Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தாவின் காலனிக்குள் உட்செல்லவோ வெளியேறவோ அனுமதி இல்லை

காணாமல் போன தங்கள் உறவுகளை மீட்டு தாருங்கள் எனக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த வடக்கிலிருந்து வரவிருந்த மக்கள் வவுனியாவில் வைத்து பாதுகாப்பு தரப்பினரின் கூட்டு முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 5 ம் திகிதி இரவு வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து சுமார் 700 பேர் வரை 10 ற்கும் மேற்பட்ட பேருந்துகளில் கொழும்பு நோக்கி புறப்பட ஆயத்தமான மக்களை வவுனியாவிற்கு அப்பால் பாதுகாப்பு தர முடியாது என்றும் அனர்த்தம் இருப்பதாகவும் 6 ம் திகதி காலை புறப்படுமாறு கூறி மக்களை பொலீசார் தடுத்து நிறுத்தினர்.

இராணுவம் தன் கனரக வாகனங்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தி வீதிகளை மறித்து நின்றது. புலனாய்வு காடையர்கள் மக்கள் வாடகைக்கு அமர்த்தி இருந்த பேருந்துகளின் சாரதிகளை அச்சுறுத்தினர். 6ம் திகதியும் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தப்பட்டது. ஆத்திரமடைந்த மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததோடு வவுனியா செயலகத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடந்த வருடம் யாழில் வைத்து கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் லலித் மற்றும் குகன் உட்பட கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம் மேற்க்கொள்ளச் சென்ற 1200 ற்கும் மேற்ப்பட்டவர்கள் பயணித்த வாகன தொடரணி வவுனியாவில் வைத்து இதேபோன்றே பொலிசாரினாலும் இராணுவத்தினராலும் மறிக்கப்பட்டது. வீதி சேதமடைந்துள்ளது, பாலம் பழுதடைந்து உள்ளது என காரணம் கூறினர்.

ஆக்ரோசமாக ஆர்ப்பரித்த மக்கள் தடையை மீறிச் சென்ற போதும் ஆயுதம் கடத்தப்படுகின்றது என தாண்டிக்குளம் ஒமந்தை ஆகிய இடங்களில் சோதனை செய்து தாமதிக்க செய்தனர். இதே பாணியில் சாரதிகளை அச்சுறுத்தியமை, ஆணியறைந்த பலகைகளை வீதியில் எறிந்தமை எல்லாம் நடந்தது. இறுதியாக புளியங்குளத்தில் வாகனங்களை மறித்து காட்டு பாதையில் அனுப்பவே புளியங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு திரும்பினர் மக்கள் போராட்ட குழுவினர்.

இவை ஒரு வருட இடைவெளியில் நடந்த சம்பவங்கள். இரண்டிலும் எவ்வித மாற்றங்களும் இல்லை. சர்வாதிகாரி மகிந்த வடக்கை தான் யுத்தம் செய்து வென்ற காலனியாகவே பார்க்கின்றார். மகிந்தவின் காலனிக்குள் அனுமதியின்றி யாரும் பிரவேசிக்கவோ, வெளியேறவோ முடியாது.

காலனியாட்சியை போல் வடக்கு இன்று மகிந்தவின் இராணுவ தளபதிகளினாலேயே ஆளப்படுகின்றது. மேலும், காணாமல் போனவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வு துறையினர் அவர்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

மறுபுறம், காணாமல் போனவர்களின் உறவுகளின் துயரம், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் செல்வாக்கு சரியும் போதெல்லாம் தூக்கி நிறுத்த பயன்படும் எப்போதும் தயார் நிலையிலிருக்கும் பண்டமாகிவிட்டது. ஜெனீவாவை மையமாக வைத்து செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அரசாங்கத்தை எதிர்க்கவும் கையிலெடுக்கப்பட்ட விடயமாகியுள்ளது.

காணாமல் போனவர்களின் பிரச்சனை பாரதூரமான சமூக பிரச்சினையாகும். இதனை அரசியல் இலாப நோக்கத்திற்காக பயன்படுத்தாது, பயன்படுத்தவிடாது சமூக கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டங்களே அவசியமானதாகும்.