Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

காவடி தூக்கும் புலம்பெயர் கனவான்களும் - கனவுகளும்!

காவடி 1

எங்களுக்கெல்லாம் அறியாத வயசு, அரசியல் புரியாத மனசு இருந்த 90-களின் நடுப்பகுதியில ஐரோப்பாவில இருந்த புலிகளிடம் ஜனநாயகம் மற்றும் பெண்ணுரிமை கோரி இலக்கியம், கட்டுரை எழுதியோரெல்லாம் - அல்லது பெரும்பான்மையினர் இடதுசாரிகளாகவே தம்மைக் காட்டிக் கொண்டனர்.

இவர்களில் சிலர் மிகவும் கல்வி கற்ற, இடதுசாரியப் பாரம்பரியத்தில் வந்தவர்கள். இவர்கள் சுயநிர்ணய உரிமை பற்றி எழுதியதை வாசித்த பின்பு தான் என்னைப் போற சிலருக்கு அப்படி ஒரு சமான் இருந்ததே தெரியும்.

90களின் நடுபகுதியில், அப்போ யூ.என.பி அரசின் அதி உச்சக் கொடுமைக்குள் இலங்கை மக்கள் தவித்த காலம். வடகிழக்கில் போர் ஒருபக்கம் - தெற்கில் ஜேவிபி அழிப்பு மறு பக்கமென திணறிய காலம். அப்போ யூ.என.பியின் ஆதிக்கத்தை அழிக்க - சந்திரிக்கா அரசியல் அரங்குக்கு வந்தபோது - அவவை ஒரு விடுதலையின் - சமாதானத்தின் வெண்புறாவாக வர்ணித்து அவருக்காக பிரச்சாரம் செய்தனர் எங்கட இந்த இடதுசாரிய துரோணாசாரிகள். நான் வாழும் நாட்டின் அரசு எனது துரோணருக்கு அத்தனை வசதியும் செய்து அவரை அங்கு அனுப்பியது.

அப்போது அவரும் மற்ற அறிவாளிகளும்- "இலங்கை மக்களுக்கு ஜனநாயக இடைவெளி தேவை", "சந்திரிக்கா இடதுசாரிய கட்சிகளுடன் அரசியல் செய்த பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்", " எஸ்.எல்.எவ்.பி (SLFP) தேசிய முதலாளிகளின் கட்சி", "தமிழ் மக்களுக்கு தீர்வு தந்து, புலிகளின் ஆதிக்கத்தை ஒழிப்பார்". எனவே நாம் சந்திரிகாவை ஆதரிப்போம் என்றார்கள்.

சந்திரிக்கா பதவிக்கு வந்தார். அதற்குப் பிறகு இலங்கையின் ஜனநாயகத்துக்கு என்ன நடந்தது. தமிழ் மக்களுக்கு எப்படி அவர் செம்மணி புதைகுழிகளை உருவாகிக் கொடுத்தார், வன்னி அவலங்களை எப்படி புலிளின் உதவியுடன் அரங்கேற்றினார் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயமல்ல. அல்லது புக்காரா விமானக் குண்டுகளையும், அதனால் ஏற்பட்ட சில ஆயிரக்கணக்கானோரின் கொலைகளும் மறக்கக் கூடிய விடயங்கள் அல்ல. அல்லது சந்திரிக்காவின் போசனயுடன் EPDP செய்த கொலைகளும், பத்திரிகையாளர் மீதனா வன்முறையும் - கொலையும் இலகுவில் மறக்கக் கூடியதல்ல.

ஆனால் மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், தனக்கு நல்லது செய்தவர்களுக்கு உபகாரம் செய்வதில் சந்திரிகா மிகவும் கைதேர்ந்தவர். EPDP இக்கு செய்தது போல, சந்திரிகாவுக்கு சேவகம் செய்யப்போன எங்கட இடதுசாரிய துரோணாசாரிகளுக்கும் அவர் எல்லாம் கொடுத்தார். EPDP தீவகத்தை ஆண்ட போதும், புலிகள் வன்னிக்குள் துரத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திலும், இடதுசாரிய துரோணாசாரிகள் அங்கு பொருளாதார அபிவிருத்தி பற்றி ஆய்வு செய்யப் போனார்கள். தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையில் பயணிக்கும் சொகுசுக் கப்பல்களிலும், ஐரோப்பிய ஹோட்டல்களிலும் சமாதனம் பற்றி வகுப்பெடுத்தார்கள். இவர்களின் சந்திரிகாவுடனான தேன்நிலவு அவரின் முதல் ஜனாதிபதிக் காலப்பகுதியுடனேயே முடிவுக்கு வந்தது.

