தனத்திற்கு உரித்தான யாழ். மேலாதிக்கத் தமிழர்கள் (பிறப்பு - பொருளாதாரம் - மதம் ஆகிய அடிப்படையில் தான் - தாம் சாராத சாதிகள் மீது உயர்வு - தாழ்வுப் பேதம் பார்க்கும் அனைத்துச் சாதிகளும்) தங்களின் சாதி - மத - யாழ் தேசவழமை என்ற சமூகப் பிற்போக்குக் கூறுகளை, மிகக் கொடூரமான இன மோதல் 2009, தமிழின அழிவின் - அழிப்பின் அனுபவங்களைப் பெற்றதும் அதன் முன்பும் பின்புமாக ஏற்பட்ட புலம் பெயர் உலக வாழ்விலும்.., இவர்கள் தங்களின் சொந்தபந்த சாதிய உறவுகளை முன்வைத்தே நகர்த்துகின்றனர்.

இவர்கள் எதிலும் தங்களின் ஊர் வளமை, சாதிய வளமை, இவை அனைத்தையும் கூட்டுச் சேர்த்த தேச வளமை, என்பவற்றையே தங்கள் வாழ்விருப்பின் முழுமையான அரியணையாக முன்னிறுத்துகின்றனர்.

இதற்காக தமிழ் மொழிக்கு உணர்வைத் தூண்டிவிடுகின்றனர். அப்படியே அதனை உணர்ச்சியின் உச்சிக் கொம்பில் ஏற்றி வைத்து, தனித்து நின்று வதமாடும் வாழ்வுதான் தமிழர் பண்பாடு என்கின்றனர். இவையே தமிழருக்கான போராட்ட அரசியல் எனவும் 'மிக நுண்ணிய"மாக வாதிட முனைகின்றனர்.

புலம் பெயர்வதற்கு முன்பான, பூர்வீக யாழ். மேற்தட்டு வர்க்க ஆண்டான் அடிமைத் தனங்களால் அமைந்த ஒவ்வொரு ஊர்களும், அதற்குள் வளைந்து நெளிந்து குனிந்து செல்லும் தெருக்களும் அவ்விடச் சாதியக் கூறுகளை மிக 'நுண்ணிய'மாகவே சுட்டிக் காட்டிச் செல்லும். அதனையே புலம் பெயர் நாடுகளிலும் இருக்க வேண்டுமென இவர்கள் 'மிக நுண்ணிய"மாக கதையோடு கதையாக சொல்கின்றனர்.

இதற்கான காரணங்களை மேலும் ஆழ்ந்து பார்க்கும் போது..,

தமிழரின் பூர்வீக 'ஆண்டான் அடிமைச் சமூகக் கட்டுமானமும்| - கடந்தகால 'கூட்டுக் குடும்ப உறவுக் கட்டுமானமும்" கலந்து கொண்ட 'நாம்' என்ற பூர்வீகப் பரம்பரை, கால முன்னேற்றத்திற்கு அமைய மாற்றம் பெறாமல் தம்மைத் தொடர்ந்தும் பூர்வீகமும் பழமையும் கலந்த சமூகக் கட்டுக் கொடியில் தக்க வைத்து 'மிக நுண்ணிய"மாக இறுக்கப்பட்டு நிற்பதே காரணமாகின்றது.

கடந்த பல நூற்றாண்டு காலத்திற்கு முற்பட்ட மனிதக் குழுமங்களின் சமூக வாழ்வில், திடீர் திடீரென ஏற்பட்ட மன்னர்களின் வன்வளைப்புகள், அரசியையும் அந்தப்புரப் பெண்களையும் அபகரித்தல், போர்களின் வெற்றி தோல்வி - இனங்களின் கலப்பு பிரிப்பு பிரிவு - மதத் திணிப்பு மாற்றம் அழிப்பு - அடிமைகள், தொழிலாளர் ஏற்றுமதி இறக்குமதி - போராட்டங்கள் - சோரம் போதல்.., இப்படியான அனைத்துச் சூழ்நிலைகளாலும் உதாசினப்படுத்தப்பட்ட அல்லது பின் தள்ளப்பட்ட பூர்வீகத் தமிழ் மக்களை தொடர்ந்தும் தாழ்த்துவதற்காக அவர்கள் மீதான தொழிலை மேட்டுக் குடிகளின் அதிகார வர்க்கமே தாழ்த்தியது.

