Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நல்லூர் கந்தசுவாமியின் மேல் தூவப்பட்டவை பூக்கள் அல்ல, தமிழ் மக்களின் குருதி.

அவர் ஒரு ஆசிரியர், முருகபக்தர், சிவதீட்சை பெற்றவர். காலையும், மாலையும் தவறாமல் கோயிலிற்கு போய் முருகனை கும்பிடுபவர். அந்த ஊர் கந்தசுவாமி கோயில் பரிபாலனசபையின் தலைவர், செயலாளர் என்று தொடர்ந்து இயங்கியவர். அந்த ஊர் சனசமுகநிலையத்தை தொடங்கியவர்களில் ஒருவர். அவர் இருபத்தைந்து வருடங்கள் கோயிலிற்காகவும், ஊரிற்காகவும் இயங்கியதற்காக அந்த வருட திருவிழா முடிந்த பிறகு ஒரு விழா எடுத்து கெளரவித்தார்கள். அதில் கந்தசுவாமி கோயில் அய்யரை ஆசிரியரிற்கு மாலை போட கேட்டார்கள். ஒரு பிராமணனான நான் இவரிற்கு எப்படி மாலை போட முடியும் என்று பார்ப்பனியம் சாதி வெறுப்பை கொட்டியது. ஊர்மக்கள் கொடுக்கும் உயிரற்ற சம்பளப்பணத்திற்கு சாதி இல்லை. பணம் மேலானது. ஆனால் அதைக்கொடுக்கும் மனிதர்கள் கீழானவர்கள் என்பது தான் பிராமணத்துவத்தின் மகத்தான கண்டுபிடிப்பு.

ஆனால் அதே அய்யர் அடுத்த திருவிழாவிற்கு யாழ்ப்பாணத்து பொலிஸ் அதிகாரி ஒருவரை கையிலே காளாஞ்சி கொடுத்து கழுத்திலே மாலை போட்டு வரவேற்றார். அந்த ஊர் இளைஞர்கள் உட்பட பல தமிழர்கள் பொலிசாரால் கொலை செய்யப்பட்டு, சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு அரசபயங்கரவாதத்தை எதிர்கொள்ள தொடங்கிய நேரம் அது. ஆனால் சாதிவெறி பிடித்த அய்யரிற்கு கொலைகள் கண்ணிற்கு தெரியவில்லை. தன்னோடு வாழும், தன் வாழ்விற்கு பணம் கொடுக்கும் மனிதர்கள் இழிவானவர்கள், கொலை செய்தாலும், அன்னியன் ஆனாலும் அதிகாரத்தில் இருப்பவன் மேலானவன் என்பது தான் பார்ப்பனிய வேதம்.

அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். ஊரும், கடலும் தான் மனது முழுக்க நிறைந்திருக்கும். உழைத்த பணத்தில் பெரும்பகுதியை ஊருக்கும், தேவாலயத்திற்கும் உவகையோடு கொடுத்தவர். மனிதாபிமானி. பெற்றோரின் எதிர்ப்பால் வீட்டை விட்டு ஓடிய காதலர் இருவர், பின்பு ஊர் திரும்பி ஆலயத்தில் மணமுடிக்க கேட்டபோது மதச்சட்டங்களை காட்டி மதகுரு மறுத்தபோது மனிதரை விட மதம் பெரிதா என்று சினந்து கோயில் கதவை உடைத்து எறிந்தார். உடைத்த கதவை அவர் மறுபடி செய்து கொடுத்தபோதும், மதவெறி பிடித்த பங்குகுரு கோயில் புத்தகத்தில் மதச்சட்டங்களிற்கு எதிராக கதவை உடைத்தவர் என்று அவர் பெயரை வன்மத்தோடு பதிவு செய்தார். இந்த ஆண்டு அவர் இறந்தார். கிறீஸ்தவ வழக்கப்படி அவரது உடல் ஆலயத்திற்கு மரண ஆராதனைக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி மதகுருவால் மறுக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் பலகட்டிடங்களைக் கட்டிக் கொடுத்த மனிதரின் உடலிற்கு உளுத்துப்போன மதச்சட்டங்களை காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. மனிதத்திற்கு இடமில்லாத மதம் தேவையில்லை என்று சொன்ன மனிதன் என்பதால் அவரது உடலிற்கும் அனுமதி இல்லை என்று கோரமுகம் காட்டி நின்றது கோயில்.

கொழும்பு மறைமாவட்ட முன்னாள் பிசப்பும், கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தருமான ஒஸ்வால்ட் கோமஸ் முகம் மலர்ந்த சிரிப்புடன் கோத்தபாய ராயபக்சவிற்கு கலாநிதி பட்டத்தை அண்மையில் வழங்கினார். உன்னைப்போல் உன் அயலானை நேசி என்று யேசுநாதர் சொன்னதாக மூச்சு விடாமல் பிரசங்க மழை பொழியும் இவர்கள், தன்னை தவிர மற்ற எல்லோரையும் கொன்று குவிக்கத் துடிக்கும் கோத்தபாயாவிற்கு கலாநிதிப்பட்டம் கொடுப்பதற்கு கொஞ்சமும் தயங்கவில்லை. கோத்தபாய கொன்று குவித்த தமிழ்மக்களைப் பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை. பொதுபலசேனாவின் போசகனாக இருந்து கிறிஸ்தவ ஆலயங்களை இடிப்பவருக்கு பட்டம் கொடுப்பதைப்பற்றி எதுவித வெட்கமும் இல்லை. மனிதர்களிற்காக பேசிய மனிதனின் உடலிற்கு கூட அனுமதி இல்லை. ஆனால் அதிகாரத்தில் இருப்பவன் கொலைகாரன் ஆனாலும் அடிபணிவோம் என்பது தான் இவர்களின் பைபிள்.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் திருவிழாவின் போதும், நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போதும் இலங்கை இராணுவத்தின் விமானங்கள் வானிலிருந்து பூக்களை தூவின. தமிழ்மக்களின் மேல் தீப்பிழம்புகளைக் கொட்டி கொலை செய்த அதே விமானங்கள் தான் முருகனிற்கு பூக்களை தூவின. நல்லூர்க்கந்தன் இலங்கைத் தமிழ்மக்களின் இதய தெய்வம் என்று பீற்றிக் கொள்ளுபவர்கள் இலங்கைத்தமிழ் மக்களை கொன்றவர்களுடன் கூடிக்குலாவுகிறார்கள்.

எடுத்ததிற்கெல்லாம் சடங்கு, சம்பிரதாயம், வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது, ஆகமத்திலே விதியாக இருக்கிறது, அய்யர் தான் பூசை செய்ய வேண்டும், சமஸ்கிருதத்திலே தான் மந்திரம் ஓத வேண்டும் என்று ஊளையிடுவார்கள். கொலைகாரர்கள் விமானத்தில் பூத்தூவுவதற்கும் வேதத்தில் இடமிருக்கிறது போலும்.