Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

விஷ முட்கள்….....(சிறுகதை)

இந்த யூனிவசிற்றியிலே மிகவும் பிரமாண்டமான விழா என்பதாலும், இந்த வருடத்திலே  எல்லோருக்காகவும் நடக்கிற முதல் விழா என்பதால் மிக விமர்சையாகவே  ஒழுங்கு செய்யப்படடிருந்தது. வருசக் கடைசி மாணவர்கள் படிப்பு முடிந்து வெளியேறுவதன் காரணத்தினாலும் புதியவர்கள் பலபேர் வந்து சேர்ந்து கொள்வதன் காரணத்தினாலும் இந்த விழா இன்று மிகவும் சிறப்புப் பெற்றிருக்கின்றது.

 

வண்ண வண்ண கலர் விளக்குகளாலும் வர்ண கடதாசிகளினால் செய்து தொங்கவிடப்பட்ட தோரணங்களினாலும், பலூன்கள், பூக்கள், பழங்கள் என்று பலவகை அலங்காரங்களினாலும்  மண்டபம் ஓ..ஓ என்று காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.


இசையின் இடி வேகத்துக்கேற்ற மாதிரி மாணவக்கூட்டம்  ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆடிக்களைத்த ஒரு கூட்டம் வந்து அமர்ந்து கொள்ள இன்னொரு கூட்டம் மீண்டும் போய் எழுந்து ஆடிக்கொண்டிருக்கின்றது.


புகை பிடிப்பதற்காகவும் சுத்தக் காற்றை சுவாசிப்பதற்காகவும் ஒரு சிலர் கதவைத் திறந்து வெளியே போகிறார்கள், சிலபேர் உள்ளே வருகிறார்கள். கதவைத் திறந்து திறந்து மூடும் போதெல்லாம் மேசையில் இருந்த மெழுகுவர்த்திகளின் சுவாலைகள் கீழ் நோக்கி தாண்டு தாண்டு மீண்டும் நிமிர்ந்து  கொழுந்து விட்டு எரிகின்றது.


இந்தப் பிறப்பிலேயே கிடைக்கப் பெற்ற அரிய பருவம் இந்த மாணவப் பருவம் தான். அதுவும் யூனிவசிற்றியிலேயே படிப்பதென்றால் சொல்லவா வேண்டும். எங்கடை நாட்டிலேயே எவ்வளவு சந்தோசம் இருக்கும் போது இந்த வெளிநாட்டு வாழ்க்கை முறைகளைச் சொல்லவா வேண்டும். கொடுத்து வைத்த மனிதக் கூட்டம். சரியான வயதில் இங்கே வந்துவிட வேண்டும். இங்கே கிடைக்கும் இந்தச் சந்தோசத்தை நழுவவிடாது சரியான முறையிலே பாவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும் அப்படி அதைத் தவறான வழியிலே பாவிக்கத் தொடங்கினால் படிப்பும் போய்விடும் வாழ்க்கையும் அழிந்து நாசமாயப் போய்விடும்.


ஆடுபவர்கள் ஆடவும் ஓடுபவர்கள் ஓடவும் துள்ளிக் குதிப்பவர்கள் குதித்துக் கொண்டிருக்கும் போது சுகந்தா மட்டும் இருந்த இடத்திலேயே ஆடாமல் அசையாமல் விறைத்தவள் போல் இறுகிப் போயிருக்கிறாள். விழாத் தொடங்கியே மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இவளோ எதையுமே பொருட்படுத்தாது சிலை போல் இருந்த இடத்திலேயே நிலைத்திருக்கிறாள்.


மற்றவர்களைப் போல் நானும் எழுந்து போய் ஆட வேண்டும் பழக வேண்டும் மற்றவர்களுடன் கலகலப்பாய் பேச வேண்டும் கதைக்க வேண்டும் என மனம் விரும்பினாலும் அவளை ஏதோ ஒன்று வந்து தடுத்தாண்டது.


இப்படியே இந்த விழாவிலே சும்மா இருக்கத் தான் வேண்டுமா… அல்லது றூமுக்கே போய்த் தூங்கி விடுவோமா… மனம் இரண்டும் கெட்டான் நிலையில் தத்தளிச்சுக் கொண்டிருந்தது. இந்த யூனிவசிற்றியிலே எல்லா மாணவ மாணவிகளும் இப்படிச் சேர்ந்து கூடிக் குலாவும் போது நான் மட்டும் போய் நித்திரை கொள்வது எந்தளவு நியாயமாகும். இல்லாவிடில் இப்படியே சும்மா விடிய விடிய தான் இருக்கவும் முடியுமா…? அல்லது இவர்களுடன் தான் போய்ச் சேர்ந்து கொள்ளலாமா….?


