Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களின் உரிமையும், கடமையும், அரசியல் பலமும்.

இலங்கையின் அடுத்த பொதுத் தேர்தலையொட்டி ஆய்வாளர்கள்-அறிஞர்கள்-வல்லுனர்கள்-விமர்சகர்கள்-சமூக அக்கறையாளர்கள்-மக்கள் நலன் விரும்பிகள் என பலதரப்பட்ட செயற்பாட்டாளர்களிடமிருந்து ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேவேளை பாரம்பரிய-பரம்பரை-புதிய கட்சிகள்  பமைய-புதிய கூட்டமைப்புக்கள் யாவும் தங்கள் வழமையான ஆட்பலம்-அணிவகுப்பு-ஆரவாரங்கள் அடங்கிய விழாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளன. இதேவேளை இவர்கள் யாவரும் எதனைக் காட்டி தங்கள் பொறிக்குள் மக்களை மாட்டி வைக்கலாம் என்கிற ஒரே நோக்கத்துடன் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கியும் விட்டுள்ளனர். 

கடந்த காலங்களில் இலங்கைக் குடிமக்கள் நாட்டினதும்-நாட்டின் குடிமக்களினதும் நலன்களை முன்னிறுத்தித் தங்கள் வாக்குகளை போட்டது கிடையாது. அப்படி மக்களை வாக்களிக்கச் செய்வதான அரசியலும் இலங்கையில் இதுவரை இருக்கவும் இல்லை. மாறாக இன-சாதி-பிராந்திய-பால்-வர்க்க அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி மக்களை மக்களுடன் மோதவிட்டு சுயலாபம் தேடும் அரசியல் பண்பாடுதான் இன்றும் தொடருகிறது. 

இந்த அரசியலில் நாட்டு மக்களில் ஒரு சாரார் தங்கள் வாக்குகளைப் போடுகிறார்கள். மறு சாரார் வாக்களிக்க மறுக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அமையும் அரசாங்க ஆட்சியினால் மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைக்கும் வாக்களித்தவர்களை விட வாக்குப் போடாதவர்களே கூடிய பொறுப்புள்ளவர்களாகும்.

எமது இன்றைய அவலங்களுக்குக் காரணம் நாங்களே.  நாம் எமது கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் எங்களது வாழ்வு இன்றைய கொடூரங்களை சந்தித்திருக்காது. கடந்த காலங்களில் நாம் ஓட்டுப் போட்டு நம்மை ஆட்சி செய்ய அனுப்பிய எமது பிரதிநிதிகளுடைய செயற்பாடுகளின் விளைவுகள்தான் இன்றைய எமது துன்பங்கள். இந்த துன்பங்களைத் தடுக்கக்கூடியவர்கள் வாக்களிக்காமல் ஒதுங்கும் குடிமக்களே. "இந்த அரசியலால் பிரயோசனம் இல்லை" என ஜனநாயகப் பங்களிப்பிலிருந்து ஒதுங்குவதன் மூலம் நாம் மேலும் நம்ம தலைமேல் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரின் தலைமேலும் அநீதியும் அநியாயமும் ஆட்சி செய்யத் துணை போகிறோம்.

இன்று முதற்கொண்டு எம்மையும் எமது மண்ணையும் வளம்படுத்தக் கூடிய அறிவாற்றல் உள்ளவர்களை - நாம் பிறந்த எமது நாட்டில் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்வதற்குரிய பாதையில் மக்களுக்காக தன்னலமின்றி உழைக்கக் கூடிய துணிச்சல் உடையவர்களை எமது பிரதிநிதிகளாக மக்களாகிய நாமே நமக்குள் தெரிந்தெடுத்து 

தேர்தலில் நிறுத்தவேண்டும். இதனைச் சரிவர நடைமுறைப்படுத்த வேண்டிய அடிப்படைத் தேவை எமது அரசியல் விழிப்புணர்ச்சியேயாகும். 'அரசியல் வேண்டாம்" என ஒதுங்குபவர்கள் உள்ளங்களில் நீதியும் நியாயமும் உறங்கிய நிலையில் உள்ளன. கொடியவர்களின் கொடுமையைவிட நல்லவர்களின் மௌனம் அதைவிடக் கொடுமையானது. 

