Fri09222023

Last updateSun, 19 Apr 2020 8am

திருந்தாத மக்களும் வருந்தாத தலைமைகளும்

ஜம்பதுக்கு ஜம்பது – தமிழரசு (சமஸ்டி) - மாவட்ட ஆட்சி - மாகாண ஆட்சி - சுயாட்சி – சமஸ்டி…… இப்படியே மாறி மாறி இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த 68 ஆண்டுகளாக தங்கள் தங்கள் பாரம்பரிய-பரம்பரை சுய லாப சிந்தனையுடன் அவரவர் கோரிக்கைகளின் பின்னால் அணி திரள்வதும் ஆட்சியாளர்களை தெரிவு செய்வதும் தெரிவு செய்தவர்களால் ஏமாற்றப்படுவதும் நாட்டில் ஒரு தொடர் நாடகமாக அரங்கேறியபடி உள்ளது.

இந்த நாடகம் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் பாகுபாடுகளை-மனேபாவங்களை-ஆசை அபிலாசைகளை மிகவும் தெளிவாக பிரதிபலித்துக் காட்டுவதால் தொடர்ந்து வெற்றிகரமாக மறுபடி மறுபடி மேடையேறிக் கொண்டிருக்கிறது.

“சிங்களம் மட்டும்” சட்டத்தை - "சிங்கள சிறீயை" எதிர்த்து அடிவாங்கினோம்.

“சத்தியாக்கிரகம்”செய்து சிறை சென்றோம்.

“போர்” நடாத்தி அழிந்தோம்.

இன்று அந்நிய சக்திகளை நம்பியபடி ஆளுக்கொரு பக்கம் அணிவகுத்தபடி ஆரூடம் கூறிக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் எங்களது இலக்குத்தான் என்ன?

“மொழியுரிமை” உத்தியோகங்களைப் பறித்தது. “சத்தியாக்கிரகம்” இராணுவத்தை வடக்குக்கு வரவழைத்தது. “போர்” உயிர்களைப் பலியெடுத்து-இளைஞர் யுவதிகளை இயலாதவர்களாக்கி-பெண்களை விதவைகளாக்கி-சிறுவர்களை அனாதைகளாக்கி-மக்களை அகதிகளாக்கி-கிராமங்களை இராணுவப் பிரதேசங்களாக்கி விட்டுள்ளது.

இந்நிலையில் நாம் ஏன் இன்னமும் தொடர்ந்து ஆளுவோரின் கதைகளைக் கேட்டு அவலங்களை அனுபவிக்க வேண்டும். மொழியும் இனமும் இரு தரப்பிலும் மக்களை ஆளுவோரின் இருப்பை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் மந்திரங்களே ஒழிய இரு தரப்பு மக்கள் சம்பந்தப்பட்டதல்ல. இது நமக்கு நன்கு புரிந்திருந்தும் எதற்காக மேட்டுக்குடி மேலாதிக்க தலைமைகளின் தவறான வழிகாட்டலை பின் தொடர்கிறோம்? மேட்டுக்குடித் தலைமைகளுக்கு மக்களின் அழுகுரல் கேட்காது. கேட்டாலும் அவர்கள் இரங்கமாட்டார்கள். ஆனால் அயலில் வாழும் நமக்கு கூடவா அடுத்தவர் கண்ணீர் தெரியவில்லை.

அன்று முதல் இன்று வரை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் உள்ள ‘இணக்க’ அரசியல்வாதிகளும் ‘பிணக்க’ அரசியல்வாதிகளும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள மேட்டுக்குடி மேலாதிக்க ஆளும் வர்க்கத்தினரின் ‘இனப்பாகுபாட்டு அரசியல் வாய்ப்பாட்டுக்குத்’ துணையாகவே செயற்படுகிறார்களே ஒழிய மக்களுக்கு விடிவு ஏற்படுத்துவதற்காக அல்ல. பெரும்பான்மை இனத் தலைமைகளும் சிறுபான்மை இனத் தலைமைகளும் என்றென்றும் நண்பர்களே. ஒருவருக்கொருவர் வேண்டியவர்களே.

இது நமக்கு நன்கு தெரிந்தும் நாம் ஏன் திருந்தவில்லை. ஏன் புதிய வழிகளைத் தேடவில்லை அல்லது மாற்று அரசியல் பாதையை அறிய முற்படவில்லை? எவ்வளவோ இழப்புக்களையும் சுனாமி-வன்னிப் பேரழிவுகளையும் கண்டு அனுபவித்த பின்னரும் கூட நமது மனோபாவம் மாறாதது ஏன்? நமது அறியாமையா? ஆணவமா? பழிக்குப் பழி வாங்கும் கலாச்சாரமா? நாமுண்டு நம்ம பாடுண்டு என்ற எமது பண்பாடா?

சுயாட்சி-தன்னாட்சி-தமிழரசு என்பதெல்லாம் யார் - யாருக்காக - எதற்காக - முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்? இவற்றால் குடிமக்கள் அடைந்த பயன் என்ன? இவை பற்றிய சிந்தனை நம்மிடம் உள்ளதா? அப்படி சிந்திப்பவர்களை நாம் கணக்கில் கொள்கிறோமா? நாம் சரியான வழியில் சிந்திக்க விடாமல் எம்மைத் தடுப்பது என்ன?