காவடி 2

சந்திரிக்காவின் 2வது ஜனாதிபதிக் காலப்பகுதி முடிவுறும் நேரத்தில், எங்கள் துரோணர்களும், ஜனநாயகப்போராளிகளும் அவரின் ஆட்சியின் கொடுமையை இலக்கியமாக, கட்டுரையாக, ஆய்வுகளாக வடித்தார்கள். சந்திரிகாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமெனில் யூ.என.பியின் ரணிலை ஆதரிப்பதே ஒரே வழியென ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். மறுபடியம் நாங்கள் சீவிக்கும் நாடுகளின் ஆசீர்வாதத்துடன், இலங்கைக்கு காவடி எடுத்தார்கள்.

பாராளுமன்றத் தேர்தலில் ரணில் பிரதமரானார். புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் போட்டார். சந்திரிகாவின் ஆட்சியில் செய்தது போலவே மறுபடியும் அபிவிருத்தி, சமாதானம் பற்றிய ஆழமான ஆய்வை இலங்கையில் முன்னெடுத்தார்கள் எங்கள் துரோணர்கள். முன்பு போலவே சமாதானம் பற்றி வகுப்பெடுத்தார்கள். ஆனால் இவர்களின் ஆய்வுகளையும், சாமாதான வகுப்புகளையும் புலிகள் இரசிக்கவில்லை. அவர்கள் தமது அறிவாளிகளை ஆய்வுக்களத்தில் இறக்கினார்கள். இவர்கள் மறுபடியும் தம் புலம்பெயர்ந்த நாடுகளுக்குப் பெட்டி கட்டினார்கள். ஆனாலும் விக்கிரமாதிதர்களாக ஜனநாயகத்தை மீட்க, சமாதானத்தை உருவாக்க, 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட SLFP யின் வேட்பாளர் மஹிந்தவுக்கு எதிராக ரணிலுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இம்முறை எமது ஜனநாயகப் போராளிகளாலும், துரோணர்களாலும் இலங்கைக்குக் காவடி எடுக்க முடியவில்லை. காரணம் புலிப்பயம். இவர்கள் நினைத்ததும், ரணில் நினைத்ததும் நடக்கவில்லை. புலிகளின் மறைமுக ஆதரவுடன் மஹிந்தர் வென்றார்.

காவடி 3

தேர்தலை வென்ற மஹிந்தா சில வருடங்களிலேயே பாரிய யுத்தத்தை ஆரம்பித்தார். அதற்கு முன், அவர் "மனித உரிமைப் போராளியாக" 1989 களில் இருந்தபோதும், பின்பு சந்திரிகாவுடன் அரசில் இருந்தபோதும் சுவீகரித்த தொடர்புகள் ஊடாக மேற்படி புலம்பெயர் ஜனநாயகப் போராளிகளையும், ஆய்வாளர்களையும், இலக்கியச் செம்மல்களையும் தனது புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உதவி கோரினார்.

பிரச்சார உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காமலாவது இருக்குமாறு கோரினார். பிரசாரத்துக்கு உதவ விரும்பினால் அனைத்து வசதிகளும் செய்வதாக உறுதியும் அளித்தார். எங்கள் ஜனநாயகச் செம்மல்களில் பலர் மௌனம் காப்பதாக கூறினார். குறிப்பாக துரோணர்கள்.

