Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கிரேக்கத்தில் இடதுசாரிகளின் மாபெரும் வெற்றி! SYRIZA ஆட்சி அமைக்கிறது!

கிரேக்க இடதுசாரிக் கட்சிகளின் கூட்டான SYRIZA கிரேக்கப் பாராளுமன்ற தேர்தலில் 25.01.2015, இரவு 9:40 வரையான வாக்கு எண்ணிக்கையின்படி 149 ஆசனங்களை வென்று பாரிய வெற்றியடைந்துள்ளது!

25.01.2015 இன்று ஆறு மணியுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவுக்கு வந்தது. அதன் தொடர்சியாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே SYRIZA பாரிய வெற்றியடையும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, தேர்தலில் வென்றுள்ள SYRIZA (25.01.2015, இரவு 9:4 வரை) 35.92ம% வீதமான வாக்குகளை பெற்றுள்ளது. 50% வீதமான வாக்குகளை SYRIZA பெறாவிட்டாலும், 300 ஆசனங்களைக் கொண்ட கிரேக்க பாராளுமன்றத்தில், கிரேக்க தேர்தல் சட்டப்படி 50 வீததுக்கும் மேலான ஆசனங்களைப் பெறும் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் இது வரை ஆளும் கட்சியாகவிருந்த புதிய ஜனநாயகம் என்ற நவதாராள பழைமைவாதக் கட்சியின் தலைமையிலான அரசு இன்று இரவு பதவி விலகியது. அதன் பிரதம மந்திரி அந்தோனியோ சமராஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு, SYRIZAவின் பிரதமர் வேட்பாளர் அலெக்சிஸ் சீபிராஸ் - Alexis Tsipras அவர்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். தனிப்பெருங்க கட்சியாக வென்றுள்ள போதும் SYRIZAதனித்து கிரேக்கத்தில் ஆட்சி அமைக்காமல், தனது கொள்கைக்கு உகந்ததாக அரசியல் இணக்கம் காணக்கூடிய வேறு கட்சிகளையும் இணைத்தே ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SYRIZAவின் இவ் வெற்றியானது ஐரோப்பிய அரசியலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, ஆட்சி அதிகாரத்தைப் பெறப்போகும் இக் கட்சியானது எவ்வாறு ஐரோபிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் கிரேக்கம் மீதான பொருளாதர ஆதிக்கத்தை கையாளப் போகின்றது என்பதிலேயே அதன் வெற்றியும் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். இன்று கிரீஸ் பாரிய வெளிநாட்டுக் கடன் சுமையால் பொருளாதார பிரச்சனையில் சிக்கியுள்ளது. இதைத் தன்னால் தீர்க்க முடியும். புதிய பொருளாதார - மக்கள் நல அரசை அமைக்க முடியும் - அமைப்போம் என்ற கோசத்தை முன்னிறுத்தியே SYRIZA இந்த தேர்தலில் வென்றுள்ளது.

ஐரோப்பிய இடதுசாரியமும் -SYRIZAவும் - சிறுகுறிப்பு

சோவியத்தின் வீட்சியின் பின் ஐரோப்பாவில் இடதுசாரியம் பாரிய வீட்சியைக் கண்டது. ஏற்கனவே பல சீரழிவுகளாலும், தத்துவார்த்த முரண்பாடுகளாலும் பலமிழந்திருந்த இடதுசாரியம் 90 களின் நடுப்பகுதியில் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முன்னேற முயன்றது. சுய விமர்சனங்கள், மார்க்ஸ்சிஸ மறு ஆய்வுகள்- தத்துவார்த்த விமர்சனங்கள், புதிய செயற் தந்திரங்கள்- குறிப்பாக அதிகாரமும் - ஜனநாயகமும் பற்ரிய புதிய வேலை முறைகளை இடதுசாரிகள் விவாதித்தனர். இவ் விவாதங்கள் சில நாடுகளில், குறிப்பாக ஐரோபிய நாடுகளில் இடதுசாரிய அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டது.

டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், கிரீஸ் போன்ற நாடுகளில் புதிய இடதுசாரியக் கட்சிகள் உருவாயின. இவை வழக்கமான இடதுசாரியக் கட்சிகள் போல் அல்லாமல்- சோசலிசம் பற்றிய பலவிதமான கொள்கைகளைக் கொண்ட- மாவோஇசக் கட்சிகள் தொடக்கம் ட்ரொட்ஸ்கியக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளும், வெகுசன அமைப்புகளும் இதில் பங்கு கொண்டன. இதில் பங்கு கொண்ட கட்சிகள் தமக்கு இடையிலான கருத்து வித்தியாசங்களை விவாதித்தபடி மக்கள் தேவைகளின் அடிபடையில், சமூக போராட்டத்தை- மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கங்களாகவே இப்புதிய இடதுசாரியக் கட்சிகள் உருவாகப்பட்டன. அத்துடன் தேர்தலிலும் பங்கு கொள்வதற்கான தேர்தல் முன்னணியாகவும் உபயோகிக்கப்பட்டது.

இவற்றில் முதன் முதலில் மக்கள் மத்தியிலும், பாராளுமன்றத் தேர்தல்களிலும் அரசியல் ரீதியான வெற்றியைக் கண்டது (1994) டென்மார்க்கின் இடதுசாரிய முன்னணியான Enhedslisten – De Rød-Grønne (Unity List – The Red–Greens)என்ற கட்சியாகும். இன்றும் ஆளும் வர்க்கத்துக்கு - அதன் நவதாராள பொருளாதர அரசியலுக்கு எதிரான சக்தி வாய்ந்த கட்சியா விளங்குகிறது Enhedslisten – De Rød-Grønne.

டென்மார்க் இடதுசாரிய அரசியலில் சிறு வளர்ச்சி ஏற்பட்டுப் பத்து வருடங்களின் பின் 2004 இல் கிரீஸ் நாட்டில் இடதுசாரிகளுக்கு இடையிலான கூட்டு உருவானது. கிரீசின் பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்  ஜேர்மன் அகங்காரவாத அரசியல், நவதாராளமய பொருளாதாரவாத நெருக்கடி  இவரிற்கு எதிராக கிரீஸ் மக்கள் கிளர்ந்தெளுந்தமை போன்ற மூன்று முக்கிய விடயங்கள் இடதுசாரிகளின் கூட்டை கிரீசில் உருவாகக் காரணமாகியது.

Synaspismós Rizospastikís Aristerás / Coalition of the Radical Lef என்று அழைக்கப்படும் இந்த இடதுசாரிகளின் கூட்டமைப்பானது, பல இடதுசாரிய கட்சிகள், மக்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்களின் தேர்தல் கூட்டமைப்பாக மட்டுமல்லாமல்; மக்கள் போராட்டத்தை தலைமை தங்கும் முன்னிலைச் சக்தியாகவும் இயங்குகிறது.

2004 பாராளுமன்றத் தேர்தலில் (241.539வாக்குகள் ) 3.3% வீத வாக்குகளைப் பெற்று 6 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய SYRIZA 2012 இல் (1.655.053 வாக்குகள்) 26.9% வீத வாக்குகளைப் பெற்று 71 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது.