Wed09222021

Last updateSun, 19 Apr 2020 8am

சாதி மேலாதிக்கவாதத்தின் உற்பத்திப் பொருளே இனவாதம்...

1930ல் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியாசனமுறை அமுல்படுத்தப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் அதனை அமுல்படுத்திய பாடசாலைகளை உயர்சாதியினரும், அதனை அமுல்படுத்தாத பாடசாலைகளை பாதிக்கப்பட்ட சாதியினரும் தீ வைத்துக் கொழுத்தினர்.

இதனையடுத்து "இந்துசபை" பிரமுகர்கள் கூட்டு அமர்வு மற்றும் சமஅந்தஸ்து அமர்வு என்ற வழிமுறையை முன்மொழிந்தனர். இது தொடர்பாக இராமநாதன் கல்லூரியில் சேர்.பொன்.இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிள்ளைகளுக்கு வாங்குகள் வழங்கப்பட்டால் எந்த ஒரு மாணவனையும் வித்தியாசமாக நடத்தக்கூடாது என விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கொள்ள வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சரியாசன முறை தவிர்ப்பும் அதேவேளை பாடசாலை தீ வைக்கப்பட்டால் அதற்கான நஷ்டஈட்டை சட்டப்படி பெற்றுக் கொள்ளும் வழியும் அடங்கியிருந்தது.

பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் சகல சாதி ஆசிரியர்களும் ஒரே மண்டபத்தில் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதற்கு எதிர்ப்புக் கிளம்பியதனை அடுத்து சேர்.பொன்.இராமநாதன் தலைமையில் ஒரு குழுவினர் ஆளுனரைச் சந்தித்தனர். அதன் போது பாடசாலைப் பிள்ளைகள் பற்றி பேச்சு வந்தபோது எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பதே ஒழிய எல்லாப் பிள்ளைகளும் ஒரே ஆசனத்தில் அமர வேண்டும் என்பதல்ல சரியாசனம் என்பதற்கான சட்ட விளக்கம் என்று குடியேற்றச் செயலாளர் தனது முடிவைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் தனது எதிர்ப்பைத் தெரிவித்து பிறப்பு, தொழில், சொத்து போன்றவற்றின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நிராகரித்து பாடசாலைகளில் சரியாசன முறை அமுல்படுத்தும் கல்வித்திணைக்களத்தின் உத்தரவை வரவேற்று இத்தைகைய அநீதியான பாகுபாடுகளை இல்லாதொழிப்பதற்கு நாட்டுமக்கள் உழைக்க வேண்டும் என்கிற வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் காங்கிரஸ் 1931ல் டொனமூர் அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் நடாத்தப்பட இருந்த தேர்தலை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தது. இந்த பகிஷ்கரிப்புக்கான அடிப்படை சிந்தனைகளை முன்னாடியே 1930ல் அது தனது மாநாட்டில் தெளிவாக முன்வைத்திருந்தது.

அரசியல் என்பது வெறுமனே காய் நகர்த்தல்கள் மற்றும் சமரசங்கள் அல்லது விருப்பு வெறுப்புக்கள் மீது விளையாடுதல், அடுத்த தேர்தலை மனதில் வைத்துப் பயணித்தல், அரசாங்கத்திடமிருந்து நல்ல பெயரெடுத்தல் ஆகிய அம்சங்கள் அடங்கலானவை என்பதனால் மாணவர் காங்கிரஸ் அதனை வெறுத்து நிற்கின்றது. புதிய அரச சபையில் வடக்கு எத்தனை ஆசனங்களை பெறப்போகின்றது என்பதில் எமக்கு சிறிதும் அக்கறையில்லை. பரஸ்பர நம்பிக்கையும் நல்லெண்ணமும் மட்டுமே தேசிய ஒற்றுமைக்கு இட்டுச் செல்லுமே ஒழிய ஆசனங்களுக்கு ஏட்டிக்குப் போட்டியாக நாம் நடந்து கொண்டால் இதனை எய்தமுடியாது. இந்தப் போராட்டமானது பொருளாதார கலாச்சார மற்றும் அரசியல் ரீதியாக எம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அதிகாரவாதத்திற்கு எதிரானதாகும். எனவே நாட்டின் ஒரு பிரிவினர் தமது சொந்த நலனுக்காக அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தால் இந்தப் போராட்டத்தை நாம் உறுதியாக முன்னெடுக்க முடியாது. சாதி முறையை ஒழிப்பதற்கு பாடுபட்டால் ஒழிய மறுமலர்ச்சி, சுதந்திரம், ஆன்மீக விழப்புணர்வு மற்றும் தேசிய மரபு என்பவற்றைப் பேசுவதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகும்.

