Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

"வாயளவில் இன ஐக்கியத்தைப் பேசுவோம் செயலளவில் அதைத் தடுப்போம்" என்கிறது அரசு

மக்களுக்கான விடுதலை அரசியலுக்குத் தடை?

வடபகுதியில் மட்டுமல்ல, இலங்கை முழுவதும் மக்கள் போராட்ட அரசியலுக்குத் தடை. இது தான் இலங்கையின் நீண்டகாலச் சூழல். எனினும் இது இன்று இன்னும் இறுக்கமடைந்துள்ளது. வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனரென உலகிற்கு பறையடிக்கின்றது இந்த அரசு.

சிங்கள - தமிழ் என்பதுடன், இதற்குள்ளே முஸ்லீம் மக்கள் என்பதான பிரித்தாளும் ஆட்சியை நடாத்தி வரும் இந்த இனவாத அரசு, இன ஐக்கியத்தை தனது வாய்ப் பேச்சாக்கி, தொடர்ந்தும் இனங்களைப் பிரித்தாள்கின்றது. இதற்காக சாதாரண மக்களுக்குப் புரியதாத புதிய தந்திரங்களை தனது அரசியலாக முன்வைக்கின்றது. இதற்குள்ளேதான் 13வது திருத்தச் சட்டத்தை முன்பு கொண்டு வந்ததும், தற்போது அதனை நீக்கப் போகிறோம் என்பதுமாகும்.

சிங்கள முற்போக்கு சக்திகள் மற்றும் மக்கள் போராட்டக் குழுக்கள், தம்மால் இன ஐக்கியத்தைக் கட்டி வளர்க்க முடியாமற்போன இக்கட்டான சூழலை உணர்ந்து கொண்டு, இலங்கையின் அனைத்து இனங்களின் ஐக்கியத்துக்கான செயல் ரீதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும் இந்தப் போராட்டங்களைத் தொடரவிடக்கூடாது என, இந்த இனவாத அரசு பல வழிகளாலும் தடைகளை தொடராக விதித்து இப் போராட்டக்குழுக்களை முடக்க முயற்சிக்கின்றது. இப்படியாக இன ஐக்கிய முயற்சிகளுக்குத் தடையாக நிற்கும் இந்த அரசு, இப் போராட்டங்களில் முன்னணி வகிக்கும் பல முற்போக்கு சக்திகளை மறைமுகமாக முடக்கிச் சிறைகளில் தள்ளுகின்றது.

நாட்டில் நடந்த யுத்தத்தால் காணாமல் போனோர் பற்றி, அரசிற்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுப்பதில் முன்னணியில் நின்ற லலித், குகன் ஆகிய இருவரையும், அரசின் கூலிப்படையினர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்திச் சென்றதுடன், இவர்கள் இருவரும் எந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க இருந்தார்களோ அந்தப் பட்டியலில் இவர்களின் பெயர்களையும் இடம் பெற வைத்துள்ளது, இவர்களின் கடத்தல் பற்றி அரசுக்கோ அன்றி ராணுவத்திற்கோ ஏதுமே தெரியாது என அந்தக் கைதின் நாடகத்தை மறைக்கின்றது.

இதன் இன்னொரு நேரடிச் சாட்சியமே 'திமிது ஆட்டிக்கல' மீது, கழிவெண்ணெய் வீசிய நிகழ்வாகும். இவ்வகை நிகழ்வுகளின் ஊடாக, அரசும் - அதன் சார்புக் குழுக்களும் ஐக்கியமாக நின்றவாறு, பொது மக்களுக்கும், அந்த மக்களுக்கான போராட்டக் குழுக்களுக்கும் மறைமுகமாகவும், நேரடியாகவும் எச்சரிக்கைகளை விடுத்த வண்ணமே இருக்கின்றனர்.

அதுவாகப்பட்டது "வாயளவில் இன ஐக்கியத்தைப் பேசுவேன். ஆனால், செயலளவில் இதனைத் பயங்கரமாகத் தடுத்தவண்ணமே இருப்பேன்" என்பதாகும்.