சமூக மதிப்பு ரீதியாகவும் அதற்கீடற்ற ஊதிய ரீதியாகவும், பாலியல் வக்கிரங்கள், கட்டற்ற - கேட்பாரற்ற சித்திரவதைகள் செய்து தாழ்த்தி, தமது அதிகார அக்கிரமத்தின் கீழ் அடிமைப்படுத்திப் பிரித்த.., பல நூற்றாண்டு கால விழுப் புண்ணின் சோக வரலாற்றை, யாழ். மேட்டுக் குடிச் சண்டித்தனங்கள் 'மிக நுண்ணிய"மாக மூடி மறைத்து, மற்றவரை அடிமைப்படுத்தி தமக்கான சுரண்டலைத் தக்க வைக்கவே யாழ். தேச வளமையின் மேட்டுக்குடித்தன பூர்வீகச் சமூக அமைப்பினை முடிந்தவரை தொடரவே விரும்புகின்றனர்.

சுரண்டலுக்கு ஏற்றவாறு, சமூகம் - மதம் - மொழியை இணைந்த மாதிரி இணைத்தவாறு பிரித்துப் பிரித்து வைத்துச் சுரண்டும் கலாச்சாரச் சமூகக் கட்டுமானத்தை அக்கால மன்னர் சபைகள் தங்களின் சுரண்டலுக்கான திட்டத்தை 'கட்டுக் கதைப் போதனைகளாக" அச் சமூகத்தில் திணித்த சமூகச் சதிகளும் பின்னர் அத் திட்டங்களையே தமதாக்கிய காலனித்துவக் கொள்ளையர்களின் அக்கிரமங்களும் என அவை இன்றுவரை இப்படியாக மக்களைக் கூறுபோட்டு பிரிந்து - பிரித்து நிற்கின்றது.

இவையே அக் காலத்திலிருந்து இக் காலம் வரையான சமூகத் தேடலும் - கல்வியும் - சிந்தனையும் - சமூக அரசியல் பரிமாணத்தின் விழுமியங்களுமாகி உள்ளது.

இதைத் தான் அனைத்து யாழ். மேட்டுச் சிந்தனை மக்களும் தமது கட்டுச் சோறாக்கி, தம்முடன் புலம் பெயர்த்திய, 'நாம்' என்ற தமிழரின் தனித்துவச் சாதிப் பிரிவுக் கூட்டுக் கலாச்சாரம், இன்று தனித் தனி மனிதராக, தனி விருப்பு வெறுப்புகளைத் தானே முடிவெடுக்கும் ஒவ்வொருவராக, உறவுகளின் பந்த பாசம் உடைந்த, மாற்றார் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளாக மாற்றம் பெற்று அனைவரின் புலம் பெயர் வாழ்வும் மாற்று நிலைச் சுரண்டல் வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலேயே, அக்கால 'நாம்" என்ற இறுக்கங்கள் தளர்ந்து தள்ளாடுகின்றது.

இதற்கான காரணங்களாக, இந்த மாற்றார் சமூகத்தின் 'உற்பத்திச் சக்தியின் கலாச்சாரத் தனித்துவம்' என்பது, தனது உற்பத்தி அறிவுத் திறனை புலம் பெயர்ந்து வாழும் அனைத்து மக்களிடமும், பொருள் ஆதார - வதிவிட இணைப்புடனான இவ்விட வாழ்வினை நகர்த்துமாறும், மாற்றமடையுமாறும் 'மிக நுண்ணியமாக" பணிக்கப்பட்டுள்ளனர்.

இவ் வாழ்வுக்கான அரசியலால் அல்லது சமூகச் சிந்தனையால் 'நாம்" என்ற 'யாழ் - மேட்டுக்குடி பூர்வீகத் தமிழ்க் கலாச்சாரக் கட்டுமானம்" மெல்ல மெல்ல நெகிழ்ந்து போய் மறைமுகமான கூனிக் குறுகலுக்குள் 'நான்' என்ற தனித்துவத்தை ஏற்காமல் ஏற்றவாறு, இதுவோர் உடையைப் போல 'தேவைக்கு ஏற்ப மாற்றிப் போடுவம்' என்கின்றனர்.

