Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்

இலங்கையில் மரணதண்டனையை மீள அமுல்படுத்தும் யோசனைக்கு ஆதரவும் - எதிர்ப்பும் கட்டுரைகள், அறிக்கைகள், பேச்சுக்கள் வாயிலாக காட்டப்பட்டு வருகிறது. அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மறியல் பேராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சக்திகள் எதுவும் இன்று இலங்கையில் இல்லை. எதிர்காலத்திலும் அதற்குத் தேவையான துணிச்சல் படைத்த மனிதாபிமான சக்திகள் உருவாகக் கூடிய சாத்தியங்களும் மிக மிகக்குறைவு. குடிமக்களின் இன்றைய மனோநிலையில் அப்படியான சாத்தியம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இதற்கான காரணம் “லாபம்” என்ற ஒன்றுதான். “மரணதண்டனைக்கு” எதிராகப் போராடுவதனால் யாருக்கு என்ன லாபம்? என்று கேட்டால் “யாருக்கும் லாபம் எதுவுமில்லை” என்றே பதில் கிடைக்கும். மாறாக “மரண தண்டனை” இருந்தால் சில குற்றங்களைத் தடுக்கலாம் அல்லது குறைக்க முடியும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட சிந்தனையே சாதாரண குடிமக்கள் மத்தியில் நிலவுகிறது.

 

மனித உரிமையை மதிப்பவர்கள் - மனிதநேயம் கொண்டவர்கள் - மனித உயிரின் மதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே “மரணதண்டனையை” எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். சாதாரண குடிமக்கள் அது பற்றிய ஆழமான புரிதல் இன்றியே “மரணதண்டனை” விவகாரத்தைப் பார்க்கிறார்கள். அது “குற்றச் செயல்களை தடுக்கும்” என்ற அரசியல் பிரச்சார விளம்பரத்தை நம்புகிறார்கள்.

இன்றைய உலகில் “மரணதண்டனைக்கு எதிரான உலகக் கூட்டணி” என்ற அமைப்பு பெரும்பாலான நாடுகளில் “மரணதண்டனையை நிறுத்து” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அக்டோபர் 10ஆம் நாள் “மரணதண்டனைக்கு எதிரான நாள்” என ஐ.நா.சபை அங்கீகரித்துள்ளது. உலகம் முழுவதும் “மரணதண்டனை”யை நிறுத்தக் கோரி தொண்டர்கள் வீதிகளில் பொது இடங்களில் அதற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று 56 நாடுகளில் மரணதண்டனை நடைமுறையில் உள்ளதாகவும் 142 நாடுகளில் அது நிறுத்தப்பட்டுள்ளதாகவும்  “மரணதண்டனை தகவல் மையம்”(Death Penalty Information Center) தெரிவிக்கிறது.

இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்பாளர் ஆட்சியில் நடைமுறையில் இருந்த ‘மரணதண்டனை’ இனவாத பௌத்த துறவிகளுடைய ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அரசாங்கத்தால் 1956ல் நிறுத்தப்பட்டது. ஆனால் அவரை ஆட்சியில் அமர்த்திய பௌத்த துறவி ஒருவராலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து 1959ல் மரண தண்டனை மறுபடி அமுலுக்கு வந்தது. 1976ல் அது மீண்டும் நிறுத்தப்பட்டது.

அண்மையில் இலங்கையில் மறுபடி ‘மரணதண்டனையை அமுல்படுத்த வேண்டும்’ என்ற ஜனாதிபதியின் அறிவித்தலைத் தொடர்ந்து அது பற்றிய விவாதங்கள் பிரதிவாதங்கள் நாளாந்தம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அவைகள் யாவும் மனிதாபிமான செயற்பாட்டு அமைப்புக்களால் மட்டுமே இது வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதுவும் இது பற்றி  அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு சில கட்சிகள் அறிக்கைகள் ஊடாக தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளன. மனித உரிமை மீறல் என அரசாங்கத்திற்கு எதிராக நாளும் பொழுதும் கூச்சல் போடுகிற கட்சிகள் எதுவுமே இது பற்றி வாய் திறக்கவே இல்லை.