நாம் எமது கடமையைச் சரிவர நிறைவேற்றாமல் அடுத்தவரைக் குற்றம்சாட்டுவதும் அந்நியர்களிடம் நியாயம் கேட்பதும் நன்மையைத் தராது.  தன்னலம் பார்த்து தனித்தனியே சிந்தித்து செயற்பட்டதனால் உறவுகளையும் - சந்ததிகளையும் பிரிந்தும்-இழந்தும் உடைமைகளைப் பறிகொடுத்தும் இன்று சீரழிந்து நிற்கிறோம். 

இனிமேலாவது நாம் சமூகம் சார்ந்து சிந்திக்க வேண்டும். நாம் வாழவேண்டுமானால் சமூகம் வாழ வேண்டும். சமூகத்தின் வாழ்வு மக்கள் கூட்டத்தின் வளர்ச்சியில் தங்கியுள்ளது. மக்கள் கூட்டத்தின் முன்னேற்றம் நாட்டின் ஆட்சி முறைமையைப் பொறுத்தே அமைகிறது. "நல்லாட்சி"யின் நடைமுறை "அரசியலமைப்பு சட்டதிட்டம்" என்ற மூலப் பொறிமுறையில்தான் இயங்குகிறது. இந்தப் பொறிமுறை மாற்றியமைப்பட்டால் அன்றி நாட்டில் "மாற்றம்" ஏற்படவோ-ஏற்படுத்தவோ முடியாது.

67 வருடங்களாக ஏமாந்ததும்-ஏமாற்றப்பட்டதும் போதும். எமது உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமானால் நாம் எமது வாக்களிக்கும் கடமையைச் செய்யவேண்டும். அடிப்படை மாற்றம் வேண்டி குடிமக்கள் தங்கள் வாக்களிப்பின் மூலம் ஒன்றுபட்டு அணிதிரளும் போது உருவாகும் "பலம்" எவராலும் - எதனாலும் தோற்கடிக்கப்பட முடியாதது. அதுவே மாபெரும் மக்கள் சக்தியாகும். மனித வரலாறு முழுவதும் இது நிருபணம் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் பல நாடுகளில் அடக்குமுறை ஆட்சிகள் மக்களின் வாக்களிப்பின் மூலம் தூக்கி வீசப்பட்டுள்ளன. ஆனால் அந்த மாற்றங்களுக்காக முன்னின்று உழைத்தவர்கள் பலர் சிறையையும் சித்திரவதையையும் அனுபவித்தனர். இன்னும் பலர் தங்கள் இன்னுயிரையும் விலையாகக் கொடுத்துள்ளனர். 

இன்று நாம் அனுபவிக்கும் குடியியல் வாழ்க்கை உலகத்தின் பல பாகங்களில் பொதுநலன் கருதி தங்கள் சுயவாழ்வைத் தியாகம் செய்து சிறைசென்று தங்கள் உயிர்களையும் விலையாகக் கொடுத்த மக்கள் தலைவர்களுடைய போராட்டத்தினால் கிடைத்ததொன்றாகும்.(உ+ம்) மனித உரிமை சாசனத்தை எழுதத் தூண்டிய பிரெஞ்சுப் புரட்சி வரலாறு. அவர்கள் தங்களுக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்யவில்லை. மனிதகுல மேம்பாட்டுக்காக-அவர்களின் சந்ததிகளுக்காகவே உழைத்து உயிரையும் கொடுத்தார்கள்.

நாமுண்டு- நமது வீடுண்டு- நமது வாழ்வுண்டு என வாழ்ந்ததாலேயே இன்று எல்லாமே இழந்து நிர்க்கதியாய் நடுத்தெருவில் நாயினும் கேவலமாக அகதிகளாக- அனாதைகளாக- அடையாளம் இல்லாதவர்களாக உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் அலைந்துகொண்டிருக்கிறோம். குடும்பத்தை- வீட்டை- ஊரை- நாட்டை விட்டுப் பிரிந்து உறவுகளின் நல்லது கெட்டதுக்குக் கூட சமூகமளிக்க வக்கில்லாதவர்களாக வாழ்கிறோம். 