கடந்த 68 ஆண்டு கால வரலாற்றில் நாம் உண்மைகளை ஒத்துக் கொள்ள மறுக்கும் ஒரு சமூகமாகவே வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளோம். நிதியைத் தேடி நீதியைப் புறந்தள்ளும் மக்கள் கூட்டமாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுள்ளோம். நமது கல்வி முறைமை(படிப்பு) எமக்கு ‘அறிவை’ ஊட்டுவதைத் தவிர்த்து ‘அடிமைப் புத்தியைக்’ கற்றுக் கொடுத்துள்ளது.

இதனால்தான் நாம் இன்னமும் தொடர்ந்து சாவுகளை-சித்திரவதைகளை-சிறைகளை-சீரழிவுகளை- அவலங்களைத் எம்மீது திணிக்கும் அரசியல் தலைமைகளைப் பின் தொடர்ந்த வண்ணம் உள்ளோம். எமது தலைமைகள் ஒரு போதுமே மக்களுக்காக வருந்தியதுமில்லை-வருந்தப் போவதுமில்லை. இவர்கள் மக்களின் துயரங்கள் பற்றி வருந்துபவர்களேயானால் இன்று எம்மை வெளிசக்திகளின் ஆதிக்கப் போட்டிகளின் வியாபாரப் பண்டங்களாக ஆக்கியிருக்க மாட்டார்கள். மக்களின் வாழ்வு பற்றிய கரிசனை இருந்தால் அவர்களை நாட்டுக்குள்ளேயும் நாட்டை விட்டும் ஓட வைத்திருக்க மாட்டார்கள்;.

அன்று ‘பழம் பழுத்தால் வெளவால் வரும்………’ என்றவர்கள் இன்று ‘புதிய அரசியல் யாப்பு’ வந்தால் ‘எல்லாம் சரி வரும்’ என்கிறார்கள். ஆனால் நாட்டில் மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்த்தபடி-தூண்டியபடி இனப்பிரச்சனைக்கான யாப்பை வரைய முடியாது. இனப்பிரச்சனைக்கான தீர்வு அடங்கிய ஒரு யாப்பு இனவாதம் கக்கும் மக்கள் பிரதிநிதிகளால் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப் படமாட்டாது. அதிசயமாக அது அங்கீகரிக்கப் பட்டாலும் ‘சர்வசன வாக்கெடுப்பில்’ மக்களின் அங்கீகாரம் கிடைக்காது.

காரணம் நாட்டின் குடிமக்களை இனவாத சிந்தனையிலிருந்து மீட்டெடுக்காமல்-அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தாமல்-இனப் பகையை இல்லாதொழிப்பதற்கான எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஒரு ‘தீர்வு’ அடங்கிய யாப்பை நிறைவேற்ற முடியாது.

ஆனால் இன்று நாட்டில் அரசாங்கம் முதற் கொண்டு அரசியல் தலைமைகள் யாவுமே இனவாதத்தை இல்லாதொழித்து-பாகுபாடுகளைக் களைந்து-புரிந்துணர்வை ஏற்படுத்தி அனைத்து மக்களையும் ‘இணைவாக்கம்’ கொள்ள வேண்டி மேற் கொள்ளப்படும் செயற்பாடுகளை முடக்கி-அந்த இலக்குகளை எட்டுவதற்காக உழைக்கும் சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றன.

இன்றைய மக்கள் தலைமைகளின் அரசியல் வியூகங்கள் யாவும் இலங்கைக் குடிமக்களின் ‘இணைவாக்கம்’ வேண்டி நாட்டில் இடம் பெறும் பல் வேறு வேலைத் திட்டங்களை முறியடிக்கும் வகையிலேயே வெகு நுட்பமாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. மக்களைச் சிந்திக்க விடாதவாறு உணர்ச்சியையும் வெறுப்பையும் ஆத்திரத்தையும் ஊட்டும் மேடைப் பேச்சுக்கள்-பழி வாங்கும் மனோபாவத்தை ஏற்படுத்தும் பேட்டிகள்-அடிப்படைவாதத்தை தூண்டும் கட்டுரைகள்-மக்கள் இடையேயான தொடர்புகளை தடுக்கும் ஊடகச் செய்திகள் தொடருகின்றன.

இன்று இன-மத-சாதி-பால்-பிராந்திய பாகுபாடு காரணாமாக வதைபடும் மக்களை “வாக்களிக்கப்பட்ட பூமிக்கு” அழைத்துச் செல்ல தனது இன-மத-வர்க்க அடையாளங்களுடன் எம்மிடையே ஒரு ‘மீட்பர்’ முதலமைச்சர் வடிவத்தில் தோன்றியுள்ளார். அவர் பின்னே மக்கள் அணிதிரள ஆரம்பித்துள்ளனர். தனது தலைமையை நம்பி 28 ஆண்டுகளாக தன்னைப் பின் தொடர்ந்த மக்களுக்கு தந்தை செல்வா அவர்கள் இறுதியாகக் கூறியது ‘தமிழ்ப் பேசும் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்பதே. இன்று மக்களை மீட்டெடுப்பதற்கு வந்திறங்கியுள்ள முதலமைச்சர் என்ன சொல்லப் போகிறார் என்பதை மக்கள் இப்பொழுதே புரிந்து கொள்ளத் தவறினால் அவர்கள் பாடு ‘அரோகரா’.

எனவே எமது சிந்தனை-எழுத்து-பேச்சு-செயற்பாடு என்பது ‘உண்மை’ என்ற அடிப்படையில் அமையாத வரை – உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு அதனை ஆதரிக்காத வரை சுயலாபம் தேடும் கும்பல்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கும்.

திருந்தாத மக்களை வருந்தாத தலைமைகளே தொடர்ந்தும் வழி நடத்தும். இது உலக வரலாறு காட்டும் உண்மை.