இதன் மூலமாக, தமிழ் மக்களுக்கான தலைமைகள் தாங்கள்தான் எனக்கூறும் ஏகப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை முக்கிய கவனத்தில் கொள்ளாது, தங்களுக்கான சுய இலாபங்களை மட்டுமே தங்கள் கவனத்தில் கொள்கின்றனர். இதற்காகவே இவர்களை நம்பிய மக்களிடையே இனவாதத்தை மென்மேலும் வளர்க்கத் தூபம் போடுகின்றனர். இவர்களின் இழுவைக்குள் அகப்பட்ட இளையோர்கள் கூட இவர்களை நம்பி இவர்களின் பின்னால் செல்கின்ற நிலைமை இன்று உள்ளது.

இதே போன்றுதான், சிங்கள - முஸ்லீம் மக்களிடையே, அந்த மக்கள் பகுதியின் நாடாளுமன்ற அரசியல்வாதிகள் இனவாத்தையும், இனக் குரோதங்களையும் மெருகூட்டி வருகின்றனர்.

இவ்வாறு தமிழ் - சிங்கள - முஸ்லீம் என்று இனப்பிரிவிகளை தூண்டுவதன் ஊடாக இந்த அரசு தனது ஆட்சியையும், தங்களின் சொந்த நலனையும் பாதுகாக்க முடியும் என்பதை மிகத் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளது. இதற்காகவே இன ஐக்கியத்தை தொடர்ந்தும் தடுக்கின்றது.

இன ஐக்கியம் என்பது, வாயளவில் பேசுவதிலோ அல்லது அறிக்கை வெளியிடுவதிலோ ஏற்படப் போகும் ஒன்றல்ல. அதற்குள் எத்தனையோ முரண்பாடுகளை கடந்த கால அரசியலாளர்களில் பலர் ஏற்படுத்தி, அவற்றை ஓர் தேச வளமைச் சட்டமாகவே சுமத்திவிட்டார்கள்.

சிறையில் கொலை - அத்துமீறிய குடியேற்றம் - புத்தவிகாரை அமைத்தல் - நில அபகரிப்பு - இராணுவ முகாம் விஸ்த்தரிப்பு என.., இவற்றைச் செய்வது ஒரு சாதாரண சிங்களக் குடிமகனா..? இல்லவே இல்லை. மாறாக இவற்றைச் செய்வது இந்த இனவாத அரசம் அதன் ராணுவமுமே.

அதாவது புலிகள், அனுராதபுரக் கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்களைக் கொன்றபோதும், முஸ்லீம் மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றியபோதும், தமிழ் மக்களாகிய நங்களா இவற்றைச் செய்யச் சொன்னோம்..? இல்லவே இல்லையே.

ஆனால் இது அனைத்துத் தமிழ் மக்களின் இனவாதம் எனப் பார்க்கப்பட்டது. இதே போன்றுதான், தமிழ் மக்கள்தான் இந்த அனியாயங்களைச் செய்தார்கள் என்பதான பிரமையை உண்டுபண்ணும் வகையில், இந்த இனவாதிகள் சிங்கள - முஸ்லீம் மக்களிடையே பிரச்சாரம் செய்கின்றனர். இந்தக் கபடங்களை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒவ்வொரு மனிதரும் தமது இருப்பை நிலைநாட்டிக் கொள்வதற்காக, ஏதேதோ வழிகளில் போராடுகின்றார்கள். இதன்போது ஒவ்வொருவரும் தமது இருப்புக்கான பாதுகாப்புக்கென, தமக்கு ஏதுவான - இலகுவான கருவிகளைத் தூக்குவது வழக்கம். இப்படியான அடிப்படையில் தான் அரசும் அதன் ஆதிக்கத்தினரும் தமக்கு இலகுவாகப் பிரயோகிக்கும் தமது அரசியல் சதிகளை தமக்கான ஆதாயக் கருவிகளாகப் பிரயோகின்றனர்.

தற்போதும் கூட அரசு தமது கையில் எடுத்துள்ள ஆயுதத்தில் முக்கியமானது இனப் பிரிவினையாகும். எப்போதும் இந்த அரசிகளின் நோக்கம் யாவும் தமக்கான சுயலாபம் என்பதுதானே. இதை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டு, ஓர் நாட்டின் விடுதலைக்கு இன ஐக்கியமே முழுமை என்பதை உணர வேண்டும்.

இவ்வாறான ஐக்கியத்தின் மூலந்தான், தமிழ் மக்களோ - சிங்கள மக்களோ - முஸ்லீம் மக்களோ அனைவரும் ஒருங்கிணைந்து, எங்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.