அத்துடன் மட்டுமல்லாமல்,

'நான்' என்பதை ஏற்க முடியாமல் மறுதலிக்கும் 'யாழ் - மேட்டிமைத்தன பூர்வீக சைவ சற்சூத்திர - இந்துத் தமிழ்' தமைச் சார்ந்தோரை, தொடர்ந்தும் 'நாம்' என்ற மாற்றத்துக்குள் மட்டும் நில்லுங்கள் என்கின்றனர்.

இதற்காக ஆங்காங்கே கறையான் புற்றெடுத்து பாம்புகளை குடியேற்றுவது போல, இந்துக் கோயில்களை அமைத்து மனித குலத்தின் முதல் சாதியென பிராமணனை முன் வைக்கின்றனர்.

இப்படிச் சாதியத்தின் மீது பற்று வைத்துள்ள அனைத்து அடிமைச் சாதியினரும், தங்கள் தங்கள் சாதியைச் சார்ந்தோரைத் தனித் தனியாய் இழுத்துச் சென்று, 'இந்தச் சமூகத்தின் வசதியும் பொருளுந்தான் வேண்டும்..! 'இந்த வேற்று மொழிச் சமூகத்துடன் இணையாதீர்..!! 'எமது சொந்த மொழியையும், மதத்தையும் கொண்ட சாதிகளிடம் இருந்து எமக்கு ஏதாவது உதவி அல்லது பொருள் மட்டுந்தான் வேண்டும்..! என்கின்றனர்.

இப்படியான விடாப்பிடிக் கண்டுகளின் பிள்ளைகள், வெள்ளையினப் பிள்ளைகளுடன் பாலியல் கலப்புச் செய்யும்போது, அதனை 'வெள்ளையினம் உயர்ந்த குலம்' என, விழாவெடுத்து, 'தங்கத் தாலிகட்டி' அந்தப் பிள்ளை இப்போது எங்களின் 'இந்து மதம்' 'எங்கள் சாதி' 'எங்களின் உயர் தமிழ்ச் சாதிக் கலப்பு' என அப் பாலியலை மட்டும் உயர்த்தி வைக்கின்றனர்..!?

தமிழுக்குள், இந்து மதத்தினால் பிரிக்கப்பட்ட சாதியக் கூறுகளை, இந்த 'நான்' என்ற கலாச்சார வாழ்வின் மாற்றத்தில் தற்சமயம் ஏற்படுகின்ற 'தமிழ்ச் சாதியக் கலப்பினை' ஏற்க முடியாது, என்ற மனோ நிலையை மிகக் 'கமுக்கமாவே' இப்படியான ஒவ்வொரு சாதிபேத அடிமைகளும் தங்களுக்குள் காவித் திரிவதுடன், இலங்கை - இந்தியா போன்ற நாடுகளில் வாழும் சமூக மதிப்புக் குறைக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினருடன் இணையாதீர்.., என இந்த யாழ். மேட்டுக் குடிச் சிந்தனை தனது பிரித்தாளும் தந்திரத்தில் நின்று, தங்களின் உறவுகளை, முடிந்தவரை தங்கள் நிழலுக்குள் கட்டிவைக்க முயல்கின்றனர்.

ஆனால், கோயில் குருக்களும் அவரின் குடும்பமும் தங்களுடன் ஒன்றாக நிற்பதுமில்லை, தாங்கள் மடைப்பள்ளியில் சமைத்த உணவுகளை உண்பதுமில்லை என திடீர்க் கவலை வேறு கொள்கின்றனர்.

'இவையளை கடவுள் ஏதோ புதுமையாய்ப் படைச்சவரோ..!? நாங்களும் குளிச்சு முழுகி தூய்மையாகத் தானே கோயிலுக்கு வாறம். மடைப்பள்ளிப் பாத்திரங்களிலை தானே கடவுளுக்குப் பொங்கிப் படைக்கிறம். ம்..! உந்தச் சாதித் திமிர் பிடிச்ச பிராமணக் குடும்பத்தின்ரை தடிப்பைப் பாருங்கோவன். ம்..,' என்கின்றனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தங்களைச் சுத்தத் தமிழன் எனச் சொல்லி, சாதியவாதப் பிரித்தாள்கையில் தம்மைச் சுட்டி நின்றவாறு, சிங்களவன் எங்களை மனிசரா மதிக்கவேயில்லை..!? என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இவர்கள் பௌத்த சிங்களப் பேரினவாத பாசிச அரச கட்டுமானத்தை, ஒட்டுமொத்த சிங்கள மக்களாகவே இந்த யாழ் - மேலாத்திக்கத்தினர் பார்க்கின்றனர்.