இதையெல்லாம் அம்மா அறிஞ்சா…. இதயம் அதிவேகமாய் படபடத்து துடித்தது. தன்னை ஒருவாறு சுகாரித்துக் கொண்டு எப்படியும் இங்கே கொஞ்ச நேரம் நிற்போம் என முடிவெடுத்தவளாய் முன்னால் இருந்த சோடாவை எடுத்துக் குடிக்கலானாள்.


தூரத்தில் இருந்து கலைத்து வந்த அந்த பெட்டை ஒருத்தியை இரண்டு பொடியங்கள் வந்து கட்டிப்பிடித்து அவளைத் தூக்கிக் கொண்டு போக எல்லோரும் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்யவும், அந்தப் பொடியங்கள்  பெண்ணைத் தூக்கிய படி ஆடவும் வேறு சில சோடிகளும் இணைந்து கொள்ள அவர்களின் ஆட்டத்துக்கு ஏற்ற மாதிரி இசையின் வேகமும் கூடக்கூட அந்த மண்டபமும் அதிர்ந்து குலுங்கியது.


ஏய்….சுகந்தா… என்ன… டல்லாய் இருக்கிறாய்… எழுந்து வா எங்களோடு வந்து சேர்ந்து கொள்…வா வந்து ஆடு… என்ற படி பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் ரஞ்சினி. நீண்ட நேரமாய் ஆடிக்களைத்த அலுப்புக்கும் நீண்ட நேரமாய் சுகந்தாவைக் கவனித்துக் கொண்டிருந்த படியினாலும் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.


ஏய்…. என்ன இதுக்குள்ளே வந்து இப்படி இருக்கிறாய் என்று அவளைப் பிடித்து ஒரு உலுப்பு உலுப்பினாள். கதிரையை  இழுத்து பக்கத்தில் அமர்ந்து  சுகந்தாவின் தோளில் கையைப் போட்டபடி தனது இரு புருவங்களையும் உயர்த்தி என்ன என்பது போல் தலையை ஆட்டினாள்.


ஓன்றுமில்லை….. சும்மாயிருக்கிறேன் என்று சிரித்தபடி சுகந்தா சமாளிக்க …. இல்லை நீயும் வந்து ஆடு…. ஆடாவிட்டாலும் பராவாயில்லை மற்றவர்களுடன் வந்து பழகு சந்தோசமாயிரு இப்படித் தனியே மட்டும இருக்கவா… போகிறாய்  என்ற படியே எழுந்து சுகந்தாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.


இல்லை ரஞ்சினி நீ போ… பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் வந்து இணைந்து கொள்கிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் எங்கேயோ இருந்து ஓடி வந்த ஒரு வெள்ளைக்காரப் பெட்டை ஒருத்தி ரஞ்சினியைப் பிடித்து இழுக்க, கொஞ்சம் பொறு வருகிறேன் என அந்தப் பிள்ளைக்கு சைகையைக் காட்டி விட்டு


இஞ்சே… சுகந்தா இங்கே ஜந்தோ ஆறோ வருடங்கள் இருந்து படிக்கப் போறம். ஒரு குடும்பம் போலே பழகப்போகிறம். புழகவும் வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதற்கும் இது தான் தருணம் இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்ட நோக்கமுமே இது தான். இனி இப்படி ஒரு விழா எப்போ வரும் எண்டு சொல்ல முடியாது. அப்படித்தான் ஒரு விழா வந்தாலும் இப்படியாக எல்லாரும் சந்திக்குமாப் போலே வாய்ப்பும் அமையாது… நீ இதிலே இன்று வந்து பழகாவிட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பதுப்புது முகங்களாகவே தென்படுவார்கள் என்று கூறும் போது பகக்கத்தில் நின்ற அந்த வெள்ளைப்பிள்ளையும் ஆம் என்று தலையசைத்தபடி நான் அனீற்றா என்றபடியே தன் கையை நீட்டித் தன்னை அறிமுகம் செய்தாள். எனக்கு ஏற்கனவே நிறையத் தமிழ்பிள்ளைகளைத் தெரியும் அவர்கள் வீட்டுக்கெல்லாம் போய் நிறைய உறைப்புச் சாப்பாடெல்லாம் சாப்பிட்டிருக்கின்றேன் என்று கூற மூவரும் ஒருமித்தே சிரித்தனர்.


