Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை

இலங்கை ஆட்சி அதிகாரத்தை கொண்ட பௌத்த பேரினவாதம் மீது, இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவில்லை. சிறுபான்மை இன மதப் பிரிவுகள் மீது, திட்டமிட்ட ஒரு தாக்குதல் நடந்தது என்பதே வெளிப்படையான உண்மை.

பாதிக்கப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட இன மதத்திற்கான குரல்கள் மட்டுமே, அந்த மக்களின் அவலம் குறித்து அக்கறைப்படும் என்பது வெளிப்படையானது. ஆனால் அதற்கான குரல்கள் எதுவும், எதார்த்தத்தில் எழவில்லை என்பதும் உண்மை.

பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்கள் குறித்து பேசுவதன் மூலம், போலியான மனிதாபிமானத்தையும், ஐக்கியத்தையும் கட்டமைத்து காட்ட முனைகின்றனர்.



இலங்கையின் தமிழ் அறிவு சார்ந்த புலமை என்பது, தன்னை முன்னிறுத்துகின்ற பிழைப்புவாதத்தில் மிதக்கின்றது. ஒடுக்கப்பட்ட தன் சமூகத்திற்கு நடந்த துயரம் குறித்து, அலட்டிக் கொள்ளவில்லை.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் குறித்தும், அதன் மீதான தாக்குதலின் அரசியல் பின்னணி மீதான அக்கறையற்ற போக்கு, தமிழ் இலக்கிய அரசியலாகவும் அதையே "முற்போக்காக" கட்டமைக்கவும் முனைகின்றனர். இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றுமே குரல் கொடுக்காத போலி இடதுசாரியம், நடந்தது இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை மறுப்பது முதல், தாக்குதலின் சாரத்தை பூசி மெழுகுகின்றது. இந்த வகையில்

1.தமிழ் "முற்போக்கு" இலக்கிய அரசியல் என்பது, புலிகள் காலத்தில் புலியெதிர்ப்பாகவும், தமிழ் மக்கள் வெறுப்பாகவுமே உருவாகி இருந்தது. இந்த அரசியல் இலக்கியமானது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் என்று எதுவும் இலங்கையில் கிடையாது, வெறும் புலிப் பாசிசம் தான் உண்டு என்று கூறிக்கொண்டு, ஒடுக்கும் பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையை ஆதரித்தனர். புலிகளின் அழிவுக்கு பின் தனக்கென்று ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலையோ, நடைமுறையையோ கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்;காக போராடியதோ, போராடுவதோ கிடையாது. சிறுபான்மை இன மதப் பிரிவுகள் மீதான திட்டமிட்ட குண்டு தாக்குதலை கண்டுகொள்ளாது இருக்கும், தங்கள் சுய அடையாளத்துக்கு எது தேவையோ அதைப் பேசுகின்றனர். தன் தனிப்பட்ட இருப்பு சார்ந்து, ஒடுக்கப்பட்ட தேசியங்கள் இருப்பதை மறுப்பதையே சாரமாக கொண்டு, இயங்குகின்றனர்.

2.இரண்டாவது வகையினர் ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலானதாக தமிழ்தேசியம் இருந்த அதன் வரலாற்று தன்மையைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையை மறுக்கின்றனர். இப்;படிப்பட்ட தங்கள் நிலையை "முற்போக்கானது" என்று கூறிக்கொள்வதன் மூலம், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தை கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பதே இவர்களின் நிலை. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தை ஒடுக்குவதை மறைமுகமாக நியாயப்படுத்துகின்ற வண்ணம், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் இலக்கை மூடிமறைக்கவும், பிற விடையங்களைப் பேசுவதும் நடக்கின்றது.

3.மூன்றாவது வகையினர் வர்க்க கட்சிகளை இலங்கையில் வைத்திருப்பதாக கூறிக் கொள்ளும் இடதுசாரிகள். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு எதிரான இனவொடுக்குமுறைக்கு எதிராக, கடந்த காலத்தில் போராடாதவர்கள் இவர்கள். இன்று இயல்பாகவே ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன மதப் பிரிவுகள் மீதான தாக்குதலைக் கண்டுகொள்வதை கூட மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர். இதை மூடிமறைக்க போலி ஐக்கியம் பேசுவதும், இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் இஸ்லாமிய சமூகம் குறித்து பேசுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான பயங்கரவாதத்தை அங்கீகரிப்பது இடதுசாரியமாக அரங்கேறுகின்றது. உடனடியாக பாதிக்கப்பட்ட மக்கள் சிறுபான்மை இன மதப் பிரிவுகள் என்பதும், அவர்களை தாக்குதல் இலக்காக எந்த அடிப்படையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தெரிவு செய்தனரோ, அதே அடிப்படையில் இடதுசாரியமும் தன் பங்குக்கு அரசியல் படுகொலை செய்து வருகின்றது.

இப்படி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை கண்டுகொள்ளாத மூன்று பிரிவுகளும், இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை மறுப்பதன் மூலம், மத அடிப்படைவாதத்தை மறைமுகமாக பாதுகாப்பது நடந்தேறுகின்றது. மத அடிப்படைவாதத்துக்குள் முஸ்லிம் சமூகம் மூழ்கி கிடப்பதை, மறைமுகமாக ஊக்குவிக்கின்றனர்.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது கற்பனையல்ல. இந்த பயங்கரவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம், இலங்கையில் சிறுபான்மையினரே ஒழிய. இலங்கையின் பெரும்பான்மையினர் அல்ல. சிறுபான்மையினரே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் இலக்கு. இப்படி இலக்காக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்காது இருப்பது, அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஆதரவு தான். அதேநேரம் இஸ்லாம் பெயரில் நடக்கும் பயங்கரவாதமானது இஸ்லாத்தை வழிபாட்டைக் கொண்ட மக்கள் மேலான பிற மதவாத வன்முறையும், அதேநேரம் அரச பயங்கரவாதத்துக்கு முகம் கொடுக்கும் பொது அவலத்துக்காக மட்டும் குரல் கொடுப்பது என்பது, அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் படுகொலையாகும்.

ஆக இன்று ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரை இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் தாக்கவில்லை, அதை மூடிமறைக்க செய்கின்ற அரசியல் மூலம், ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் மீதான மற்றொரு படுகொலையும் அரங்கேறி வருகின்றது.