அத்துடன் மலையகத் தமிழ் மக்களை 'தோட்டக் காட்டார்' என்ற சொற்பதத்துக்கு ஊடகவே தற்போதும் கதைக்கின்றனர். முஸ்லீம் மதம் சார்ந்த தமிழ் மக்களை 'தொப்பி பிரட்டி' எனப் புறந் தள்ளுகின்றனர்|. அத்துடன் பைபிளின் புதிய ஏற்பாட்டுக்குக் காரணமான 'யேசுநாதர்' பிறந்த இடத்தில் வாழ்ந்து, யூத வன்முறையால் கலைக்கப்பட்ட பலஸ்த்தீனிய மக்களை 'மோட்டுச் சனம்' என்கின்றனர்.

ஆயினும், எமது நாட்டுக்குள் அழையா விருந்தாளியாக வந்து, எமது மக்களில் வன்முறை செய்து, ஒடுக்கி அடக்கி அடிமையாக்கி, முழு நாட்டையும் கொள்ளையடித்தவர் மட்டுமல்லாமல், எமது உறவுகளில் ஓர்ம உடல்வாகு உள்ளோரைக் கலைத்துப் பிடித்து, அந்த மனித உறவுகளின் கத்தலுக்கும், கதறலுக்கும், இரத்தக் கண்ணீருக்கும், உறவுப் பிரிப்புகளின் வன்முறைகளுக்கு மத்தியில், யாரும் வந்து தடுத்தாட்கொள்ளாத வக்கிரங்களின் உச்ச நிலையில், அந்த மக்களை இழுத்துச் சென்று, மிருகத்திலும் விடக் கேவலமாக.., கோவணத் துண்டுகூட இல்லாமல் துகிலுரிந்து, கைகள் கால்களை மடக்கிப் பிணைந்து கட்டிய நிலையில், போர்த்துக்கேய வெள்ளையர் தங்களின் பனியுறைந்த நாடுகளுக்கு அன்றைய காலனியக் காலத்தில் ஏற்றுமதி செய்தனர். எமது உறவுகள் வெள்ளையரின் பன்னாட்டுச் சந்தைகளில் ஏலங்கூறி விற்கப்பட்டனர்.

அந்த அடிமை வியாபாரம் செய்த வன்முறைக்கும் மேலான கொடுமைக்கார ஐரோப்பிய வியாபாரிகள், தொடர்ந்தும் எமது மக்களின் எதிர்ப்புகளை ஒடுக்கி, எமது நாட்டை விரும்பியவாறு நாளாந்தம் கொள்ளையடித்தனர். எமது பெண்கள் மீது, தங்களின் காம வெறிகளைத் தீர்த்தனர்.

இதற்குக் கைமாறாக அந்த ஐரோப்பிய வெள்ளைகள் எமது மக்களில் திணித்த 'போதனை'யே 'பைபிள் வேதம்' இது 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கொடு' என்கிறது. இதற்குள் இருப்பதெல்லாம் 'அன்பு' என்பதாகும்.

அட..! இந்த 'அன்பை'க் கற்ற 'யாழ் - மேட்டுக்குடி' வெள்ளையரிடமிருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டது. தமக்கான பெயர்களையும் தந்தையரைக் கூட மாற்றிக் கொண்டது. ஆனால் ஏனைய ஒடுக்கப்பட்ட சாதிகள் மீது 'அன்பு' காட்ட மறுத்தது. அவர்களை எப்போதும் அடிமைகளாகவே பார்த்தது, பார்க்கின்றது.

இவர்களால் அன்றாடம் ஒடுக்கி அடக்கப்பட்ட ஒரே இன மக்கள் மீது, இந்த யாழ். மேட்டுக்குடியினர் தமக்குத் தேவையான போதெல்லாம் அவர்கள் மீது காட்டுமிராண்டிகளாக பாலியல் வல்லுறவு செய்தனர்.