சுகந்தா தலையை ஆட்டியபடி இன்னொரு சந்தர்ப்பத்தில் வந்து இணைந்து கொள்கிறேன்…. என்று இழுத்தபடியே அரைகுறை விருப்பம் இருந்தும் விரும்பாதது போல் இருக்க அவ்விருவரும் அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தனர்.


இந்த யூனிவசிற்றிக்கு வந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்த போதும் தானும் தன் வகுப்பென்றும் றூமுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்த சுகந்தாவை வெளியில் கொண்டு வந்தவளே இந்த ரஞ்சினி தான். தனியே கன்ரீனினுள் ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுகந்தாவிடம் வலியச் சென்று கதையைத் தொடங்கி தன்னை அறிமுகம் செய்தவள். இப்படியொரு விழா நடைபெறப் போகின்றது என்றும் கட்டாயம் நீயும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று சுகந்தாவைக் இங்கே கூட்டி வந்தவள்.


பாட்டுக்களின் சத்தம் காதைப் புளிக்க வைத்தது. மண்டபத்தினிலுள்ள எல்லா மின்விளக்குகளும் நூர்க்கப்பட்டு மெழுகுதிரியின் வெளிச்சத்தால் மட்டும் மண்டபம் மங்கலாக ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. அந்த இளம் சிட்டுக்கள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கட்டிப்படித்து ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். சிலர் போதை மயக்கத்தினால் மதியிழந்து நிலை குலைந்து நிலத்திலே விழுந்து விழுந்து எழுவதுமாக இருக்க அதுவே பல பேருக்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கின்றது.


திடீரென இசைஒலி நிற்பாட்டப்படும் போது ஏதோ புயலடித்து ஓய்ந்த மாதிரி மண்டபம் அமைதியானது. இளைஞன் ஒருவன் ஒலிவாங்கியைக் கையிலெடுத்த படி கதைக்கத் தொடங்க மண்டபமே சிரிப்பொலியால் அதிர்ந்து குலுங்கியது. பலபேர் எழுந்து நின்று கை தட்டியும் விசிலடித்தும் ஆரவாரம் செய்தார்கள். பல பகிடிகளையும் அங்காங்கே நடந்த சேட்டைச் சம்பவங்களையும் சுட்டிக்காட்டி இந்த யூனிவசிற்றியிலே படிப்பிக்கும் விரிவுரையாளர்கள் மாதிரிக் கதைத்தும்; எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பது மாதிரியும் செய்து காட்ட எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சில பேர் சிரிப்பைத்தாங்க முடியாமல் வெளியே போனார்கள்.


சபையே அதிர்ந்து சிரித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் போது நாடியிலே கையை வைத்த படி எங்கேயோ தனது சிந்தனையைத் துலைத்தவளாய் இங்கே நடப்பதில் ஒன்றுமே எனக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒன்றையுமே பெரிதுபடுத்தாமல் சுகந்தா இருந்த இடத்திலேயே அப்படியே இருக்கின்றாள்.


நேரம் இரவு ஒரு மணியைத் தாண்டி விட்டது. முன்பு போல் அல்லாமல் சத்தங்களும் குறைந்து ஆரவாரங்களும் அடங்கி ஆட்களும் நன்கு குறைந்திருந்தார்கள். ரவுணில் உள்ள பார்களில் குடிப்பதற்கென்றும் பக்கத்திலுள்ள டிஸ்க்கோரெக்குக்கள் என்றும் பல பேர் போய்விட்டதால் வெறி வந்து இயலாதவர்களும் துணை என்று இல்லாதவர்களுமாக கொஞ்சப் பேரே மிஞ்சி நின்றார்கள்.


என்ன சுகந்தா இவ்வளவு பிடிவாதக்காரியாகவும், வைராக்கியக்காரியாகவும் இருப்பாய் என்று நினைக்கவில்லை, எனத் தோழில் தட்டியபடி அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் ரஞ்சினி.


என்ன வெட்கப்படுகின்றாயோ… அல்லது இவையெல்லாம் உனக்குப் பிடிக்காதா… என மிகுந்த அக்கறையோடு விசாரித்தாள்.


