Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தலில் "முற்போக்குகளின்" சிந்தனை முறை!?

அரசியல் - இலக்கியம் - கலை என்று தங்களை "முற்போக்காக" காட்டிக் கொள்கின்றவர்கள் பெரும்பாலனவர்கள், தேர்தலின் போது தன் இனத்தில் இருந்து அணுகுகின்ற இனவாதத்தையே முன்தள்ளினர். இனவாதத்துக்கு எதிரான சிந்தனை முறை என்பது, தன் இனத்தைக் கடந்து அனைவரையும் மனிதனாக அடையாளப்படுத்தி அணுக வேண்டும். தமிழன் - சிங்களவன் என்ற குறுகிய இன அடையாளங்களில் இருந்து தேர்தலை அணுகுவதானது இனவாதத்தின் உள்ளடக்கமாகும். இடதுசாரிகள் மட்டும் தான் இனவாதத்துக்கு எதிராக அனைவரையும் மனிதர்களாக அடையாளப்படுத்தும் அதேவேளை தன் இனத்தை முன்னிறுத்தி தேர்தலை அணுகுவதில்லை.

இதற்கு மாறாக தன் இனம் சார்ந்த ஒரு தரப்பையோ அல்லது பல தரப்பையோ அம்பலப்படுத்தி - தன் இனத்தை முன்னிறுத்திய "முற்போக்கு" கூட இங்கு இனவாதமாகும். இங்கு இவர்களின் அம்பலப்படுத்தலானது, தன் இனத்துக்கு இவர்களால் லாபமில்லை என்ற குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்து எழும் இனவாத விமர்சனமாகும்.

முற்போக்கு தளத்தில் தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றவர்கள் (புலம் - இலங்கை) தேர்தல் காலத்தில் எழுதிய கட்டுரைகள் தொடக்கம் சமூக வலை தளத்தில் (பேஸ்புக்கில்) பாரிமாறிய கருத்துகள் வரை தன் இனத்தை முன்னிறுத்தியதைக் காணமுடியும். இந்த சிந்தனை முறை என்பது, அடிப்படையில் இனவாதமாக இருக்கின்றது.

தமிழ் - சிங்கள மொழி சார்ந்து அரசியல் பேசுகின்ற இனவாதிகளுக்கு நிகராகவே, அரசியல் - இலக்கியம் - கலை என்ற "முற்போக்கு" பேசுகின்றவர்களின் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இலங்கையில் இருப்பவர்கள் தங்கள் வாக்குகளை எதற்கு போட்டு இருப்பார்கள் என்று கேள்வியை எழுப்பினால் - அவர்கள் தங்கள் இனத்தை முன்னிறுத்திய ஏதோ ஒரு இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிக்கே என்பது வெளிப்படையான உண்மையாகும்.

இவர்களில் இனவாதத்துக்கு எதிராக வாக்களிக்கக் கோரியோ - நாங்கள் இடதுசாரித்துக்கே வாக்களிக்கின்றோம் என்று வெளிப்படையாகவும் - நடைமுறை ரீதியாக சொன்னவர்கள் - அதைச் செய்தவர்கள் இன்று எத்தனை பேர்!?

இனவாதம் தொடர்ந்து இலங்கையில் வெற்றி பெறுவதில் "முற்போக்கு" ஊடான இனவாதம் முக்கிய பங்கை ஆற்றுகின்றது. எப்படி இடதுசாரிய கட்சி பெயரில் முதலாளித்துவக் கட்சிகள் மூலம் இனவாதம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றதோ, அதேபோல் அரசியல் - இலக்கியம் - கலை மூலம் சமூத்துடன் பேசுகின்றவர்களின் மூலமான இனவாதம், சமூகத்தை இனவாத சகதிக்குள் வாக்களிக்க வைக்கின்றது. இந்தத் தேர்தலிலும் அதுவே நடந்தது.