Fri09172021

Last updateSun, 19 Apr 2020 8am

நிலத்தைப் பொறுத்ததே விளைச்சல்...

இலங்கையில் வாழும் குடிமக்களில் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு உள்ளது போல் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கும் சம உரிமை பெற்றுத் தருவோம் எனக் கூறி எமது தமிழ்த் தலைமைகள் அரசியல் கட்சிகள் அமைத்து ஜனநாயகப் பாதையில் அகிம்சை முறையிலும், வன்முறைப் பாதையில் ஆயுதப் போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபட்டு இறுதியில் தமிழ்ப் பேசும் மக்களைக் கட்டிய கோவணமும் இன்றி நிர்வாணமாக்கி அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணிலேயே அனாதைகளாக, அகதிகளாக, சிறைக்கைதிகளாக ஆக்கிய வரலாறே இலங்கைத் தமிழர்களின் கடந்த 67 ஆண்டு காலச் சரித்திரமாகும்.

தமிழர்களின் இன்றைய நிலைமைக்குக் காரணம் எமது தலைமைகள்தான் எனக் கூறித் தொடர்ந்தும் மக்கள் தங்களுக்குத் தாங்களே குழிதோண்டிக் கொண்டு இருக்க முடியாது. இதற்கான முழுப் பொறுப்பும் மக்களையே சார்ந்துள்ளது. நாமும் எமது சுயநலப் போக்கும் அதனடிப்படையிலான எமது செயற்பாடுதான் இன்றைய எமது பரிதாபகரமான நிலைமைகளுக்கான காரணம். மக்கள் மத்தியில் இருந்துதான் தலைவர்கள் தோன்றுகிறார்கள். நாம்தான் மக்கள் தலைவர்களையும் மாமனிதர்களையும் உருவாக்குகிறோம். எமது அபிலாசைகளுக்கு ஏற்றதாகவே அவர்களை நாம் தெரிவு செய்கிறோம். எங்கள் மனங்களின் உள்ளார்ந்த வெளிப்பாட்டைத்தான் எமது தலைவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ் வழங்கப்படும் சுதந்திரம், நாட்டைப் பிளவுபடுத்தும் - நாட்டு மக்களை அடிமைகளாக ஆக்கும் - நாட்டின் வளங்களைச் சுரண்டும். ஆகவே மொழியைக் காட்டி இனவாதத்தை ஊட்டி மக்களை மோத வைக்கும் அந்நியரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் துணை போக வேண்டாம் என அன்றைய இளைஞர்களின் அறிவார்ந்த முற்போக்கான கோரிக்கைகளை புறந்தள்ளி பிற்போக்கான அரசியல் பாரம்பரியம் உருவாக 1931ல் எமது முதலாவது வாக்குப் பிரயோகத்தைப் பயன்படுத்தினோம். அன்று தொடங்கிய எமது அரசியல் தெரிவுகள் இன்று வரை எமக்குப் பெற்றுத்தந்த உரிமைகள் ஏதும் உண்டா? இல்லை. எதுவுமேயில்லை. மாறாக இருந்த யாவற்றையுமே இழந்து நிற்கிறோம். வாக்குரிமை-குடியுரிமை-நிலவுரிமை-தொழில் உரிமை-கற்கும் உரிமை-வாழும் உரிமை-பேசும் உரிமை எனப் படிப்படியாக இழப்புக்களைத்தான் எமது வாக்குகள் எமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளன. கல்வியில் சிறந்தவர்கள் என உலகம் போற்றும் நாம் எப்படி எமது இன்றைய அரசியல் சூழலுக்கு ஆளானோம். அறிவு-ஆற்றல்-துணிச்சல் யாவும் நிறைந்திருந்தும் ஏன், எப்படி, இன்று அகதிகளானோம்? இவற்றிற்கான பதில்களில்தான் எங்களுடைய இன்றைய வாழ்வும் எங்கள் சந்ததிகளுடைய எதிர்கால வாழ்வும் தங்கியுள்ளது.