மெல்லெனப் புன்னகைத்தபடியே… இல்லை ரஞ்சினி…ம்ம’ம்ம் என இழுத்தபடி இப்படி ஒரு விழா நடக்கப் போகின்றது என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் வந்து கலந்து கொள்வது பற்றி கொஞ்சமும் நினைக்கவில்லை. நீ கேட்டதன் காரணத்தினால்த் தான் இங்கேயே வந்தனான். இல்லையேல் வீட்டுக்கே போயிருப்போன்.


இல்லை ரஞ்சி… என்னைத் தப்பா எடை போட்டுவிட வேண்டாம். இங்கே நான் மிகவும் கவனமாகவும் யாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். நான் இங்கே வந்தது படிக்கிறதுக்கத் தானே. படிக்க வந்த அலுவல்களைப் பார்த்துப் போட்டுப் போறது தானே. இந்த விழாக்கள் எண்டும் கொண்டாட்டங்கள் எண்டும் வெளிக்கிட, பிறகு சினேகிதங்கள் எண்டும் பிறகு ஒவ்வொரு வெள்ளியும் சனியுமென்று திரிய காலம் கரைஞ்சு போடும் பிறகு படிப்பும் கெட்டு…. போய்விடும். பிறகு…. ஏதோ சொல்ல நினைத்தவள் சொல்லாமல் விழுங்கிக் கொண்டாள்.


இது தான் உண்மையான காரணமல்ல.. என்பது சுகந்தாவுக்குத் தெரிந்தாலும் இப்படியான ஒரு சந்தர்ப்பம் வரும் போது நீ இப்படிச் சொல்லித் தான் சமாளிக்க வேண்டும் என்ற தாயின் அந்தக் கடும் வார்த்தைகள் அவளது மனக்குதிரையில் வேகமெடுத்தோடியது.


ஏதோ பொய் சொல்லுகிறேனே என்று மனம் சஞ்சலப்பட்டாலும் இப்படித் தான் சமாளிக்க வேண்டும் என்பதே இவளது நியதி.


இலேசாக சிரித்தபடியே என்ன சுகந்தா வலு இலகுவாகவும் சுகமாகவும் சொல்லி போட்டாய். ஜந்தோ ஆறு வருடங்கள் அப்படி றூமுக்குள்ளேயும் தனியே இருந்தும் காலத்தைக் கழித்து விட முடியாது… அதே போல் இப்படியே எப்போதாவது ஒரு நாள் எமக்காக நடக்கிற விழாவிலே நாம் சேர்ந்து கலந்து சந்தோசிப்பதால் எமது படிப்பும் கெட்டுவிடாது.


நீயோ நானோ கெட்டுவிடுவது எங்கள் கையிலே தான் இருக்கின்றதே தவிர, மற்றவர்கள் கையில் இல்லை. ஏன் இந்த யூனிவசிற்றியிவிருந்தே இன்று எத்தனையோ தமிழாக்கள் படிச்சு பலபட்டங்களும் பெற்று பல சாதனைகளையும் நிலை நாட்டிப் போயிருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் ஒதுங்கியிருந்து ஒன்றையும் வெறுத்ததாகவும் நான் அறியவும் இல்லை.


சரி உதுகளையெல்லாம் விட்டுத்தள்ளு… இப்ப நீ வீட்டுக்கப் போக வேண்டுமெண்டாச் சொல் நானும் வருகிறேன் என்றாள் ரஞ்சினி. இல்லை கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போவோம்… உனக்கேதும் அவசரமா…. என்று விட்டு அசையாமல் இருந்தது ரஞ்சினிக்கு புரியாத பதிராகவே இருந்தது. இவள் இதை முளுமையாக வெறுக்கவில்லை  என்பதை ரஞ்சினி தெளிவாகவே புரிந்து கொண்டாள்.


யாரோ கதவைத் திறந்து வெளியே போகும் உள்ளே வந்து  நுழைந்த குளிர் காற்று உடலை வருடி மனதுக்கும் இதமளித்தது.


நீ விரும்பினால் நானும் இருந்து கொள்ளுகிறேன் எனக்கென்று ஒரு அவசரமும் இல்லை… என்ற போது சுகந்தாவில் ஏற்பட்ட மகிழ்சியும் மாறுதலையும் கண்டு ரஞ்சினி வியந்து போனாள்.