தற்போதைய முறைமையின் கீழ் பணம் சம்பாதிப்பவர்கள் தமது செல்வச் செழிப்பானது மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் வறுமை என்னும் மேட்டில் நின்று கட்டி எழுப்பப்பட்டு வருகின்றது என்பதை மறந்து விடுகின்றனர். பொருளாதார அடிமைத்தனம் எமது வயிற்றில் அடிக்கிறது. அரசியல் அடிமைத்தனம் எமது தன்மானத்தைக் காயப்படுத்துகிறது. ஆனால் மனதிலான அடிமைத்தனம் எமது இனத்தின ஆன்மாவையே கொன்று விடுகிறது. மேலே கடைசியாகக் கூறிய நிலைமை உருவாகுவதற்கு எமது கல்வி முறைமையும் பெரிதளவில் தாக்கம் செலுத்தி உள்ளது.

இந்த இளைஞர்களை அன்று ஆதரித்த கனவான்கள் பலர் பின்னர் தேர்தலில் பங்கு பற்றி அரசசபைக்கு தெரிவாகினர். அதன் மூலம் சாதியையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் இனரீதியான அரசியலையும் இல்லாதொழிக்க இயங்கிய இளைஞர் காங்கிரசின் வளர்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி இட்டனர். அன்று முதல் தமிழர்களுக்குள் நிலவிய அடக்குமுறைகளை, உரிமை மறுப்புக்களை மூடி மறைத்து "தமிழரசு" என்னும் மந்திரக் கோலைக் காட்டி மக்களை இன்றைய நாள் வரை மயக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காங்கிரசின் முன்னோடிகளில் சிலர் சிங்கள மக்களை தலைவர்களாக கொண்டிருந்த இடதுசாரி கட்சிகளில் இணைந்து செயற்படத் தொடங்கினார்கள். அவர்களுடைய அன்றைய வர்க்க அரசியல் செயற்பாடுகளினூடாக 1960களுக்குப் பின்னால் யாழ்ப்பாணத்தில் சாதிய அமைப்பு முறைமைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1966ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) பொன்னாலைக் கிராமத்தில் ஐ.தே.கட்சி (தமிழரசுக் கட்சி ஆதரவுடன் செயற்பட்ட) அரசாங்கத்தினால் கிராம மக்களுக்கென வழங்கப்பட்டிருந்த குழாய் நீரை ஒடுக்கப்பட்ட சாதியினர் பயன்படுத்துவதை உயர்சாதியினர் தடை செய்ததனை எதிர்த்து மக்களைத் அணி திரட்டி ஒரு போராட்டத்தை நடாத்தி வெற்றி பெற்றது. இப்போராட்டத்தில் சாதி வெறியர்களினதும் அரச படைகளினதும் தாக்குதல்கள் மூலம் தாங்கள் அடைந்த அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு அக்கட்சி தொடர்ந்து 67-68களில் "சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்.." என்ற தாரக மந்திரத்துடன் மேலும் பல உயிர்பலி கொடுத்த போராட்டங்களை (அடிமை குடிமைமுறை ஒழியட்டும்... ஆலய தேநீர்க்கடைப் பிரவேசம் தொடரட்டும்.. என்ற பதாகையுடன்) முன்னெடுத்தது. அதில் மக்களை பாதுகாக்க வேண்டி தற்பாதுகாப்பு அடிப்படையில் ஆயுத வன்முறையையும் கையாண்டது. இதுவே தமிழர்கள் வரலாற்றில் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக முதன் முதலாக ஆயுதம் ஏந்திய மக்கள் போராட்டம் ஆகும்.