நாம் நமது மண்ணில் நின்று நம்மை- நமது நாட்டையும் அதனூடாக எமது வாழ்வையும் மேம்படுத்தி மண்ணின் மைந்தர்களாக- மண்ணோடு மண்ணாக வாழ்வதற்குரிய சுதந்திரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தனது இலக்கைத் தவறவிட்டு எம்மை- எமது உறவுகளை- அயலவரை- அடுத்த ஊரவரை-மண்ணின் மைந்தர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனச் செயற்பாடாக மாறியது ஏன்? எப்படி? எதனால்? இதற்கு காரணமானவர்கள் யார்? லாபம் அடைந்தவர்கள் யார்? இன்றும் அதே பாதையில் மக்களை அழைத்துச் செல்ல முன் நிற்பவர்கள் யார்?

1924 டிசெம்பர் 29-30-31 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'மாணவர் காங்கிரஸ்-யாழ்ப்பாணம்" என்ற அமைப்பின் அங்குரார்ப்பண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் 1வது பின்வருமாறு அமைந்திருந்தது.

"காங்கிரஸ் நாட்டின் பல்வேறு மத அமைப்புக்களையும் சார்ந்த எவர் ஒருவருக்கும் இடையில் வேறுபாட்டை அல்லது முன்னுரிமையைக் காண்பிக்கமாட்டாது. காங்கிரஸினால் நடத்தப்படும் பொது அல்லது குழுக் கூட்டங்களிலும் அதனால் நிகழ்த்தப்படும் பிரச்சாரங்களிலும் பக்கசார்பான பிரச்சனை எதுவும் ஒருபோதுமே எழுப்பப்படலாகாது" என்னும் வாசகம் யாப்பில் இடப்படவேண்டும்.

காங்கிரஸின் 3வது தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது. "தற்போது நாட்டில் நிலவிவரும் சாதி வேறுபாடுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கே ஒரு தடையாகும்"

7வது தீர்மானம்: "தென் இலங்கைப் பாடசாலைகளில் தமிழ் மொழியும் வட இலங்கைப் பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பித்தலையும் அறிமுகப்படுத்த விரைந்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்."

8வது தீர்மானம்: "அனைத்து(முக்கியமாக சிங்கள மற்றும் தமிழ்) இனங்கள் மதங்கள் மற்றும் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1925ஏப்பிரல் திங்களில் காங்கிரஸின் அமர்வுகள் இடம்பெறத்தக்கதான நடவடிக்கைகளை காங்கிரஸின் செயற்குழு மேற்கொள்ள வேண்டும்."

அன்று அந்த யாழ்ப்பாண இளைஞர்கள் தீர்க்கதரிசனமாக சிந்தித்து தீவிரமாக செயற்பட்டதை முறியடித்து தங்கள் சுயநல-சுயலாபத்திற்காக மக்கள் வாக்குகளை பயன்படுத்திப் பலனடைந்தவர்களின்  வழிவந்த அதே பரம்பரையினர்தான் இன்றும் மக்களின் வாக்குப் பலத்தில் தங்களை வளம்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்று சீமைப் (லண்டன்) படிப்பை-ஸ்ரேலிங் பவுணைக் காட்டினார்கள். இன்று வெளிநாட்டு வாழ்வை-டொலரை-யூரோக்களைக் காட்டுகிறார்கள். அன்று முதல் இன்றுவரை இலங்கைக் குடிமக்களின் உரிமைகளை அடைவதற்கான கதவுகளைத் தடை போட்டு அடைத்து வைத்துக் கொண்டு குடிமக்களைப் பிளவுபடுத்தும் அரசியலையே முன்னெடுக்கிறார்கள். 

ஆங்கிலேயரை நம்பி பண்டாவுடனும் ட்டலியுடனும் ஒப்பந்தம். இந்தியர்களை நம்பி ஜே.ஆருடன் ஒப்பந்தம். இன்று ஐ.நாவை நம்பி சிறி-ரணிலுடன் ஒப்பந்தம். ஆனால் இலங்கையின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் அடிப்படைச் சக்தியாக விளங்கும் சிங்கள மக்களுடன் பேசக் கூட இவர்களுக்கு அக்கறை வரவில்லை. 