சுகந்தா ….ஒரு முக்கிய விசையம்… எந்த விசையமாக இருந்தாலும் உன் மனதளில் மட்டும் வைத்துக் குழம்பிக் கொள்ளாதே என்னவாக இருந்தாலும் மனம்விட்டுக் கதை இருவரும் பகிர்ந்து கொள்வோம் என்றாள் மிகவும் ஜாலியாக….


பின்னுக்கு சில பொடியங்களும் பெட்டையளும் போடும் சத்தம் மிகத் தெளிவாகக் கேட்கிறது.


ஏதோ நினைத்தாளோ சுகந்தாவின் முகம் திடீரென மாறி விகாரம் அடைந்து கடும் வெறுப்பாயிருந்தாள். அவள் ஏதோ நினைத்துக் நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறாள் என்பதை தெளிவாககப் புரிந்து கொள்ள முடிந்தது.


மிக அருகில் வந்தபடியே சுகந்தா சுகந்தா…. என்ன…அவளின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள்.


பதிலுக்கு சுகந்தாவும் இறுக்கி அழுத்திக் கொண்டாள். அவர்களது நட்பும் உறவும் கொஞ்சக் காலமாயிருந்தாலும், அவர்களது அந்தக் கையிறுக்கமும் ஒருவரையொருவர் நெருங்கிக் கொண்ட விதமும் அவர்கள் இருவரது முகமும் நோக்கிய பார்வைகளும் அவர்கள் இருவரது நட்பையும் மேலும் வலுப்படுத்தியது.


ரஞ்சினி.. நீ இந்த யூனிவசிற்றிக்கு எப்படியான கனவுகளுடனும் நினைவுகளுடனும் வந்தாயோ…உன்னை எப்படியெல்லாம் உன்ரை பெற்றோர்கள் அனுப்பி வைத்தார்களோ தெரியாது. ஆனால் நானோ..பல கட்டுப்பாடுகளுடனும் பல உறுதி மொழிகளுடனும் தான் இங்கே வந்தனான். நீ சொன்னது போல் ஒரு ஜந்துவருடமோ ஆறு வருடமோ கண்ணைக்கட்டி வாயைக்கட்டி எனது உணர்வுகளையும் ஆசைகளையும் அடக்கி எதிலுமே கலந்து கொள்ளாமலும் இறுக்கமாக இருக்க வேண்டிய ஒரு நிலையில்த்தான் இருக்கிறேன். உன்னைப் போல் நானும் எல்லோரிடமும் பழக வெளிக்கிட…. பின்பு அது போய்….எங்கேயோல்லாம்…. போய் முடிஞ்சு கடைசியிலே அம்மா சொன்னது போலாகி விடுமோ.. என்று மனம் அங்கலாய்கின்றது. அது தான் இப்படியிருக்கிறேன் என்று கவலையோடும் வருத்தத்தோடும் தெரிவித்தாள்.


சுகந்தா…. அப்படியென்ன உன்ரை அப்பா அம்மா சொல்லியிருப்பினம். எல்லாத் தமிழ் பெற்றோர்களைப் போல் தானே. நல்லாப் படிக்க வேணும் கெட்டிக்காரியாக வர வேண்டும் எல்லாரையும் விட நீ தான் கூட மாக்ஸ் எடுக்க வேண்டும் இது தானே எல்லாரும் சொல்லுற மந்திரங்கள்… இதுக்குப் போய் நீ அலட்டிக் கொள்ளக் கூடாது…


இல்லை ரஞ்சினி…..இல்லை… இவையெல்லாம் ஆறாம் ஏழாம் வகுப்புப் படிக்கேக்கை கேட்டுப் புளிச்சப் போனவை. ஆனால் இவையல்ல நான் கேட்டவை. யூனிவசிற்றிக்கு அனுமதி கிடைச்சிடுத்து எண்ட கடிதம் கிடைச்ச அண்டிலிருந்தே என்ரை அம்மா புலம்பத் தொடங்கி விட்டா… ஏதோ பைத்தியம் பிடிச்ச மனுசி போலேயும் ஏதோ விலைமதிக்க முடியாத ஒன்றைத் தொலைத்தது போலவுமே நடமாடித்திரிந்தவ…


நான் இங்கே வாறதுக்கு முதல்நாள் இரவு அம்மாவும் அப்பாவும் எனக்கு புத்திமதிகள் என நினைச்சுச் சொன்னவைகள் தான் இப்ப என்றை மனதைக் குடைந்து கொண்டிருக்கு. அந்த நினைவுகள் ஒவ்வொரு நாளும் என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.