இப்போராட்ட வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தொகுதியிலும் (நிச்சாமம்), உடுப்பிட்டித் தொகுதியிலும் (கன்பொல்லை) சாவகச்சேரி தொகுதியிலும் (கொடிகாமம்) இடம்பெற்ற வன்முறைகள், உயிரிழப்புக்கள், மக்களின் ஒருமைப்பாடு என்பன இலங்கையின் வரலாற்றில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகும். இப்போராட்டங்களின் போது தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் மேலாதிக்க சாதிகளுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழரசைக் கோரியவர்களுக்கு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகள் பற்றிய மனிதாபிமானப் பார்வை கூட இருக்கவில்லை. இவர்களின் இந்த மேலாதிக்க சாதிவாத அணுகுமுறைக்குப் பதிலடியாக 1970ன் பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டையில் திரு.அமிர்தலிங்கத்தையும் உடுப்பிட்டியில் திரு.சிவசிதம்பரத்தையும் பாமர பாட்டாளி மக்கள் வீட்டுக்கனுப்பினார்கள். அந்தப் படிப்பினையால் 1977ன் தேர்தலில் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த திரு.இராசலிங்கத்தை உடுப்பிட்டியில் நிறுத்தி வெற்றிபெற்றனர்.

இந்த அரசியல் வரலாற்றுப் பின்னணியுடன்தான் 1970களில் சிங்கள இனவாத அரசின் இனப்பாகுபாட்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆயுத நடவடிக்கை பற்றி தமிழ் மாணவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். ஆரம்பத்தில் அந்தச் சிந்தனை மக்களை மையப்படுத்தாத அரச அடக்குமுறைகளுக்குப் பழிக்குப் பழி வாங்கும் சிந்தனையாகவே அமைந்திருந்தது. இதே காலப் பகுதியில்தான் தென்னிலங்கையில் 1971ல் இலங்கை அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சி இடம்பெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள், யுவதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையை அவதானித்த ஆளும் மேலாதிக்கவாத தமிழரசுவாதிகள் தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டார்கள். தங்கள் சுயலாப மேலாதிக்க சாதிவாத அரசியலுக்கு எதிராக இடதுசாரிப் பாதையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட நடைமுறைகள் போய்விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தார்கள்.

இளைஞர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையையும் அதேவேளை அவர்களின் தீவிரத்தன்மையையும் நாடிபிடித்தறிந்து கொண்ட தமிழரசுத் தலைமைகள் 1972ல் இலங்கை குடியரசானதைத் தொடர்ந்து 1974ல் "தமிழர் ஐக்கிய கூட்டமைப்பு" ஆரம்பித்து 1976ல் வட்டுக்கோட்டையில் "தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி"யாக பரிணாமம் பெற்று 1977ல் "தமிழீழ சோசலிசக் குடியரசு" அமைப்போம் என்பதற்கான மக்கள் ஆணையையும் தேர்தலில் பெற்றுக் கொண்டார்கள். சாதிப் படி நிலைகளை தக்கவைத்து அதனை தொடர்ந்து பாதுகாப்பதற்காக கட்டியெழுப்பட்ட தமிழரசின் முன்னோடிகளும் மூத்த மேட்டுக்குடித் தலைவர்களும் சேர்ந்து சோசலிசக் குடியரசைப் பிரகடனப்படுத்தியமை ஒடுக்கப்பட்ட மக்கள் இடதுசாரியப் பாதையில் போராட்டத்தை முன்னெடுப்பதனை தடுப்பதற்காகவேயாகும். இதனூடாக பின்னர் வந்த காலங்களில் இடதுசாரி சிந்தனையுடன் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலையை முன்னெடுக்க உழைத்த இயக்கங்கள் அழிக்கப்பட்டு வெறும் இனவாத யுத்தம் தொடர வழி சமைத்துக் கொடுத்தார்கள்.

தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நடாத்தப்பட்டிருக்க வேண்டிய ஆயுதப் போராட்டத்தை வெறுமனே தமிழீழம் என்ற நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கான இன யுத்தமாக மாற்றி, மலையகத் தமிழர்களை ஒதுக்கி வைத்து, தமிழ் மக்களை பிளவுபடுத்தி- ஒரு பகுதியினரை அழித்து, இன்னொரு பகுதியினரை வெளிநாடுகளில் தஞ்சம் கோர வைத்து, இஸ்லாமிய தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணை விட்டு விரட்டி தமிழர்களை வடக்கு கிழக்காகப் பிரித்து.., இன்று தமிழர்களை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டு வணங்கி நிற்கும்படி செய்தவர்கள் இந்த தமிழரசு பாரம்பரியத்தை உருவாக்கிய ஆளும் மேலாதிக்க சாதிவாதப் பரம்பரையினரேயாகும்.

தமிழீழ விடுதலையை நம்பி 1995ல் குடாநாட்டிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த போது நாவற்குழி பாலம் கடந்த பின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு நிலமும் தாகத்திற்கு கிணற்றுத் தண்ணீரும் மறுக்கப்பட்ட வரலாறு ஒன்று உண்டு. இதே வரலாறு வன்னிப் பேரழிவுப் பின்னணியிலும் புதையுண்டு கிடக்கிறது என்பதற்கு யுத்தத்தில் உயிர் தப்பிச் சரணடைந்து சிங்களச் சிறைமுகாம் பட்டிகளில் அடைக்கப்பட்ட மூன்றரை லட்சம் தமிழ் மக்களே சாட்சி. சாதாரண பாமர பாட்டாளி மக்களின் உரிமைகளை மறுத்து தங்களுடைய சாதி மேலாதிக்கவாத அதிகார ஆட்சிக்காக இந்த இனவாத யுத்தத்தை நாளும் பொழுதும் உற்சாகப்படுத்தி ஊட்டச்சத்து வழங்கி முண்டு கொடுத்து முரசறைந்து வளர்த்து மக்களின் உரிமைகளை மதிக்காத மண்ணை மீட்டெடுத்து அதனை தங்கள் ஏகபோகச் சொத்தாக்குவதற்கான அரசியலை முன்னெடுத்தவர்கள் இந்த தமிழரசுக் காவிகளே.

இவர்கள் கோருகின்ற "சுயநிர்ணய உரிமை" என்பது ஆளும் தமிழ் மேலாதிக்க சாதிவாத மேட்டுக் குடிகள் தமிழர்களை பிரித்து வைத்து அடக்கி அதிகாரம் செய்வதற்கான அரசியல் சட்ட அங்கீகாரமே ஒழிய தமிழ் மக்கள் சம உரிமைகளுடன் வாழும் அரசியல் தீர்வல்ல. கடந்த காலத்தில் இடம்பெற்ற தமிழர்களுக்கான தாயகப் போராட்டத்தின் காரணமாக கொல்லப்பட்டவர்கள், சிறைப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பலனடைந்தவர்கள், பணக்காரர் ஆனவர்கள், பதவி பெற்றவர்கள், இன்று மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் யார்? எந்த வகைப்பட்டவர்கள்? எந்த பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள்? என்ற தகவல்-தரவு- கணிப்பீடு ஆகியவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால் தமிழீழத்தின் உள்ளார்ந்த உயிரோட்டமும் உந்து சக்தியும் தமிழ் மேலாதிக்க சாதிவாதமே என்பது துல்லியமாகப் புலப்படும். அத்துடன் இந்த ஆண்ட பரம்பரை தமிழ் பேசும் மக்களை மீண்டும் ஆள்வதற்கு கையாளும் தந்திரோபாயமே இனவாதம் என்பதும் நிருபணம் ஆகும்.