இந்த “மரணதண்டனை” விவகாரம் ஜனாதிபதியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. “போதைவஸ்துக் கடத்தல் குற்றத்திற்கான நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் மரணதண்டனை பெற்று பின் ஆயுள் கைதிகளாக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சிலருக்கே இத் தண்டனை நிறைவேற்றப்படல் வேண்டும். சிறையில் இருந்த வண்ணம் நாட்டில் தொடர்ந்தும் போதைவஸ்து கடத்தல் குற்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த ஒரேயொரு வழி மரணதண்டனையை அமுல்படுத்துவது ஒன்றேதான்” என்பதே ஜனாதிபதியின் வாதமாகும். ஜனாதிபதியின் இந்த வாதத்தை சற்று ஆழமாக உற்று நோக்கினால் அதில் எள்ளளவும் உண்மையில்லை என்பது புரியும்.

இலங்கையில் போதைவஸ்துக் கடத்தல் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. அதற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. 1970களில் உல்லாசப் பயணிகளின் வருகையுடன் இந்தப் போதைவஸ்து பாவனை தென்னிலங்கையில் பரவத் தொடங்கியது. குறிப்பாக 1977ல் திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்த தொடங்கியதன் பின்னர் 1980களில் நாட்டின் பாடசாலைகளைச் சுற்றி அது பாவனைக்கு வந்திருந்தது. 1978ம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி ஆட்சிமுறைமை நடைமுறைக்கு வந்த நாள் முதற்கொண்டு இலங்கையில் நீதி-சட்டம்-ஒழுங்கு நடைமுறைகளில் அரசியல்வாதிகளின் தலையீடு ஆரம்பமானது. அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய மறுத்த நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டனர். அவமானப்படுத்தப்பட்டனர். அவர்களின் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகின. நீதித் துறையின் சுதந்திரம் அரசியல்வாதிகளினால் பறிக்கப்பட்டதனைத் தொடர்ந்து போதைவஸ்து வியாபாரம் களை கட்டத் தொடங்கியது.

22 மார்ச் 1984ல் பாராளுமன்றத்தில் “1929ஆண்டு நஞ்சு, அபின், ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத் திருத்தம்” தொடர்பான விவாத உரையின் போது அதனை ஆதரித்து அன்றைய கல்வி மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் “மரண தண்டனை மிகவும் கடுமையானது என சிலர் நினைக்கக் கூடும். நான் அப்படி நினைக்கவில்லை. பல நாடுகள் அதனை அங்கீகரிக்கும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன” என உரையாற்றி இருந்தார். அந்த திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்தே போதைவஸ்து தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரணதண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழல் நாட்டை அதற்கு சாதகமான விளைநிலம் ஆக்கிவிட்டிருந்தது. அதே காலப்பகுதியில் சர்வதேச போதைவஸ்துக் கடத்தலின் போக்குவரத்து மையமாக இலங்கை மாற்றமடைந்தது. போதைவஸ்து தாதாக்கள் அதனால் ஈட்டிய பண(ம்) பலத்தால் அரசியல்வாதிகளையும் அரச நிர்வாகத்தையும் தமது தேவைக்கேற்ப பயன்படுத்த ஆரம்பித்தனர். அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்களைப் பங்குதாரர் ஆக்கியது. அதனூடாக அவர்கள் கட்சிப் பிரமுகர்களாகி மக்கள் பிரதிநிதிகளாகினர். அரசாங்க ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் கட்சிகள் அவர்களை உற்சாகம் ஊட்டி வளர்த்தன. நீதியும் சட்டமும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயற்பட்டது. 18 மே 2009ன் யுத்த வெற்றியை உரிமை கொண்டாடி அதனைத் தமது அரசியல் மூலதனமாக்கி சர்வாதிகார நடைமுறைகளை முன்னெடுத்த முன்னைய ஆட்சியாளர்கள் இந்த போதைவஸ்து பிரச்சனையை கண்டு கொள்ளவேயில்லை. மாறாக அது தொடர்பானவர்களை பாதுகாத்தே வந்தனர்.

2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒரு கட்டத்தில் அப்போதைய “சர்வாதிகார”அரசாங்கத்தினால் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்ட போது தேடப்பட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக மீட்கப்பட்டனர். அத்தகைய அரச நடவடிக்கையின் உச்சக் கட்டமாகவே யூன் 2012ல் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் அரசபடை அத்துமீறிப் புகுந்து 27 கைதிகளை கொன்று குவித்தது. அதற்கான விசாரணையை அன்றைய ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை.

2015ல் வந்த “நல்லாட்சி”யில் அப்படுகொலைக்கான வழக்கைத் தொடர்ந்த குடிமகன் ஒருவர் பல கொலை முயற்சிகளின் மத்தியிலேயே அந்த விசாரணைக்கு இன்றும் முகம் கொடுத்தபடி உள்ளார். முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர்கள் பலர் பங்காளிகளாக இருக்கும் இன்றைய ‘நல்லாட்சி’அரசாங்கத்தின் பதவிக் காலத்தினுள் இந்த வழக்கு முடிவுக்கு வருவதற்கான சாத்தியம் தற்போது இல்லை. அத்துடன் இந்த வழக்கை எதிர்காலத்தில் முடக்கி மூடி முற்றுப்புள்ளி இடக்கூடிய ஒரு சர்வாதிகார ஆட்சிமுறைமையை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகளே இன்று இலங்கை அரசியல் பரப்பில் மிகையாக காணப்படுகிறது.

இந்தப் பின்னணியில் “மரணதண்டனை”யை நாட்டில் மீள நடைமுறைப்படுத்துவது என்ற வாதம் குற்றங்களை தடுப்பதற்கு அல்லாமல் வெளியே தப்பியிருக்கும் முக்கிய குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக என்றே ஆகிறது. “நல்லாட்சி” வந்த நாள் முதல் முன்பு கிடப்பில் போடப்பட்டிருந்த பல பாரதூரமான கொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. ஆனால் அந்த விசாரணைகளின் நடைமுறை குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பாணியிலேயே இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு அரசாங்கத்தின் சகல அதிகாரக் கட்டமைப்புகளையும் மீறி சிறையில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு குற்றவாளி தான் நினைப்பதை சிறைக்கு வெளியே நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும் என்றால் அந்த நாட்டை ஆட்சி செய்வது ஒரு “தோல்வியடைந்த அரசு” என்றாகிறது. எனவே ஜனாதிபதியின் வாதம் “நல்லாட்சி” தோல்வி அடைந்ததை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறதாகவே அமைகிறது.

“உயிர்களை கொல்லக் கூடாது” என உபதேசிக்கும் பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களை பெரும்பான்மையினராக கொண்ட ஒரு நாட்டில் - அவர்களின் பிரதிநிதிகளே காலங்காலமாகத் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரு நாட்டில் - பௌத்த மதம் அரச மதம் என பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில்  “மரணதண்டனை நாட்டில் குற்றங்களைத் தடுக்கும்” என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஒருவர் வாதிடுவது போக்கிரித்தனமான (scoundrel) அரசியல் செயற்பாடாகும். பணத்திற்காக எதனையும் செய்யத் துணிந்த ஒரு புதிய தலைமுறையை நாட்டில் உருவாக்கி வளர்த்து விட்டுக் கொண்டு சட்டங்களை நிறைவேற்றுவதனால் குற்றங்கள் குறையப் போவதில்லை.

