Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மரணங்களால் குவிக்கப்பட்ட பணமும் கல்லறைகளின் மேல் கட்டப்படும் கோபுரங்களும்

அன்று தொட்டு இன்று வரை இலங்கையில் “இனப்பிரச்சனை’’ சிலருக்கு வளமான வாழ்க்கையையும் பலருக்கு துன்ப-துயரங்கள் குறையாத வாழ்வையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. சுதந்திரம் பெற்று குடியரசாக மாற்றம் பெற்ற ஒரு சனநாயக நாட்டில் - தெற்கில் இளைஞர்களின் கிளர்ச்சியிலும் வட கிழக்கில் இளைஞர்களின் எழுச்சியிலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்ட ஒரு நாட்டில் - சர்வாதிகாரத்தை ஒழித்து சனநாயகத்தை மீட்டு நல்லாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் மக்களைக் கொன்று குவிக்கும் அரசியல் பாரம்பரியம் இன்றும் தொடர்ந்து அதே பழைய பாணியில் சென்று கொண்டிருக்கிறது.

68 ஆண்டுகளாக எமது அரசியல் பயணம் ஒரே வட்டப் பாதையிலேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஓவ்வொரு தேர்தலின் போதும் நடிகர்களும் வேடங்களும் அலங்காரங்களும் நிறங்களும் வசனங்களும் புதியதாக காட்டப்படுகிறது. ஆனால் கதையில் மாற்றம் இல்லை. கதையின் கரு “இனவாதம்” என்றுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனையே நாமும் மாறி மாறி எமது வாக்குகள் ஊடாக ஆதரவு அளித்து அவர்களை நாயகர்களாக அங்கீகரித்து அடிபணிந்து ஆலவட்டம் பிடித்து அடிமைச் சேவகம் செய்து வருகிறோம்.

நாட்டில் நடந்து முடிந்த யுத்தம் சிலரைக் கோடீஸ்வரர்களாகவும் பலரை ஒட்டாண்டிகளாகவும் ஆக்கியுள்ளது. அரசியல்வாதிகள் ஆண்டனுபவிக்கிறார்கள். ஆதரித்த குடிமக்கள் ஆண்டிகளாக அலைகிறார்கள். அன்று மக்களுக்காகத் தமது வாழ்க்கையைத் தியாகம் பண்ணியவர்கள் இன்று பரிதவித்து நிற்கையில் அவர்களை இந்த நிலைமைக்குத் தள்ளியவர்கள் சுகபோகத்தில் மிதக்கிறார்கள். அன்று நாடு பூரா கல்லறைகள் கட்டப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று ஊர் ஊராகக் கோபுரங்கள் எழுப்புகிறார்கள்.

இவற்றை நாங்கள் “கண்ணிருந்தும் குருடர்களாக” தொடர்ந்தும் அனுமதிக்கப் போகிறோமா? இல்லையெனில் எமது எதிர்கால நல்வாழ்வுக்காக நாட்டின் அரசியலை நமது கையில் எடுக்கப் போகிறோமா? இதுவே இன்று குடிமக்களாகிய எம்முன்னே எழுந்து நிற்கும் மாபெரும் கேள்வி (?).

எமது சிந்தனை மாறாதவரை எமது வாழ்வில் மாற்றம் ஏற்படாது. எமது வாழ்க்கை முறை மாறாதவரை எமது அரசியலில் மாற்றம் வராது. எமது குடிமக்கள் மத்தியில் இந்த சிந்தனை மாற்றம் ஏற்படுவதைத் தடுத்து நிற்பது யாது? அதற்கான காரணங்கள் எவை? தொடர்ந்தும் எமது அடிமை மனப்பான்மையை வளர்க்கும் சக்திகள் யார்?