ஒரே நாளில் வட-கிழக்கில் இருந்து இஸ்லாமியத் தமிழ் மக்களை ஒருத்தர் கூடப் பாக்கி இல்லாமல் உடுத்த உடையுடன் நாடு கடத்திய தமிழ்த் தலைமைகள் இன்று சிங்களக் குடியேற்றம் என குமுறுகிறார்கள். தமிழ் இராணுவத்தைப் பாலூட்டி சோறூட்டி வளர்த்தவர்கள் இன்று சிங்கள இராணுவம் பற்றி கண்டனம் தெரிவிக்கிறார்கள். மக்களின் வாக்குப் பலத்தினால் பெற்றுக்கொண்ட அறுதிப் பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் 

கொண்ட மாகாணசபையின் சகல நலன்களையும் தாங்கள் அனுபவித்தபடியே மக்களின் தலையில் மிளகாயை அரைத்தபடி அடுத்த வாக்கு வேட்டைக்காக ஆளுக்கு ஆள்-கட்சிக்கு கட்சி அம்புலிமாமா கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு தலைமைகள் மட்டும் காரணம் இல்லை. நாமும்தான் இதற்குத் துணையாக இருந்துள்ளோம்.மக்களாகிய நாம் எமது ஜனநாயகக் கடமையைச் செய்யவில்லை. இதுவரை வாக்குளை நாம் பொது நோக்குடன் போடவில்லை.  இருந்த எமது வாக்குரிமையைப் பயன்படுத்தவில்லை. பணத்தை மட்டும் குறி வைத்துச் செயற்பட்டோம். அதனை வைத்தே நல்லது கெட்டதை அளந்து பார்த்தோம். அவர் சொன்னார்- இவர் சொன்னார் என நம்பினோம். இன்று யாரை நம்புவது? என கலங்கித் தவிக்கிறோம்.

இந்நிலையை நாம் மாற்றமுடியும். அதற்கான வழிமுறைகள் வரலாறு முழுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. எம்மை நாமே ஆட்சிசெய்யும் உண்மையான ஜனநாயக அரசியல் நடைமுறையை நாமே உருவாக்க உழைப்பதன் மூலமே எமது எமது சந்ததிகளுக்கு ஒரு வளமான வாழ்வை அமைத்துக் கொடுக்க முடியும். 

ஓட்டுப் போடுவதால் ஒன்றும் மாறப்போவதில்லை எனக் கூறி "நல்லவர்கள்" வீட்டில் இருப்பதனால்தான் "கெட்டவர்கள்" நாட்டைக் குட்டிச்சுவராக்கி தாங்கள் சுகபோகம் அனுபவிக்கிற அநியாயம் தொடருகிறது. அவர்களின் அடக்குமுறை எம்மை நசுக்குகிறது. இதற்கு ஒரு முடிவு காணப்படல் வேண்டும். இழந்தது போதும். இனி இழப்பதற்கு எம்மிடம் எதுவுமேயில்லை.

எனவே மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைப்பவர்களை-நியாயத்திற்காகத் தங்கள் உயிரையும் இழக்கத் தயாராக நின்று செயற்படுபவர்களை நாட்டின் அரசியல் இயக்குநர்களாக-எமது பிரதிநிதிகளாக-நாட்டின் நிர்வாகிகளாக நாமே தெரிவு செய்ய வேண்டும். 

இன-மத-சாதி-பால்-பிராந்திய அடிப்படையிலான  உணர்ச்சிகரமான வெற்றுக் கோஷங்களை நிராகரிப்போம். எமது மரணங்களையும் மனக் குமுறல்களையும் தங்கள் பிழைப்புக்கு மூலதனமாக்கும் சுத்துமாத்து அரசியலுக்கு ஒரு முடிவு கட்டுவோம். 

எமக்காக-குடிமக்களுக்காக மரணித்தவர்களை மனதில் நிறுத்தி மக்களுக்காக-மக்களின் உடைமைகளுக்காக-மானிட உரிமைகளுக்காக உழைப்பவர்களின் கரங்களைப் பலப்படுத்துவோம். இந்தப் பலத்தை-மக்களின் மாபெரும் சக்தியை உருவாக்குவதன் ஊடாக மட்டுமே நாம் சமாதானமும்-சுபீட்சமும்-சந்தோஷமும் உள்ள மனிதர்களாக வாழமுடியும். இதற்காக நாம் வாக்குரிமையை பயன்படுத்தும் எமது கட்டாயக் கடமையை நிறைவேற்றுவோம்.

"புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"

-AK