ஆனால் இந்த போக்கிரித்தன அரசியல் நடவடிக்கை காரணமில்லாமல் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் நமது நாட்டில் ஒரு “பயங்கரமான” திட்டத்தை நிறைவேற்ற வேண்டி எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

இன்றைய இலங்கை தனது இறைமையை முற்றாக இழந்த ஒரு நாடாகவே இயங்குகிறது. சர்வதேச நாடுகளின் வட்டியுடன் கூடிய-வட்டியில்லா கடன், நன்கொடைகள், உலக வங்கி - சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் நிபந்தனைகள் கொண்ட நிதி உதவி ஆகியவையே இன்றைய இலங்கையை,  அதன் ஆட்சியில் அமர்வோரை நெறிப்படுத்தி இயக்கி வருகின்றன. அரசாங்கத்தை அமைப்போர் பழைய காலனித்துவ தரகர்களாகவும், ஏகாதிபத்தியங்களின் தூக்குக் காவடிகளாகவும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலைமையில் கடந்த பல வருடங்களாக நாட்டில் அமுலுக்கு வந்திருக்கும் புதிய தாராளவாதப் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையின் ஆட்சிமுறைமையைத் தனது சுரண்டல் கொள்ளைக்கு ஏற்றதாக மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதன் வெளிப்பாடே இந்த “மரணதண்டனை” விவகாரமாகும்.

இன்று இலங்கையின் நில-நீர்-கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. இந்நிறுவனங்கள் தமது புதிய தாராளவாதப் பொருளாதார பொறிமுறைமையை “அபிவிருத்தி” என்ற பெயரில் நாட்டில் நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தப் பொறிமுறை மனிதர்களை அதாவது குடிமக்களை இயந்திரங்களாகவே கணிக்கிறது. எனவே தமக்கு இடப்படும் கட்டளைகளை மறுபேச்சின்றி நிறைவேற்றும் மனித இயந்திரங்களே அதற்குத் தேவை. அதாவது நவீன அடிமைகள் தேவை. அதற்காக ஜனநாயகம் என்று கூறி அநியாயம் செய்வதற்கு தேர்தல்களைப் பாவிக்கிறார்கள்.

குடிமக்கள் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கிப் பரவ விட்டிருக்கும் “விளம்பர நுகர்வுக் கலாச்சார” ஆதிக்கத்துக்குள் சிக்குண்டுள்ளார்கள். அதனால் பணத்திற்காக எதனையும் செய்யத் தயராக உள்ளனர். உள்நாட்டுப் பிரச்சனைகளில் மூழ்கித் தத்தளிக்கும் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தங்களுக்குத் தாளம் போடக் கூடிய ஆட்சியாளர்களை ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்ய இந்த “விளம்பர நுகர்வுக் கலாச்சாரம்” பயன்படுத்தப்படுகிறது. மக்கள் எதனைப் பார்க்க வேண்டும்? எதனைப் படிக்க வேண்டும்? எதனைச் சிந்திக்க வேண்டும்? என்பதை இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன. இதற்கான நடைமுறைக்கு ஏற்ப இயங்கும் (இந்த நிறுவனங்களின்) அடியாட்களே இப்போதைய தேர்தல்களில் பிரதிநிதிகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே இலங்கையில் இந்த நிறுவனங்களின் செயற்பாடுகளுக்குத் தடையாக நிற்பவர்களை அதனை எதிர்த்துப் போராடுவோரை-கண்டித்ததுக் குரல் கொடுப்போரை வன்முறை மூலம் அடக்கி ஒடுக்கி சிறையில் தள்ளும் இன்றைய அரசாங்கம் ஒரு கள்ள நோக்கத்தோடு தான் “மரணதண்டனை”யை ஒரு ஆயுதமாக கையில் எடுக்க முற்படுகிறது. போதைவஸ்து என்பதனை சாட்டாக வைத்து நாளை அமுலுக்கு வரவிருக்கும் “மரணதண்டனைச் சட்டம்” நீண்டகாலமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் நீதி - சட்ட - பாதுகாப்புத் துறைகளின் துணையோடு நாட்டை ஆள்பவர்கள் தாங்கள் நினைத்தபடி எவரையும் தூக்குக் கயிற்றில் தொங்கவிட்டு வேடிக்கை பார்க்க வழி வகை செய்யும் என்பது திண்ணம்.