நாம்தான் காரணம். நமது கல்வி-வளர்ப்பு-கலாச்சாரம்-பண்பாடு இவைகள்தான் காரணம். நாம் நம்மை மனித சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதி வாழப் பழகாதவர்கள். அடுத்தவனும் நம்மைப் போல் வாழ்வதற்கு உரிமை படைத்தவன் என்ற மனப்பான்மை இல்லாதவர்கள். எமக்கு ஊட்டப்படும் கல்வி பணம் குவிப்பதையே இலக்காகக் கொண்டதே அன்றி வேறெதெற்கும் இல்லை என்ற கட்டுப்பாடு உடையவர்கள். பரீட்சையில் சித்தியடைந்து பட்டங்கள் பல பெற்று நிபுணர்கள் ஆக விளங்கும் நாம் “அறிவு” இல்லாதவர்களாகவே வாழ்கிறோம்.

கோடி கோடியாக பணத்தை தேடிக் கொள்ளத் தெரிந்த நாங்கள்-தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாங்கள் “அறிவை”க் கோட்டை விட்டதனாலேயே முன்னர் இருந்ததையும் இழந்து இன்று அரசியலில் அம்மணமாக “கையறு நிலையில்” நிற்கிறோம். போராட்ட காலத்தில் மரணித்த மக்களின் தொகையைக் கணக்கெடுத்துப் பார்த்து அரசியல் செய்த நமக்கு அதனால் நாட்டில் உயிர் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட அரசியல் தாக்கங்கள் பற்றி கரிசனை கொள்ளும் “அறிவு” இல்லாமல் போய் விட்டது.

இற்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர் “சமஷ்டி” கேட்டுத் தொடங்கிய அரசியல் “சன்னதம்” எடுத்தாடி “சங்காரம்” கண்டு இன்று “சமரசம்”என முடிந்துள்ளது. எமது அரசியல் தலைமைகள் மக்களை சுழலும் ராட்டினத்தில் ஏற்றிச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கிறனர். இன்று “இணக்க அரசியல்” - “புதிய அரசியல் சட்டம்” - “சர்வதேச அழுத்தம்” என்பவை புதிய “கிலுகிலுப்பைகள்” ஆக மக்களுக்குக் காட்டப்படுகிறது.

எமது நாட்டில் இதுவரை காலமும் நிலவும் அரசியல் நடைமுறைகள் மக்கள் வாழ்வதற்கான பாதையில் செல்லவில்லை. மாறாக சொந்த நாட்டு மக்களைக் கொன்று அவர்கள் மரணங்களை வைத்து மேலாதிக்க வாதிகளும் அவர்களின் எடுபிடிகளும் பணத்தைக் குவிக்கும் அரசியல் தந்திரங்களே நடைமுறையில் உள்ளன.

பொருளாதார அபிவிருத்தி என்ற கோஷங்களுடன் இன்று நாட்டில் இடிக்கப்பட்ட கல்லறைகள் மேல் உயர் மாடிக் கட்டிடங்களும் உல்லாசக் கோபுரங்களும் மக்களின் மரணங்களை மூலதனமாக்கிக் குவித்த பணத்திலேயே உருவாகிக் கொண்டிருக்கின்றன.

கடந்த காலத்தில் “இனக் கலவரங்களைச்” சொல்லி சொல்லி இரண்டு தலைமுறைகளை சுற்று வட்டத்தில் ஓட வைத்து இரண்டு பகுதி ஆளும் மேலாதிக்க வர்க்கத்தினரும் தங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொண்டனர். எதிர்காலத்தில் அடுத்த எமது தலைமுறைகளை உசுப்பேற்றி வட்டக் கோட்டில் ஓட வைப்பதற்கு இன்று அவர்களுக்கு “இனப் படுகொலை” என்ற “சொற்பதம்” கிடைத்துள்ளது.

இதனை முறியடித்து நாம் நமது மண்ணில் சகல உரிமைகளுடன் வளமாக வாழ்வதற்கான அத்தியாவசிய அடிப்படைத் தேவை “இன-மத-சாதி-பால்-பிராந்திய” வேறுபாடுகளைக் கடந்த “எல்லோரும் வாழப் பிறந்த மனிதர்களே” என்ற சிந்தனை மாற்றமே.