"உயிர் தமிழுக்கு.., உடல் மண்ணுக்கு..." என முழங்கி உணர்ச்சி ஊட்டியவர்களும் அவர்களின் சுற்று வட்டாரத்தினரும் உலகவலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதனை உள்வாங்கி உணர்ச்சிவசப்பட்டு உழைத்த பல்லாயிரக் கணக்கான மக்களில் உயிரிழந்தவர் போக ஏனையோர் உருக்குலைந்து வாழ வழியின்றி உள்நாட்டில் அனாதைகளாகவும், உலக நாடுகளில் அகதிகளாகவும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் சொந்த நலன்களை முன்னிறுத்தி சாதி-சமய-வர்க்க பிராந்தியக் கண்ணோட்டத்துடனேயே இன்றுவரை எமது வாக்குகளை பயன்படுத்தி வந்துள்ளோம். நாம் இன்று வரை பின் தொடர்ந்து வந்தது தமிழ் மக்களுக்கான அரசியலாக இருந்திருந்தால் இன்றைய பிளவுபட்ட, ஆளை ஆள் காலை வாரிவிடுகின்ற, கடைக்கு எதிர் கடை வைக்கும் அரசியல் பித்தலாட்டங்கள் ஏற்பட்டிருக்காது.

சற்று சிந்தனை செய்து பார்ப்போம். சிங்களப் பேரினவாதத்தின் பாகுபாடு- பாரபட்சம்- அடக்குமுறை- கைது- சிறை- கொலை இவைகளுக்கு எதிராகவே நாம் நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். அதே வேளை தமினத்துக்குள்ளேயே தமிழர்களால் தமிழர்கள் மேல் மேற்குறிப்பிட்ட அத்தனை அநியாயங்களும் நடாத்தப்பட்டுள்ளன. சிங்கள மேலாதிக்கத்தின் அநீதிகளுக்கு இனவாதம் என்று பெயரிடப்பட்டால் தமிழர்களுக்குள் இடம்பெற்றுள்ள அநீதிகளுக்குப் பெயர் என்னவாக இருக்கும்? அதுதான் மேட்டுக்குடித் தமிழர்களின் ஆளும் மேலாதிக்க சாதிவாதம். சிங்களப் பேரினவாத தீச்சுவாலை எம்மைத் தீண்ட முன்னரேயே தமிழர்கள் மத்தியில் பாடசாலைகள் கொழுத்தப்பட்டுள்ளன. கொலைகள் இடம்பெற்றுள்ளன. கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டுக் குடிசைகள் தீக்கிரையாக்கப்ட்டுள்ளன. மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவற்றைச் சிங்கள ஆட்சியாளர்கள் கண்டும் காணாமலும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

"தானத்திலும் சிறந்த தானம் தண்ணீர் தானம்" என எழுதி வைத்தவர்கள் எமது முன்னோர். ஆனால் எமது தமிழர் தாயகப் போராட்ட காலத்திலும் கூட ஒரு பகுதி மக்களுக்கு தாகத்திற்குக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்கும் உரிமையும் குடியிருக்க நிலத்தடி உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது ஏன் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்றும் கூட வன்னியிலும், குடாநாட்டிலும், தீவுப்பகுதிகளிலும் மக்களின் தாகம் தீர்க்கும் குடிநீரை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேடும் நபர்கள்தான் எமக்கு தலைவர்களாக விளங்குகிறார்கள். இதுவே ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற தந்திரோபாயம். அந்நிய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இலங்கைக் குடிமக்களை சிங்களம்- தமிழ் எனப் பிரித்தனர். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களை இந்தியத்தமிழர்-முஸ்லீம்கள்-இலங்கைத் தமிழர் எனப் பிரித்தனர். தமிழ் ஆளும் மேலாதிக்க மேட்டுக் குடியினர் தமிழர்களை சாதி-சமயம்-பிராந்தியம் எனக் கூறு போட்டனர்.