சிலர் பகிரங்கமாக மஹிந்தவின் யுத்தத்துக்கு அதரவு தெரிவித்தனர். மஹிந்த அரசின் நிதியின் இயங்கிய வானொலிகளின் அரசியல் ஆய்வு செய்தார்கள். மஹிந்தவை சமாதானத்தின் புறாவாக வர்ணித்தார்கள். சிலமதம் சார்ந்த சர்வதேச நிறுவனங்களின் பெயரில் வழங்கப்பட்ட நிதியாதாரத்தின் உதவியுடன், இலங்கையர் சமாதான மகாநாடுகளை ஐரோப்பா தொடக்கம் கேரளா ஈறாக சிட்னியிலும் ஏற்பாடு செய்தார்கள். புலிகளும், மக்களும் அழிக்கப்பட்டார்கள்.

மஹிந்தவுக்கு இவர்கள் எவரும் தேவைப்படவில்லை. இவர்கள் கூறியதுபோல எந்தத் தீர்வையும் மஹிந்த தமிழ் மக்களுக்குக் கொடுக்கவில்லை. இடையில் மஹிந்தவின் 2வது காலத்துக்கான தேர்தல் நடந்தது. ஒரு பக்கம் கொலைகார ஜெனரல் பொன்சேகா - மறுபக்கம் யுத்தத் தளபதி மஹிந்த. இவர்களில் பெரும்பான்மையினர் கமுக்கமாக மஹிந்தவை ஆதரித்தனர். "இப்போ தானே யுத்தம் முடிஞ்சிருக்கு, கொஞ்சம் பொறுப்போம்" என்றார்கள். ஒன்றும் நடக்கவில்லை. மாறாக கொடுமைகளும், ஒடுக்குமுறையும் வரலாறு காணாத மட்டத்தில்.

காவடி 4

இப்போ மறுபடியும் தேர்தல். மஹிந்த என்ற கொலைகாரனை அகற்ற அவனுடன் சேர்த்து கொலைகளுக்கு துணைபோன மைத்திரி எதிர்க்கட்சி வேட்பாளன். நாட்டை மாறி மாறி அரசாண்டு அதைக் குட்டிசிச் சுவராக்கிய இரு கட்சிகளும், கனவான்களும், கொலைகாரர்களும் இரு பிரிவுகளாக பிரிந்து நின்று தமது சொந்த நலனுக்காக- அதிகாரத்துக்காக போட்டி இடுகின்றனர். மறுபடியும், எங்கள் துரோணரும் மற்றும் சில ஜனநாயகப்போராளிகள் - இலக்கியக் குஞ்சுகள், சில முஸ்லீம் மற்றும் சிங்கள மொழிபேசும் சகோதரர்களுடன் இணைந்து மைத்ரிக்கு காவடி தூக்கியுள்ளனர்.

மறுபடியும் 1994 இல் சந்திரிகாவை பதவில் அமர்த்த உபயோகித்த அதே கூக்குரல்கள், கோசங்கள். "இலங்கை மக்களுக்கு ஜனநாயக இடைவெளி தேவை" - "மைத்திரி இடதுசாரிய கட்சிகளுடன் அரசியல் செய்த பாரம்பரியம் கொண்டவர்." - "SLFP தேசிய முதலாளிகளின் கட்சி" - "தமிழ் மக்களுக்கு தீர்வு தருவார்கள்". இம்முறை இவர்களின் கூச்சல்கள் வெறும் ஒரு பக்க அறிக்கை வடிவில் மட்டுமே!.

அதுவும் இலங்கையிலிருந்து லண்டனுக்கும், நோர்வைக்கும், ஜெர்மனிக்கும் அனுப்பப்பட்ட ஒரு மத நிறுவனத்தின் "மனித உரிமை காவலர்" நேரடித் தலையீட்டாலும் மற்றும் ரணிலுடனான இரகசியப் பேச்சுகளாலேயே இந்த அறிக்கையும் சாதகமாகியுள்ளது. ஆனாலும் முன்புபோல இப்போ ஜொலிக்கவில்லை இவர்களின் ஆதரவு அறிக்கை.

ஆனாலும், மறுபடியும் இலங்கைக்கு காவடிஎடுக்க, ஆய்வு செய்ய, சமாதானம் கதைக்க, வழி பிறக்கும் என்ற நம்பிகையுடன்.... எனது துரோணர்களும், ஜனநாயக போராளிகளும் ...