டியே…சுகந்தா என்ன என்றை அப்பம்மா கதைப்பது போலே பீடிகை போட்டுக் கதைத்துக் கொண்டிருக்கிறாய். அப்படி என்ன தான் புதிசா உனக்குப் புத்திமதி சொல்லிப்போட்டினம். கொஞ்சம் விளக்கமா தெளிவாய்ச் சொல்….என்றபடியே தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சினி.


அது…அது… உனக்குச் சொல்லலாமா…தெரியாது. நீ யாரெண்டு கூட எனக்குத் தெரியாது. நான் உன்னுடன் பழகுவதற்குக் கூட அதிகம் யோசித்ததுண்டு. ஆனால் உன்னோடு பழக வேண்டும் போல் ஒரு விருப்பம் இருந்ததாலும், உன்னுடைய துணிச்சலான போக்கும் வெளிப்படையான தன்மைகளும் சுதந்திரமான நடப்புக்களுமே என்னை உன்னிடம் பழக வைத்தது.


உந்தக் கண்டறியாத கதைகளை விட்டிட்டு உன்ரை அம்மா உனக்கு என்ன சொன்னவ… அப்படி என்ன தான் குழப்பினவ… என்ற விபரங்களை விரும்பினாச் சொல்… இல்லையேல் எழும்பி வா வீட்டுக்குப் போவோம். இதுக்கு மிஞ்சிக் கேட்க மாட்டேன் அடித்தது போல் உறுக்கிச் சொன்னாள்.


பொடியங்களின்ரை சத்தம் பின்னுக்கு கேட்டுக்கொண்டுதான் இருந்தது.


தலையைத் தூக்கிய படியே எப்படி அவற்றையெல்லாம் சொல்லுவது…. அந்த முதல்நாள் இரவு…. எனது தம்பியும் தங்கையும் படுக்கைக்குப் போன பிறகு என்ரை அம்மாவும் அப்பாவும் அறைக்கு வந்தார்கள். அம்மாவின் முகத்தைப் பார்க்கவும் முடியாதளவிற்கு இறுகிப் போயிருந்தா… ஏதோ  நடக்கக் கூடா ஒன்று நடந்து விட்டமாதிரியான பிரமையிலும் அவ நிண்டா… அப்பாவும் ஒன்றும் தெரியாதவர் போல் பக்கத்தில் நின்றார். என்ன… நான் நாளைக்கு யூனிவசிற்றிக்கப் போகப் போறன் என்ன ஒரு மாதிரி நிக்கிறையள்….


பிள்ளை இவ்வளவு காலமும் நீ எங்கடை பாதுகாப்பிலேயும் அரவணைப்பிலேயும் எங்கடை கட்டுப்பாட்டிலேயும் வளந்தனி… இனி தனிச்சு போய் இருக்கப் போறாய் இனி வாரத்திலே ஒருக்காவோ அல்லது மாதத்திலே ஒருக்காவோ தான் வரப்போறாய்… முன்பு போலே உன்னை முன்னேயும் பின்னேயும் கவனிக்கேலாலுது. இதுக்கு எமக்கு நேரமும் கிடையாது. சுற்றி வளைச்சு வராமல் விசையத்துக்கு வாறன்.  நீ போய் தனிச்சிருக்கப் போறாய் எண்டோ தனிச்சு சமைச்சுச் சாப்பிடப் போறாய் எண்டோ நானோ கொப்பாவோ கவலைப்படவில்லை. ஆனால் இப்ப உந்தக் கண்டறியாத யூனிவசிற்றியெண்டு கனபேர் வெளிக்கிட்டதாலே காதல் கீதல் எண்டு திரிஞ்சு கண்ட கண்ட சாதிப்பொடியளையும் பொட்டையளையும் மாறிமாறி கலியாணம் செய்திருக்கினமாம். ஊர் முளுக்க இப்ப உதைத்தானே கதைக்குதுகள். நீ இப்ப போறாய்… இனி எத்தனை இடத்திலேயிருந்தும் தமிழாக்கள் எண்டு நிறையப்பேர் படிக்க வரவினம். ஆர் ஆர் என்னென்ன சாதியோ…தெரியாது. நீ கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இதைத்தான் நான் முக்கியமககச் சொல்ல வேண்டும் என நினைத்தனான்.