இலங்கையில் வாழும் தமிழர்களில் ஐம்பது வீதத்திற்கும் அதிகமானோர் இன்றும் சிங்கள மக்கள் மத்தியில்தான் வாழ்கிறார்கள். ஒருசில சிங்கள-தமிழ் மேட்டுக்குடிப் பரம்பரையினர் வாழவும் பல லட்சக்கணக்கான சாதாரண சிங்கள-தமிழ் மக்கள் உழைத்துச் சாகவும் வேண்டி எமது தலைமைகளினால் பயன்படுத்தப்படும் இனவாதம் என்ற பூச்சாண்டியை இல்லாதொழிக்க வேண்டும். அதற்காக நாம் அரசியலை எமது கையில் எடுக்க வேண்டும். அரசியலை நாம் கையில் எடுப்பதற்கு உரிய அறிவை எமது ஆங்கிலேய கல்விமுறைமை எமக்கு வழங்கவில்லை. மாறாக வெள்ளையருக்கு அடிமையாக சேவகம் புரிய வேண்டும். அதுவே எமது வாழ்வின் இலட்சியம் என்கிற மனப்பான்மை மட்டும்தான் எமது மரபணுவில் பதியப்பட்டுள்ளது. அதனால்தான் படிபடி எனப்படித்து எப்படியும் டாக்டர், என்ஜினியர் ஆகி வெளிநாடு போய் அந்நியர்களுக்கு சேவகம் செய்ய விரும்புகிறோம். பொருளாதார அடிமைத்தனம் எமது வயிற்றில் அடிக்கிறது. அரசியல் அடிமைத்தனம் எமது தன்னமானத்தைக் காயப்படுத்துகிறது. ஆனால் மனதிலான அடிமைத்தனம் எமது இனத்தின் ஆன்மாவையே கொன்று விடுகிறது. இது 1931ல் எமது முன்னோர் கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகள். இதனால்தான் நாமே நம்மை அடிமைப்படுத்தும் ஒரு அரசியல் பாதையில் பயணம் செய்கிறோம்.

1948லிருந்து நாம் சிங்கள அரசுடன் இணக்க-எதிர்ப்பு அரசியல் இரண்டையும் சமாந்தரமாகவே நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறோம். இதன் மூலம் ஒரு சில மேட்டுக்குடிகளும் அவர்கள் வழித் தோன்றல்களும் பலனடைய நாட்டு மக்கள் பரிதவிக்கும் நிலையே இன்று எற்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத அரசியலை தொடர்ந்தும் நாம் ஆதரிக்க வேண்டும் எனக் கூறி அதற்கான விளக்கங்களும், விளம்பர அறிக்கைகளும், வீராவேசமான உரைகளும் எதிர்வரும் தேர்தலையொட்டி மக்கள் மத்தியில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

மைத்திரி வல்லவர் செய்வார், ரணில் நல்லவர் தருவார், இந்தியா வாங்கித் தரும், ஐ.நா. புடுங்கி அடுக்கும்.., என்றெல்லாம் வழமை போல தங்கள் வாதத்திறமைகளைக் காட்டத் தொடங்கிவிட்டனர். ஆனால் இலங்கையின் இனப்பிரச்சனைக் கணக்கைத் தீர்ப்பதற்கான சமன்பாட்டில் சிங்கள மக்களின் தரவு தேவை என்பதை இம்முறை தேர்தலில் பாமர பாட்டாளி மக்களாகிய நாம் உலகத்திற்கு உணர்த்த வேண்டிய நேரம் இதுவேயாகும். இல்லையெனில் "இந்து மகா சமுத்திரத்தின் முத்து" மேல் ஏகாதிபத்திய கரங்களுடைய நகத்தின் கீறல்கள் விழுவது தவிர்க்க முடியாதது.

-AK