Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அஞ்சலிகளும், ஆலவட்டங்களும்

சமூகம் குறித்து அக்கறையுடன் செயலாற்றுவதாக கூறும் பலர், அண்மையில் மரணித்த ஒருவரின் தன்னார்வ நிதி சார்ந்த ஏகாதிபத்திய செயற்பாடுகளையும் - ஏகாதிபத்திய நலன் சார்ந்த நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்த உண்மைகளை மறைத்து, அவருக்கு அஞ்சலிகள் செலுத்தினர். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் "அரசியல் - இலக்கியம் - கலைகளின்" பெயரில், நவதாராள - உலகமயமாதலை முன்னெடுத்த நபர்களுக்கு முண்டு கொடுத்து அதற்கு சாமரம் வீசினர். இந்த வகையில்

1.தன்னார்வ சமூக செயற்பாடுகளின நோக்கம் என்பது - உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த பாட்டாளி வர்க்க செயற்பாட்டை அழிப்பதற்கான ஏகாதிபத்திய அரசியல் நிகழ்ச்சி நிரலாகும். இந்த வகையில் நிதி உதவிகள் - உளவியல் செயற்பாடுகள் - வறுமையை நீக்க சுயநிதித் திட்டங்கள் - பெண்களுக்கான அமைப்புகள் - ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான அமைப்புகள் - ஜனநாயக அமைப்புகள்... என்று புற்றீசல் போல், பல ஆயிரக்கணக்கான தன்னார்வ அமைப்புகளை ஏகாதிபத்தியங்கள் தங்கள் நிதி ஆதாரங்களில் இயக்குகின்றன. இதன் மூலம் மக்களுக்கான வர்க்க செயற்பாடுகளை முடக்கி, வர்க்க சக்திகளை தங்கள் சம்பளப் பட்டியலில் கொண்டு வந்து, நவதாராள - உலகமயமாதல் பொருளாதாரக் கட்டமைப்பையே பாதுகாக்கின்றனர்.

2. நேரடியாக ஜனநாயகம் - நீதி - சட்டம்... போன்றவற்றை முன்வைத்து, ஏகாதிபத்தியங்கள் உள்ளுர் தரகர்களை உருவாக்கி அதன் மூலம் செயற்படுகின்றன. தேர்தல் வழிமுறை மூலம் அனைத்து மக்களுக்கும் மாற்றத்தையும் - ஜனநாயகத்தையும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை கொடுத்து, நவதாராளவாத அரசை பாதுகாக்கின்றனர்.

இந்த இரண்டிலும் அல்லது ஒன்றில் ஈடுபடுபவர்களை, மக்கள் சார்ந்த செயற்பாட்டாளராக காட்டுவது தான் ஏகாதிபத்தியத்தின் வெற்றியும் கூட. இந்த வகையில் அதை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினதும் - ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரிலும் தூக்கி முன்னிறுத்துகின்ற, கொள்கை கோட்பாடற்ற அரசியல் - இலக்கியம் என்பது, மக்கள் விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டது.

இந்த வகையில் அண்மையில் மரணித்த ஏகாதிபத்திய செயற்பாட்டாளரை -முன்னிறுத்திய அஞ்சலிகள் என்பது கேள்விக்குள்ளானது.

இவர்களின் "முற்போக்கு" என்பது, தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தும் சுயநலனாகி விடுகின்றது. தங்கள் சுய அடையாளத்தை வெளிப்படுத்த "எழுத்தாளர் - இலக்கியவாதி - பெண்ணியவாதி - கலைஞன் ..." என்று சுய தகுதியை நிலைநாட்டுகின்றவர்கள், மக்களுடனான வாழ்வியல் நடைமுறையில் இணைந்து இருப்பதில்லை என்பது மற்றொரு உண்மை.

இந்த வகையில் வெறும் அடையாளங்களை முன்னிறுத்திக் கொண்டு அரசியல் - இலக்கியம் பேசுகின்றவர்கள், மக்களுக்கான நடைமுறை என்று வரும் போது அவர்களைக் காண முடியாது. ஆனால் ஏகாதிபத்தியம் சார்ந்த மக்கள் விரோதிகளாகவுள்ள "எழுத்தாளர்கள் - இலக்கியவாதிகள் - பெண்ணியவாதிகள் - கலைஞர்களின் ..." நடைமுறைகளை முன்னிறுத்திக் கொண்ட, தங்களை சுய அடையாளங்களை தக்கவைக்கின்றவர்களாக, இறுதியில் கொள்கைகளும் - கோட்பாடுகளுமற்றவர்களாக பலர் வெளிவருகின்றனர்.

விலாங்கு மீன் போன்று அங்குமிங்கும் நழுவி கொள்கின்றவர்களால், மக்கள் சார்ந்த கருத்துகள் - சிந்தனைகள் - நடைமுறைகள் பின்தள்ளப்படுகின்றது.

ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்களில் பணம் சார்ந்த உலகமயமாக்கும் சமூக சார்ந்த செயற்பாடுகளையும் - ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சிநிரலையும், தங்கள் கொள்கையாக - கோட்பாடாகக் கொண்டு செயற்படுபவர்களை, மக்களின் நண்பனாக - தோழனாக காட்டும் அருவருக்கத்தக்க அரசியல் - இலக்கிய விபச்சாரங்கள் அரங்கேறுகின்றன.

மக்களைப் பற்றி அக்கறையற்றதும் - அவர்களின் வாழ்வை சூறையாட ஏகாதிபத்திய நிகழ்சிகளை தங்கள் கொள்கையாகக் கொண்டவர்களை முன்னிறுத்தி, தங்கள் சுய அடையாளங்களைத் தக்கவைக்கும் அளவுக்கு "முற்போக்கு" என்ற அரசியல் என்பது, கலாச்சார ரீதியாக சீரழிந்துவிட்டதை அண்மைய நிகழ்வுகள் மீள எடுத்துக் காட்டுகின்றது.

"எழுத்தளார் - பெண்ணியவாதி - ஜனநாயகவாதி..." என்ற குறுகிய அடையாளங்களைக் கொடுத்தும், தன்னார்வ - ஏகாதிபத்திய அடையாளத்தை மறைத்தும், தங்கள் சுய அடையாளங்களை முன்னிறுத்துகின்றவர்கள், உண்மையில் மக்களுக்கு எதிரானவர்கள். "ஜனநாயகம், பெண்ணியம் ... " போன்றவற்றை ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்குள் முன்னிறுத்திக் காண்பதும் - முன்னெடுப்பதும் - அதையே போற்றுவதுமாக மாறிவிடுகின்றது. இறுதியில் இதை "முற்போக்காக - சமூக மாற்றாக .." முன்தள்ளுகின்றனர்.

இதன் மூலம் மக்களை நவதாராள - உலகமயமாக்கலுக்குள் தள்ளிவிடுகின்ற - விற்றுவிடுகின்ற - சமூக பிரச்சனைக்கு இதை தீர்வாக காட்டி, தங்கள் சுய நடத்தைகள் மூலமும் இதை முன்னிறுத்துவதன் ஊடாக, சுய அடையளம் சார்ந்த சுயநலனை முற்போக்காக முன்தள்ளுவதை இன்று எழுத்து உலகில் நாம் காணமுடிகின்றது. மக்களுக்கான உண்மையான நடைமுறைகள் மூலம் இதை முறியடிப்பதன் ஊடாகவே, ஏகாதிபத்திய அடிவருத்தனத்தையும் - சந்தர்ப்பவாத அடையாளப் பிழைப்புவாதத்தையும் தோற்கடிக்க முடியும்.