இனி போனவுடனே பார்ட்டி என்பினம்…. பிறகு பிக்னிக் என்பினம்…. பிறகு அங்கே வா இங்கே வா என்பினம், பிறகு பழக்கங்கள் வந்து வீட்டுக்கு வரச் சொல்லுவினம். பிறகு நீங்க பழக நாங்களும் பழக வேண்டி வரும். பிறகு வா என்பினம் விருந்தென்பினம்… உதுகளை இனித் தாங்கேலாது… இந்த வெளிநாடெண்டு வந்து இந்தக் கண்ட கண்ட சாதிகளுடன் பழகுவதை தவிர்ப்பதற்குமாக எத்தனை பாடு பட்டிருப்பம் எத்தனை நாடகங்கள் நடிச்சு ஆடியிருப்பம்…


நீ போறாய் நீயொண்டு உன்ரை படிப்பொண்டு இருக்கிறாய்… படிப்பு முடிஞ்சோடை வீட்டை வாறாய்….


நான் வாயடைத்த்து விறைத்துப் போய் நின்றேன் ஏன்னெண்டு ஒருவருடனும் பழகாமல் இருக்க முடியும்… எனக் கேட்டுவிட வேண்டும் என மனம் துடித்தாலும் அதை எதிர்த்துக் கேட்கும் அளவிற்கு எனக்குத்  துணிவும் இல்லை. அம்மாவை எதிர்த்துப் பேச சக்தியும் இல்லை.


கடவுளே என்ரை அப்பாவாவது ஒன்றும் இதற்கச் சொல்ல மாட்டாரா… என நினைத்து அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன்.


உனக்குத் தெரியும் தானே எங்கடை ரூபம் அன்ரியின்ரை மகள் ஆரோ குறைஞ்ச சாதியுக்குள்ளே போய் முடிச்சதாலே தான் இப்ப சரியான மனவருத்தத்திலே இருக்கிறா.. அவவைப் போலே உன்ரை கொம்மாவையும் ஆக்கிப் போடாதே…..பிள்ளை…… கொம்மா தமிழாக்களைப் பற்றித்தானே சொன்னவ பரவாயில்லை என நினைச்சு ஒரு வெள்ளைக்காரனையோ அல்லது ஒரு ஆபிரிக்க நாட்டுக் கறுப்பனையோ அல்லது உந்த அரபு நாட்டு முஸ்லீம்களையோ கொண்டந்திடாதே….பிறகு…. நினைச்சே பார்க்கவே முடியாது…. என்று பகிடி போல் சிரித்துக் கொண்டே சொன்னார்.


முன்னுக்கிருந்த கதிரையைத் தூக்கி ஓங்கி இருவர் தலையிலும் அடிக்க வேண்டும் போல் இருந்தது….அப்பா அம்மா சேர்ந்து சோடியாய் எடுத்த  படமும் மேசையில் இருந்தது. இதையாவது தூக்கியெறிந்து என் கோபத்தையும் வெறுப்பையும் காட்ட வேணும் போல் மனம் துடித்தது. இதயம் படபடபடத்து அடித்தது. ஆனால் முடியுமா…. மீண்டும் அவர்கள் கதைக்கு ஆமாப் போடுவது போல் தலை குனிந்து கூனிக்குறுகி நின்றேன். 


இஞ்சை பார் பிள்ளை. நாங்க நாட்டிலேயிருந்து இஞ்சை வரேக்கை எல்லாத்தையும் விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு மட்டும் நினைச்சுக் கொண்டிருக்கிறையள் ஆனா… அது உண்மையில்லைப்பிள்ளை. நாங்க வரேக்கை எங்களேடை கனவிசயங்களைக் கொண்டு தான் வந்தனாங்கள். கலாச்சாரம் எண்டும் சாதிகள் எண்டும் சம்பிரதாயங்கள் எண்டும்  கோயில்கள், குளங்கள்  எண்டு எல்லாம்  எங்களோடை வந்திடுத்து. இதையேன் நாங்கள் விடோணும்.


என்ன இந்த நாகரிக உலகத்திலே வந்தும் திருந்தவேயில்லை எண்டு நீ நினைக்கலாம் பிள்ளை. ஆனா… எத்தனையோ நல்லவற்றை ஏற்றுக்கொண்டாலும் எங்கடையதுகளையும் விட முடியாமல் தான் இருக்கிறது….