இந்து மதச் சாதியத்தை விமர்சிக்கின்ற 'பைபிளின் மதக் கூறுகள்' தங்கள சாதிக்கான ஆலயங்களை பல ஊர்களில் நடாத்துகின்றனர். இதற்கு உள்ளே இருக்கும் யாழ் - மேட்டுக்குடித் தனம், 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கொடு" என்பதில் இருந்து ஏன் பின்வாங்கியது..? 'அன்பு' என்பதை மனிதரில் வைக்காமல், எதற்காக 'குறஸ்' (Cross dogs) நாய்களில் 'அன்பு' வைக்கின்றது..!?

அனைத்து மக்களையும் தமக்கு அடிமையாக - ஆட்சிகளைக் குளப்பியடித்த - இனங்களைப் பிரித்துக் காயடித்த, மேலாதிக்க ஐரோப்பியர்கள் தாம் எடுத்து வந்த பைபிளையும் கலாச்சாரத்தையும், எமது மக்கள் மீது வன்முறை மூலமும் திணித்தனர்.

இதற்குள் தாமாகவே ஓடோடிச் சென்று, ஐரோப்பிய - ஆங்கிலேய மதம் - மொழி - கலாச்சாரம் அனைத்திற்கும் சேவகம் செய்தவாறு, ஐரோப்பியருக்கு தமது நலனில் நின்று இலங்கை மக்களை அடிமையாக்கிய யாழ். மேட்டுக்குடி வர்க்கத்தினரை - அன்றைய நாசித்தன அப்புக்காத்துகளை, அதே மனோ நிலையில் இன்றுவரை உள்ள அனைவரையும், எந்தவித மனநோவும் இன்றி இந்த புலம் பெயர் யாழ் மேட்டுமைகள் மனமுவந்தே ஏற்கின்றனர்.

இது பால் இனக் கலப்பு என்பதற்கு அப்பால், வெள்ளை இனத்துடன் பாலியற் கலப்புச் செய்வதில் யாழ். மேட்டுக்குடி பெரு மகிழ்வுடனே ஒன்றிணைகின்றனர். இதற்கு மாறாக மொழியும் மதமும் நாடும் ஊரும் ஒன்றான, குறைந்த சாதிக்காரரை சட்ட பூர்வப் பாலியற் கலப்பில் இருந்து திட்டமிட்டு ஒதுக்கி 'மிக நுண்ணியமாக" ஓரங்கட்டுகின்றனர்.

இதன் மூலமாக, பாரிய இன அழிவுக்குள் சிக்கி அழிந்து வரும் தமிழ் மக்கள் மத்தியில், இனங்கள் ஒன்றிணைந்த ஓர்மமான போராட்டம் வளரக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

• ஆக.., 'நாம்' என்ற தமிழரின் கூட்டு வாழ்வுக் கலாச்சாரத்தில் இருக்கின்ற சமூக அறிவியல் குறைகளையும் - 'நான்' என்ற புலம் பெயர் தனிமனித வாழ்வுக் கலாச்சாரத்தில் இருக்கின்ற சமூக அறிவியல் குறைகளையும் புரிந்துகொண்டு, இவை இரண்டுக்கும் இடையே வருகின்ற மனிதருக்கான புதிய நல் வாழ்வுக் கலாச்சாரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

• பல்லினங்கள் வாழ்கின்ற நாட்டில், அனைவருக்கும் சம உரிமையுடனான வாழ்வு முக்கியம். அதேபோல அனைத்து இனங்களுக்கும் சம உரிமை முக்கியம். ஆகவே, யாழ் - மேட்டுக் குடித்தனங்களால் பன்னூறு ஆண்டுகளாக பல வழிகளாலும் ஒடுக்கி அடக்கப்பட்ட தமிழ் மக்களிடம், யாழ். மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் அமைப்புகள் பகிரங்கப் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்.

• அனைத்து ஊடகங்களும் அதன் தர்மத்தில் நின்று கருத்துகளையும், செய்திகளையும் பாராபட்சமின்றி வெளியிட வேண்டும்.

• எங்கும் எதிலும் சாதி ரீதியாக வலியுறுத்தப்பட்ட தேச வழமைச் சட்டம் அழிக்கப்பட்டு பொதுச் சட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

• அறிவியலை மறுக்கின்ற மதக் கருத்துகளையும் அதனைத் தூண்டும் மனிதர் பற்றிய விபரங்கள் யாவும் அடிப்படைக் கல்வியில் இருந்து களைய வேண்டும்.

• இனவாதத்தை முன்னிறுத்தும் தேசியவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்.

- மாணிக்கம்.