நீ…சின்னப்பிள்ளையில்லை… நெடுக புத்திமதி சொல்ல… விடிய வேளைக்குப் போக வேணும் படுத்துக்கோ…. எனக்கூறிவிட்டு விலகிவிட்டனர்.


இது தான் என்ரை வாழ்க்கை ரஞ்சினி….என்ற படியே அவளது கைகள் இரண்டையும் இறுகப்பற்றிக் கொள்ள கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.


வெறும் நகைப்பகட்டுக்களிலும் போலிக்கொளரவங்களினாலும் தன்னைப் பெரிதாய்க் காட்டிக் கொண்டும் வெறும் ரீவீ நாடகங்களிலும், தமிழ் சினிமாக்களிலுமே தன்னை அர்ப்பணித்து, கிடைக்கும் ஓய்வுநேரங்களில் ரெலிபோனில் ஊர் கதைகளையும் வீண் வம்புகளையும் காவிக்கொண்டு திரியும் ஓரு சாதாரண யாழ்பாணத்துச் தமிழிச்சிதான் என்ரை அம்மா. அவள் பற்றிக் கவலைப்படுவதற்கோ… அவள் பற்றி யோசிப்பதற்கோ ஒன்றுமில்லை…


ஆனால் அப்பா…… தமிழென்றும் இனம் என்றும் ஒற்றுமைகள் பற்றியும் கொடி பிடித்துக் கொண்டிருந்த என்ரை அப்பாவா….. இப்படி….நினைத்துப்பார்க்கவே வெட்கமாவும் வினோதமாகவும் இருக்கிறது. இப்படியொரு போலியாக பகட்டாக தன்னை வெட்கமில்லாமல் வெளியிலேகாட்டிக் கொண்டு திரியும் மிகவும் சாதாரண மனிதனா என் அப்பா…..?  


நீண்ட நாட்களாய் அடக்கி வைத்திருந்த இந்த இரகசிய உணர்வுகள் காற்றோடு காற்றாய்க் கலந்து கொண்டது. இதயத்தின் இதயத்திலே இறுகியிருந்த அந்த முள் கழண்று கீழே விழுந்தது போல் ஓர் உணர்வு.


தன்னை அடக்க முடியாதவளாய் விக்கி விக்கி வெம்பி வெடித்து அழுதாள். அழு அழு நல்லாய் அழு…. ஏதிலிகளாய்ப் போன எம் இனத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்தப் புலம்பெயர் உறவுகளையும் எண்ணி எண்ணி அழு. ஓட்டு மொத்தமாய் தங்களைத்தானே ஏமாற்றிக் கொண்டும் தங்களுக்கத் தானே சேற்றைப் பூசிக்கொள்ளும் இந்தத் தமிழினத்தை நினைத்து நினைத்து அழு.


இவ்வளவு காலமும் இந்தத் தமிழினமும் நாமும் ஏமாந்தது போதும். உன்ரை பெற்றோரை அம்மா அப்பா என்று பார்க்காமல் ஒட்டு மொத்தமான சாதி வெறிபிடித்த தமிழினமாயே…. பார்.   


இளம் சமுதாயமாகிய நாங்கள் போரட வேண்டிய முதல் இடம் வெளியலே அல்ல… முதல் வீடு தான் என்பதை உண்ர்ந்து கொள் நண்பி. நீ செய்ய வேண்டியது பெரிதாய் ஒன்றமில்லை. உனது தாயும் தந்தையும் எதைச் செய்யக்கூடாது என்று உன்னிடம் உறுதி மொழி வேண்டினார்களோ, அதற்கெதிரான உனது செயற்பாடுகளை இன்றே தொடக்கு. அதை இப்போதே தொடக்கு… இதுவே தமிழுக்கும், எம்மினத்துக்கும் நீசெய்யும் முதற் கடமையாகவும் பணியாகவும் அமையும்.


எழும்பி நின்று ஒருவரையொரவர் இறுகத் தழுவிக் கொண்டு வெளியே இறங்கினர். விடிவதற்கான அறிகுறிகளாய் ஆங்காங்கே குருவிகள் கீச்சிடும் சத்தம் இதமாய்க் காதில் வந்தொலித்தது.  

--நிலாதரன்  March 2012